6. விஷ்ணுபுரம் – மொழி
எழுதியவர் : விசு
இந்நாவலின் நடை, நமக்கு பரிச்சயமான யதார்த்த உரையாடல்களின் நடை மற்றும் பரிச்சயமில்லாத எண்ண ஓட்டங்களின் விரிவான காட்சி சித்தரிப்புகளின் நடை என்று இரு வகைப்பட்டது. (விஷ்ணுபுரத்தில் முதல் ஐம்பது பக்கங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. அதனால்தான் அது கடினமாக இருந்தது என்று சொல்லியிருந்தேன். கொஞ்சம் பழகிய பின், அது ஒன்றும் கடினமில்லை.) விஷ்ணுபுரத்தை ஜாலியாக படிக்க முடியவில்லையே என்று யாரோ கேட்ட கேள்விக்கு ஜெயமோகன் அளித்த பதிலுடன் உடன்படுகிறேன். அதில் எனக்கு பிடித்த வரிகள்:
இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையை அறிதலே. வரலாறாக, ஆழ்மனமாக, இச்சைகளாக, உணர்ச்சிகளாக, தத்துவமாக, மதமாக விரிந்துகிடக்கும் வாழ்க்கையை அறிதல். தத்துவம் அனைத்தையும் தர்க்கப்படுத்தி அறிய முயல்கிறது. இலக்கியம் சித்தரித்துப்பார்த்து அறிய முயல்கிறது. அறிய விழைபவர்களே என் வாசகர்கள்.
இப்போது, இலக்கிய எழுத்திற்கும் vs பொழுதுபோக்கு எழுத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு பரவலாகவே எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. இலக்கிய ஆக்கங்கள் கவனம் பெறுவது போலவே, பொழுதுபோக்கு/கேளிக்கை எழுத்துக்களின் காலகட்டம் முடிந்து அதை சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் Youtube ஆக்கிரமித்து வருடங்கள் பல ஆகின்றன. சுஜாதா போல ஜாலியாக, interesting ஆக எழுத இன்னொருத்தர் இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். யோசிக்கும்போது, அதற்கான தேவை இன்று வேறு வழிகளில் நிறைவேறிவிட்டது, இனி ‘interesting’ எழுத்தாளர்கள் தேவைப்படமாட்டார்கள் என்று தோன்றுகிறது. (ஆனால் தமிழ் சினிமாவில் சுஜாதா போல ஒரு interesting வசனகர்த்தா மிஸ்ஸாகிறார்).
மேலும் நாவலில் வரும் காட்சிகள், ஒரு திரைப்படத்தை நம் மனதில் காணுமளவிற்கு, மிக விரிவாகவும், நுண்மையாகவும் சித்தரிக்கட்டிருக்கின்றன. (உதாரணம்: தோற்றுவாய் பகுதிகள், விஷ்ணுபுரம் போன்ற ஒரு கற்பனை நகரம் நம் கண் முன் எழுந்து வரும் சித்திரம். கதையில் வரும் கண்டாமணி, முதல் பகுதியின் ஆரம்பத்தில் ஓங்காரமிடுகிறது, அதன் இறுதியில் டங்காரமிடுகிறது, கடைசி பகுதியில் விளிம்புகள் உடைந்து சுரீலென்கிறது.) இந்த நாவலை பெரும் பகுதி சமஸ்கிருதத்திலும், மீதி தமிழிலும் எழுதியிருக்க வேண்டும். பெயர்கள் கூட கதை நிகழும் இடங்களுக்கு ஏற்ப சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மாறி மாறி வருகிறது. (உதாரணம் : விஷ்ணுபுரம் – அகல்வள நாடு; ஹரிததுங்கா – பசுங்குன்றம்/பச்சைமலை; பிரியதாரா – முத்தாறு; அக்னிதத்தன் – செந்தலைப்பட்டன்; வராகபிருஷ்டம் – பன்றிமலை; கஜபிருஷ்டம் – ஆனைக்கண்டி).
