விஷ்ணுபுரம் – ஒரு விஸ்வரூபம்

விஷ்ணுபுரம் – ஒரு விஸ்வரூபம்

எழுதியவர் : பாஸ்கர் [பாஸ்கி]

பாஸ்கி தளம்

அசுர வேகத்தில் எழுதும் ஜெயமோகனின் நூல்களில் ஏழாம் உலகத்திற்கு அடுத்து அதிகளவு விமர்சனத்துக்குள்ளான புத்தகம் இதுதான் என்று நினைக்கிறேன். ஏற்கனவே கல்கி போன்றவர்களின் தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்திருகிறேன். அனால், விஷ்ணுபுரத்தில், கலைச்சொற்கள் மிகுதி, கடின நடை, போன்ற விமர்சனங்களே மிகுதியாக இருந்ததால், இதனுள் கொஞ்சம் தயங்கித்தான் நுழைய நேர்ந்தது. பின்னர், படித்து முடித்ததும், Lord of the Rings – மற்றும் Matrix Trilogy பார்த்தது போலிருந்தது.

நிறைய விமர்சகர்கள், இது ஒரு இந்துத்துவா நாவல் என்று வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. மாறாக இது, இந்து மத ஆச்சார்யர்களை,
பண்டிதர்களை, ஏகத்துக்கும் கிண்டல் செய்கிறது. ஒரு உதாரணம் இங்கே..
“ஆற்றோரமாக சிறு சிறு பலிதேவதைப் பீடங்கள் இருந்தன. அவற்றருகே மட்டும் அவ்வபோது நின்று, பின்னால் வந்த கார்மிகனின் கையிலிருந்த தாம்பாளத்திலிருந்து மலரும் அட்சதையும் எடுத்துத் தூவி வணங்கினார். ‘பரதேசத்து நாய்தான் கல்லைக் கண்டால் அடையாளம் வைத்துப் போகும்’ என்று ஒரு வித்யார்த்தி ரகசியமாகக் கூறினான்’ மற்றவர்கள் கிளுகிளுவென்று சிரித்தார்கள் ”

மூன்று காலக்கட்டங்களில் கதை நிகழ்வதாக, ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி என்று மூன்று பாகங்கள். ஒவ்வொரு பாகத்தின் ஆரம்பத்திலும் அந்தக் காலத்துக்கு முன்னர் அழிந்துபோன விஷ்ணுபுரத்தைத் தேடி ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த இருவர் வருகின்றனர். பின்னர் அங்கிருந்து காலம் அப்படியே பின்னோக்கி நகர்ந்து விடுகிறது. அப்புறம் அற்புதமான பிளாஷ் பாக் கதை.

இந்த நாவல் மிகப் பிரம்மாண்டமாக, அதீத வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட மாளிகையைப் போலிருக்கிறது. காட்சிகளை மிக நுட்பமாக சித்தரிக்கும் பாங்கில் ஜெயமோகன் என்ற சிற்பியின் கடும் உழைப்புத் தெரிகிறது. கதை நிகழும் களம், தென் பாண்டி நாட்டில் இருக்கும் விஷ்ணுபுரம் என்ற கற்பனை நகரம். கேரளம் போன்ற நில அமைப்பு, நகரின் நாடியாக ஓடும் செந்நிற சோனா நதி. பல்வேறு சமயத்தவரால் விஷ்ணுபுரம் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டும் எழுப்பபட்டும் வருகிறது. சிற்ப சாஸ்திரம், குதிரை சாஸ்திரம், யானை சாஸ்திரம், என்று கதை முழுக்க மிக அடர்த்தியான தகவல்கள் மற்றும் அற்புதமான வர்ணனைகள். ஆயாசப்படாமல் கூர்ந்து அவதானித்தால் நல்ல தகவல் களஞ்சியமாகவும் விளங்கும். காவியங்களில் வர்ணனைகளை ரசிப்பவர்களுக்கு இது அற்புதமான நூல். உ.ம். “மிக ரகசியமான ஒரு பெட்டியிலிருந்து அறியா பொருள்களை எடுத்துப் பார்க்கும் உலோபி போல, ஒவ்வொரு நினைவாகத் தொட்டுத் தொட்டுப் பார்த்தான்..”

