விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்

விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து…

-பிரகாஷ் சங்கரன்

மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன. (சாந்தோக்ய உபநிடதம்)

*

முழுமை

உயர்ந்த மலையின் வெவ்வேறு சிகரங்களில் ஊற்றெடுத்த நீர் சிற்றோடைகளாகவும் குறு நதிகளாகவும் பாய்ந்து ஓரிடத்தில் சங்கமித்துப் பெருநதியாகப் பெருகி  மீண்டும் கிளைத்து துணைநதிகளாகவும் வாய்க்கால்களாகவும் ஓடி இறுதியில் கடலை அடைகின்றன.

வேறுபட்ட குலங்களும், தனித்த ஞான தாகிகளும், மெய்த்தேடல் கொண்டவர்களும், பல்வேறு மார்கிகளும் தங்கள் பயணத்தில் ஒருமுறையாவது ஞானத்தின் உறைவிடமான விஷ்ணுபுரத்தின் வீதிகளின் குறுக்காக கடந்து செல்கின்றனர். மேகங்களைத் தாண்டி வளர்ந்த கோபுரங்கள் கொண்ட அந்தப் பேராலயத்தின் பிராகாரங்களில் நடக்கின்றனர். மல்லாந்த கரியமூர்த்தி ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் தொடர்புடையவராகிறார். குலங்கள் கலக்கின்றன, நம்பிக்கைகள் மாறுகின்றன, மதிப்பீடுகள் திருத்தப்படுகின்றன, புதிய மார்க்கங்கள் பிறக்கின்றன. பயணம் தொடர்கின்றது. கடைசியில் அவை எல்லாமும் ஒரு பெரும் நியதியின் முழுமையின் ஒரு அங்கமாகக் கச்சிதமாகச் சேர்கின்றன.

ஒவ்வொரு முறை விஷ்ணுபுரத்தைப் வாசிக்கும் போதும் ஏதாவது ஒரு அம்சம் அப்போதைய மனநிலை மற்றும் ஆர்வத்துக்குத் தகுந்தபடி பிரதானமாகத் தோன்றும். இம்முறை அதன் ஒட்டுமொத்த முழுமை நோக்கும், எண்ணற்ற அதன் கதாப்பாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவை நாவலின் இறுதியில் கொள்ளும் முழுமையும் முக்கியமாகப்பட்டது. இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் – அதன் அசைவும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒரு மாபெரும் நியதியினால் சிறு பிசிறு கூட இல்லாமல் முழுமையாக கட்டப்பட்டிருக்கிறது. பிரபஞ்ச இயக்கத்திற்குப் பங்களிக்காத எதுவும் இங்கே இல்லை. விஷ்ணுபுரமும் அப்படியே. நாவலின் மையப் படிமத்திற்கு  தொடர்பில்லாத ஒரு கதாபாத்திரமும், சம்பவமும் இல்லை. முதல் பகுதியில் ஒரே ஒருமுறை பெயர் வரும் காதாபாத்திரம் கூட கடைசிப்பகுதியில் முழுமை பெற்று எழுந்து வருகிறது. ஸ்ரீதரன் அப்படி ஒரு உதாரணம்.

பிரபஞ்ச உற்பத்தி பற்றிய கேள்விகளும், ஞானத்தேடலுக்கான வழிகளும், அதனூடாக ஞானதாகிகளின் அந்தரங்கமான பயணமும் அவர்களின் கண்டடைதலுமே நாவலின் மையக்கருவாக மிகுந்த கவனம் கொடுத்து வாசிக்கப்படுப்பவை. என்றாலும், எண்ணூறு பக்க பிரம்மாண்ட நாவலின் பக்கங்களில் ஏதேதோ இடங்களில் ஆங்காங்கே சிதறிச் செல்லும் சம்பவங்களையும், குறியீடுகளையும் பொறுக்கிக் கோர்த்து அவை ஒரு முழுமையான மாலையாக வடிவம் பெறுவதைக் காண்பதும் ஒருவித நிறைவைத் தரக்கூடியது தான்.

