5. விஷ்ணுபுரம் – மாய யதார்த்தவாதம்
எழுதியவர் : விசு
மிகைக்கற்பனை (fantasy), யதார்த்தவாதம் (realism), மாய யதார்த்தவாதம் (Magical Realism), நவீனத்துவம் (modernism), பின் நவீனத்துவம் (post-modernism) என்றால் ‘வைகைக்கரை நாணல் போல ஏதோவொன்று’ என்றுதான் நினைத்திருந்தேன். பல காலகட்டங்களைச் சேர்ந்த நாவல்களைப் படித்ததன் வாயிலாகவும், ஜெயமோகனின் இணையதளம் வாயிலாகவும் இப்போது ஓரளவு புரிகிறது. (‘மார்க்ஸிய வரலாற்று பொருள்முதல்வாத முரணியக்கம்’ தான் ரொம்ப படுத்துது ). இந்த இலக்கிய கலைச்சொற்ககளை, நான் புரிந்துகொண்டவரை கீழ்கண்டவாறு சொல்வேன்.
யதார்த்தவாதத்தில் கதை சித்தரிப்பு தர்க்கரீதியானது (லாஜிக் மீறாது) என்றால் மிகைக் கற்பனை அதற்கு நேரெதிர் (லாஜிக்கெல்லாம் யோசிக்கக்கூடாது). இவை இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைவது மாய யதார்த்தவாதம். (மாய நிகழ்வுகள் யதார்த்தம் போலவே இருக்கும். இதை நம்பகத்தன்மையோடு சொல்வது எழுத்தாளனின் திறனைப் பொறுத்து). நவீனத்துவம் கதை சொல்லியின் குரலாகவோ, ஒரு காலகட்டத்தின் குரலாகவோ ஒலிக்குமென்றால், பின் நவீனத்துவம், பல தரப்புகளின், பல காலகட்டத்தின் குரல். எவ்வகையிலும் ஒற்றைப்படைத்தன்மை அற்றது.
ஹெர்மன் ஹெஸ்ஸி எழுதிய சித்தார்த்தா ‘மானுடத் தேடல்’ என்ற கருவில் எழுதப்பட்ட யதார்த்தவாத பாணிக் கதை. யதார்த்தவாத பாணியினாலேயே என்னால் அக்கதையில் ஒன்ற முடியவில்லை. இரண்டாவது முறை படிக்க முயற்சி செய்து மூடி வைத்துவிட்டேன். ஜெயமோகனின் வாசகனானதால், எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை, யதார்த்தவாத / நவீனத்துவ கதைகளில் நுழைய முடியாமை. தமிழில் சிறந்த யதார்த்தவாத நாவல் பதினெட்டாம் அட்சக்கோடு என்கிறார்கள். உண்மையில் வாசிப்பு அகங்காரக் கோடரியோடு, எந்த மரத்தை வெட்டி வீழ்த்தலாம் என்று பதினெட்டாம் அட்சக்கோட்டில் நுழைந்து, அங்கு ஒரு புல்வெளியைக் கண்டு ஏமாற்றமடைந்தேன். “அசோகமித்ரன் கதைப்புலத்தில், ஒரு இளம் வாசகன் தன் வாசிப்பு அகங்காரத்தைக் கொண்டு, தான் முட்டித் திறக்க வேண்டிய குறியீடு எது என்று தேடினால், ஏமாற்றம்தான் மிஞ்சும்” என்று “நவீனத் தமிழிலக்கிய அறிமுகத்தில்” குறிப்பிடுகிறார் ஜெயமோகன். பதினெட்டாம் அட்சக்கோடு வாசித்தபின் இந்த வரிகளைப் படித்தேன். ஆச்சரியமாக இருந்தது. பிரச்சினை என்னிடம்தான், நாவலை அந்தக் காலகட்டத்திற்கு சென்று வாசிக்காமல், என்னை நோக்கி இழுக்க முற்படுகிறேன். எனக்கு கோபல்ல கிராமம், பதினெட்டாம் அட்சக்கோடு போன்றவை பின்பு எப்போதாவது திறக்கலாம். ஆனால், வாசிப்புக் கோடரி கொண்டு வருபவர்களுக்கு, விஷ்ணுபுரம் ஒரு அமேசான் காடு, வெட்ட வெட்ட மரங்கள் முளைத்தபடியே இருக்கும்.
நவீன இலக்கியத்தில், மிகைக்கற்பனை, யதார்த்தவாத கதை சொல்லும் முறைக்கு மாற்றாக, மாயா யதார்த்தவாதத்தை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறார்கள். காப்ரியேல் கார்ஸிய மார்க்வெஸ் எழுதிய ‘One Hundred Years of Solitude‘ அதில் புகழ் பெற்றது. ஆனால், லத்தீன் அமெரிக்காவில் மாயா யதார்த்தவாதம் அறிமுகம் ஆவதற்கு கால் நூற்றாண்டு முன்னரே, வங்க எழுத்தாளர்அதீன் பந்த்யோபாத்யாய, தன் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலில் அந்த உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் ஜெயமோகன் –கண்ணீரைப் பின்தொடர்தல். அதிலிருந்து,
காட்சி சார்ந்த நுட்பம் மூலம் மாயத்தை நிஜமாக்குவது மாய யதார்த்த ஆசிரியர்களின் பாணி. அதீன் அதை திறம்படச் செய்கிறார். பைத்தியக்கார பாபு கடைசியில் நாணல் பூக்கள் வெண்பனி போல கொட்டும் நிலப்பரப்பை அடைகிறார். அங்கு வருகிறது மதம் கொண்ட யானை. அதன் மீது நாணல் மலர்கள் கொட்டி அது இந்திரனின் வெண்ணிற யானை போல இருக்கிறது. பைத்தியக்கார பாபு அதன் மீது ஆரோகணித்துக் கொள்கிறார். ” Still still to hear her tender-taken breath and to live ever or else swoon to death ! death ! death !” மரணம் மரணம் என்று சொன்னபடியே வெள்ளையானை மீதேறிய தேவன் காட்டுக்குள் சென்று மறைகிறார். மீண்டு வரவேயில்லை.
