1. விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்

1. விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்

எழுதியவர் : விசு என்கிற விஸ்வநாதன்

சிலிகான் ஷெல்ஃப்

விஷ்ணுபுரத்தின் ‘கதை’ பற்றி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், சிறுகுறிப்பு வரைக, என்று பரிட்சையில் கேள்விகேட்டால், கீழ்கண்டவாறு எழுதுவேன். (விஷ்ணுபுர நாவல் மூன்று பகுதிகளாக ஆனது.)

விஷ்ணு யுகத்திற்கு ஒரு முறை புரண்டு படுப்பார் என்பது ஐதீகம். தென்னாட்டின் தென்கோடியில் உள்ள ஊர் விஷ்ணுபுரம். காலாகாலமாக, விஷ்ணுபுரத்தை நோக்கி தாந்திரீகர், வைதீகர், சமணர், பௌத்தர், காளாமுகர், வேதாந்திகள் என எல்லா மரபினரும் ஞானத்தைத் தேடி வந்த வண்ணம் உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் தென்னாட்டில் நடந்த ஞான விவாத சபையில், மற்ற மரபுகளை வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக வைதீக மரபை நிலைநாட்டியவர் வடநாட்டினரான அக்னிதத்தர். நான்காம் நூற்றாண்டில், அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதத்தில் வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்தத்தை நிலைநாட்டியவர் அஜிதர். பௌத்தத்திலிருந்து சமணம். பின்பு மீண்டும் வைதீகம். விஷ்ணுபுரத்தின் சொல் எதுவோ, அதற்குக் கட்டுப்பட்டது, மதுரையை ஆளும் பாண்டியனின் கோல்.

நாவலுடைய முதல் பகுதியின் காலம், பக்தி மரபு ஓங்கியிருந்த பத்தாம் நூற்றாண்டு. கதைக்களம், விஷ்ணுபுரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஶ்ரீபாதத் திருவிழா. பத்தாம் நூற்றாண்டில் விஷ்ணுபுரத்தின் சொல்லாக இருக்கும் வைதீக மரபின் காவலராக இருப்பவர் சூர்யதத்தர். திருவிழாவின் ஒரு பகுதியாக கூடும் தர்க்க விவாத சபையில் தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றி, பெறும் பரிசில் மூலம், தன் வறுமை நீங்கும் என்ற கனவோடு தன் மனைவி, மக்களுடன் வரும் சங்கர்ஷணன், சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்டு, காவியக் கனவு கலைந்து, ஒரு விபத்தில் மகனைப் பறிகொடுத்து, கணிகையர் வீதியில், பத்மாட்சி எனும் கணிகையிடம் சென்று சேர்கிறான். விஷ்ணுபுரத்தில் உள்ள வைதீக குருகுலத்தைச் சேர்ந்த பிங்கலன் என்ற இளம் சீடன், வைதீகத்திலும், தன் குருகுலத்திலும் நம்பிக்கை இழந்து, குருகுலத்தை விட்டு வெளியேறி, சாருகேசி எனும் கணிகையிடம் தஞ்சமடைந்து போகத்தின் எல்லைக்கும் ஞானத் தேடலின் எல்லைக்கும் இடையே முடிவின்றி அலைகழிக்கபடுகிறான். சங்கர்ஷணனின் மனைவியான லட்சுமி, மகனை இழந்த துக்கதிலிருந்து மீள, ஒரு பஜனை கோஷ்டியில் சேர்ந்து, பின்பு பிங்கலனில் தன் மகனை ‘கண்டடைந்து’, துக்கத்திலிருந்து மீள்கிறாள். சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்ட சங்கர்ஷணன், அதிகார பகடையாட்டத்தின் ஒரு பகுதியாக சூர்யதத்தராலேயே ஞான சபையில் காவியம் அரங்கேற்ற அழைக்கப்படுகிறான். ஞான சபையை அவமதிக்க, பத்மாட்சி இல்லாமல் காவியம் அரங்கேறாது என்கிறான் சங்கர்ஷணன். கணிகையான அவளின் தூய்மையை சோதிக்க நடக்கும் அக்னிப் பரிட்சையில் ‘வெல்லும்’ பத்மாட்சியை காவிய தேவதையாக்கி, சிலை வைக்க உத்தரவிடுகிறார், விஷ்ணுபுரத்தில் ‘புதிதாக எதுவும் நிகழ்ந்துவிடாமல்’ பார்த்துக்கொள்ளும் சூர்யதத்தர். தன் காவியத்தை அரங்கேற்றிய பின், லட்சுமியுடன் மீண்டும் இனைந்து, விஷ்ணுபுரத்தில் நடக்கும் கேலிக்கூத்துகளால் மனம் வெறுத்து, விஷ்ணுபுரத்தை விட்டுச் செல்கிறான் சங்கர்ஷணன்.

