விஜயபாரதமும் விஷ்ணுபுரமும்

விஜயபாரதமும் விஷ்ணுபுரமும்

பொ. வேல்சாமி

வினையான தொகை தளம்

பெப்ரவரி 24, 2008 — Valarmathi

குறிப்பு:

ஜெயமோகனின் அரசியல் வெளிப்படையாகத் தெரிவது. ஆனால், அவரது இலக்கிய முயற்சிகளின்பால் பெரும்பான்மையான வாசகர்களுக்கு ஒரு பிரமிப்பு உள்ளது. முதலாவதாக அந்தப் பிரமிப்பு எப்படி உருவாக்கப்பட்டது, பொதுக்கருத்தியலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து எழுதப்பட வேண்டும். பிறகு அவரது எழுத்துக்களை குறிப்பாக எடுத்துக் கொண்டு அணுகிப் பார்க்க வேண்டும். இரண்டிற்குமே பொறுமையும் கால அவகாசமும் தேவை.

என்னால் ஜெ – வைப் போல பேசுவதையெல்லாம் எழுதிவிட முடியாது. அதில் எனக்கு விருப்பமும் கிடையாது. நண்பர்களுடன் விரிவாகப் பேசுவது எனக்கு, சில கருத்தமைவுகளுக்கு என்ன எதிர்வினை கிடைக்கிறது, சிலவற்றை எந்த அளவிற்கு எளிமையாகச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே. பேசியதையெல்லாம் எழுதியிருந்தால் பல தலையணைகள் விழுந்திருக்கும். ஜெயமோகனைப் போல ஒரு பெருத்த வாயாடி என்ற பெயரையும் ஈன்றிருக்கலாம்தான். அதைவிட “சோம்பேறி” என்ற பெயரே பரவாயில்லை.

அது கிடக்கட்டும். எனது விரிவான விமர்சனங்களை கால அவகாசம் எடுத்துக் கொண்டு நிதானமாக எழுத நாள் பிடிக்கும். அதற்கு முன்பாக, ஜெ – வின் “விஷ்ணுபுரம்” நாவல் குறித்த பொ. வேல்சாமியின் இந்த சுவாரசியமான review உங்கள் வாசிப்பிற்கு. அவரிடம் ஒரு வார்த்தை கேட்ட பிறகே இதை இங்கு பதிவிலிடுகிறேன்.

இதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லையெனினும், தமிழக வரலாற்றுக்கும் இந்நாவலுக்கும் இடையிலான உறவுப் புள்ளிகளாக அவர் சுட்டும் விஷயங்கள், புனைவெழுத்தில் கற்பனைக்கு உள்ள உறவு என்ன என்ற கேள்வியுடன் தொடர்புடையவை. அது குறித்த உரையாடலைத் தொடங்க இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமையலாம்.

ஜெயமோகனின் விஷ்ணுபுரத்திற்கு எதிர்பார்த்தபடி வரவேற்புகள் கிடைத்துள்ளன. சென்னை புத்தகச் சந்தையில் ஆர். எஸ். எஸ். பத்திரிகையான விஜயபாரதம் தன் முன்னாள் ஊழியர் எழுதிய இந்த நாவலை தனது கடையில் வைத்து விற்பனை செய்ததை திருநெல்வேலி கூட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணன் போட்டு உடைத்தார். விஜயபாரதம் கடையில் விற்பனையான முக்கிய புத்தகம் விஷ்ணுபுரம் மட்டும்தான்.

மேற்கே ஞானி தனது பரிவாரங்கள் புடைசூழ விஷ்ணுபுத்தை விதந்தோதுகிறார். கலைப்படைப்பில் ஆகட்டும், தத்துவ ஞானத்திலாகட்டும், சிற்ப சூத்திர நுட்பங்களை சொல்வதில் ஆகட்டும் இந்த நாவலை ‘பீட்’ அடிக்கிற மாதிரி வேறு எதுவும் தமிழில் இல்லை என அவர் சேலம் தமிழ்ச் சங்கத்தில் பேசியதை நான் நேரில் கேட்டேன்.

என்ன மாதிரி இதை நிறுவப் போகிறார் என நான் ஆவலாக காத்திருந்தபோது முன்பெல்லாம் ரேடியோவில் ஒலிச்சித்திரம் போடுவார்களே அதுபோல கதைச் சுருக்கத்தை கச்சிதமாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். (இடையில் “நுண் வெளிக் கிரணங்கள்” நாவலின் கதையோடு இதைப்போட்டுக் குழப்பியபோது மேடையில் இருந்தவர்கள் ஞானிக்கு நினைவூட்டி இழுத்து வந்தனர்.)

