விஷ்ணுபுரம் – ஒரு துவக்க விமரிசனம்.by சுரேஷ்

விஷ்ணுபுரம் – ஒரு துவக்க விமரிசனம்.

 by சுரேஷ்

 சுமார் பத்து வருடங்களுக்குமுன் முதன்முறையாக விஷ்ணுபுரம் வாசித்ததில் விஷ்ணுபுரம் அதன் பிரம்மாண்டத்தாலும் வீச்சாலும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. . அது அள்ளி வழங்கும் தகவல்கள்.-சிற்ப சாஸ்திரம், தத்துவம், விலங்குகளின் அங்க லட்சணங்கள்,  அவற்றுக்குச் சூட்டப்படும் அணிகலன்கள், ஆண்களும் பெண்களுமாய் மனிதர்கள் அணியும் ஆபரணங்கள், கோயிலின் விவரிப்பு, அதில் சொல்லப்படும் ஏராளமான மூர்த்திகள், யட்சர்கள், யட்சிகள் – இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளவே ஒரு வாசிப்பு சரியாய்ப் போய் விடுகிறது.பின்னர் விஷ்ணுபுரம் பற்றிய விதவிதமான வரலாறுகள் – நாமதேவரின் கோணம்,மகாவைதீகரின் கோணம், நிஷாதர்களின்  கோணம், ஸ்ரீபாதமார்க்கிகளின் கோணம் என்று பற்பலக் கோணங்களில் விஷ்ணுபுரம் விரிகிறது.

விஷ்ணுபுரத்தில் ஒரே ஒரு நிகழ்வு ஒவ்வொரு மக்கள் கூட்டத்திற்கும் ஒவ்வொரு விதமாகப் பொருள்படும் அற்புதம், வென்றவரின் பார்வை, தோற்றவரின் பார்வை,  நம்புபவரின் பார்வை, நம்பாதவரின் பார்வை என்று கிளை பிரிந்து படரும் பாங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தின் மிகச் சாதாரணமான, அபத்தமான நிகழ்வும்கூட பின்வரும் காலங்களில் ஒரு புனிதத் தொன்மமாக மாறும் விதம் என்று  பல இழைகள் கொண்ட ஒரு வண்ணமயமான பட்டாடையாய் நெய்திருக்கிறார் ஜெயமோகன்.  வெவ்வேறு கோணங்களில் நம் கண்முன் விரியும் களங்களும் கருத்துக்களும் பாத்திரங்களும் அவற்றின் போராட்டங்களும் நம்மைத் தாக்கும் முதல் வாசிப்பின் அண்மையில், விஷ்ணுபுரத்தின் முழுப்பொருளையும் அந்த ஒரே வாசிப்பில் உள்வாங்கிக் கொள்வது என்பது சாத்தியமில்லை. குறைந்த பட்சம் எனக்கு.விஷ்ணுபுரத்தின் உருவத்தைப் புரிந்து கொள்ளவே அதன் முதல் வாசிப்பு சரியாய்ப் போய் விடுகிறது.

அதன்பின்னும் மீண்டும் மீண்டும் விஷ்ணுபுரத்தை நான் ஏன் வாசித்தேன்? ? ஒரு மாயச் சுழல் போல் விஷ்ணுபுரத்தின் வாசிப்பு நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறதென்றால், ஜெயமோகனின் மொழிவளமும் நடையழகும் அதற்கான முதற்காரணங்கள். அதையடுத்து, முதல் வாசிப்பில் புரிந்தும் புரியாமலும் மின்னலெனத் தோன்றி மறையும் சுவர்ச் சித்திரங்களின் நிழலாட்டம் நம் மனதில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாமறிந்த தமிழக, இந்திய வரலாறு இங்கு வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளதோ என்ற ஐயத்தின் கிளர்ச்சி. இவை தவிர அந்த மிருக னையணி தாவரத்தின்  .மர்மமான ஒளியின் ………………….. கவர்ச்சி, வீரனின் யானை மிரளும் இடம், சிற்பியின் வடக்கு கோபுரப் பயணம், சங்கர்ஷணன் முதன்முதலில் தரிசிக்கும் தோரண  வாயிலின் தோற்றம், பிரளயத்தின் வர்ணனை, பிரத்யும்னன் சிலை, பிரளயதேவி சிலையாக மாறுவது, கௌஸ்துப காண்டத்தின் தத்துவ விவாதங்கள், நீலியின் புதிர்த்தன்மை எனப் பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும் சிறப்புப் பகுதிகள்.

