9.விஷ்ணுபுரம் – முடிவுரை
எழுதியவர் : விசு
“அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி.” – விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது படைப்பாளிக்கு அங்கீகார ரீதியாகவும், பொருளியல் ரீதியாகயும் இழப்புதான். மொழி பெயர்த்தாலும் புரியாது போகவே வாய்ப்பு அதிகம். ஆனால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் கண்டிப்பாக புரியும். மொழி பெயர்ப்பது ஒருபக்கம் இருக்கட்டும், நம்மிடையே சிறந்தவற்றை நாம் முதலில் படிக்க வேண்டும். இந்த நாவலை ஒரு ஐந்தாயிரம் பேர் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. இனையத்திலும் மிகச் சிலரே விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் இது. சந்தேகமில்லாமல் உரக்கச் சொல்வேன் “இந்திய இலக்கியத்தில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த நாவல்களில் விஷ்ணுபுரமும் ஒன்று. நான் படித்தவைகளில் முதன்மையானது”.
மீண்டும் ஒருமுறை விஷ்ணுபுரத்தை – போரும் அமைதியும்(ஒருமுறை படித்திருக்கிறேன்), பின் தொடரும் நிழலின் குரல்நாவல்களோடும் ஒப்பிட்டு எப்போதாவது எழுத வேண்டும்.
நான் படித்த பொறியியல் கல்லூரியில், நண்பர்களுக்கிடையே புத்தகங்கள் பரிமாறிக் கொள்வோம். பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள்தான். ஹாரி பாட்டர், சிட்னி ஷெல்டனில் துவங்கி அயன் ராண்ட், சிக்மண்ட் ப்ராய்டு வரை. டால்ஸ்டாய், தஸ்த்தயேவ்ஸ்கி எல்லாம் தெரியாது. தமிழைப் பொறுத்த வரை நாவல் என்றால் பொன்னியின் செல்வன்தான். தமிழ் இலக்கியவாதிகள் யார் என்றால் கல்கி, சுஜாதா, வைரமுத்து. சிற்றிதழ்கள் என்று ஒன்று இருக்கிறதென்றே தெரியாது. கிடைப்பதையெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், தமிழில் சிறந்தவை எது என்று தெரியாது. ‘modern literatureல தமிழ்ல ஒண்ணும் பெருசா இல்லை போல’ என்று நம்பிக் கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன், நண்பர் அருண் பரத்,ஜெயமோகனின் இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து அவர் தளத்தை படித்ததின் மூலம், மற்ற எழுத்தாளர்கள், பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகன் போன்றவர்கள் இனையத்தில் எழுத ஆரம்பித்தது, எழுத்தாளர்-வாசகர் உறவில் நடந்த மிகப் பெரிய பாய்ச்சல்; தமிழ் இலக்கியத்தின் நல்லூழ். அதுவும் என்னைப் போன்ற வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு தவமின்றி கிடைத்த வரம். ஜெயமோகனுக்கு என் நன்றிகள்.
ஜெயமோகனின் சொல்புதிது குழுமம் மூலமாக, சிலிக்கான் ஷெல்ஃப் வட்டத்தினர் அறிமுகமானார்கள். (ராஜன், ஆர்.வி, பக்ஸ், பாலாஜி, அருணகிரி, நித்யா, அருணா, காவேரி, சித்ரா). இவர்களிடம் உள்ள தமிழ் நாவல்களை வைத்தே ஒரு சிறந்த நூலகத்தை உருவாக்கலாம். ஐந்நூறு புத்தகங்களாவது வைத்திருப்பார்கள். இவர்களுடன் உரையாடுவதின் மூலம் தமிழின் சிறந்த நாவல்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நண்பர்களுக்கும் என் நன்றி.
நண்பர் ஒருவர் பொன்னியின் செல்வன் வகையறாவைத் தவிர, வேறு இலக்கியங்கள் படித்ததில்லை. நான் விஷ்ணுபுரம் படித்த பிரமிப்பில், அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பிவிட்டேன். திக்கித் திணறி, அழுது கொண்டே பாதி படித்தார். இது மாதிரிதான் இலக்கியம் இருக்குமென்றால், இலக்கியமே வேண்டாம் என்று ஓடிவிட்டார் . இப்போதுதான், கொற்றவையை ஒரு முறை படித்து முடித்தேன். விஷ்ணுபுரம் கல்யாண விருந்தென்றால், கொற்றவை தேன்குடம். ஆனால், ஜெயமோகனின் கதைப்புலம், மொழி போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமல் கொற்றவையை படிப்பது கடினம் என்று தோன்றுகிறது. அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பியது என் தவறு. இன்னொருவர் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தமிழில் எதுவும் படித்ததில்லை. அவர் காடு நாவலை ரசித்துப் படித்தார். என் வாசிப்பு அனுபவத்தில், ஜெயமோகனின் நாவல்களை வாசிக்க கீழ்க்கண்ட வரிசையை சிபாரிசு செய்வேன். (நான் படித்ததில்..)
புனைவு – காடு, ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை.
சிறுகதைத் தொகுப்புகளை எந்த வரிசையிலும் படிக்கலாம். அபுனைவும் அப்படித்தான், இருந்தாலும் எனக்குப் பிடித்த வரிசையிது.
அபுனைவு – சங்க சித்திரங்கள், இன்றைய காந்தி, நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின்தொடர்தல், இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள், கொடுங்கோளூர் கண்ணகி