விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

By Dr. Suneel Krishnan

எதுவுமே தப்பில்ல

மானுடன் ஞானத்தை நோக்கி பயணம் செய்யும் தருணம் எது ? மானுட வாழ்வின் பொருளென்ன ? பிறப்பதும் மரிப்பதும் ஏன் ? உறவுகளின் பொருளென்ன ? துக்கமும் சுகமும் ஏன் ? காலம் என்பது என்ன ?  புலன்களுக்கு புலப்படாத ஒரு மிக பெரிய பகடை ஆட்டத்தின் காய்களா? வீழ்வதும் ,பிழைத்து இருப்பதும் மட்டுமே சாத்தியமான கோடானகோடி உயிரின் அர்த்தமற்ற சாகரத்தின் ஒரு சிறு துளி மட்டும் தானோ ?

எதன் மீது நிற்கிறோமோ ,எதை சாஸ்வதம் என்கிறோமோ அவை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டால் ,பின்பு எதன் மீது நிற்பது ,எதை பற்றி கடப்பது ? அப்படி ஏதேனும் ஒன்றை பற்றி தான் ஆகவேண்டுமா ? அக இருட்டில் தொலைந்து விடுவோம் , மனிதன் தனியன் .அவனுக்கு ஆக பெரிய பயம் அவனது மனம் தான் ,ஆம் அதை அவன் நெருங்குவதில்லை ,பாவனைகளால் விளக்கி அதை தர்க்க சட்டகத்தில் அடைத்து சொற்களால் பூசி ஒரு மாய மாளிகையை எழுப்புகிறான் .மனதை சந்திக்கும் திராணி மனிதனுக்கு இருப்பதில்லை ,உண்மைக்காக தேடல்களும் ,விவாதங்களும் ,தரிசனங்களும் ,இலக்கியங்களும் ,காப்பியங்களும் ,காவியங்களும் இன்னும் அனைத்தும்- சொற்களின் பிரவாகங்கள் நிரப்பி தன்னை தானே நம்ப வைக்கும் முயற்சி தானோ ? வாழ்க்கைக்கு பொருள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் உரக்க சொல்வது தன் மனதை நம்ப வைக்கும் வெற்று உத்தியோ ?
மனிதனின் ஆக பெரிய சுமை ஞானம் தான் .ஆம் இந்த ஞானம் சுமை ,அதை உருவாக்க தர்க்கங்களை சுமக்க வேண்டும் ,தர்க்கங்களை உருவாக்கி நம் அகந்தைக்கு தீனி போட வேண்டும் .மனிதனுக்கு ‘நான்’ மட்டுமே உண்டு ,பிறது அனைத்தும் அவனை சார்ந்தது எனும் எண்ணம் .’நான்’ மட்டுமே அவனது நிரந்தர முகம்,அவன் மட்டுமே அவனுக்கு மிக முக்கியமானவன் .பிறிது அனைத்தும் அவனது தேவைகள் மட்டும் தானோ ? எத்தனை பெரிய செருக்கு ? பிரபஞ்ச மகா இயக்கத்தின் ஒரு துளி ,ஒரு சிறிய அணு கொள்ளும் செருக்கு .அவனுக்கு சூரியனும் சந்திரனும் ,பிரபஞ்சமும் ,காலமும் அவனை சுற்றி மட்டுமே சுற்றுகிறது .அவனுக்கு அவனை தவிர வேறு யாரும் முக்கியம் இல்லை போலும் . மனிதன் பூரணத்தை நோக்கி ,முழுமையை நோக்கி ஓடுகிறான் ,அவன் தன்னளவில் முழுமையாக இல்லை என்று அவன் எண்ணுவதாலே ஓடுகிறான் .பூனையும் ,புலியும் எதை தேடியும் ஓடுவதில்லை ,இரையும்,துணையையும் தவிர ,அவைக்கு நோக்கங்களை பற்றி கவலை இல்லை .இம்மையின் துயரங்களை பற்றியும் மறுமையின் பயமோ அவைகளுக்கு இல்லை .