என் வாசிப்புகளின் இறுதியில் , இன்றைய நிலையில் நான் இறுதியாகப் புரிந்து கொண்டதுதான் என்ன?  நிச்சயமாக தமிழில் இதுவரை  தமிழக/இந்திய  வரலாறு இத்தனை பிரம்மாண்டமாக, அதன் உட்சிக்கல்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரு புனைவாக விஷ்ணுபுரத்தில் நாவல் வடிவம் கொண்டது போல் எழுதப்படவில்லை என்று சொல்லலாம்.

சங்கம் மருவிய தமிழ்ச் சமூகம் தொட்டு தமிழர் வரலாற்றுக்குரிய பல்வேறு இனக்குழுக்கள் தமக்குள்ளும் , வடக்கிலிருந்து வந்த இனக்குழுக்களுடனும் அவர்தம் தத்துவங்களுடனும்  இணக்கங்களாகவும் பிணக்கங்களாகவும் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல்கள் விஷ்ணுபுரம் நாவலில் தொன்மமாகவும் யதார்த்தமாகவும் அங்கதமாகவும் சீரிய முறையிலும் சொல்லப்படுகின்றன.  தீராத அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ள குழுக்கள் அதிகாரத்தை அடையவும் அதைத் தக்கவைத்துக் கொள்ளவும் நிகழ்த்தும் ஓயாத போராட்டமே வரலாற்றின் இயங்குவிசையாய் உள்ளதை நாம் விஷ்ணுபுரத்திலும் காண்கிறோம். மதம், தத்துவம், இனம், மொழி என ஒவ்வொன்றும் இந்தப் போராட்டத்தின் தேவைகளுக்கேற்ப கருவிகளாய்க் கையாளப்படுகின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றும் குழுக்கள் தம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தாங்கள் இடம் பெயர்த்த குழுக்களின் தன்மையையே தாமும் அடைந்து விடுகின்றன.

இப்போட்டியின்  இயல்பை எடுத்துக் காட்ட ஜெயமோகன் எடுத்துக் கொள்ளும் முக்கியமான நிகழ்வுகள் இரண்டு. ஒன்று, ஸ்ரீபாத காண்டத்தில் வைதிக தலைமைக்கும் அரசத் தலைமைக்கும் இடையே நிகழும் அதிகாரப் போட்டி- விஷ்ணுபுரத்தின் மகாவைதிகருக்கும் பாண்டிய மன்னனுக்கும் இடையே உள்ள அதிகாரச் சமன்பாடும் அதன் ஏற்ற இறக்கங்களும். ஜெயமோகனுக்கு அதிகாரத்தின் இயல்பைப் பேசும் களமாகின்றன. பல்வேறு இனக்குழுக்கள் ( இன்றைய சமூக அமைப்பில் சாதிகள்), விஷ்ணுபுர நகரத்தின் அதிகார  வரிசையில் நிலையான இடம் கொண்டவையாய் இல்லை. அதிகார அமைப்பை மாற்றியமைக்க அவர்களிடையே போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் விளைவாய் அதிகாரமும் சமூக மதிப்பும் கைமாறிக் கொண்டே இருக்கின்றன.  மறவர் குலத் தோன்றலான வீரவல்லாளனும் அவன் வழியினரும் க்ஷத்திரியர்களாக அங்கீகாரம் பெறுவதும், வாத்தியக்காரர்கள் தங்களில் ஒருவரை ஆழ்வாராகக் கண்டு அவரை முன்னிலைப்படுத்தி அதிகார பீடத்தைக் கட்டமைத்துக் கொள்வது ஆகியவற்றை இதற்கான எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.