நேர்த்தியான ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி போல, முதல் பாகம் ‘ஸ்ரீபாதம்’ ஆரம்பிக்கிறது. எப்போதோ தொலைந்து போன விஷ்ணுபுரத்தைத் தேடி, வெகு தூரத்திலிருந்து, மணல் வெளியில் நடந்து வரும் கதை மாந்தர், பின் அவருடன் சேர்ந்து கொள்ளும் வேறொருவர், என Horizon level -லில் ஆரம்பித்து, அப்படியே நிலத்தை விட்டு எழும்பி, crane-shot போல, landscape அப்படியே நம்முன் விரிகின்றது. யந்திரச் சக்கரம் மூலம் விஷ்ணுபுரம் இருந்த இடத்தை இவர்கள் கண்டு பிடித்தவுடன் நாவல் அப்படியே பிளாஷ் பாக் காட்சியாக அந்த நகரம் ஓஹோ என்றிருந்த நாட்களுக்குப் பின்னோக்கிப் போய் விடுகிறது.

மக்கள் எளிதில் நெருங்க முடியாத, கண்டாலே அச்சமூட்டும் மிகப் பிரம்மாண்டமான ஆலயம், அது ஏற்படுத்தும் அச்சத்தின் மூலமும், ஐதீகங்களின் மூலமாகவும் மக்களை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது, என இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கும் வாடிகன் கத்தோலிக்கத் தலைமை போல விஷ்ணுபுரத்துக்கு ஸூரியதத்தர் என்ற ஞான குரு. இவர் பாண்டியனுக்கும் குலகுரு. விஷ்ணுபுரத்தின் கட்டுப்பாடு, ஞானகுரு, மற்றும் காவல் அதிகாரியின் கைகளில். ஞானகுருவுக்கு உண்மையில் எவ்வித ஞானமும் தேவையில்லை. அது ஞானத்தோல் போர்த்திய அரசியல் பதவி. இருவருக்கும் இடையில் நடக்கும் அதிகார சதுரங்கப் போட்டி, இன்றைய அரசியல் விளையாட்டுகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. எந்த வகை அரசியல் அமைப்பு ஆனாலும், மதம், மொழி அல்லது ‘தேசப் பற்று’. என்ற மாய வார்த்தைகளின் மூலமாக ‘தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே’ நாடாளும் வாய்ப்பைத் தம் வசமே வைத்துக் கொள்கிறார்கள்.
பின்வரும் உரையாடல், காவல் தலைமை அதிகாரி, மற்றும் அடுத்த அதிகாரிகள் நிகழ்த்துவது.
“மக்கள் எப்போதும் சாதாரணமானவர்களைத்தான் தலைவர்களாக ஏற்கிறார்கள். பிறகு அவர்களை அசாதாரணமானவர்களாக எண்ணி வணங்குவார்கள்”..
“மக்கள் மரபுகளை வழிபடுகிறவர்கள். எதிர்காலம் பற்றிய அச்சத்திற்கு மாற்றாக வாழ்க்கையை ஒரு சடங்காக மாற்றி வைத்திருக்கிறார்கள். …. புதிதாக ஏதும் நிகழாது, அதாவது நிகழ விடக்கூடாது. நமது கடமை அதுதான் ”
இன்றைய நவீன உலகத்திலும் ஆட்சியாளர்கள் எந்த விதமான மாற்றங்களையும் கொண்டு வர அச்சப்படுகிறார்கள்.

முதல் பாகத்தில், சங்கர்ஷணன் என்ற கவிஞன், பிங்கலன் என்ற குடுமி அறுத்து நைஷ்டிகம் துறந்த ஒரு வேதியன் மற்றும் திருவடி என்ற ஒரு வாத்தியக்கார இளைஞன் ஆகியோர், கதையை நகர்த்திச் செல்லும் முக்கியப் பாத்திரங்கள். கதை மாந்தர்கள் அவ்வப்போது நிறைய இடைவெளி விட்டு வருவதால் ஒரு சரடு கதையில் ஊடே செல்லாத குறையாக இருக்கிறது.

