விஷ்ணுபுரம் எனும் காவியம்
by ராதாகிருஷ்ணன்
இந்நூலின் மீதான என் முதல் வாசிப்பின் பின் நான் உணர்ந்தது , விஷ்ணுபுர நகரின் கதை வழியாக ஒரு யுகத்தின் மனிதவாழ்வின் உச்ச சாத்தியங்களிருந்து அதன் பேரழிவு வரை தரிசனமும் ,பல்வேறு மனங்கள் மூலம் பிரபஞ்சம் தன் நிகழ்வினை நிகழ்த்தும் தரிசனமுமே, அதுவே என்னை இந்நூல் ஒரு மகத்தான காவியமாக காண வைக்கிறது.
திருவடி ,தன் தூய்மையான அர்பணித்தல் மூலமாகவும் கற்பனை விரிவினாலும் ஞானத்தினை பெறும் பாத்திரம்.இவர் இயல்பிலேயே இசைஞன் என்பதால் தன் கட்டற்ற சுதந்திரம் கொண்ட கலையின் மூலமாகவே பிரபஞ்சத்தினை மகா சங்கீதமாக உணரும் நிலைக்கு வருகிறார், அதற்கான ஒரு நிமித்தமே லலிதாங்கி,பின்பு இவள்பாதம் வழியாகவே மின்னல்வெட்டினை ஒரு திறப்பின் மூலமாக ஞான நிலைக்கு செல்பவர் .
சித்தன்,அனைத்து ஞான வழிகளையும் கற்று , பின்அதை அனைத்தையும் துறந்து வெட்டவெளியில் நிற்கும் பாத்திரம். இவன் தன் சீடனுக்கு உதிர்க்கும் வாக்கியம் இது” தேர் செய்த கருவிகளை விட்டு விட்டு தேரில் ஏறி செல்”என்பதே பின் தன் சீடனுக்கு அனைத்து ஞானங்களையும் உடைத்து வீச அவன் தரும் கருவி தருக்கமே . உண்மையில்இக்காவியத்தில் மண் மீது பாரமற்று இருக்கும் பாத்திரங்கள் இவனும் வேதத்தனும் மட்டுமே .
பிரசேனர்(மகா சிற்பி),தோற்றுவாயில் வருவது இவரது கனவே. தாந்த்ரீகர்களின் வழியான ஒன்றை குறியீடாக்கி கடந்து செல்லும் முறையின் மூலம் விஷ்ணுபுர தரிசனத்தினை கடந்து வெட்டவெளியில் பறந்தவர் . சிற்ப இலக்கணத்திற்கும் தாந்த்ரீகத்திர்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, அதுவே மகா சிற்பியான இவருக்கு தாந்த்ரீக வழிமுறை கொண்ட கனவினை அளித்தது.
அஜிதன்,பிங்கலன்,பாவகன் இம்மூவரும் ஒரு இழையில் வருபவர்கள்.காரணங்கள் ஒன்று இவர்கள் மூவரும் தன் சுயஅறிதல் வழியாகவே ஞானத்தை தேடுகின்றனர்.இரண்டு அஜிதன் தன் தேடலை தருக்கங்கள் வழி முயன்றது அது தோல்வியுற அதன் அடுத்த தொடர்ச்சியாக பிங்கலன் தன் தேடலை தன் சுய அனுபவங்கள் வழியாக முயன்றது அதன் தொடர்ச்சியாக பாவகன் யோகத்தில் முயன்றது. மூன்று மூவரையும் தன்னிடம் இழுக்கும் மிருகநயனி.
வேததத்தன் மணிமுடி காண்டத்தின் அதிபதி.இந்நூலில் தவிப்புகள்,கனவுகள்,தேடல்கள் இல்லாத அல்லது தேவை படாத ஒரு பாத்திரம் இவர்.ஞானிகள் சென்றடைய விரும்பும் இடத்தினை தன் இயல்பாகவே கொண்ட ஆத்மா, இயற்கையுடன் முற்றிலும் ஒன்றிணைந்த அல்லது இயற்கையிலிருந்து பிரிந்து செல்லாத பைத்தியம்(நம் மொழியில்) ஆத்மா. இவரது குணத்தினையே இந்நூல் தமோ குணம் என காட்டுகிறது . மேலும் இவரது மூதாதையர்களான பவதத்தர் சத்வ குணம் கொண்ட இயல்புடையவராகவும் சூர்யதத்தர் ரஜோ குணம் கொண்டவராகவும் இந்நூல் வடிக்கிறது . சூர்யதத்தரின் குணம் அவர் வரும் முதல் பகுதியிலேயே சொல்ல படுகிறது, யானை(வீரன்) விபத்து வழக்கினை அவர் கையாளும் முறை அதிலிருந்து அவர் பட்டாசாரியாரை நுட்பமாக தவிர்த்து விடுவது என. பவதத்தர் தன் சத்வ குணத்தினால் ஞான விவாதங்கள் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லாதவராக இருப்பதும் மேலும் அஜிதனை தன் மகனாக பாவிக்க தோன்றும் சஞ்சலமே அஜிதன் விவாதத்தில் வெற்றி கொள்ள வைக்கிறது.