விஷ்ணுபுரம் போன்ற, யுகயுகமாக முடிவின்றி ஓயாது சுழன்றலையும் மானுடத் தேடலை அள்ள முயலும் நாவலை, யதார்த்தவாத பாணியில் எழுதியிருக்க முடியாது. நாவலில் வரும் மாயா யதார்த்தவாத கூறுகள் வாசகனை நாவலில் ஒன்றச் செய்கின்றன; வாசிப்பு அனுபவத்தை பல மடங்கு உயர்த்துகின்றன. விஷ்ணுபுரத்தில் மாய யதார்த்தத் தருணங்கள் நிறைய உள்ளன. அவற்றில் மிகச் சிறந்தது, அஜிதன் ஞான சபை விவாதத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெல்லும்போதும், ஞான ஸ்தம்பத்தில் ஒவ்வொன்றாக தானாகவே எரியும் சுடர். அஜிதனுடைய வெற்றியை அறிவிக்கவரும் கிருஷ்ணப் பருந்தும் அவ்வாறே. (தூய தர்க்கத்தின் அடிப்படையில் நடைபெறும் ஞான சபை விவாதத்தில் வெற்றியை அறிவிக்கும் முறைகள் தர்க்கத்தை தாண்டியதாக இருப்பது அழகிய முரண்.) அதே சமயம், அஜிதன் ஞான விவாதங்களில் வெல்வதை மாய யதார்த்தவாதமாக சித்தரிக்கும் ஆசிரியர், பத்மாட்சி அக்னிப்பரிட்சையில் ‘வெல்வதை’ யதார்த்தவாதமாக (தந்திரமாக) சித்தரிப்பதை கவனத்தில் கொண்டால், அவை உணர்த்தும் உட்பொருள் புரியும். நாவலில் வரும் மாயா யதார்த்தவாதத்திற்கு மேலும் சில உதாரணங்கள் – ஞானத் தேடலின் அதிதேவதையாக வரும் பச்சை நிற பார்வை கொண்ட மிருகநயனி, மரணத்தின் குறீயீடாக வரும் கரிய நாய், சித்திரைக்கு பத்தினித் தெய்வம் கொடுக்கும் செஞ்சுடர்… சொல்லிக் கொண்டே போகலாம்.
மார்க்வெஸின் ‘One Hundred Years of Solitude’க்கும், விஷ்ணுபுரத்திற்கும் மேலோட்டமாக சில ஒற்றுமைகள் உள்ளது. அந்த நாவலிலும், ஒரு ஊர் (மாசாண்டோ) தோன்றி அழிவதின் சித்திரம் உள்ளது. மாசாண்டோவின் கதை, பூயந்தியா என்ற கொலம்பியக் குடும்பத்தின் ஆறு தலைமுறைகளின் கதை; மாசாண்டோவின் அழிவைப் பற்றி கடைசியில் மெல்சியாடஸ் எழுதி வைத்த சமஸ்கிருத குறிப்பை (ஜோசியம்?) படிக்கும் போதுதான் தெரிகிறது; மீண்டும் மாசாண்டோவோ, புயந்தியாக்களோ பிறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், நூறாண்டுகளை தனிமையில் கழித்தவர்களுக்கு மண்ணில் வாழ மீண்டுமொரு வாய்ப்பில்லை. கடவுள் அவர்களை தண்டித்துவிட்டார் என்கிறார் மார்க்வெஸ். இது ஓரளவு கிறித்தவ விழுமியம் சார்ந்த நோக்கு என்று நினைக்கிறேன். விஷ்ணுபுரம் ஒரு கோவில் நகரத்தின் பல நூற்றாண்டுக் கதை; விஷ்ணுபுரத்தில் பிரளயத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பல முறை விஷ்ணுபுரம் தோன்றி அழிந்துள்ளதாக கதைகள், காவியங்கள் கூறுகின்றன. விஷ்ணுபுரம் கீழை மரபின் தரிசனங்களை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, இரண்டு நாவல்களுக்கும் வேறெந்த ஒற்றுமைகளும் இல்லை. வடிவத்தில் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’, தமிழ் நாவல்களில்பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலி நகக் கொன்றை‘யுடன் தான் பெரிதும் ஒத்திருக்கிறது. (அதுவும் வடிவத்தில் மட்டும்தான், பேசு பொருளில் இல்லை).
என்னளவில் விஷ்ணுபுரம் மிகச் சிறந்த பின்நவீனத்துவ, மாயா யதார்த்தவாத நாவல். ஜெயமோகன் தான், மாயா யதார்த்தவாதம் எழுதவில்லை, செவ்வியல் வடிவிற்குள் நிற்கும் மிகைக் கற்பனையைத்தான் எழுதுகிறேன்; நவீன செவ்வியல்வாதியாகவே அறியப்பட விழைகிறேன் என்கிறார். காவிய மரபும், செவ்வியலும் கற்கும்போது அவர் சொல்வது எனக்குப் புரியலாம்.