எல்லா காலத்திலும் விஷ்ணுபுரத்தின் அதிகார மொழியாக இருப்பது சமஸ்கிருதமே (அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழ்). ஞான விவாத சபையில் திபேத்திய நரோபா உட்பட சமஸ்கிருதம்தான் பேசுகிறார்கள். விஷ்ணுபுரத்தின் மறவர் குடிகளும், காணியக்காரர்களும் தமிழ் பெயருள்ளவர்கள், மற்றவர்கள் சமஸ்கிருதப் பெயருள்ளவர்கள். பழங்குடிகள் தமிழ் பேசுகிறார்கள். விஷ்ணுபுரத்தின் முதல் சர்வக்ஞரான அக்னிதத்தன் வட தேசத்தில் எங்கிருந்தோ வந்தவன் என்று விஷ்ணுபுரம் சொல்கிறது. நாவலிலே விஷ்ணுபுரத்தைப் பற்றிய கிட்டத்தட்ட நான்கு தோற்றக் கதைகள் வருகின்றது. நான்கிலுமே, அக்னிதத்தன் வடதேசமென்றும், பாண்டியன் தென்னவன் என்றும் சொல்கிறார்கள். தோற்றக் கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தியரி. ( “தென்னவன் தன் அதிகாரத்திற்காக அக்னிதத்தனை உபயோகித்துக்கொண்டான்” – சிற்பி , “செந்தலையன் பூசைகள் போட்டு பெருமூப்பனை கட்டி வைத்துள்ளான்” – மூப்பன், “பாண்டியன் மிலேச்சன். அவன் ஷத்திரியனானது யமஸ்மிருதி மூலம்” – பட்டர், “சமணக் குடும்பங்களிலிருந்து வைணவத்திற்கு மாறியவர்கள், வடமொழிக்கு உடன்பட மறுத்துவிட்டார்களாம். தனிக் கோயில் கட்டிக் கொண்டார்களாம். ஏன் நமக்கு அந்த கலை வராதோ?” – பீதாம்பரம், மாதரி-ஆத்தன் கதை சொல்லும் வீரநாராயணர்). இது பற்றி, நாவலில் மேலும் படித்து தெரிந்து கொள்க. இங்கே எழுத இடம் போதாது. நாவலில் ஆரிய-திராவிட இனங்கள், மொழிகள் பற்றி நிறைய புனைவு உண்மைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். அவை உண்மையாக இருக்கும் என்றே நினைக்கிறேன். (அதாவது, ஆரிய-திராவிட என இரு இனங்கள் கலந்தனவே தவிர ஆரிய – திராவிட ஆக்ரமிப்பெல்லாம் இல்லை; ஒன்றோடொன்று உரையாடுகிறது; அதிகாரத் தேவைகளுக்காக ஒன்றை ஒன்று ஏற்கிறது; கொண்டும் கொடுத்தும் வளர்கிறது.) இங்கேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன், நாவல், சமஸ்கிருதத்தையோ, தமிழையோ உயர்த்திப் பேசவில்லை; எல்லாமும் வெறும் அதிகார ஆட்டமாகிப் போகிறது. உதாரணம்: சூர்யதத்தரை அவமதிக்க, பாண்டியனின் அவைப் புலவரும், தமிழ் புலவருமான ஆலாலசுந்தரர் கோபிலபட்டரின் சமஸ்கிருதக் காப்பியத்தை அரங்கேற்ற உதவுகிறார்.
நாவலின் முன்னுரையில், தமிழ் வாசக சூழலை நினைத்து தயக்கங்கள் நிறைய இருந்தன (இருக்காதா பின்ன?), அதனால் பல பகுதிகள் சுருக்கப்பட்டு, சில பகுதிகள் நீக்கப்பட்டு நாவல் வெளியிடப்பட்டுள்ளது என்கிறார் ஆசிரியர். 1997 அப்படி இருக்கலாம், இன்றைய சூழல் மேம்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். அந்த நீக்கப்பட்ட பகுதிகள் தற்போது இருந்தால், அவற்றையும் இனைத்து ஒரு ‘unabridged version’ பதிப்பாக விஷ்ணுபுரத்தை வெளியிட வேண்டும் என்று ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
அரங்கசாமி “முதல் பதிப்பில் (ஆரஞ்சு நிற அட்டை – அகரம்) மட்டும் தத்துவ விவாதப் பகுதிகள் நீக்கப்பட்டு வந்தது, அடுத்து வந்த (கவிதா) பதிப்புகளில் அது சேர்க்கப்பட்டது, இப்போதுள்ளது முழுமையானதுதான்” என்று தகவல் தருகிறார்.