தெற்கே சுந்தர ராமசாமி குழுவினர் விஷ்ணுபுரத்திற்கு விழா எடுக்கின்றனர். தமக்குத் தோதான ஆட்களை மட்டுமே வைத்து இலக்கியக் கூட்டங்கள் நடத்தும் காலச்சுவட்டினர் இம்முறை தெரியாத்தனமாக எஸ். இராமகிருஷ்ணனை அழைக்கப் போக அவர் இந்த நாவலின் இந்துத்துவச் சார்பைப் போட்டுடைத்து சுந்தர ராமசாமி குழுவினரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டார்.

வடக்கே நமது அன்பிற்குரிய இராஜமார்த்தாண்டன் தினமணியி விஷ்ணுபுரத்தைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். தலைமறைவாய்த் திரியும் சிலதுகள் இந்த நாவலுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனச் சொன்னதாக நண்பர் பாப்லோ அறிவுக்குயில் இன்று என்னிடம் சொன்னார்.

தமிழர்களுக்குப் பொதுவாக பெரிசாக இதைப் பார்த்தாலும் ஒரு அதிர்ச்சி, பிரமிப்பு. அதனால்தான் யார் பெரிய கட் அவுட் வைப்பது என்ற போட்டி இங்கே முக்கியமாக இருக்கிறது. எண்ணூறு பக்கத்தில் டெம்மி சைஸ்சில் ஒரு புத்தகம் வந்தால் அதைப் படிக்காமலேயே எழுதியவருக்கு அறிஞர் பட்டம் கொடுக்காமல் சும்மா விடுவார்களா? விஷ்ணுபுரத்திற்கும், ஜெயமோகனுக்கும் இந்தப் பெருமையைச் சாற்றுவதற்கு தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்.

இது, மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ள தருணம் மட்டுமல்ல தமிழகத்தில் உறுதியாக காலூன்ற முயற்சிக்கும் நேரம். அ. இ. அ. தி. மு. க., பா. ம. க., ம. தி. மு. க முதலிய கட்சியினர் தத்துப்பித்தென்று பாரதிய ஜனதாவுக்கு மாலை போட்டு வரவேற்பது மட்டுமல்லாமல் நமது மதிப்பிற்குரிய தலித் எழில்மலை போன்றவர்கூட அடக்கி வாசிக்க நேர்ந்திருக்கும் ஆபத்தான தருணம் இது. இச்சூழலில் விஷ்ணுபுரத்திற்கான வரவேற்பில் பொதிந்து கிடக்கும் ஆபத்தை தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்ற வகையில் பொறுப்புடன் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

இந்நாவலைப் பற்றி – இந்த வரவேற்பின் பின்னணியில் – ஒரு சில அம்சங்களை இன்கே பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இது நாவலின் விமர்சனமல்ல, விரிவான விமர்சனம் அடுத்த நிறப்பிரிகையில் வெளிவரும்.

முதலில் இந்நாவல் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தாத கற்பனைகளை உள்ளடக்கியது என்பதைச் சுட்டிக் காட்டியாக வேண்டும். கற்பனை என்று வந்த பின்பு அப்புறம் என்ன பொருந்துவது பொருந்தாதது என ஒருவர் கேட்கலாம். வரலாற்றை துணைக்கு அழைத்து எழுதும்போது ஒவ்வொரு முறையும் எழுதப்படும் காலகட்டத்தின் வரலாறுதான் மீண்டும் எழுதப்படுகிறது. வில்லங்கமான ஒரு நோக்குடன் வரலாறு வாசிக்கப்படும்போது நாம் இந்த பொருந்தாமையைச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

புதுமைப்பித்தனும்கூட வரலாற்றுப் பின்னணியில் “கபாடபுரம்”, “அன்றிரவு” போன்ற கதைகளை எழுதி உள்ளார். இந்தக் கதைகளின் நோக்கம் நிலவும் ஆதிக்கக் கருத்துக்களை (status-quo) கேள்வி கேட்பது. கவிழ்க்க முயல்வது. புதுமைப்பித்தனின் இத்தகைய கதைகள் கிடைக்கும் தரவுகளுடன் பொருந்திப் போகக் கூடியவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரமோ நிலவும் இந்துத்துவச் சொல்லாடலுக்குத் துணைபோவது. ஏராளமான வரலாற்றுத் திரிபுகளுடன் இதனை அவர் செய்திருக்கும்போது நாம் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

முதலில் இந்த நூலின் தொடக்கத்தில் போடப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டமான வரைபடம். விஷ்ணுபுரம் என்னும் கற்பனையான ஊரையும், பழனி, மதுரை, வைகை நதி என இப்போதும் உள்ள புவியியல் வெளிகளையும் இணைத்துப் போடப்பட்டுள்ளது. வைகை நதி பழனி மலையிலிருந்து வருவது போல படம் வரையப்பட்டுள்ளது. சேலத்திற்கு அருகாமையில் உள்ள சேர்வராயன் குன்றுகள் போடிநாயக்கனூர் பக்கம் உள்ளதாகக் காது குத்துகிறார் ஜெ. நதியாவது காலப்போக்கில் இடம் மாறியதாக ஒரு ‘டுபாகூர்’ விடலாம். மலை எப்படி ஐயா இடம் பெயரும்?