இரண்டாவதாக, கௌஸ்துப காண்டத்தில் (இது ஸ்ரீபாத காண்டத்துக்கு முன்னர் நிகழ்வது, ஆனால் நாவலில் அதன்பின் வருகிறது) விஷ்ணுபுரத்தின் அதிகாரம் வைதிக பிராமணர்களின் கையிலிருந்து பௌத்தர்களின் கைக்கு மாறுவது. அந்தத் தருணத்தில் அஜிதனின் துணைவனான சந்திரகீர்த்தி ஆற்றும் உரையை அப்படியே ஒரு கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ என்றே கூறலாம். ஆனால், எந்த அஜிதனின் வெற்றி அந்த நகரத்தில் இதுவரை அதிகாரத்தின் ருசியையே அறியாத ஏழை மக்களின் விடிவுகாலமாகவும் தர்மத்தின் வெற்றியாகவும் கொண்டாடப்படுகிறதோ அதே வெற்றியின் கைதியாகி, தனிமையிள் , நிராசையில் அஜிதன் இறப்பதில் முடிகிறது.  அதை நேருக்கு நேர காணும் நரோபாவின் துக்கமும் திகைப்பும் நம்மையும் பீடிக்கிறது. மீண்டும் எல்லாம் மாறுகிறது, ஆனால் எதுவுமே  மாறுவதில்லை. The more it changes, the more it remains the same. இது George Orwellன் Animal farm நாவலின் முடிவை நினைவுபடுத்துகிறது.

இந்த சமூக ஆட்டத்திற்கிடையே சில தனி மனித வாழ்க்கைகள், லட்சியங்கள், ஆசாபாசங்கள், தேடல்கள் ஆகியனவும் மிக நேர்த்தியாகச் சொல்லப்படுகின்றன. ஸ்ரீபாத காண்டத்தின் பிங்கலன், சங்கர்ஷணன், திருவடி, கோபிலபட்டர், சிரவண மகாபிரபு, சோமன், சமந்திரன் மற்றும் மிக அழுத்தமான பெண் பாத்திரங்களான பத்மாட்சி,லலிதாங்கி, சாருகேசி, லட்சுமி, வைஜயந்தி,மற்றும் சித்திரை ஆகியோரது வாழ்க்கைகள். ஸ்ரீபாத காண்டத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூட இயலாமல் லட்சுமி என்னும் ஒரு புள்ளியில் சந்தித்து விலகும் சங்கர்ஷணனும் பிங்கலனுமே மணிமுடி காண்டத்தின் பத்மனும் பாவகனும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஸ்ரீபாத காண்டத்தில் எல்லா நிகழ்வையும் கிண்டலாகவே விமரிசிக்கும் சுமந்திரனின் ஆக்கங்கள் மணிமுடி காண்டத்தில் ஒரு தரிசனமாகவே நோக்கப்படுவதும் அக்காலகட்டத்தின் முக்கியமான தரிசனக்குரல் என்றாவதும் வரலாற்றின் முரண்நகை. எவ்வளவோ எதிர்பார்ப்புகளோடு விஷ்ணுபுரம் வந்து எதுவும் நிறைவேறாமல் அனாதரவாக உயிர்துறக்கும் திரிவிக்ரமரின் சித்திரம் ஒரு சிறு சோக காவியம்.

