8. விஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து – ஓர் ஒப்பீடு
எழுதியவர் : விசு
விஷ்ணுபுரம் என்றொரு ஊர் இருந்தால், அது எந்த ஊராக இருக்கும்? காசியா? ஶ்ரீரங்கமா? திருவட்டாரா? அங்கோர் வாட்டா? பதில் எல்லாம்தான். கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் நாவலை, இந்து/பௌத்த மதங்கள் பரவிய அனைத்து நிலங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு ஒப்பீட்டிற்காக, நாவலின் கதைக்களத்தை கம்போடியாவில் பொருத்திப் பார்ப்போம். (சமீபத்தில், வரலாறில் ஆர்வமுள்ள இரு நண்பர்களுடன் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் பத்து நாட்கள் சென்று வந்தேன். படங்கள் இங்கே. அருகருகே விஷ்ணுபுரத்தையும், பின் தொடரும் நிழலின் குரலையும் நேரில் கண்டது போல இருந்தது.)
கம்போடியாவில் பல நூற்றாண்டுகள் வைதீக மதம் தழைத்திருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பதிமூன்றாம் நூற்றாண்டுவரை வைதீகம், பின்பு ஐம்பதாண்டுகளுக்கு பௌத்தம், மீண்டும் வைதீகம், பின்பு பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் ஓங்கியிருக்கிறது. பழைய கம்போடியாவில் அரச அதிகாரத்தின்/மதத்தின்/தத்துவத் தளத்தின் மொழி சம்ஸ்கிருதம். மக்களின் மொழி குமெர். குமெரையும், வடமொழியையும் எழுத அவர்கள் பயன்படுத்திய எழுத்துரு பல்லவ கிரந்தம். வைதீகம் எப்படி அங்கே வந்தது? கம்போடியர்களின் தொன்மத்தின்படி, சோமா என்ற நாக வம்சத்து இளவரசியும், கௌடின்யர் என்ற பிராமணனும் காதல் வயப்படுகிறார்கள்; பின்பு அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் கம்போஜ தேசத்தை சேர்ந்தவர்கள். (விஷ்ணுபுரத்தில் செம்பி-அக்னிதத்தன் கதை). ஆங்கில, பிரெஞ்சு ஆய்வாளர்கள், இந்து மதம் வணிகர்களின் மூலம் வந்தது என்கிறார்கள். இடிபாடுகளில் சூழ்ந்திருந்த அங்கோர் கோவில்களை, மீட்டெடுத்து புனரமைத்தது ஐரோப்பிய அறிஞர்கள். அதற்காக அவர்களை பாராட்டத்தான் வேண்டுமென்றாலும், அவர்களது ஆய்வுகளை நான் ஏற்கவில்லை. குமெர்களின் இலச்சினை நாகம். ஒரு சில கோவில்களைத் தவிர, பெரும்பாலானவற்றில் உள்ள சிலைகள் நாகங்களும், யட்சிகளும்தான் (அப்சரஸ்).
அங்கோரிலிருந்து 50 கி.மி தொலைவில், ஒரு குன்றின் மீதுள்ள கபால் ஸ்பியன் (kbal spean) என்ற இடத்தில் ஒரு சிறிய ஆறு ஓடுகிறது; ஆற்றுப்படுகை முழுவதும் லிங்கங்களும், பாறைகளில் அனந்தபத்மநாபன் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. ஏதாவது தாந்திரீக இடமா, சிற்ப பள்ளிக்கூடமா என்று தெரியவில்லை. அந்த இடத்தை பார்த்தபோது, பிரசேனரும் திருவடியும் தந்திர சமுச்சயத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பதுபோல ஒரு பிரமையேற்பட்டது. அங்கோர் வாட்டைச் சுற்றியுள்ள முக்கியமான முப்பது கோவில்களை பார்ப்பதற்கே நான்கு நாட்கள் போதாது. கம்போடியா பயணம் பற்றி, நேரம் கிடைக்கும்போது விரிவான பயணக் கட்டுரையாக எழுதிகிறேன்.
பாங்காக் அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு ஓவியத்தில், விஷ்ணு புத்தரை வணங்குகிறார். (பார்க்க படம் – picasa – 67 ). தாய்லாந்திலும், கம்போடியாவிலும் ராமர் புத்தரின் அவதாரம். தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (ஒன்பதாம் ராமர்) ராமர் பரம்பரையைச் சேர்ந்தவர். (உண்மையிலேயே அப்படித்தான் சொன்னார்கள்). அவர்களின் முந்தைய தலைநகரம் பாங்காக்கிற்கு 80 கி.மீ தொலைவிலுள்ள அயுத்தாயா (அயோத்யா). அதேசமயம், இந்தியாவின் சில இடங்களில் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இங்கு கேள்வி விஷ்ணுவா புத்தரா என்பதில்லை. நாம் கவனிக்கவேண்டியது ஒரு மரபு ஓங்கும் பொழுது, இன்னொன்றை அழிக்க முற்படவில்லை; தன்னுள் இழுத்துக் கொள்ளவே முற்படுகிறது. (விஷ்ணுவின் சிலைகளோ, புத்தரின் சிலைகளோ உடைக்கப்படவில்லை. அவதாரமாக மாற்றிக்கொள்ளப்படுகிறது). இந்த ‘இழுத்துக் கொள்ளல்’ எவ்வாறு நடைபெறுகிறது என்று விஷ்ணுபுரம் தெளிவாகவே விளக்குகிறது.
இதேபோல சோட்டா நாக்பூர் மன்னர்கள், தங்களை நாக வம்ச ராஜபுத்திரர்கள் என்கிறார்கள். தொன்மங்களில் நாகங்களின் அரசனான கார்கோடகனுக்கும், காசியைச் சேர்ந்த பிராமணப் பெண்ணுக்கும் பிறந்து, மக்களால், அரச வம்சமாக கருதப்பட்டவர்கள். எல்லா இடங்களிலும் கதை ஒன்றுதான். மன்னர் ஷத்திரியராகி தர்மபரிபாலனம் பண்ண யமஸ்மிருதியோ, நாரதஸ்மிருதியோ இயற்றப்படுகிறது, பதிலுக்கு மன்னர் ஸ்மிருதி இயற்றிய அக்னிதத்தரையோ, கௌடின்யரையோ குலகுருவாக ஏற்று கோயில் கட்டுகிறார். இதன் மூலம் பெரிய அளவில் வன்முறையின்றி குலங்கள் தொகுப்பட்டு பேரரசாகின்றன.
“சிறுகுடிகளை ஒன்றிணைத்து, பேரரசுகள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் தத்துவத்தின் அங்கீகாரம்; பின்பு அடைந்த அதிகாரத்தை தக்க வைக்க ஆடுப்படும் பகடையாட்டம்; இதற்கிடையில் மரணத்திற்கு பிறகென்ன? வாழ்க்கையின் பொருளென்ன? என்ற கேள்வியோடு ஓயாமல் தேடுபவர்கள் கண்டடைவதென்ன?” என்பதே விஷ்ணுபுரத்தின் மையக்கரு.