விஷ்ணுபுரம் ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதே இல்லை!
எழுதியவர் R.கோபி
விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவற்றைப் பற்றிய பதிவுகள் எழுதியபோது எனக்குத் தோன்றிய ஒரே விஷயம் இதுதான். இது முழுமையான வாசிப்பு இல்லை. இந்த நாவல்களில் மேலும் பல விஷயங்கள் உள்ளன. காலப்போக்கில் ஒவ்வொன்றாக எனக்குப் பிடிபடலாம். இவை வாலியைப் போல வரம் வாங்கி வந்தவை. நம் பலத்தில் பாதியை எப்போதுமே எடுத்துக்கொள்பவை. எந்தக் காலக் கட்டத்திலும் நூறு சதவீதம் புரிந்துகொண்டு விட முடியாது.
வேரை மறுத்தலும் சார்ந்திருத்தலும்
சமீபத்தில் புதுக்கோட்டை சென்றுவந்தேன். அப்பாவின் சொந்த ஊர். நாங்கள் பிறக்குமுன் அப்பா கும்பகோணம் வந்துவிட்டார். பின்னர் தொடர்புகள் அற்றுப்போய் இப்போது அங்கே யார் இருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வமான தண்டாயுதபாணி குடிகொண்டிருக்கும் குமரமலைக்குப் போய் வந்திருக்கவேண்டும். பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாகக் கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் சுவாமிமலையிலேயே எல்லா வேண்டுதல்களையும் செய்து வந்துகொண்டிருந்தோம்.
தாத்தா பிறந்த ஊர் புதுக்கோட்டை. பின் அப்பா வாழத் தேர்ந்தெடுத்த ஊர் கும்பகோணம். நாங்கள் பிறந்த ஊர் கும்பகோணம். என் மகன் சென்னையில். அவன் மகன் எங்கோ! வாழும் இடங்களில் மட்டும் இந்த மாற்றங்கள் இல்லை. ஒவ்வொருவர் வாழ்க்கை முறையிலும் புதிதாக நிறைய விஷயங்கள் சேர்ந்திருக்கின்றன. பழைய விஷயங்களைக் கைவிட்டிருக்கிறோம்.
திடீரென ஒரு மின்னல் போல விஷ்ணுபுரம் நாவலில் வரும் ‘முளைக்கும் ஒவ்வொரு செடியும் வேரை நிராகரித்தபடிதான் மேலெழுகிறது. அதே சமயம் அது வேரை நம்பியுமிருக்கிறது. அது அதன் ஒரு பகுதியுமாகும்…’ என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. அவை தத்துவம் சார்ந்த விவாதங்கள் நடைபெறும்போது விஷ்ணுபுரத்தின் சர்வக்ஞர் பவதத்தர் சொல்வதாக வருவது. இந்த வரிகள் தத்துவம் சார்ந்ததாக இருப்பினும் நடைமுறை வாழ்க்கைக்கும் இதைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறது. அவ்வாறு ஒரு விஷயத்தைச் சொந்த வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடியும் என்னும்போது அதன் வீச்சே தனி.
#விஷ்ணுபுரம் ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதே இல்லை!
*
விஷ்ணுபுரமும் பெரும்பொழுதுகளும்
விஷ்ணுபுர வரலாற்றைப் பாடும் பாணர்களின் பெயர்கள் ஹேமந்தன், வசந்தன், கிரீஷ்மன். இவை மூன்றும் பெரும்பொழுதுகளைக் குறிக்கின்றன. அவை மொத்தம் ஆறு. மற்றவை வர்ஷம், சரத், சிசிரம். இவை ஆறும் சுழற்சி முறையில் வருபவை.
விஷ்ணுபுரத்தின் மைய தரிசனமாக நான் காண்பது ‘இருப்பதெல்லாம் அழியும். பின் மீண்டும் உருவாகும்’ என்பது. அதாவது சுழற்சி. அதன் கதையைப் பாடும் பாணர்களின் பெயர்களாகக் காலத்தின் பெரும்பொழுதுகளை வைத்து அவர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பாடுவதாகக் காட்டி இருப்பது விசேஷம்.
கொஞ்சம் சம்பந்தமில்லாத விஷயங்களைச் சொல்கிறேன்.
புருஷ சூக்தத்தில்
புருஷ ஏவேதகும் சர்வம் | யத் பூதம் யச்ச பவ்யம்
என்றும்
வஸந்தோ அஸ்யாஸீ -தாஜ்யம் | க்ரிஷ்ம இத்ம: சரத்தவி:
என்றும் வரும். அதன் அர்த்தம்
எது முன்னிருந்ததோ எது இனி வரப்போவதோ இப்பொழுது காணப்படுவதோ எல்லாம் பரம புருஷனே
மேலும்
இதற்கு இளவேனிற் காலம் நெய்யாகவும் கோடைக்காலம் சமித்தாகவும் பனிக்காலம் ஹவிஸாகவும் ஆயிற்று.
மேலே சொன்ன இரு ஸ்லோகங்களும் விஷ்ணுபுரத்தின் மைய தரிசனத்தை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள உதவுகின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமே இல்லாதது போலத் தோன்றினாலும் பாணர்களின் பெயர்கள்தான் பெரும்பொழுதுகள் என்பது முதல் வாசிப்பில் சிக்கவே இல்லை. அவை ஏதோ பெயர்கள் என்ற அளவில் மட்டுமே மனதில் பதிந்திருந்தது. என் வாசிப்பின் லட்சணம் இதுதான் போலும்!
#விஷ்ணுபுரம் ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதே இல்லை!!