விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்
நன்றி சிலிகான் ஷெல்ஃப்
ஆங்கிலத்தில் மிக அதிகம் பேரால் வசை பாடப்பட்ட நாவல், சாங்சுவரி (Sanctuary). வில்லியம் ஃபாக்னருடைய நாவல் இது. உன்னதமான இலக்கியப் படைப்பு என்று ஒரு சாரார் இதைத் தொடர்ந்து சொல்லி வந்தாலும், இந்நாவலில் ஃபாக்னர் விதைத்திருக்கும் குரூரமும், வக்கிரமும், வன்முறையும் வெறியும் வேகமும் சராசரி மனிதர்கள் சகித்துக் கொள்ளவே முடியாதவை என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. சாங்சுவரி நாவலைத் திட்டித் தீர்த்த அத்தனை பேருமே அதன் சுடும் உண்மையை எதிர்கொள்ள முடியாமல்தான் திட்டினார்கள். இப்படியெல்லாமுமா அப்பட்டமாக எழுதுவது என்று சபித்தார்கள். எல்லா சாபங்களையும் மீறி சாங்சுவரி சாகாவரம் பெற்றதொரு படைப்பானது சரித்திரம்.
தமிழிலும் இப்படி எல்லாத் தரப்பினராலும் வசை பாடப்பட்ட நாவல் ஒன்று உண்டு. சாங்சுவரிக்கு இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த நாவலைப் படித்தவர்களும் திட்டினார்கள், படிக்காதவர்களும், கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு திட்டினார்கள்! இந்த நாவலைத் திட்டினால்தான் நமக்கு ஒரு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கூடத் திட்டினார்கள். திட்டுவதற்கு இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடித் தேடியும் திட்டினார்கள்.
தன்னளவில், உண்மையிலேயே சிறப்பான நாவலான விஷ்ணுபுரம், அதற்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்களினால் மேலும் பிரபலமடைந்ததே தவிர, தோல்வி காணவில்லை.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வெளியாகி, வெகுநாள் ஆகவில்லை என்பதால் வாசர்களுக்கு அப்போது ஏற்பட்ட பரபரப்புகள் மறந்திருக்காது. தமிழில் அதற்கு முன்னால் வேறு எந்த ஓர் இலக்கியப் படைப்பு வெளியானபோதும், அப்படியொரு பரபரப்பும் பேச்சும் எழுந்ததாகச் சரித்திரமில்லை.
விஷ்ணுபுரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வாசிக்க ஆரம்பித்து, பாதியில் நிறுத்தி விட்டவர்கள் அதிகம், என்னுடைய நண்பர்கள் பலரே, ‘படிக்க முடியவில்லை’ என்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன். நாவலின் பக்க அளவு ஒரு பொருட்டே இல்லை. வழுக்கிக்கொண்டு ஓடும் ஜெயமோகனின் மொழியின் உதவியுடன் இரண்டேநாளில் கூட வாசித்து விடலாம்.
பிரச்னை, நாவலின் கட்டுமானம் தொடர்பானது. விஷ்ணுபுரம் நாவல் மூன்று பாகங்கள் கொண்டது. நாவலில் காலம் புரண்டு கிடக்கிறபடியால், வாசிப்பு நடுவில் லேசாகத் தடைபடக்கூடும். சற்றே கவனமுடன் நடைபயின்றால் இது ஒரு சிக்கலே இல்லை.
ஆனால், ஏன் நாவலை இப்படி புரட்டிப் போட்டு எழுத வேண்டும் என்று கேட்கக் கூடாது! நம்மால் நமது சிந்தனையை ஒரு நேர்க்கோட்டில் எப்போதும் வைத்துக் கொள்ள முடிகிறதா என்ன! விஷ்ணுபுரம், காலத்தை உதைத்துத் தள்ளி, படைப்புக்கு ஒரு காவியத்தன்மை சேர்த்து, கற்பனையில் ஒரு நகரை நிர்மாணிக்கும் பிரும்மப் பிரயத்தனம்.
நகரை நிர்மாணிப்பதென்றால் ஊரும் தெருவும் வீடும் வாசலும் மட்டுமல்ல. விஷ்ணுபுரம் என்கிற புராதன, கற்பனை நகரை உருவாக்கி, நூற்றுக்கணக்கான கற்பனைக் கதாபாத்திரங்களைச் சித்திரித்து உலவ விட்டு, நிஜம் போன்ற பிரமையை உருவாக்கும் படைப்பு அது. ஆதிகாலத்தில், இங்கு இருந்த சைவ, வைணவப் பிரிவுகள், இடையில் வந்த பவுத்த மதத் தாக்கம், பவுத்தத்துக்கும் மற்றவற்றுக்குமான மோதல்கள் (மோதல் என்றால் இன்றைய அர்த்தத்தில் அல்ல. மிக அழகான, ஆழமான விவாத மோதல்கள்.), பவுத்தத்தின் ஆட்சி மற்றும் வீழ்ச்சி என்று மறைந்து போன ஒரு கால கட்டத்தை மீட்டெடுத்துக் கொண்டுவந்து கண்முன் நிறுத்தும் இந்த நாவல், இறுதியில் ஒரு மாபெரும் பிரளயத்துடன் நிறைவடைகிறது.
