ஒரு பாடினியின் பரவசம்

ஒரு பாடினியின் பரவசம் – ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை

by கிருத்திகா

வடிகால்

ஒரு பாடினியாய் இருந்திருக்கலாம்.  இசையும், கலையும், கவிதையும், கதையுமாய் காலம் கடத்தியிருக்கலாம். வியாபாரம், வணிகம், அயல்நாடு, உள்நாடு தொழில்விருத்தி இது ஏதுமற்று வாழ்வின் உன்னதங்களை சுகித்திருந்திருக்கலாம், ஊர் ஊராய், குழுக்களாய் பயணித்திருந்திருக்கலாம்,

இப்படி எத்தனையோ “லாம்”களை என்னுள் எப்போதும் விழித்திருக்கச்செய்திருக்கும் உணர்வுகள், ஒரு சமயம் கவிஞர் விக்ரமாதித்யனை எஸ்.ரா. தன் எழுத்துக்களில் பெருநகரப் பாணன் என்று விளித்திருந்த போது அந்த வார்த்தையின் வசீகரம் என்னுள் அவ்வுணர்வுகளை மீண்டுமொருமுறை கிளர்ந்தெழுந்து ஒர் பேயாட்டம் போடச்செய்தது.

இத்தகைய பாணர்களின் வாயிலாக கதை சொல்லல் தொடங்கப்படுகிறது பின் என்றும் எத்தனையோ கதைசொல்லிகளின் வாயிலாக இன்றும் விஷ்ணுபுரத்துக்கதைகள் சொல்லப்பட்டுகொண்டேயிருக்கிறது என்று அந்தப்புத்தகத்தின் முடிவில் நம்மால் தீர்க்கமாய் நம்பமுடிகிறது . இந்த கதைசொல்லிகளின் வரிசையில் நானும் ஒரு பாடினியாய் இங்குஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி …..

பொதுவாய் புத்தகங்களை படித்து முடித்ததுமே அதைப்பற்றிய பகிர்தலை கொடுக்கத்துடிக்கும் மனதிற்கு விஷ்ணுபுரம் தந்த உணர்வு வித்யாசமானது. புத்தகத்திலுள்ள பக்கங்கள் தீர்ந்து போன பின்னரும் முழுதாய் இரண்டு வாரங்களுக்குப்பின்னரும் இன்னமும் அதன் கதைக்களத்திலிருந்து விலக முடியாத பெருமயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த அனுபவத்தை சுகமென்று சொல்வதா இல்லை இம்சையென்று சொல்வதா.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கும் கதைக்களம் நம்முள் இன்று போல் விரிகிறது, ஒவ்வோர் காட்சியின் நுணக்கமான விவரிப்பு ஒவ்வோரு நிகழ்விலும் நம் இருப்பை உணர்த்துகிறது. ஒரு திரைக்கதையை விட நேர்த்தியான காட்சி விவரிப்பின் காரணமாகவே வாசகர்களை தன்னுள் ஈர்த்து பொதிந்துகொள்கிறது கதைக்களம்.

கதை மாந்தர்களின் பாத்திரப்படைப்புகள் பெயர்கள், பெயர்கள் மற்றும் பெயர்கள், ஆரம்பத்தில் எப்படி இத்தனை பெயர்களையும் நாம் நினைவிலிருத்தி மீதப்பக்கங்களை முடிக்கப்போகிறோம் என்ற பயம் வரமாலில்லை, ஆனால் நான் மேலே சொன்னபடி நம் இருப்பை அங்கு ஆசிரியர் ஸ்தாபித்து விடுவதனால் பின்னால வரும் பாகங்களில் நாம் குழப்பமற்று பயணிக்கமுடிகிறது.

இன்றைய புற உலகில் நிகழும் காமம், கோபம், க்ரோதம், இகழ்ச்சி, துரோகம், கூடவே தேடல் இந்தக்கலைவைகளை வெவ்வேறு விகிதத்தில் இருத்தி அதில் கதை மாந்தர்களை உலவவிட்டிருப்பது மிக நேர்த்தி। ஆனால் எல்லா காலங்களில் எளிமையும், நேர்த்தியும் உள்ளவர்கள் ஒன்று மிகச்சீக்கிரம் இறந்துபடவோ இல்லை தன்னிருப்பை தொலைத்துவிடவோ விடும்படி செய்திருப்பதன் பிண்ணணி உணர்த்தும் உண்மைகள் நம் பல கேள்விகளுக்கு விடையாகலாம் (அநிருத்தன், திருவடி, திருவடி விரும்பும் அந்த தேவரடியார் சிறு பெண, கடைசிப்பகுதியில் ப்ரியையின் பாட்டி இப்படி பலர்…)। ஆனாலும் பிரளயகாலத்திற்குபின்னும் பிழைத்திருக்கும் அந்த எளிமையான மலைவாழ் மக்களின் இருப்பு நம்மை சிந்திக்கவைக்கிறது।மீண்டுமொறுமுறை மூப்பன் புரண்டு படுக்கும் பொழுது நாமெந்தப்பக்கம் என கேள்வியெழுப்ப வைக்கிறது.

