விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் – 1

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் – 1

From Eternal Sunshine of the Spotless mind!

 

புத்தகத்தை வாங்கி வைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.இடைவிடாத வாசிப்பு இருக்க வேண்டுமெனவும், அதற்கான நேரம் வர வேண்டுமெனவும், தினமும் அதை பார்த்துவிட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வதுண்டு.கடந்த வாரம், ஒரு நாள், மனதின் குழப்ப தேவதை கனவில் வந்து தொடங்கலாம் என ஆசி தந்த பிறகு வாசிக்க எடுத்தேன். வாசிப்பை நிறுத்த முடியவில்லை.ஆனால், உள்வாங்கி அசைபோடுதற்கான இடைவெளி மிகவும் அவசியமானது.ஒரு காவியம் தொட்டு செல்லும் கவிகணங்கள்தான் எத்தனை! ஒரு விவரணையில் ஒரு செயலில் ஒரு கவிதையை விட்டு செல்கிறார். இந்த படிமத்திற்காக, எத்தனை தவமிருந்து அதை ஒரு சிறு துளியென சேர்த்துக்கொண்டிருக்கிறேன் என்று யோசித்தால், போதும் இந்த அற்ப பிரயாசை என்று தோன்றிவிடுகிறது.மனக்கண்கள் விழிப்பாக இல்லையென்றால், விஷ்ணுபுரத்தினுள் நுழைவது பிரயாசையாகத்தான் இருக்கும். விஷ்ணுபுரம் காட்டப்படுகிறது, நம்மால், அதன் நதிக்கரை காற்றை உணரமுடியுமளவு. காட்சி அடுக்குகளாகவே கதை எடுத்துசெல்லப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் சொல்லப்படாத ஒன்றின் மௌனத்துடன் மறைகிறது. மீண்டும் வேறு காட்சிகளில் அதன் முடிவு சொல்லப்பட்டு நீள்கிறது. நம் கண்முன் நெய்யப்படும் கம்பளம் போல விரிகிறது.ஒருவகையில், இலக்கியத்தின் எல்லைகளை மீறி சினிமாவாகவும், சினிமாவால் என்றைக்குமே முழுமையாக சுவீகரிக்க முடியாத இலக்கியமாகவும். உயிரூட்டமான ஒரு காட்சியில் நீளும் மனபிரவாகமென.

ஸ்ரீபாத பாகம் இன்று தான் வாசித்து முடித்தேன். அதற்கிடையில், எண்ணங்களை கொஞ்சம் தொகுத்துக்கொள்ளலாம் என எழுதுகிறேன்.

முன்னுரையில் ஜெ குறிப்பிட்டிருப்பதுபோல, இந்நாவலின் எந்த ஒரு கதாபாத்திரத்தின் தரப்பும் வலியுறுத்தப்படவில்லை.ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே தொடர்ந்து செல்வோமானல், அது நம்மை தவறாகவே இட்டு செல்லும். இது, நம் அனைத்து சிந்தனைகளையும், மரபுகளையும், சித்தாந்தங்களையும் சற்று விலகி நின்று பார்ப்பதற்கான வாய்ப்பு. ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்றொன்றுடன் முரண்படும் போதும் மோதும்போதும் நமக்கு வாய்க்கும் கேள்விகளே, நாம் இதிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியது. உதாரணமாக, பிங்கலன் வனத்தில், புத்த ஸ்தூபியில், சந்திக்கும் புத்த பிக்கு. இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்துகொண்டிருப்பவர்.தினமும் அங்கு வந்து விளக்கு ஏற்றி விட்டு போவது மட்டுமே வாழ்க்கையின் நெறியாக கொண்டவர். அதில், அமைதியும் நிறைவும் காண்பவர். பிங்கலனால் நம்பமுடியாத, தாங்கவொண்ணாத வாழ்வு அது. ஆனால், அவனுடைய தேடலும் அவனை எதுவரை கொண்டு செல்லக் கூடும்? மனிதன் ஏன் பிறந்தான்? எதற்காக வாழ்கிறான்? இவையெல்லாம் விடையில்லாத கேள்விகள் என்பது தான் தேடலின் கண்டடைதலா? வேறு என்ன இருக்க முடியும்? ஆனால், அந்த பிக்குவின் அத்தகைய வாழ்க்கையும் ஒரு தேடலுடன் தானே தொடங்கியிருக்கும்? அல்லது, அப்படி தொடங்கியிருக்காவிட்டால், அதன் தரம் குறைந்துவிடுமா? “சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்று, அதனால் தான் சொல்கிறோமா? ஆனால், நம் தேடல் நம்மை அங்குதான் கொண்டு சேர்க்க முடியும் இல்லையா? நாமும் நம் விளக்கை தினமும் ஏற்றி வைக்க வேண்டும். அதை மட்டுமே செய்யவும் முடியும். அத்தனை பெரிய காவியம் படைத்த சங்கர்ஷணனே மீண்டும் தன் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதல்லாது வேறு கதியற்றவனாகிறான். யாருக்காக அவன் தன் காவியத்தை படைத்தான்? அவனையன்றி பிறருக்கென அவன் காவியம் படைக்கவும் தான் முடியுமா? பின், எதனால் அந்த ஏமாற்றம்? கவிஞனால் எந்த ஒரு பெண்ணிலும் நிறைவைக் காணமுடியாது என்பது போல, அவனால் எத்தகைய வாழ்விலும் நிறைவை காண முடியாது என்று தோன்றுகிறது.

மனிதனை இந்த வெறுமையிலிருந்து மீட்கவே, நம் மரபில் எத்தனை மார்க்கங்களும் இலட்சியவாதங்களும். இருந்தும் அவையெல்லாம் வெறும் சிந்தனை வெளிகளாக மட்டுமே இருந்துவிட்டன. தனி மனிதர்களின் சிந்தனைகள்.அவர்களின் தேடல்களால் உருவான சிந்தனைகள்.அவற்றால், எல்லாருக்குமான நியதியாக மாற முடியாது. அதனால்தான், நம் சமூகம் எத்தனை எத்தனை சிந்தனைகளையும் மீறி, ஒரு உன்னதமான சமூகமாக இருந்ததேயில்லை.

ஸ்ரீபாதம் மட்டுமே பார்க்க இத்தனை பிரமாண்டமாக இருக்கும்போது, விஷ்ணுபுரத்தின் முழு தரிசனம் கிடைத்ததும், சொல்ல வார்த்தைகள் இருக்குமா என தெரியவில்லை.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s