4.விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு
எழுதியவர் : விசு
“வெண்பனி படர்ந்த இமயமலைச் சிகரங்களை கண்டபோது, விஷ்ணுவின் விஸ்வரூபத்தைக் கண்டேன்” – சங்கர்ஷணன்
சிந்தனைகளில் கணிதம், நியாயம் (லாஜிக்) ஒரு முனை என்றால், கவிதை அதற்கு நேரெதிர் முனை. எதையும் தர்க்கரீதியாக ஆராயும் கணித மூளை உடையவர்களுக்கு, கவிதைகள் என்றுமே எட்டாக்கனி. மேலும் லாஜிக்கை ஒருவர் விளக்கி நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கவித்துவத்தை விளக்கிப் புரிய வைக்க முடியாது, அது உணரப்பட வேண்டும் என்கிறார்கள். எனக்கு கவிதைகள் இப்போதைக்கு புரியாது. விஷ்ணுபுரம் நாவலில் உள்ள கவித்துவத்தை கவிஞர்கள் யாராவது விளக்குவதுதான் சரியாக இருக்கும். இருப்பினும், காலத்தையும், இருப்பையும் பற்றிய கவிதையில் உள்ள இந்த வரிகள் அபாரமான மனக்காட்சியை அளிக்கிறது.
ஓய்வெனும் மரணம்
இரவெனும் இடைவெளி
ஒரு நூறு பாதங்கள் ஊன்றி
வானாகிக் கவிழ்ந்து
வெளியில் தலைதூக்கி
எண்ணற்ற முலை நுனிகளால்
அமுதூட்டும் கருணை.
தோத்திரப் பாடல்கள், வேதப் பாடல்கள், சித்தர் பாடல், பழங்குடிப் பாடல் என பல பாடல்கள், கவிதைகள் நாவலில் வருகின்றன.
இந்திய காவிய மரபின் வளமைகள் அனைத்தையும் உள்வாங்கி எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் ஆசிரியர். இந்திய காவிய மரபைப் பற்றியெல்லாம் எனக்கு இப்போதைக்கு ஒன்றும் தெரியாது. அதனால் இந்தப் பகுதி ‘skip’.