கணிகையர் குலத்தில் பிறந்த லலிதாங்கியிடம் காதல் வயப்படும் வாத்தியக்காரனான திருவடி, கணிகையர் வீதியில் அவளுக்காக காத்திருந்து, காத்திருந்து, பித்தேறி, தன்னிலை இழந்த நிலையில், திருவிழாவில் பங்கேற்க வந்த கிழ ஆழ்வார், குதிரை மீதேறி ‘வைகுந்தம்’ போய்ச் சேர்ந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, அவன் உறவினர்களால், திருவடி ஆழ்வாராக ஆக்கப்பட்டு, விஷ்ணுபுரத்தில் கைவிடப்பட்ட கடையனிலும் கடையர்களுக்கு ரட்சகனாகிறான். ஹரிதுங்கா மலையிலுள்ள செங்கழல் கொற்றவையின் ரூபமான விஷ்ணுபுரத்தின் பத்தினித் தெய்வத்திடம் ‘உன் குலக் கொழுந்தாவாய்’ என்று ஆசி பெற்ற சித்திரை எனும் பதின்பருவச் சிறுமி, ஒரு மாயத் தருணத்தில் தீயினால் உண்ணப்பட்டு, தன் குலத்தின் தெய்வமாகிறாள். விஷ்ணுபுரத்தின் தலைமை அதிகாரியான நரசிங்கரிடம் இருந்து சதி மூலம் பாண்டிய மன்னன் ஆதரவுடன் தலைமைப் பொறுப்பை அடைகிறான் காவலாளியான வில்லாளன். விஷ்ணுபுரத்தின் அடையாளமான விஷ்ணு கோவிலின் தலைமைச் சிற்பியான பிரசேனர், காளாமுகர்களால் உந்தப்பட்டு, மனம் பேதலித்து, விஷ்ணுபுரக் கோவிலை இடித்துவிட எண்ணி ராஜகோபுரத்தின் மீது ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

பத்தாம் நூற்றாண்டிலிருந்து, கதை நான்காம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. (நாவலின் இரண்டாம் பகுதி) அப்போது, விஷ்ணுபுரத்தின் சொல்லாக, வைதீக மரபின் காவலராக இருப்பவர் பவதத்தர். இளம் பௌத்த பிக்குவான அஜிதனின் வாதத்திற்கான அறைகூவலை ஏற்று, பவதத்தர் விஷ்ணுபுர ஞான சபையை கூட்டுகிறார். பவதத்தர் தன் வாதத் திறமையால், சமணர்களையும், சைவர்களையும், திபேத்திய பௌத்தர்களையும் வெல்கிறார். பவதத்தரின் மருமகனாகிய விஷ்ணுதத்தன் என்ற பண்டிதன், தான் கற்ற ஞானமனைத்தையும் துறந்து, உடலெங்கும் சாம்பல் பூசி, பெருச்சாளித் தோலில் செய்த கௌபீனம் அனிந்து, சுடுகாட்டுச் சித்தனாகி விஷ்ணுபுர வீதிகளில் கூத்தாடுகிறான். சித்தனும் அவன் சீடனும் விவாதத்தில் பங்கேற்காமல், வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். பவதத்தர், வேதத்தை மூல நூலாக ஏற்க மறுக்கும் அஜிதனிடன் தோல்வியுறுகிறார். அதிகாரத்தை விட மனமில்லாதவர்கள், பௌத்த மரபை விஷ்ணுபுரத்தின் சொல்லாக ஏற்க மறுத்து கலகம் செய்கிறார்கள். தாந்த்ரீக பௌத்தர்களின் துனையுடன், சந்திரகீர்த்தி எனும் வணிகன், கலகத்தை அடக்குகிறான். விஷ்ணுபுரத்தின் அதிகாரம் வைதீகர்களிடமிருந்து, வணிகர்களின் கைகளுக்குப் போகிறது. வாதத்தில் வென்றபின் அதிகாரத்திற்கான போட்டியை நினைத்தும், சித்தனை நினைத்தும் அஜிதன் துணுக்குறுகிறான். விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்த மரபு மாறியதே தவிர, வேறொன்றும் மாறவில்லை. தன் குருவின் சொல்லை ஏற்று பௌத்த மரபைக் கற்க நரோபா என்ற திபேத்திய பௌத்தன் அஜிதனின் கடைசிக் காலத்தில் விஷ்ணுபுரத்திற்கு வருகிறான். நரோபா அஜிதரின் அறையில் நுழையும்போது அவர் தனிமையில் மரணமடைகிறார். அஜிதரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்ற சங்ககீர்த்தியின் ஆணையை அறிந்து, பதறி, மனம் வெறுத்து, நரோபா விஷ்ணுபுரத்தை விட்டு விலகி ஓடுகிறான்.

