விஷ்ணுபுரம்- ஜெயமோகன்

விஷ்ணுபுரம்- ஜெயமோகன்

by பாண்டியன் அன்பழகன்

வாசகன்

தற்கால தீவிர இலக்கிய படைப்பாளி ஜெயமோகனின் மிகப்பெரிய முயற்சியில் உருவான கணமான நாவல் (847 பக்கம்). அடிக்கடி பல இலக்கிய சர்ச்சைகளில் சிக்கி வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படும் ஜெயமோகனின் நாவல் எதையும் இதற்கு முன் நான் வாசித்ததில்லை. ஒரு சில சிறுகதைகள், கட்டுரைகளை வாசித்ததுண்டு.
இந்நாவலை வாசிக்க நான் ஒரு மாதம் எடுத்துக்கொண்டேன். இது ஒரு சரித்திர நாவலுக்குறிய பாணியில் அமைந்திருக்கிற நவீன இலக்கியம். சிலர் இதை சரித்திர நாவல் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பழங்காலத்தில் நடந்ததாக  நம்பகத்தன்மையோடு  ஒரு கற்பனை கதையை ஆசிரியர் கூறுகிறார். இதில் வரும் ஊர் கற்பனை, காலம் கற்பனை, கதை மாந்தர்கள் கற்பனை, வரலாற்று பின்னனி நிகழ்வுகளும் கற்பனை…ஆனால் இதில் மையப்படுத்தப்படும் சமய தத்துவ விசாரனைகள் மட்டும் மெய். அதேசமயம் கதை ஓட்டத்தை பாதிக்கும் அளவுக்கு சலிப்பேற்படுத்திய பகுதியும் இதுதான்.

பாண்டியர்கள் மதுரையை ஆண்ட போது மேற்கு பகுதி மலைகளுக்கு நடுவில் ஹரிதுங்கா அடிவாரத்தில் சோனா நதியின் அரவனைபில் வைணவ சமய மையமாகவும் தத்துவ விவாத நடுநாயகமாகவும் திகழும் விஷ்ணுபுரமே இக்கதையின் கதாநாயகன். பிரமாண்டமான கோபுரங்களும் விமானங்களும் முகப்புகளும் கொண்ட கிடந்த நிலை திருமாள் கோயிலுக்குள் தான் விஷ்ணுபுர நகரமே இருக்கிறது. (வாசகர்கள் ஒரு வசதிக்காக ஸ்ரீரங்கத்தை கற்பனை செய்துகொள்ளலாம்).  இந்நகரின் தோற்ற்ம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகிய மூன்று கால கட்டங்களே மூன்று காண்டங்களாக அமைந்துள்ளன.
சூரியதத்தன் என்னும் ஆரியன் பாண்டியர் ஆதரவுடன் பழங்குடிகள் வசமிருந்து விஷ்ணுபுரத்தை கைப்பறி  சமய தத்துவ தலைநகரமாக மறு நிர்மானம் செய்கிறான். அவன் பரம்பரை விஷ்ணுபுரத்தை நிர்வகிக்கிறது. அரசனுகும் அங்கு அதிகாரம் கம்மிதான்.

ஸ்ரீபாத விழா விஷ்ணுபுரத்தின் உச்ச நிகழ்வாகும். பத்து நாட்கள் நடபெரும் இவ்விழாவில் கலந்துகொள்ள தேசமெங்கும் இருந்து மக்கள் வந்து குவிகின்றனர். பக்தி, ஆசை,காதல், அன்பு,  காமம், போதை, இழிவு, சாதி வெறி. மடமை, போலி பக்தி, பேராசை, பெண்ணாசை, அரசியல் சூழ்ச்சி என்று பல்வேறு உணர்வுகளாலும் விஷ்ணுபுரவாசிகள் அலைமோதுகின்றனர்.

வேறு ஒரு காலகட்டத்தில் புத்தமத வேதாந்தம் வைணவத்தை வாதில் வென்று விஷ்ணுபுர நிர்வாகத்தை கைப்பறுகிறது. வைதீக மதம் தோற்கிறது. பிராமணர் கொட்டம் அடக்கப்படுகிறது. அஜிதர் விஷ்ணுபுரத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்கிறார். சாதி இழிவை போக்குகிறார். ஆனால் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வைணவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. விஷ்ணுபுர வாசிகளில் சிலர் பல்வேறு மார்கங்களில் ஈடுபட்டு உண்ணத நிலையை அடைய முயல்கின்றனர். கலையின் வழியும், காமத்தின் வழியும், மாந்ரீகத்தின் வழியும் மனம் அலைந்து திரிகின்றனர்.