நாம் நம் இயல்பை தொலைத்து விட்டோம் ,வெறும் மிகைகளும் ,பாவனைகளும் நம்மை கட்டமைத்துவிட்டது .மிகைகளும் பாவனைகளும் நம்மை ஆட்கொண்டுவிட்டது ,நம்மை நாமாக இல்லாமல் ஆக்கி புதிய பிம்பங்களை உருவாக்கி சுற்றி எழுப்புகிறது . வேண்டாம் எதையும் அறிந்துகொள்ள வேண்டாம் ,அறிதல் ஒளியல்ல ஒளி போல் ஒரு பாவனை.அறிதல் சுமை என்று அறிந்த பின்னும் ,மதுவின் போதை போல் நம்மை ஞானம் உள்ளிழுக்கிறது .ஆழம் ,இருட்டு ,பயம் என்று அறிந்த பின்னும் நம்மால் மீண்டு வர முடியவில்லை .ஆம் இது ஒரு போதை ,ஞான போதை ,இன்னும் இன்னும் என்று நம்மை இழுத்து செல்லும் போதை ,நம்மை தனியனாக்கி வெட்டவெளியில் கூரைகளும் ,தளங்களும் இல்லாது அந்தரத்தில் அந்தகாரத்தில் ஆழ்த்திவிடும் போதை .ஆம் நாம் ஒரு அடிமை ,இவை அனைத்தும் தெரிந்தும் இதிலிருந்து மீள வழி இல்லாது யுகங்களாக கேள்விகளோடு ஓடி களைக்கும் அடிமைகள்.
இதுவரையிலான மானுட அறிதல் தான் என்ன ? எதையும் அறிய முடியாது என்பதே ஆக சிறந்த அறிதல் .
இந்த வாழ்வு துக்கமா ? இல்லை மனிதனுக்கு மகிழ்ச்சியே இயல்பு ,உயிரின் துடிப்பு மகிழ்ச்சியே ,ஆனந்தமே சாஸ்வதம் .இதை தான் மனம் நம்பவேண்டும் என்கிறது ,ஆயினும் இது உண்மை இல்லை என்று மனதின் ஓரத்தில் ஒரு விஷ பாம்பு சீறுகிறது .மனிதன் விஷமா ? உயிர் விஷமா ? இல்லை என்னுள் சுகந்தம் இருக்கிறது ,பூக்கள் மலர்கிறது ,பட்சிகள் சிறகுகளை அழுத்தி எழும்புகிறது .எல்லையற்ற இருமை ,எங்கும் ,இது தான் வாழ்வா ? பிரபஞ்சத்தில் இருமையை கடந்த ஒருமையை நம் அனுபவத்தில் உணர முடியாதா ? அப்படி எதுவுமே இல்லையோ ? தீராத வினாக்கள் . இல்லை இவை எவற்றிக்கும் நான் செவி சாயக்கபோவதில்லை,வினாக்களுக்கு விடை தேடினால் விடயுள் பல வினாக்கள் முளைக்கும்.ஆம் ஞானம் ஒரு மகிசாசுரன் ,அவன் எழும்போது அவனை வீழ்த்த நாம் உபயோகிக்கும் தர்க்கம் எனும் ஆயுதம் ,அவனை குத்தி செருகி சிதறடித்த பின்பு ,ஒவ்வொரு சிதறல்களும் ஒரு கேள்வியாக முளைக்கிறது ,இந்த பிரபஞ்சமே கேள்விகுறிகளின் காடோ ? நேற்றைய,இன்றைய ,நாளைய கேள்விகள் வளைந்து எழுந்து எங்கும் நிற்கின்றன .கனவு தான் ,வாழ்வே ஒரு பெரும் கனவோ ? யாருடைய கனவு ?யாருடைய கனவில் நான் வாழ்கிறேன் ? இதிலிருந்து என்றேனும் ஒரு நாள் ஒரு புன்முறுவலோடு விழித்து எழலாம் என்பது தான் நமது வாழ்வின் நம்பிக்கையோ ? விழிக்க வேண்டும் என்று நினைக்கும் தோறும் அதுவும் கனவின் ஆழத்தில் சென்று சேர்ந்து ,அதுவும் கனவின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது ,விழிக்க வேண்டும் எனும் எண்ணம் கூட ஒரு கனவோ ? விழிப்பு தன்னிச்சயானதோ ? அதை எதுவும் நிகழ்த்த முடியாதோ ?
மரணம் என்றால் என்ன? தணியாத இந்த கேள்வி ,மானுடன் வாழ்வை தொடங்கியது முதல் அணையாது இருக்கிறது .மரணம் ,சதுரங்கம் விளையாடும் சிறு பிள்ளை போல் ,தனக்கு தோன்றிய நேரத்தில் விளையாட்டை குற்ற உணர்வின்றி குதூகலமாக கலைத்து விடும் .கட்டங்களில் சிக்கிய ராஜாக்களும் ,மந்திரிகளும் ,ராணிகளும் இதை உணர்வதில்லை .மரணத்தின் பின்பு என்ன ?
வேண்டாம் ,எனக்கு அந்த மிருக நயனியின் பச்சை நிற பார்வை .வாழ்ந்து சுவடற்று மறையும் தொள்ளாயிரம் பூச்சிகளை போல் ,தினம் தினம் மண்ணில் உதிர்ந்து தனது சுகந்தத்தை காற்றுக்கு தந்து மண்ணில் மட்கிபோகும் பல லட்சம் காட்டு பூக்களை போல் நானும் ஆகிவிட வேண்டும் .

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s