நாவலின் கடைசிப் பகுதி, கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. விஷ்ணுபுரத்தின் கோவில் இடிந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. நரோபாவின் திபேத்திய நூலிலிருந்து விஷ்ணுபுரத்தை பற்றி அறிந்து அதைத் தேடி வருகிறார் காசியைச் சேர்ந்த யோகவிரதர். பத்மாட்சி யட்சியும், கொன்றைவனத்தம்மனும் (சித்திரை), மகாபத்ம புராணமும் விஷ்ணுபுர மக்களின் வாழ்வில் கலந்துவிட்டிருக்கின்றன. எந்தப் புராணத்தை யார் இயற்றினார்கள் என்று பண்டிதர்கள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். வைதீக மரபின் காவலராக இருக்கும் ஆரியதத்தர் இறந்த பின் அவருடைய பைத்தியக்கார மகனுக்கு பட்டம் சூட்டுவதன் மூலம் விஷ்ணுபுர சர்வக்ஞப் பதவி ஒரு பைத்தியத்திடம் சென்று சேருகிறது. திருவடி மடத்தின் குருமகா சன்னிதானம் தன் சீடனுடன் மதுரைக்குப் போய் விடுகிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரத்தின் மீது படையெடுத்து வந்த முகமதியர்களுடன் சேர்ந்து, விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த சூத்திரர்களின் ஒரு பிரிவினரும், ஹரிதுங்கா மலையிலுள்ள பழங்குடியினரும் விஷ்ணுபுரக் கோவிலை இடித்து விடுகிறார்கள். ததாதகராகவும், விஷ்ணுவாகவும் அறியப்படும் விஷ்ணுபுரத்தின் மூலவிக்ரகம், தங்களுடைய பெருமூப்பனின் சிலை என்று நம்புகிறார்கள் பசுங்குன்றத்திலுள்ள (ஹரிதுங்கா) பழங்குடிகள். நாட்கள் செல்ல செல்ல, பிரளயத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. விஷ்ணுபுரத்தின் கோயிலைச் சுற்றி ஓடும் சோனா நதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன; எங்கிருந்தோ பறவைகள் வந்து கோவிலில் முட்டிச் சாகின்றன. பழங்குடிகளில் சிலர் மட்டும், குறத்தியான நீலி வழி காட்ட, பிழைக்கிறார்கள். குறத்தியான நீலி பேருருவம் கொண்டு சோனாவில் பெருவெள்ளமாக மாறி விஷ்ணுபுரத்தை அழிக்கிறாள். பெருமூப்பன் புரண்டு படுக்கிறார்.

யுகம் முடிவுக்கு வந்தது. அடுத்த யுகம் தோன்றும்போது, விஷ்ணு மீண்டும் குழந்தையாக ஆலிலையில் மிதக்கிறார் என்று விஷ்ணுபுரக் கதையை சொல்லும் பாணன் பாடுகிறான்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s