ஆண் பெண் உறவுகளின் பல்வேறு பரிமாணங்களும் விஷ்ணுபுரத்தில் பேசப்பட்டுள்ளன. கணவன் மனைவி உறவு (லட்சுமி, சங்கர்ஷணன்,), கணவன் மனைவி மகன் என்ற முக்கோண உறவு (அநிருத்தன் சந்க்கர்ஷணன் லக்ஷ்மி)  தகப்பன் மக்கள் உறவு (சர்வக்ஞர்களும் அவர்தம் மகன்களும்) என்று சிலவற்றைச் சொல்லலாம். இதில் சூரியதத்தருக்கும் அவரது மகனுக்கிடையே நடைபெறும் விவாதமும் பவதத்தர் தனது பேரனிடம் உரையாடும் இடமும் இறுதியில் தேவதத்தன் ஆர்யதத்தன் இருவரிடையே உள்ள உறவும் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமாக அனிருத்தன் மறைவும், அது லட்சுமி, சங்கர்ஷணன், இருவ்ரிடத்தும் ஏற்படுத்தும் விளைவுகளும் தனியொரு உளவியல் நாவலாகவே விரியக்கூடிய தன்மை கொண்டது. அதே போல, சாருகேசி தன் மகன் பற்றிய கற்பனையில் பிங்கலன் பிரிவை சாதாரணமாக எடுத்துக்கொள்வதும் மானிட மனதின் விசித்திர உள இயல்பைச் சுட்டுகிறது. சங்கர்ஷணனைப் பிரியும் பத்மாக்ஷிக்குக் காவிய தேவதை என்னும் படிமமும் பத்ம புராணத்தைப் பயிலும் சீடர்களும் துணையாகின்றனர்.  பிங்கலன் பாவகன் பத்மன் ஆகியோரது ஆன்மிகத் தேடல்களும் சரவண மஆகாப்ப்ரபு தன்னிடத்தில் திரும்பி வரும் பிங்கலநிடத்தில் தான் கண்டு செல்வதும் ஒரு முட்டுச்சந்தையே   என்று  கையறு  நிலையில் கூறுவது ஆகியவை எல்லாமும், அவர்கள் எல்லாம் அடையும் இறுதி முடிவும், எல்லா மனித யத்தனங்களின் வியர்த்தத்தையும்  கூறி சித்தனின் சிரிப்பு மட்டுமே இறுதியில் எஞ்சுவது  என்று முகத்தில் அறையும் வண்ணம் கூறுகிறது.

இறுதியில் மணிமுடிக் காண்டத்தில் பத்மனும் பாவகனும் அடையும் முடிவு மனிதனுக்கு இறுதியில் தனிமை ஒன்றே துணை என்று வலியுறுத்துவது போலுள்ளது. இந்த வரிசையில் நெஞ்சை உலுக்கும் இன்னொரு பாத்திரப் படைப்பு, கடைசி சர்வக்ஞரான தேவதத்தன். சொல்லப்போனால் தான் என்ற தன்னிருப்பையோ அகங்காரத்தையோ துளியும் கொள்ளாது இயற்கையின் மடியில் இரண்டறக் கலந்துவிடும் அவன்தான் ஒரு லட்சிய மானுடனோ? இப்பாத்திரம் ஜெயமோகனின் ‘விசும்பு’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள பூரணம் கதையில் உள்ள பாத்திரத்தை நினைவுபடுத்துகிறது (ஒரு வேளை அது  இதை நினைவுபடுத்த வேண்டுமோ?)

விஷ்ணுபுரம் நாவலில் வரும் பல சம்பவங்கள் இதிகாசங்களையும் பண்டைய இலக்கியங்களையும் நினைவுபடுத்துகின்றன. அக்நிதத்தன்- செம்பர் குலப்பெண் உறவு பராசரர் மச்ச்சகந்தி கதையின் எதிரொலி போல இருக்கிறது. பிராமணர்களின் பந்திக் காட்சி சாந்தோக்ய உபநிடதத்தின் ஒரு காட்சியை நினைவுபடுத்துகிறது. நம் பண்டைய இலக்கியங்களில் நமக்குள்ள பரிச்சயம் கூடக்கூட விஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய புரிதல் மேலும் செழுமையடையும் என்று நினைக்கிறேன்.