கவிஞன் சங்கர்ஷணன், தன் மனைவி மற்றும் இரு மக்களுடன், தன்னுடைய வித்தை என்ற கர்வத்துடன், கலை உலகத் தலைநகரான விஷ்ணுபுரத்துக்குள் நுழைகிறான். அரை வேக்காடுகள் நிறைந்த வித்வத் சபையில் புதியதாக ஒரு காவியத்தை அரங்கேற்ற முயலும்போது, அங்கே கவிச் சபையில் நிலவும் அரசியலும், அதிகார விளையாட்டுக்களும் அவனை அவமானத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்குகிறது. பின்னர், தான் ஒரு அதிகார விளையாட்டின் சதுரங்கக் காய் என்று தெரியாமலே பாண்டிய மன்னன் முன் தன் காவியத்தை அரங்கேற்றம் செய்கிறான்.
பிங்கலன், கணிகையர் இல்லத்தில் சில காலம் வாழ்கிறான். குழம்பிய தன் மனம் அலைக்கழிக்க, பல்வேறு தேடுதல்களில் ஈடுபட்டுக் கடைசியில் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப உதவும்படி தன் குருநாதரை நாடுகிறான்.
திருவடி, ஒரு கணிகையைக் காப்பாற்றி, அவள் மீது தொலை தூரக் காதல் கொண்டு, அதைச் சொல்ல இயலாமல் சுய இன்பம் நாடி, தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் கோழை. தன் கோழைத்தனத்துக்கு, இசைப்பித்து என்ற ஒரு போர்வை போர்த்திக்கொண்டு அலைய, கடைசியில் ஒரு குலத்தவர் அவனை ஆழ்வாராகவே ஆக்கி விடுகின்றனர்.
இன்று போலவே, அன்றும் உயர் கணிகையர் திலகங்களின் அரசியல் செல்வாக்கும், மற்ற கணிகையரின் அவலமும் மிக நேர்த்தியாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரு கணிகை பின்னர் குருவாகவும் ஆகின்றாள்.
இது தவிர, சிற்பி, காளாமுகர், நகரத் தலைவர்கள் என்று வித விதமான சுவாரஸ்யமான பாத்திரங்கள்.
கதாசிரியர், அங்கதச் சுவைக்குக் குறையே வைக்கவில்லை. ஒரு புத்தி பேதலித்தக் கிழவரை, ஆழ்வார் என்று கதை கட்டி, ஊர் ஊராக சுமந்து சென்று மக்களை ஏமாற்றும் வைதிக குண்டர்கள், அடியாட்கள் புடை சூழ மாமூல் வலம் வரும் தாதாக்களைப் போல, அல்லக்கை சீடர்கள் அலம்பலுடன் வலம் வரும் பண்டிதர்கள், சோற்றுக்கு அடித்துக் கொள்ளும் பல்வகை சாஸ்திரிகள் என்று கதை நெடுக நையாண்டிதான். “நாமத்தைச் சாத்திக் கொண்டு ஆளாளுக்கு எப்படி இருக்கிறான்கள் பார்; அனந்தன் சப்பரம் மாதிரி. இவன்களுக்கு சோறு போட்டே நாடு வறண்டு விடும் போலிருக்கிறது…”
பாண்டிய மன்னனின் இடை குறுகி, தோல் விரிந்தெல்லாம் இல்லை. மாறாக, வழக்கமான மன்னர்களைப் போல பெண் போகத்தில் அளவுக்கதிகமாகத் திளைத்து உடம்பெல்லாம் ‘பொம்பள சீக்கு’ பிடித்துக், காய்ந்து, கறுத்து, கூன் விழுந்திருக்கிறான். மஞ்சத்தில் மங்கையர் புடைசூழ, காவலதிகாரியுடன் அவன் நடத்தும் சதியாலோசனையை எத்தனை நக்கலாக ஜெமோ எழுதியுள்ளார் என்று படித்துப் பாருங்கள்.
சில அசைவங்களும் உண்டு. “அதுவா; அது அந்த காப்பிரிகளைப் பற்றித்தான். அத்தனை பெரும் கணிகையர் வீதிக்குத்தான் போகிறார்கள். அங்கே இவர்கள் போய்விட்டுத் திரும்பினால், வீட்டு வாசல்கள் எல்லாம் பெரிதாக ஆகிவிடுமாம். நாமெல்லாம் போனால் வாசலைத் தட்டி சிரமப்பட வேண்டாமாம்”.