உதாரணமாக ஸ்ரீபாதம் பகுதியின் தோற்றுவாயில் வரும் அந்த இரண்டு பேர் யார் என்பதும், குதிரை லாய மேற்பாவையாளர் வீரநாராயணரின் வேர் எங்கு இருக்கிறது என்பது மிகப்பூடகமாக வெவ்வேறு தருணங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் வழியாக மாறுபட்ட கோணங்களில் சொல்லப்படுகிறது. அவற்றை இணைத்து ஒரு முழுப்பிம்பத்தைக் கண்டுகொள்ள முயல்வது ஒரு புதிர் முடிச்சை அவிழ்ப்பது போல பரவசமான அனுபவமாக இருக்கும்.

மல்லாந்த திருமேணி யாருடையது?

விஷ்ணுபுரத்தில் இருக்கும் மாபெரும் கரியசிலை விஷ்ணுவா இல்லை மூப்பனா என்பது குறித்து வாசிப்புக்கேற்ப கருத்துக்கள் வந்துள்ளன. பொதுவாக மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின் படி ‘பழங்குடிகளை விரட்டிப் பறித்துக்கொண்ட வைதிக ஆதிக்கம்’ என்கிற வாசிப்பு பிரபலம்.

புராணங்கள் அனந்த சயனம் உட்பட விஷ்ணுவின் சயனங்கள் பத்து எனக் கூறுகின்றன. பாம்பனை, சங்கு, சக்ரம், கதை என எதுவும் இல்லாத ஸ்தலசயனமும் அதில் ஒன்று. விஷ்ணுபுரத்தில் அப்படித் தான் மூன்று வாசல்கள் உடைய கருவறையை நிறைத்துப் படுத்திருக்கிறார். அஜிதருக்குப் பின் இன்னும் சில ஆயிரம் வருட காலம் பௌத்தம் விஷ்ணுபுரத்தின் ஞான தரிசனமாக கோலோச்சியிருந்தால் அந்த கரியசிலை சயனபுத்தராக மாறியிருப்பார். செம்பர்கள் மொட்டைத் தலையும் கப்பரையுமாக வந்த ஒரு பட்டனின் கட்டிலிருந்து தங்கள் மூப்பனை விடுவிக்க காத்திருப்பார்கள்.

ஆனால் மாற்றம் இல்லாவிட்டால் காலமே இல்லை. மாற்றங்களே சமூகப் பரிணாம வளர்ச்சியின் முக்கிய காரணி. பரிணமிக்காதவை தேங்கி அழியும். சமூகப் பரிணாமும் ‘முரன்பட்டு நகர்தல்’ என்ற ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே நகர வேண்டுமென்பதில்லை. ‘மானுடம் ஞானம் அழிகிறதா’ என்ற கேள்விக்கு ஜெ சொல்லியிருந்த பதிலையே இதற்கும் போட்டுப்பார்த்தால் சமூகப் பரிணாமம் என்பதும் சுழற்சியாகவும் ஒத்திசைவாகவும் இருக்கலாம்.

எல்லா கலாச்சாரங்களும் அவைகளின் பழங்குடி வேர்களிலிருந்தே தொடங்குகின்றன. இயற்கையான அவற்றின் வளர்ச்சியின் போக்கில் அம்மக்களின் வாழ்க்கை அனுபவங்களே செறிவுபடுத்தப்பட்டு தத்துவமாகின்றன. இடையில் அவை காலச்சூழலில் திசைக்கொன்றாகப் பிரிந்து தனித்தனியாக வளர நேரிட்டால், அவ்வாறு வளரும் புதியசூழலுக்கு ஏற்ப ஆதி நம்பிக்கைகள் புதிய முலாம் பூசியபடி இருந்துகொண்டே இருக்கும். மகாகால மார்கம், வைதிகம், செம்பர்குலம் என விஷ்ணுபுரத்தின் அனைத்து மரபுகளிலும் அவற்றின் நனவிலியில் அந்தக் கரியதிருமேனி இருக்கிறது. அந்த ஆதி நம்பிக்கை காலத்தின் ஊடே வெவ்வேறு கைகள் வழியாக மாறிச் சென்று கடைசியில் பிரளயத்தில் அமிழ்கிறது. பின்னர் புதிய வானும், பூமியும் பிறந்து அடுத்த சுழற்சி ஆரம்பிக்கையில் தொடங்கிய கைகளிலேயே இருக்கிறது. விஷ்ணுபுரத்தின் இந்த காலச்சுழற்சி தான் ஒருவகையில் காலச்சக்ர தரிசனம். அதன் எல்லாப் புள்ளிகளும் முடிவில்லாத பயணத்தில் இருக்கின்றன. மாறாத மையப்புள்ளி – மல்லாந்து வானை நோக்கும் அந்த பிரம்மாண்ட கரியமூர்த்தி தான். இதன் குறியீடாகவே விஷ்ணுபுரம் சக்கர வடிவமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஞானத்தேடலின் தோற்றுவாய்