இந்நாவலில் இயல்பாகக் காணப்படும் நகைச்சுவையும் அங்கதமும் சிறப்பித்துச் சொல்லப்பட வேண்டியவை. குறிப்பாக ஸ்ரீபாத  காண்டத்தில் சுமந்திரனின் பேச்சுகள், கோபில பட்டரைப் பற்றிய அவரது மனைவியின் கவலைகள்,  மணிமுடிக் காண்டத்தில் வைத்தியருக்கும் ஜோசியருக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், சித்தனும் அவனது சீடனும் பேசிக்கொள்வது ஆகியவற்றைச் சொல்லலாம். பாண்டிய மன்னனின் வீரமரணம் குறித்து நரசிங்கர் கூறுவது நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.

இந்நாவலில் உள்ள பல்வேறு மீயதார்த்த நிகழ்வுகளையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். கோவிலில் வாத்திய இசை தானாகவே ஒலிப்பது, கருட பரிட்சை போன்றவற்றை இவ்வகையில் குறிப்பிட வேண்டும். ஸ்ரீபாத காண்டத்தில் வரும் அநேக மீயதார்த்த நிகழ்வுகளுக்கான யதார்த்த காரணங்களும்  பீதாம்பர மாமாவின் விளக்கவுரையைக் கொண்டு செய்யப்பட்டு வரும்போது கௌஸ்துப காண்டத்தில் விவாதத்தின் இறுதியில் ஒவ்வொரு தீபமாகச் சுடர் விடுவதற்கும் கருடன் வந்து அமர்ந்து அஜிதனின் வெற்றியை உறுதி செய்வதற்குமான யதார்த்த விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படுவதில்லை- மாறாக, ஆத்திரப்படும் பிராம்மணர்கள் வாயிலாக வரும்  அனைத்தும் சிற்பிகளின்  தந்திர வேலைதான் என்ற ஒரு  வரி மட்டுமே . மனிமுடிக் காண்டத்தின் நிகழ்வுகள் அனைத்துமே மீயதார்த்த தன்மை கொண்டவை.

விஷ்ணுபுரம் ஒரு நாவல் என்ற வகையில் அது எடுத்துக் கொண்ட பொருளுக்கு வேண்டிய மொழியும் நடையும் தத்துவச் செறிவும் அங்கதமும் பூரணமாக அமையப்பெற்ற ஒரு முழுமையான ஆக்கம் என்றும் தமிழ் நாவல்களில் முதன்மையாவற்றுள் ஒன்று என்றும் தாராளமாகச் சொல்லலாம். ஆனால் இந்நாவல் அது எடுத்துக்  கொண்டிருக்கும் கருப்பொருளின் தன்மையினாலேயே  நாவலுக்கு வெளியேயும் ஒரு விவாதத்தைத் தூண்டுகிறது.

இந்திய/தமிழக வரலாற்றின்  மாணவர்களுக்கு எப்போதும் திகைப்பூட்டும் முக்கிய விஷயங்கள் இரண்டு. ஒன்று பௌத்தத்தின் வீழ்ச்சி மற்றும் ஏறத்தாழ அதன் முழுமையான மறைவு. இரண்டாவதாக, தமிழக, இந்திய சமூகத்தில் தொடர்ந்து நீடிக்கும் பிராமண ஆதிக்கம். இந்த நாவலில் இவை இரண்டும் பேசப்படுகின்றன. முதலில் பௌத்தத்தின் வீழ்ச்சி மற்றும் மறைவைப் பார்க்கலாம்.