உண்மையில் பிரளயம் என்பது எப்படி இருக்கும் என்று புராணங்களில் சொல்லப்பட்டதற்கு அப்பால் நமக்கு எதுவும் தெரியாது. ஜெயமோகனுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் ஒரு நதியின் பெருக்கெடுப்பை மையமாக வைத்து ஒரு முழு நகரமும் அதற்கு அப்பாலும் இல்லாமல் போவதை சிறு சிறு அத்தியாயங்களில் காட்சிப்படுத்தும் நேர்த்தியில் வாசிக்கும் யாருக்கும் சிலிர்த்துப் போவது நிச்சயம்.
விஷ்ணுபுரத்தின் மையப்புள்ளி ஜெயமோகனுக்குக் கிடைத்த இடம், திருவட்டாறு. தமிழக – கேரளா எல்லையில் அமைந்துள்ள ஒரு புராதானத் திருத்தலம். ஆதிகேசவப் பெருமாள் இங்கே மூன்று கருவறைகளை அடைத்தபடி மிகப் பிரம்மாண்டமாக சயன கோலம் கொண்டிருக்கிறார். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை இந்த ஊருக்கு ஒரு சமயம் போயிருந்தேன். கைக்கு அடக்கமான கடவுள் உருவங்களைப் பார்த்து சிநேகம் கொண்ட மனங்களுக்கு ஆதிகேசவப் பெருமாளின் ஆகிருதி நிச்சயமாக அச்சமூட்டவே செய்யும். ஒரு மலை படுத்திருப்பது போலக் கிடப்பார். ஒரு நபர் மட்டுமே ஒரு சமயத்தில் நுழையக் கூடிய கருவறை. இருளும், திருமேனியின் கருமையும் ஒன்று சேர்ந்து, எண்ணெய் நெடியில் என்னவோ செய்யும். நம்பூதிரிகள் வாழை இலைத் துண்டில் வைத்துக் கொடுக்கும் சந்தனப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்து, கோயிலைச் சுற்றிக் கொண்டு ஓடும் அந்தச் சிறு ஓடையின் கரையில் சற்று நேரம் நின்றால்தான் பதற்றமும் தவிப்பும் சற்றே தணியும்.
வாழ்க்கையில் செய்வதற்கு ஏதுமில்லை என்கிற முடிவு ஏற்பட்டு எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், துறவியாகி விடலாம் என்ற யோசனையுடன் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்த ஜெயமோகன், இந்தக் கோயிலின் மண்டபத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க படுத்தார். வேறு சிலரும் அந்த மண்டபத்தில் ஏற்கனவே படுத்திருந்தார்கள். நல்ல இருட்டு. பக்கத்தில் இருப்பவர் முகம் தெரியாதபடிக்குக் கவிந்திருந்த இருட்டு. அந்த இருட்டில் ஒரு வயதானவர் கோயிலைப் பற்றியும், ஆதிகேசவப் பெருமாளைப் பற்றியும் பேசியிருக்கிறார். “ஒரு யுகம் முடியும் போது ஆதிகேசவன் புரண்டு படுப்பார்.”
இது கற்பனையா, ஏற்கனவே சொல்லப்பட்ட கதையா, புராணத்தில் இருக்கிறதா எதுவுமே தெரியாது. ஆனால், பிரம்மாண்டமான ஆதிகேசவப் பெருமாள் சிலை ஒரு முறை புரண்டு படுப்பது என்கிற படிமம், அங்கு படுத்திருந்த ஜெயமோகனைத் தாக்கியது. அதற்குமேல், அவரால் அன்றைய இரவு உறங்கக்கூட முடியவில்லை.
ஏழெட்டு வருடங்கள் அலைந்து திரிந்து புராண இதிகாசங்கள், பவுத்த தத்துவங்கள், மேலைத் தத்துவங்கள் என்று கிடைத்த அனைத்தையும் படித்து அறிந்து, பல ஞானியருடன் தொடர்பு கொண்டு விவாதம் மேற்கொண்டு, தனக்குக் கிடைத்த படிமத்தை ஒரு கலைவடிவமாக்குவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டு, அதன் பிறகே இந்த நாவலை அவர் எழுத ஆரம்பித்திருக்கிறார்.
விஷ்ணுபுரம், காவியத்தன்மையுடன் படைக்கப்பட்ட ஒரு நாவல். ஆனால் அதன் அமைப்பும் கட்டுமானமும் நுட்பமான செதுக்கல்களும் நேர்த்தியான விவரணைகளும் முற்றிலும் நவீன மொழியில் சாத்தியமாகியிருப்பது, தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.