விஷ்ணுபுர பேராலயத்தின் ஞானசபை விவாதத்தில் உறுதியான தத்துவ அடித்தளம் கொண்ட எல்லா தரிசனங்களும் கலந்துகொண்டு பேசுகின்றன. இவற்றின் நடுவில் காலந்தோறும் சுய தேடலின் மூலம் தங்கள் பாதையை தாங்களே கண்டடையும் ஞானதாகிகளும் தோன்றியபடியே இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பலசம்பவங்கள், தருணங்கள் இவர்களுக்கு பொதுவாக இருந்தபோதும், ஒவ்வொருவருக்கும் அவரவர் இயல்புக்கு தகுந்தபடி ஏதாவது ஒரு சம்பவம் அல்லது தருணத்தில் தான் அகத்தூண்டல் பெறுகிறார்கள்.

தெருவோரம் கால்நீட்டிப் படுத்திருக்கும் மகாரோகியின் உருவம் பிங்லனைத் தொந்தரவு செய்யும் அளவு மற்றவர்களைப் பாதிக்கவில்லை. இயற்கையின் கரங்கள் மீட்டும் அதிமகத்தான இசை திருவடியின் மனதைத் தான் புரட்டிப் போடுகிறது. பிரசேனர் சொல்வது போல ஒரே பிரபஞ்ச அனுபவம் தான், அதை இசையிலிருந்து பெண்ணிலும் அதிலிருந்து மீண்டும் நாதமயமாகவே எதிலும் காண்கிறான். சோமன் முற்றிலும் மாறாக அதீத லௌகீக உணர்ச்சிகள் மிகுந்தவன், அவனது திறப்பு ஞானத்தை நோக்கியதல்ல. மானுட வாழ்வின் நீதி-அநீதி சார்ந்தது. பெருந்தச்சனுக்கு இழைக்கப்படும் அநீதி அவனை அறத்தின் பால் தூண்டுகிறது, ஆனால் அது பிங்கலனை சலனப்படுத்தவே இல்லை.

பொதுவாகக் காமமும், எதிர்பாராத மரணத்தை காணநேர்தலும் லௌகீகத்தை மீறிய ஞானத்தேடலுக்கான தோற்றுவாயாக ஆவதை பல ஞானிகளின் வாழ்வில் நாம் கவனிக்கலாம். விஷ்ணுபுரத்தில் காமம் அப்படிப் பலருக்கு காரணியும், வழியுமாக இருக்கிறது. அழிவு மற்றும் மரணம் குறித்தும், அதன் மீதான ஆதிமனதின் அச்சம் குறித்தும் அஜிதன் முதல் யோகவிரதர் வரை பலர் பேசுகின்றனர். ஆனால் மரணம் என்னும் அழுத்தமான ஒரு  அதிர்வினால் இகவாழ்வின் நிரந்தரமிண்மையை கண்டு திடுக்கிட்டு நிரந்தரத்திற்கான தேடுதலில் ஈடுபடும் எவரையும் காணமுடியவில்லை.