துறவியாக ஆகும் திருநோக்குடன் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பிய ஜெயமோகனுக்கு திருவருளால் கைவந்த இந்த நாவலின் மையப் படிமத்திலேயே இந்த வரைபடமும் இடம் பெற்ற என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இல்லை ஞானி, சு. ராவாவது விளக்கினால் நல்லது.

இந்த நாவல் காலம். வெளி கடந்தது என்றெல்லாம் இவர்கள் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாவலின் மையப்பாத்திரமான பவதத்தரின் பாட்டனார் களப்பிரரை வெற்றி கொண்ட பாண்டியன் கடுங்கோனின் காலத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு குறிப்பு நூலில் இடம் பெறுகிறது (பக்கம்: 318). இக்கால கட்டம் கி. பி. 600 எனில் விஷ்ணுபுரம் நாவலின் மையக் கதையின் காலம் கி. பி. 700 லிருந்து கி. பி. 900 க்கு இடைப்பட்டது எனலாம். இக்காலகட்டத்து வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் எதிராக கட்டப்பட்டுள்ளது விஷ்ணுபுரம்.

வைணவத்திற்கும், பெளத்தத்திற்கும் இடையிலான மோதலின் களமாக தமிழ் நாடு இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றது. தமிழகத்தில் மத மோதல் என்பது பெளத்தத்திற்கும் வைணவத்திற்கும் இடையில் ஏற்பட்டதில்லை. மாறாக சைவத்திற்கும், சமணத்திற்கும் இடையில் தான் இங்கே மோதல்கள் நிகழ்ந்தன. வைணவம் இங்கே எக்கால கட்டத்திலும் சகல வல்லமையுடன் கோலோச்சியதில்லை. அதிலும் குறிப்பாக இந்தக் கால கட்டத்தில் வைணவம் இங்கே ஆட்சி செய்ததில்லை.

தமிழ்க் காப்பியங்களுள், குறிப்பாக மணிமேகலையிலும் நீலகேசியிலும் தர்க்க விவாதங்கள் இடம் பெறுகின்றன. இந்த மோதல்களின் வெற்றி தோல்வி என்பது தர்க்கத்தின் அடிப்படையிலும், எதிரே உள்ள மக்கள் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையிலும்தான் நிர்ணயிக்கப்படுகின்றது. மாறாக, தீபம் எரிவது, வெள்ளைப் பறவை மல்லாக்கப் பறப்பது போன்ற அதீத கற்பித நிகழ்வுகளின் மூலம் நிர்ணயிக்கப்படுவதில்லை.

ஆனால் அனல்வாதம், புனல்வாதம் என்று வைதிகர்கள் சமணர்களை கழுவேற்றியதை நியாயப்படுத்துவதற்காக தொன்மங்களை கட்டமைத்தது போல இங்கே ஒரு வெள்ளைப் பறவையைப் பறக்க விடுகிறார் ஜெ. அஜீதன் என்கிற பெளத்தர் வைணவப் பார்ப்பனர்களை வென்றது தர்க்கத்தின் மூலமாக அல்ல, இப்படியான ஒரு ‘அற்புத’ நிகழ்ச்சியினால்தான் எனச் சொல்வது ஜெ – யின் நோக்கம்.

இதனை பார்ப்பனர்கள் ஆட்சேபிக்கும்போது வைணவப் பார்ப்பனரான பவதத்தர் பெருந்தன்மையோடு அஜீதன் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறாராம். பாட்டன் நிர்மாணித்த விஷ்ணுபுரத்தை பெளத்தனின் கையில் தாரை வார்க்கிறாராம். எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதுதான் வைதீகம் தமிழனுக்குக் காட்டிய பெருந்தன்மை. ஆனால் ஜெ காட்டும் வரலாறோ கத்தியின்றி, இரத்தமின்றி பெளத்தனுக்குத் தாரை வார்க்கும் வரலாறு!