முடிவில் விஷ்ணுபுரம் சிறுக சிறுக அழிகிறது.மக்கள் பிழைக்க வழிதேடி சென்றுவிட  சோனா நதி பெருகி நகரையே விழுங்குகிறது. பிரமாண்டமாக எழுந்து நின்ற திருமாள் கோயில் இடிந்து விழுந்து அழிகிறது. அண்மையில் தாய்லாந்திலன் அயோத்தியாவில் ஏற்ப்பட்ட வெள்ளக் காட்சி மிகவும் ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இக்கதையில் பல அடுக்குகள் ஒன்றன் மீது ஒன்றாகவும் ஒன்றுக்குள் ஒன்றாகவும்  பின்னப்பட்டுள்ளன. இம்மி பிசகினாலும் வாசகன் கதைக்குள் தொலைந்து போய் விடுவான். சல்லி சல்லியாக அடுக்கப்படும் பல பாசல்  துண்டுகள்  இறுதியில் ஒரு முழுவடிவத்தையும் காட்டி நிற்பதைப்போல பல துண்டு சம்பவங்கள் கதை முடிவில் தன் முழு ரூபத்தையும் காட்டுவது மிகுந்த உட்சாகத்தையும் மூடிய பல கதவுகள் திறந்த மகிழ்சியையும் தருகிறது. கதையில் வினோதமான் பெயர்களோடு அதிகமான கதைமாந்தர்கள் உலவுகின்றனர். அதீத நிகழ்வுகள் ஆங்காங்கே நிகழ்கின்றன. சிலவற்றுக்குப் பகுத்தறிவு விளக்கம் கிடைகிறது. உதாரணம் தேவ கிண்ணர்கள் வாசிப்பதாகக் கூறப்படும் இசை. பல மாய நிகழ்வுகளும் உண்டு. உதாரணம் சிற்பியும் காசியபரும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.

ஆசிரியர்,  தமிழர் வரலாற்றில் மரியாதையுடன் காணப்படும் பாண்டிய அரசர்களை மோசமான கண்ணோட்டத்தில் காட்டுகிறார். நோயாளியாகவும் பெண்பித்தனாகவும் அவன் காட்டப்படுகிறான். இதே போன்று ஆழ்வார்களும் காட்டப்படுகின்றனர். கதையில் காட்டப்படும் இரண்டு ஆழ்வார்களுமே புத்தி பேதலித்தவர்களாகவே காட்டப்படுகின்றனர். இது மனதில் நெருடலை உருவாக்கினாலும்  இது பழக்க தோஷத்தால் உண்டான உணர்வு என்பதே உண்மை.

இக்கதையில் மனதில் நிற்கும் காட்சிகள்  பல உண்டு. இந்நாவலை படித்த போது தத்துவ விவாதங்கள் பல சோர்வை ஏற்படுத்தின. பிறகு நான் இந்து புத்த மத தத்துவ பிரிவுகளையும்  அவற்றின் விளக்கங்களையும் குறிப்புகளாக படித்த பிறகே கதையை தொடர்ந்த்தேன். ஆயினும் இக்கதை ஒரு சமய போற்றி கதையன்று. ஆரம்பம் முதல் கிடந்த நிலை பெருமாளை பலகோணங்களில் காட்டிவிட்டு இறுதியில் அச்சிலையின் ஆதி வரலாற்றைக் கூறும் போது பல ‘மூடு மந்திரங்கள் ’ நம் மனக்கண்ணில் தோன்றுகிறதன’.

இந்நூல் என்னை வெகுவாக கவர்ந்தது உண்மை. மூளைக்கு அதிக வேலை கொடுத்த, பல கோணங்களில் சிந்திக்க வைத்த கதையாக இதை கருதுகிறேன்.அதே சமயம் இதில் ஆசிரியர் இணைத்திருக்கும் கவிதை(?) வரிகளை நான் கொஞ்சமும் ரசிக்கவில்லை. இவற்றை ஏன் எழுதினார் என்றே எண்ணத்தோன்றுகிறது. தமிழில் தான் எழுதியிருக்கிறார் ஆனால் புரியாத மொழியில் வாசிப்பது போல் ஒரு உணர்வு. மூன்றாவது வரியை வாசிக்கும் போது முதல் வரி மறந்து போய்விடுகிறதே!

தமிழ் நாவல் கலையில் இது ஒரு மைல்கல் என்று துணிந்து கூறலாம். ஆனால் ஜெயமோகனே கூறிக்கொள்வதைப் போல உலக தரம் வாய்ந்த ஒரே தமிழ் நாவலா என்பதை காலம்தான் கூறவேண்டும்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s