சொல்லாமல் சொன்னவை – குறியீடுகள்

எண்ணூறு பக்கம் விரிந்திருக்கும் அடர்ந்த சொல்வனமாகிய விஷ்ணுபுரத்தில் காட்சிகள் ஒரு அதிநவீன ஓளிப்படக்கருவியால் பதியப்பட்டது போல மிகத் துல்லியமாகவும், தெளிவாகவும்,  வெகு நுணுக்கமாகவும் கண்முன் நிறுத்தப்படுகிறது. முன்னூற்றி அறுபது பாகையும் சுழன்று காட்சிகள் விரிகிறது. கதாப்பாத்திரங்கள் ஒருவரோடொருவர் பேசுவது மட்டுமன்றி ஒவ்வொருவரும் அவரின் அந்தரங்கத்தில் எழுப்பிக்கொள்ளும் கேள்விகளையும், பதில்களையும், தருக்கங்களையும் கூட மனதை ஊடுறுவி பதிவுசெய்து விடுகிறது. ஆனாலும் இவற்றின் நடுவில் சொல்லாமல் சொல்லப்பட்டதும், குறியீடுகளாக வாசகனுக்கு விடப்பட்டதும் தான் விஷ்ணுபுரத்தை தேர்ந்த வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக ஆக்குகிறது. அவர்கள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிதாக ஒரு வாசல் திறக்கிறது.

நாவல் முழுவதும் தொடர்ந்து வரும் சில குறியீடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக பச்சை நிறம் ,கருப்பு நாய், கழுத்து நீண்ட வெண்பறவை போன்றவற்றைக் கூறலாம்.

மானுட மனதால் கற்பனை செய்ய முடியாத பிரபஞ்ச வலைப்பின்னலின் குறியீடான அதிமகத்தான ஸ்ரீசக்ரத்தின் யோனி- பச்சை நிறம். சக்தியின் மூலாதாரம். காமத்தின், படைப்பின் குறியீடு. அதுவே அடையப் பெற வேண்டியதுமான ஞானத்தின் குறியீடுமாகும். எந்த சஞ்சலமும் எதிர்வினையுமின்றி வெறுமனே சாட்சியாகப் பார்க்கும் மிருகத்தின் விழியே ஞானவிருட்சமான ‘மிருகநயனி’. இருளில் பச்சையாக ஒளிரும் மிருக விழிகளின் நிறமே மிருகநயனியின் நிறமும். தேடலுள்ளவனுக்கு மிருகநயனியின் பச்சைநிற ஒளியே அக இருளில் ஞானத்தின் பாதையைக் காட்டுகிறது. பச்சைமாமலை போல் மேனியனாகிய விஷ்ணுவின் நிறம் அது. ஞானத்தின் இருப்பிடமான விஷ்ணுபுரத்தின் உயர்ந்த சிகரம் –ஹரிததுங்கா (பசுங்குன்றம், பச்சைமலை) ஞானத்தின் பருவடிவமே.

பிங்கலன், அஜிதன், பாவகன், யோகவிரதன் என தருக்கம் நிறைந்த தேடல் கொண்டவர்கள் எல்லாரும் மிருகநயனியை அடைகிறார்கள். மிருகநயனியைச் சுற்றிலும் வேறு எந்த மரம் செடியும் இல்லாமல் ஒளியாலான வெட்டவெளி உள்ளது. ஞானதாகிகள் அனைவரும் தங்கள் தேடலில் தனிமையையும், வெறுமையையும் உணர்கின்றனர். அது விரக்தியால் அடைந்த வெறுமை அல்ல. கண்டுகொண்ட உண்மை மட்டும் தன்னந்தனியாக இருப்பதனால் உணரப்படும் வெறுமை. அஜிதன் மிருகநயனியின் அடியில் தான் எண்ணங்கள் ஒழிந்த ஒரு வெறுமையின் அகழியை ஒரு கணம் தாண்டுகிறான்.

