7.விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்
எழுதியவர் : விசு
விஷ்ணுபுரத்தில் இருநூறு கதை மாந்தர்களாவது வருகிறார்கள். முதல் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் கடைசி பகுதியில் தொன்மங்களாக வருகிறார்கள். (பிரம்மராயர், சித்திரை…); இரண்டாம் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் முதல் பகுதியில் தொன்மங்களாகவும், மூன்றாம் பகுதியில் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிடுகிறார்கள் (அஜிதன்); கவனமாகப் படித்தாலன்றி, இவற்றை நாம் தொடர முடியாது. ஒவ்வொருவரும் அவர்கள் சில பக்கங்களே வந்தாலும், மிக நுண்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் யுகங்கள் தாண்டி வேறு பெயர்களில் மீண்டும் வருகிறார்கள். (மறுபிறவி?) கதை மாந்தர்கள் மட்டுமல்லாது நிகழ்வுகளும் அந்தந்த காலத்திற்கேற்ப திரிபடைகின்றன. நாவலில் எண்ணற்ற பண்டிதர்கள், கவிஞர்கள், குரு-சீடர்கள், யானைகள், தெருக்கள், சிலைகள் வந்தாலும், ஒன்றுடைய சித்தரிப்பு போல இன்னொன்று இல்லை. ஒரு உதாரணம்: கடலூர் சீனு ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில் பொழுது புலர்வதை விவரிக்கிறார். (எப்படியெல்லாம் வாசிக்கறாங்கப்பா!!)
விஷ்ணுபுரத்தில் பொழுது புலரும் சித்திரங்கள் பல வருகின்றன. (பல வருகின்றன – திரும்பத் திரும்ப வரவில்லை) ஒரு பகல் அஜிதனின் புலர்வு. மற்றொன்று பவதத்தரின் பகல். மற்றொன்று புத்த பிட்சுக்களது. நாவலில் தனித்தனிப் பொழுது புலர்வு இருந்தாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் அது நமக்குப் புதிதாகவே இருக்கிறது. காரணம் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நம் ஆழ்மன பிம்ப அடுக்குகள் வேறு விதமாகக் கலைந்து அடுக்கப்படுகிறது. இன்னும் எத்தனை முறை படித்தாலும் விஷ்ணுபுரத்துப் பகல் புலர்வுக் காட்சிகள் புதிதாகவே இருக்கும்.
அடுத்த முறை விஷ்ணுபுரத்தை படிக்கும்போது, கதை மாந்தர்களை ஒட்டி வாசிக்கவேண்டும். இங்கு, ஒரு சிலரைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.
- சங்கர்ஷணன் சில இடங்களில் ஆசிரியரின் குரலாகவே ஒலிக்கிறான். (தான் ஏன் காவியம் படைக்க வந்தேன் என்று அவன் விளக்கும் இடங்கள்.)
- லட்சுமி தன் மகன் அனிருத்தன் இறந்த பின் அடையும் வெறுமைகளையும், சங்கர்ஷணனின் மேல் அடையும் வெறுப்பையும், பின் பிங்கலனில் அனிருத்தனைக் கண்டடையும் தருணத்தையும் உளவியல் ரீதியாக ஆராயவேண்டும் என நினைக்கிறேன். (ஃபிராய்டிய நெடி? இல்லை யோகமரபு சொல்லும் ஆழ்மனதின் காரிருள்?) ஏழாம் உலகம் நாவலின் முடிவில் வரும் ‘ஒத்த விரலு’ காட்சியையும், காடு நாவலில், கிரிதரனின் தாய் அவன் வளர்ந்துவிட்டான் என்று உணர்த்தும் தருணமும், லட்சுமி-பிங்கலனோடு ஒப்பிடத்தக்கது. ஆனால், மற்ற இரண்டு நாவல்களின் தருணங்களையும் விட இது மிகத் தீவிரமானது.
- நரோபா-அஜிதர்-சங்ககீர்த்தி நிகழ்வுகள் ‘போதி‘ கதையை நினைவுபடுத்துகின்றன.
முதல் பகுதியிலும், மூன்றாம் பகுதியிலும் வலுவான பெண் கதாபாத்திரங்கள் வரும்போது, இரண்டாம் பகுதியில் ஏன் பெண்கள் யாரும் வருவதில்லை?
இந்நாவலில் வரும் ஜாதிகள் பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும். இதில் வரும் விஷ்ணுவின் சிலை பழங்குடிகளின் சிலை, அதை மற்றவர்கள் அபகரித்துவிட்டார்கள் என்றே நாவல் சொல்கிறது. இதே கருவில் ஜெயமோகன் ‘மாடன் மோட்சம்‘ (மாடன் மோட்சம்) என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். சூர்யதத்தரோட சித்தரிப்பு, “ஞான விவாதங்களில் பங்கேற்கும் அளவிற்கு அறிவுவிருக்கறவங்கள, சோத்துக்கு அடிச்சிக்கறது போல சித்தரிப்பது” போன்றவற்றை காரணம் காட்டி, விஷ்ணுபுரம் பிராமணர்களைக் கிண்டலடிக்கிறது என்ற என் பிராமண நன்பர், அந்தப் பகுதிகளை திட்டிக்கொண்டே படித்தார். ஆமாம், பிராமணர்களை மட்டுமல்ல, ஆழ்வார்கள், மறக்குலம், பௌத்தர்கள், வணிக குலங்கள், பழங்குடிகள் என்று ஒருவரும் ஜெயமோகனின் அங்கதத்திலிருந்து தப்பவில்லை. (சுஜாதா, திருவடியின் சித்தரிப்பை படித்துவிட்டு, மேலும் நாவலை படிக்க மறுத்துவிட்டார் என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியதாக ஞாபகம்.) இவராவது நாவலை படித்துவிட்டு திட்டினார், இன்னொருவர் (கழக அனுதாபி), செவிச்செல்வம் மூலமே நாவலை உய்த்துணர்ந்து, ‘ஒரு ‘வந்தேறி’ எப்படித் தமிழர்களக் கேவலப்படுத்தலாம்னு கேக்காம, இது மாதிரி ‘புல்லுருவிகள்’ தலைல தூக்கிவச்சி ஆடுதுங்க” என்று என்னையும் சேர்த்து வசை பாடினார். புனைவுகளை விடுங்கள், தரவுகள் அடிப்படையிலேயே கூட ஜாதிகள் / மதங்கள் பற்றி எழுதினாலும், எழுத்தாளர் வீட்டிற்கு ஆட்டோவோ/சுமோவோ வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
இதை எழுதத் தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். நான் பிராமணனோ, ‘வந்தேறி’யோ இல்லை. ‘அசல்’ தமிழன்தான் . இப்போதய தேவை, குல, இன, ஜாதி அடிப்படையிலெல்லாம் பார்க்காமல், ‘பொதிகை மலை பெருமை’ எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நம் வரலாறை/பண்பாட்டை கறாரான பார்வையுடன் ஆய்ந்துவிட்டு கடந்து செல்லவேண்டும். தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ளத் தயாரில்லாத சமூகம் எப்படி ‘civilized’ என்று சொல்லிக்கொள்ள முடியும்? பிராமண காழ்ப்பு, வெள்ளையர்களின் ஆரிய-திராவிட ஆக்ரமிப்பு தியரி போன்றவை காலாவதியாகிவிட்டது. தமிழின் சிறந்த படைப்பாளியை ‘வந்தேறி’ என்று சொல்லும் மனநிலையை என்ன சொல்ல? இருவரும் என் நண்பர்கள்தான். என்றாவது புரியும் என்று நம்புகிறேன்.