சங்கர்ஷணன்,இவர் மூலம் மகத்தான கவிஞனின் மனதும் அதற்காக அவன் இழக்கும் இழப்புகளும் மிக விரிவாக சித்தரிக்க படுகிறது .மேலும் இவரின் மனைவி லக்ஷ்மி வழியாக பெண்களின் அந்தரங்க உலகமும் விவரிக்க படுகிறது.தான் விரும்பிய வடிவான ஆடவனின் பிரதியை தன் மகனிடத்தினில் உருவாக்குவதும் அதுவே இவனுக்கு தன் மகன் மீதான வெறுப்பாக மாறுவதும் அதே சமயத்தினில் மகன் தன் தொடர்ச்சி என அவன் மனம் கொள்வதும் பிறகு மகன் அநிருத்தன் இறந்த பிறகு லக்ஸ்மி இழப்பினால் வெறிகொள்வதும் அதை வேறு வழியில் பெற்ற பிறகு மனம் அமைதி அடைவதும் என மனதின் அந்தரங்க ஆழங்களை அற்புதமாக சித்தரித்து செல்கிறது.
சங்கர்ஷணன் சபையில் வைப்பதாக வரும் உஷையின் கதையும் அதனூடாக அவன் வைக்கும் விஷ்ணுவின் பிரபஞ்ச தரிசனமும் கவித்துவம் நிரம்பியது .ஆனால் காலம் அவனை கவிகளை கேலி செய்யவும் தர்க்கவாதியாகவும் மாற்ற வைக்கிறது.
விஷ்ணுபுரம் மிக மேலான இலக்கிய தருணங்களும் உச்சங்களும் நிறைந்த ஆக்கம் , உண்மையில் இது உச்ச நிகழ்வுகள் மட்டுமே கொண்டதான ஆக்கம் கூட , அதிலொன்று வீரன் (யானை) தான் வீழ்ந்த கணத்தினில் தன் பாகனை துதிக்கையினால் தேடுவதும் அடுத்த கணம் பாகன்(வாமணன்) துதிக்கையை அனைத்து கதறுவதும். இந்நூல் தன் கூறலை நேரடி நிகழ்வுகளாகவும் கனவுகளாகவும் படிமங்களாகவும் முன் வைக்கிறது.படிமங்களுக்கு உதாரணங்களாக, தொடர்ந்து நாவலில் வரும் வெண்பறவைகள் முடிவில் இளநீலசுவரில் முட்டி வீழ்வது.அங்காரகன் கனவில் காணும் காடும் அதில் வரும் பாறை தாயாக மாறி உணவூட்டுவது பின்பு அது மதத்தினால் காட்டில் அலைந்து மிருகநயனியில் லயிப்பது அதை அஜிதன் காண்பது . இதில் வரும் ஒளிரும் தாவரம் மிருகநயனி, இந்நூல் கூட இதன் ஒரு விதை போன்றதுதான்.
விஸ்ணு சிலை வழியாக இந்து மரபின் மூன்று தரப்புகள் விவரிக்க படுகின்றன. இச்சிலையினை செம்பர்களின் மூபனாக வழிபடும் மூதாதையர்களை தெய்வங்களாக வழிபடும் ஆதிமரபும் ,விஷ்ணு சிலையினை மைய சுழியாகவும் நாரனனாகவும் கொள்ளும் தாந்த்ரீக மரபு விஷ்ணுவை பிரபஞ்ச தரிசனமாக வைக்கும் வைதீக மரபு .
மேலும் சித்திரை(செந்தழல் கொற்றவை ) வழியாகவும் நீலி வழியாகவும் சோனா நதி கதை வழியாகவும் தாய் வழி மரபினை பேசுகிறது இந்நூல் . கன்னி தெய்வமாக வரும் மலைச்சியை பீடத்தில் அமர்த்தி பாண்டியனும் சூர்யதத்தனும் வழிபடுவது முக்கியமான இடம் . தகவல்கள், பிங்கலன் வீதியினில் அலையும் போது காண்பதாக குதிரை மூன்று கால்களில் தூங்குவதை பார்ப்பதும் இடையில் அக்குதிரை கண் விளித்த போது காலை கீழே வைத்தும் பிறகு தூங்கும் போது ஒரு காலை உயர்த்துவதாக வரும்,இதை அறியாத ஒருவருக்கு இது மிக சிறந்த வியப்பின்பதை அளிக்கும் . தத்துவ தரிசனங்கள், கெளஸ்தூப காண்டத்தில் இந்திய மரபின்தத்துவ தரிசனங்கள் ஞான விவாதங்களின் வழியாகவும் அங்கு நடந்த விவாதங்களின் வழியாக பேசபடுகிறது மேலும் அதில் வரும் கவிதைவடிவ பதிவுகள் மூலமாகவும் . அதில் ஒரு தரிசனமாக கதை வடிவ கவிதை வரும் .அது, ஒரு பக்தியுடன் பூரணமாக தெய்வசிலையினை வழிபடும் கோவில் பூசாரி ஒரு கட்டத்தில் தன்னையே அதில் உணர்ந்து முக்தி பெறுவது. இந்நூல் ஒவ்வொரு தரிசனங்களையும் அதன் போதாமைகளுடன் இரத்தின சுருக்கங்களாக முன் வைக்கிறது.மற்றபடி இதில் தருக்கங்கள் மூலம் தரிசனங்கள் மோதுவது அதை காவியத்தினில் சொல்ல வரும் போது பாவனை மட்டுமே.