இந்நாவல் நடைபெறும் களமாக ஜெயமோகன் சொல்லும் விஷ்ணுபுரம் தமிழகத்தில் இருக்கிறதா, கேரளத்தில் இருக்கிறதா, அல்லது ஹரித துங்கா, வராகபிருஷ்டம் போன்ற பெயர்களைப் பயன்படுத்துவதால் ஆந்திரப்பிரதேசமா என்று சரியாகத் தெரியவில்லை என்றும், சமஸ்கிருதப் பெயர்கள் நிறைய இடம் பெறுவது ஒட்டவில்லை என்றும், விஷ்ணு ஆலயம் ஒன்றின் பின்னணியில் பின்னப்படும் நாவலில் துளசியைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என்றும் அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கற்பூரம் இருந்ததாக எப்படிக் காட்டலாம் என்றும் இன்னபலவாகவும் இதற்கு வந்த விமர்சனங்கள் அனைத்தும் எனக்கு அப்போது மிகவும் வியப்பூட்டின.
தமிழகம், கேரளம், ஆந்திரம் எல்லாம் நேற்றே பிறந்தவை அல்லவா ! இந்தக் கதை நடந்த காலத்தில் மாநிலப் பிரிவினைகள் ஏது ? கற்பூரம் என்று சொல்லப்படுவது வாசிக்கும்போது எனக்கு பச்சைக் கற்பூரமாகத்தான் வாசனை அடித்தது. பெருமாள் கோயில் இருக்கும் இடத்தில் அந்த வாசனை இல்லாமல் எப்படி இருக்கும்?
ஜெயமோகனுடன் எனக்கு அதிகப் பழக்கம் கிடையாது. இரண்டொருமுறை சந்தித்திருக்கிறேன். ஏழெட்டு கடிதப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. நான்கைந்து முறை மின்னஞ்சல் தொடர்பு. அவ்வளவுதான். எப்போதோ ஒரு முறை விஷ்ணுபுரத்துக்கு வந்த விமர்சனங்கள் அவரை எப்படி பாதித்தன என்று கேட்டேன். அவர் சிரித்தது நினைவிருக்கிறது. என்ன பதில் சொன்னார் என்று நினைவில்லை.
ஆனால் அவர் சொல்லியிருக்கமுடியாத அந்த பதில், சில மாதங்களுக்குள்ளாக வந்துவிட்டது. அடுத்த நாவல். பின் தொடரும் நிழலின் குரல். இன்னொரு எண்ணூறு பக்கம்!
அவரைப் போல ஒரு கடும் உழைப்பாளியை எழுத்து வட்டத்தில் நான் இன்றுவரை சந்தித்ததே இல்லை. சுவாசித்துக் கொண்டு இருக்கும் பொழுதெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் நபர் அவர். சளைக்காமல் கடிதங்கள் எழுதுவார். கூட்டங்களில் கலந்துகொள்வார். பல கூட்டங்களைத் தானே முன் நின்றும் நடத்துவார். டெலிகாம் துறையில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு நாவல்களும் எழுதுவார்.
நாவலென்பது வாழ்வைச் சித்திரிப்பது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு அந்தக் கருத்துடன் உடன்பாடு கிடையாது. வாழ்வின் அடிப்படைகளை ஆராய்வதுதான் ஒரு நாவலின் பணி என்று நினைப்பவர் அவர். விஷ்ணுபுரம் மட்டுமல்லாமல் அவரது அத்தனை நாவல்களுக்குமே இதுதான் அடிப்படை. எடுத்துக்கொள்ளும் விஷயங்களின் மீது அவர் எழுப்பும் ஆழமான கேள்விகள் முக்கியமானவை. நூற்றுக்கணக்கான கேள்விகளைத் தனக்குத் தானே எழுப்பிக்கொண்டு விடைகளைத் தேடி ஓடும்போது எந்த இடத்துக்கு வந்து சேருவோம் என்பது நமக்கே தெரியாது. நமது விருப்பம் வேறாகவும் இருக்கலாம். ஆனால் வந்தடைவதை நேர்மையுடன் முன்வைப்பதுதான் ஒரு கலைப்படைப்பின் தரத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.
விஷ்ணுபுரத்தில் இடம் பெற்றிருக்கும் தர்க்கங்களுக்கு அப்பால் பண்டையத் தென்னிந்தியர்களின் வாழ்க்கை முறை, பேச்சு முறை, கலைகள், கலாசாரம், சமூக அடுக்குகள், அரசியல், ஆன்மிகம் என்று ஏராளமான விஷயங்களைப் பற்றிய அசலான தகவல்களை நம்மால் பெற முடியும். எத்தனை பெரிய உழைப்புக்குப் பிறகு இதெல்லாம் சாத்தியமாகியிருக்கக்கூடும் என்கிற வியப்பு அவசியம் உண்டாகும்.
தேவை திறந்த மனம் மட்டுமே..
exactly written sir…