இந்நாவலில் பௌத்தத்தின் வீழ்ச்சி குறித்த வரலாற்றை விரிவாகப் பேசியிருக்கக்கூடிய வாய்ப்பு  உள்ளது. ஆனால் ஏனோ ஜெயமோகன் அதை விரிவானச் சித்திரமாக ஆக்காமல் அஜிதனின் மரணப்படுக்கையின் தனிமையை ஒரு குறியீடாகக் கொண்டு கோடி காட்டிச் சென்று விடுகிறார். நம் வரலாற்றின் ஒரு முக்கியமான இடைவேளியான இதை ஜெயமோகன் தன் அபாரமான கற்பனையையும் மொழி வளத்தையும் கொண்டு பெரும் புனைவாக ஆக்கும் வாய்ப்பை ஏன் விட்டுவிட்டார் என்பது வியப்பாக உள்ளது. ஒருவேளை அது அவரது எதிர்கால நாவல்களில் ஒன்றுக்கான கருப்பொருள் என்று கொள்ளலாமா?

அடுத்ததாக, முன்னைவிட இப்பொழுது அதிக சர்ச்சைகளுக்கு இடமளிப்பதாக இருக்கும் பிராமண ஆதிக்கத்துக்கு வருவோம்,. இங்கு பிராமண ஆதிக்கம் என்ற சொல் அதன் விரிவான பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சம்ஸ்கிருதமயமாக்கம், நாட்டார் தெய்வங்கள் வைதிக மதத்தின் பகுதிகளாக, பரிவார தேவதைகளாக ஆகுதல், பிராமணரல்லாத திருவுருக்களும்கூட வைதிகப் பின்னணி கொண்ட தொன்மங்கள் ஆக்கப்பட்டு உள்ளிழுக்கப்படுதலையும் பிராமண ஆதிக்கமாக இங்கு எடுத்துக் கொள்கிறோம்.

விஷ்ணுபுரத்தில் இது மிக விரிவாகப் பதிவாகியுள்ளது- பிராமண ஆதிக்கம் எதிர்மறையாகச் சித்தரிக்கப்படுகிறது என்றும் சொல்லலாம். ஆழ்வாரின் வரலாறு, அவர் குதிரையுடன் வைகுந்தம் செல்வது, பத்மாட்சி காவிய தேவதை ஆவது, முக்கியமாக அக்னிதத்தன் பாண்டிய மன்னனின் உதவியோடு கோவிலை நிர்மாணிப்பது, செம்பர்களின் பெருமூப்பன் விஷ்ணுவாவது என்று சொல்லிக் கொண்டே போகலாம். இது முழுக்க முழுக்க இந்திய இடதுசாரி பார்வையை ஒட்டியதாகவே எனக்குத் தோன்றுகிறது (பிராமண போஜனப் பந்தி காட்சி  ஒரு திராவிட இயக்கப் பார்வை என்றே  சொல்லலாம்!)

விஷ்ணுபுரம் வெளிவந்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நாவல ஜெயமோகனின் மனதில் கருக்கொண்டு 25 ஆண்டுகளும் ஆகியிருக்கக்கூடும்.  விஷ்ணுபுரம் எழுதிய காலகட்டத்தில் வைதிக மதம், சமஸ்கிருதமயமாக்கம், பிராமண மேலாதிக்கம் போன்ற விஷயங்களில் ஜெயமோகன் கொண்டிருந்த கருத்துகளிலிருந்து இன்று வெகுவாக விலகி வந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அவரது இணையதளத்தில் வெளியான, ‘மேல்நிலையாக்கம்’, ‘சாதி பேசலாமா>”, “சமஸ்கிருதம் யாருடைய மொழி?”, “ராஜராஜன் காலகட்டம் பொற்காலமா?”, “நான் எப்போதும் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!” போன்ற கட்டுரைகளைப் படித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்.விஷ்ணுபுரம் இன்று எழுதப்பட்டிருந்தால் என்ற கேள்வி மிகவும் சுவாரசியமளிக்குமொன்று.