தருக்க நியாயங்களின் பிண்ணணியும் அதன் நிழலில் அரங்கேறும் துரோகங்களும் மனதை சில்லிடவைக்கின்றன என்றாலும் நடப்புலக்த்தின் நீட்சிதானே என்பதும் மனதில் எழாமலில்லை.

இரண்டாம் பகுதியில் பெரும்பாலும் பல்வேறு மதங்களின் தருக்கங்களும், விவாதங்களும் நிரம்பியிருந்தாலும் அதைதாண்டி மேலே மேலே அறிந்துகொள்ளும் ஆவலைத்தருவதாகவும் அமைந்துள்ளது. பிற்பாடு அஜிதனின் விவாதங்களின் போது ஏற்படும் நிகழ்வுகளில் அவரது தருக்கங்களை மீறிய சூழ்நிலைகளே அவரது வெற்றியை தீர்மானிக்கிறது என்பது போன்ற யதார்த்த நிலைப்பாடுகள் பலவற்றை நாவலில் காணமுடிகிறது. குறிப்பாக எந்த ஒரு கதாமாந்தருக்கும் நாயகி/நாயகன் அந்தஸ்து தராது இயல்புகளோடு சித்திரிப்பது நாவலில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நாவலில் கடைசிவரை வரும் அந்த கருப்பு நாய் நம்முள் இனம்புரியாத விசித்திரங்களை விட்டுச்செல்கிறது.

மிக முக்கியமாக நாவலின் கட்டமைப்பின் நேர்த்தி வியக்கவைக்கிறது. இரண்டு, ஒன்று, மூன்று என்று பகுதிகளை வரிசைப்படுத்தியிருப்பின் நாவலின் வீச்சம் வெகு நிச்சயம் குலைந்திருக்கும். தற்போதையை கட்டமைப்பே நம்மை நாவலின் மூன்றாம் பகுதியில் ஒரு சாட்சியாக நிறுத்தி வைக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் பிற்பகுதிகளில் வரலாறாக பல்வேறு கட்டங்களில் திருந்தி சொல்வழக்காக, வரலாறாக பேசப்படும் பொழுது வாசக மனம் அதன் பிழைகளை திருத்த தவறுவதில்லை.

கோபிலரும் ஸ்ரீதரரும், பிங்கலரும் ஒன்றல்ல வேறு வேறு மனிதர்கள் என்றும்
பத்மாட்சி என்பது ஸ்ரீதரருக்கு காட்சி தந்த யட்சியல்ல அவரோடு சில காலம் வாழ்ந்திருந்த தேவரடியார் பெண்ணென்றும்….

இது போல பல நிகழ்வுகளையும் நாம் அன்றைய காலகட்ட மனிதர்களின் அறிதல், புரிதல்களை திருத்த வேண்டியது நம் கடமை என்பது போல் மனம் துணுக்குறுவதே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி என்று தோன்றுகிறது.

ஆகச்சிறந்த நாவலின் அடையாளம் என்று மிக எளிதில் சொல்லிவிட மனம் ஆசைப்பட்டாலும் அது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொல்வதாயிருக்கும் என்பதாலும், இன்னும் வாசிப்பில் கடக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது என்ற உண்மை உள்ளிருந்து உணர்த்துவதலேயும் மிகசிறந்த வாசிப்பு அனுபவத்தை தந்த நாவல் என்று முடிக்க வேண்டியுள்ளது. ஆனால் வரலாறுகளையும், ஆலயங்களையும் குறித்த கண்ணோட்டம் விஷ்ணுபுரத்திற்கு முன் விஷ்ணுபுரத்திற்கு பின் என்று மாறிப்போனதை மாற்றும் வல்லமையை இந்நாவல் கொண்டிருக்கிறது என்பது சொல்வது மிகயாகாது.

மீள்வாசிப்பிற்கென எப்போது வேண்டுமானாலும் எடுத்துகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கும் அடர்ந்த செறிவுள்ள நாவல்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s