இரண்டாம் பாகம் கௌஸ்தபம். இதில், இரண்டு பௌத்த பிட்சுகள், அழிந்து தொலைந்து போன விஷ்ணுபுரத்தைத் தேடி வருகிறார்கள். பின்னர் அங்கிருந்து கதை பின்னோக்கிச் செல்கிறது. இந்தக் கதை நிகழ்ந்த காலம், ஸ்ரீபாதத்துக்கு பல நூற்றாண்டுகள் முன்னாள் நிகழ்ந்ததாக அமைக்கப் பட்டிருக்கிறது. பௌத்தர்கள் விஷ்ணுபுரத்தின் ஞானசபையை கிருஷ்ணபட்சிப் பரீட்சையின் மூலம் கைப்பற்றுவது இந்த பாகத்தின் சாரம். இதன் பெரும் பகுதி ஆதி வைதிகம், சைவம், வைணவம், வேதாந்தம், மீமாம்சை மார்க்கங்கள், அவற்றின் கிளைகள் ஆகியவற்றுக்கிடையே நடக்கும் நீண்ட விவாதங்கள் கொண்டது. சிந்தை சிதறாமல் படிப்பது சற்று சிரமம்தான். கூர்ந்து படிக்க நீண்ட நேரமும், வேதாந்த விவாதங்களில் ஆர்வமும் வேண்டும். சமண பிட்சு அஜிதன் வாதிடுகிறான் “வேதம் என்ன கூறுகிறது? நம்பச் சொல்லவில்லை; தேடச் சொல்கிறது. ஆராயச் சொல்கிறது. அவற்றை யாகவிதிகளாக மாற்ற விரும்பும் வைதீகர்களே சுருதி வாதத்தை உண்டு பண்ணினார்கள். ”

சோற்றுப் பந்தலில் பிராமணர்கள் செய்யும் அட்டகாசம் பற்றி ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது. படிப்பவர் யாருக்கும் சிரிப்பை வரவழைக்கும். “கொடிக் கிழங்கு பிட்டை ஏனய்யா வாங்கினீர் கர்த்தபமே? உமக்குத்தான் வாயு பீடை ஆயிற்றே ! நேற்று மந்திர நேரத்தில் நவத் துவாரங்களிலும் ஓங்காரம் சொன்னீர் தெரியுமா ? ”

தர்க்க விவாதங்கள் முன்னேறி, பௌத்தர் அஜிதன் வெற்றி பெறுவது உறுதியாகிக் கொண்டு வருகிறது. ஆட்சியையும் அதிகாரமும் தம் கையை விட்டு நழுவுவதை கால காலமாக அனுபவித்து வந்த சாஸ்திரிகள் தயாராகவில்லை. ( சிதம்பரம் கோயிலில் தமிழ் தேவாரம் பாடவே அனுமதிக்காமல் தீட்சிதர்கள் சமீப காலங்களில் செய்த ரகளைகள் சும்மா விட்ட குறை தொட்ட குறை.) அசாத்திய கோபம் கொள்கிறார்கள்.
“சாஸ்திர விரோதியை எங்களூர் சத்திரியர் வெட்டிக் கொல்வார்கள்”
“உங்கள் ஊர் சத்திரியர் சாஸ்திரம் அறிந்தவர்களோ? ”
“சாஸ்திரத்தை பிராமணர்கள் விளக்குவோம். அது நமது கடமையல்லவா? ”

கடைசியில், எதிர்பாராத திருப்பங்கள், பிராமணர்கள் சதி, கலவரம், பௌத்தர்கள் விஷ்ணுபுரத்தைக் கைப்பற்றுவது என்பதில் இரண்டாம் பாகம் முடிவுறுகிறது.

கடைசிப் பாகம் மணிமுடி. இது அஜிதரின் கடைசி காலத்தில் தொடங்குகிறது. பாண்டிய மன்னர்கள் சவ சமயத்தைத் தழுவி வைணவம் தொய்வடைகிறது. பின்னர், வரலாற்றின் ஏராளமான மாநகரங்களைப் போல விஷ்ணுபுரமும் படிப்படியாக சிற்றூராகி, சிதிலமடைந்து, குடும்பங்கள் சீரழிந்து, எஞ்சியிருந்த சிலரும் ஊரை விட்டு வெளியேற, பிரளயம் வந்து அழியும்போது, நமக்கும் மனது கடினமாகிறது. மறுபடியும் கதை, தொடங்கிய இடத்துக்கே வருகிறது.

தமிழின் தலை சிறந்த 25 புதினங்களில் விஷ்ணுபுரம் கண்டிப்பாக இடம் பெறும். அவசியம் படியுங்கள். அற்புதமான அனுபவம் காத்திருக்கிறது. பரவசத்தில் ஆழ்த்திய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றிகள்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s