தர்க்கத்தை ஆங்காங்கு கிண்டலடிகிறார் ஜெ. இது ஏதோ போஸ்ட் மார்டனிஸ்டுகள் தர்க்கத்தை மறுப்பது போல் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். வேதங்களை மறுக்கும்போதும் அதற்கு இவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணரும்போதும் மட்டும்தான் தர்க்கத்தின்மீது இவர்களுக்கு ஆத்திரம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நாத்திகர்களோடு மோதும்போது மட்டும்தான் இவர்களுக்கு தர்க்கம் பிடிக்காது. வேதத்தை பிரமாணமாக ஏற்றுக் கொண்டால் தர்க்கம் இவர்களுக்கு இனிக்கும்.

பெளத்தர்கள் கையில் அளிக்கப்பட்ட விஷ்ணுபுரம் அடுத்த நூற்றாண்டுகளில் இசுலாமிய படையெடுப்பால் அழிக்கப்பட்டது என்கிறார் ஜெ. இசுலாமிய படையெடுப்பு வட இந்தியாவில் நடைபெற்றதற்கும் தமிழகத்தில் ஏற்பட்டதற்கும் இடையில் சுமார் ஐநூறு ஆண்டுகள் இடைவெளி உள்ளது. விஷ்ணுபுரம் அழிவதாகச் சொல்லப்படும் கால கட்டத்தில் இசுலாமிய படையெடுப்பு தமிழகத்தில் நடந்ததாகச் சொல்ல முடியுமா? தவிரவும் இசுலாமியர்கள் கோவில்களை இடித்து நொறுக்கி ஊர்களை தரைமட்டமாக தமிழகத்தில் ஆக்கினர் என்பதற்கும் சான்றுகள் காட்ட முடியுமா?

கொள்ளை அடித்திருக்கலாம். பொன்னையும் மணியையும் ஐம்பொன் சிலைகளையும் அள்ளிச் செல்வது இசுலாமியர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம். சீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இருந்ததில்லை. “விஷ்ணுபுரத்தின்” மூலம் தமிழகத்தின் வரலாற்றையே சொல்ல முயல்வதாக உரிமை கொண்டாடி, தமிழகம் வீழ்ந்ததே இசுலாமிய படையெடுப்பால்தான் என்ற கருத்தாக்கத்தை உருவாக்க முனைவது யாரை திருப்தி செய்ய?

விஜயபாரதம் “விஷ்ணுபுரத்தை” விற்பனை செய்வதை நம்மால் புரிந்த் கொள்ள முடிகிறது. ஞானியும், சு. ராவும் இதனை ஏன் தலையில் சுமந்து திரிகிறார்கள்? தமிழ்த் தேசீயம் பற்றி புத்தகம் வெளியிடும் ஞானியும், விஷ்ணுபுரத்தை விற்கும் விஜயபாரதமும் எந்தப் புள்ளியில் இணைகின்றனர்? இதற்கு ஞானி மட்டும் பதில் சொன்னால் போதாது. ஞானியின் பின்னால் திரியும் தமிழ்த் தேசீயர்களும், கோவை மாவட்ட கலை இலக்கிய அன்பர்களும் பதில் சொல்லியாக வேண்டும்.

கடைசியாக இந்த நாவலில் முன்னுரை மற்றும் நன்றிகள் என்கிற பெயர்களில் ஜெ அடிக்கிற லூட்டியைப் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். துறவியாக முயன்றது, துறவியாகவே அலைந்து திரிந்தது, ஒரு மார்ச் 22 ஆம் தேதி காலையில் நாவலின் மையப் படிமம் இவரை வந்தடைந்தது, நாவலை எழுதுவதற்கு முன் இவர் பேரிலக்கியங்கள், காவிய மரபு, இந்திய ஞான மரபு, தாந்திரிகவியல், சிற்பவியல் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தது, போதானந்தா, ஆத்மானந்தா, பிரம்மானந்தா, சைதன்யர், ஞானி, சுந்தர ராமசாமி இன்னும் பெயர் தெரியாத திருவண்ணாமலைத் துறவி ஆகியோரின் அருளை இறக்கிக் கொண்டது (நடுவே திடீரென்று பித்துக்குளி முருகதாஸ் போல திருமணம் செய்து கொண்டது) என இந்த நாவலுக்கு ஒரு தெய்வீகத்தைக் கற்பிப்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.

Tail Piece: இந்த நாவலின் கருவை 1991 – இல் தேனிலவு நாட்களில் மனைவியிடம் பேசித் தீர்த்தாராம் ஜெ. பாவம் சகோதரி அருள்மொழியை அவர் அப்படிக் கொடுமை செய்திருக்க வேண்டியதில்லை.

– பொ. வேல்சாமி

நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4, மே 1998.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s