இந்திய, தமிழக சமூக உருவாக்கம் மற்றும் சூழலை எழுதும்போது ஜெயமோகனிடம் இருவேறு முரண்பட்ட நிலைப்பாடுகள் இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றுகிறது. புனைவுகளில் வைதிக மதப் பரவலைப் பற்றியும் பிராமண மேலாதிக்கம் பற்றியும் எழுதும்போது ஒரு வழக்கமான இந்திய இடதுசாரிப் பார்வை மேலோங்கியிருப்பதாகவே தோன்றுகிறது. மாடன் மோட்சம், திசைகளின் நடுவே மற்றும் கொற்றவையிலும்கூட இந்தப் பார்வையை காணலாம்.  ஆனால் அவரது கட்டுரைகளிலும் கேள்வி பதில்களிலும் அந்தத் தொனி இருப்பதில்லை.

விஷ்ணுபுரத்தில் வரும் பாண்டிய மன்னன் பாத்திரப்படைப்பை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அந்தப் பத்திரப்படைப்பில் ஜெயமோகனுக்குத் தேர்வுகள் உள்ளன. தமிழக மன்னர்கள் பலரும் விஷ்ணுபுரத்தில் வரும் பாண்டிய மன்னனைப் போலவே இருந்திருக்கவும் கூடும். ஆனால், ‘ராஜராஜன் காலம் பொற்காலமா?” என்ற கட்டுரையில் ஜெயமோகன் சித்தரிக்கும் ராஜ ராஜ சோழனைப் போன்ற ஒருவனை அந்த மன்னனாகச்  சித்தரிக்கும் வாய்ப்பிருந்தும் அதை ஏன் ஜெயமோகன் தேர்ந்தெடுக்கவில்லை?

ஆழ்வார் பாத்திரப்படைப்பிலும் இப்படிப்பட்ட கேள்விகள் எழுகின்றன. ஆழ்வாரைப் பற்றி நாவலில் கொடுக்கப்படும் செய்திகளைக் கொண்டு நாம் அந்தப் பாத்திரம் நம்மாழ்வாரின் சாயலில் படைக்கப்பட்டிருப்பதை அனுமானிக்க முடிகிறது. ஆனால் முழுக்க முழுக்க எதிர்மறையாக, தமிழ் வேதம் செய்தவர் என்று போற்றப்படும் நம்மாழ்வார் ஏன் விஷ்ணுபுரம் நாவலில் வேறு வகையில் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. படைப்பாளியின் சுதந்திரத்தை நாம் மறுக்க முடியாது, உண்மைதான். ஆனால் ஒருவரது வகைமாதிரிகளின் தேர்வும், பெசுபோருளை அவர் அணுகும்போது  வெளிப்படும் தொனியும் படைப்பாளியின் மனப்பான்மையைக்  காட்டுவதுதானே?

விஷ்ணுபுரம் ஒரு இந்துத்துவப் பிரதி என்று இடதுசாரிகளாலும்’ புரட்சியாளர்களாலும் ‘வசைபாடப்பட்டது என்பது ஒரு சுவாரசியமான முரண்.

மேற்சொன்ன விஷயங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டனவா, விஷ்ணுபுரம் நாலைப் பேசும்போது  விவாதப்பொருளாக எடுத்துக் கொண்டிருக்கப்பட்டிருகின்றனவா என்பன பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாவல் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு புதிய தலைமுறையினர் அதைப் படிக்கும் தருணத்தில் மேற்சொன்ன விஷயங்கள் குறித்து ஒரு விவாதம் எழுவதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.

எந்த ஒரு படைப்பும் அதை வாசிக்கும் வாசகனை உள்ளிழுத்துக் கொண்டு கட்டிப் போடவும்,  வாசித்தபின் அவன் உலகத்தையும் தன்னையும் பார்க்கும் பார்வையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவனை பாதிக்க வேண்டும் என்பதும் மேலதிகப் புரிதல்களைத் தேடிச் செல்ல அவனைச் செலுத்த வேண்டும் என்பதும் என் அளவுகோல்கள். அந்த வகையல் விஷ்ணுபுரம் ஒரு மகத்தான, முதன்மையான   படைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

–    சுரேஷ்

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s