பிங்கலுனுக்கு ஒரு ஒளிவீசும் பச்சைக்கல்லாக கையில் அகப்பட்டு அவனை அவன் தேடலை நோக்கி இட்டுச் செல்கிறது. அந்தக்கல் இருபகுதிகள் கொண்ட விதை போல தோன்றுகிறது. அது தர்க்கம் நிறைந்த அவன் மனது -எப்பொழுதும் எதிரெதிராகப் பிளந்து போராடும் இருநிலைகளகளைக் காட்டுகிறது. சாருகேசியுடன் ஆவேசமாகக் கூடும் போது கூட, அந்தச் செய்கையை மனதின் மற்றொரு பகுதி வேறு எவரோ போல பார்த்துக்கொண்டிருக்கிறது. “இருநிலையின்றி இதைக் கூடச் செய்யமுடியாதா என்ன?” என்று விரக்தி அடைகிறான். பின்னர் அஜிதர் ஸ்தூபியில் அமர்ந்திருக்கும் போது அந்த விதை அதன் தாய்ச்செடியை நோக்கி அவனை நடத்திச்செல்லுகிறது. மிருகநயனியின் அடியில் அவன் அடைந்த ஞானமே இந்த இருண்மை நிலை என்னும் தடையை உடைப்பதில் தான் வருகிறது. ‘எதிர்ப்பின்றி, குற்ற உணர்வும், பேத உணர்வும் இல்லாத போகமே பேரானந்தநிலை’ என்பது தான் பிங்கலனின் தரிசனம்.

பிற்காலத்தில் பிரளய சமயத்தில் பிங்கலனின் வாமமார்கத்தில் இணையும் பத்மன் அபேத நிலையில் காமத்தை உணர தன் மனக்குகைக்குள் செல்கிறான். அங்கே அவன் ஆழ்மனத்தின் மிருக்கர்ஜனை கேட்கிறது. அவன் துவண்டு பிறழ்ந்தால் வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நரிகள் (புலண்கள்) கூறுபோட்டு தின்றுவிடும். ஆனால் பத்மன் சோனாவில் மூழ்குவதாக வரும் குறியீடு – அவன் காமம் எனும் நதியில் எதிர்ப்பின்றி மூழ்குவதைக் குறிக்கிறது. அது அவனை கடலுள் கொண்டு சேர்க்கும்!

கௌஸ்துபம் பௌத்த தரிசனம் வெல்லும் காலகட்டமாக இருப்பதால், அந்தப் பகுதி தொடங்குவதே பௌத்த மரபின் முக்கியக் குறீயீடுகளில் ஒன்றான யானையுடன் தான் (அங்காரகன்). பௌத்தத்தில் யானை மனவலிமையின் குறியீடு. அங்காரகன் இத்தனை காலம் விரும்பிச் செய்த, சுவர்ணகண்டத்தை அடிக்கும் வெண்கலப் பிடியை உதறி, ஞானத்தை உதறிய சித்தனைப் போல விடுதலையாகி முதுகிலும் தலையிலும் சேறுபடிய காட்டு யானையாகிறது. மிருகநயனியின் பச்சை ஒளியில் அங்காரகனின் கரிய பேருருவம் கரைவதை அஜிதன் பார்க்கிறான். அங்காரகன் கனவில் கண்ட தரிசனத்தை தன் மனவலிமையால் அடைந்து விட்டது. அஜிதன் அவன் கண்ட தரிசனமான காலசக்ரத்தின் மையப் புள்ளியான அகாலத்தை தன் மனவலிமையால் அடைந்தானா என்பதை அவனே அறிவான்!

சித்தன் வாழ்வின் பொருளை நிராகரிக்கும் சார்வாகனல்ல. ஞானத்தை அடைந்து அதையும் உதறி மேலே சென்ற பரிபூரணன். ஞானசபையில் அஜிதன் உத்வேகத்துடன் பேசிக்கொண்டிருக்கையில் காஸ்யபனை மடியில் வைத்தபடி மௌனமாக சித்தன் வேடிக்கை பார்க்கிறான். இந்தக் காட்சி முண்டக உபநிஷத்தின் புகழ்பெற்ற ‘ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் இரண்டு பறவைகளில், ஒரு பறவை பழங்களைத் தின்கிறது, மற்றொன்று அமைதியாக அனைத்தையும் பார்த்தவண்ணம் இருக்கின்றது’ என்னும் படிமத்தை நினைவுபடுத்துகிறது.

இளம் காஸ்யபன் ஞானசபையின் வாசல் திறந்ததும் அதன் பெரிய படியை தொடாமலே தாவி உள்ளே நுழைகிறான். மானுட துக்கத்துக்குப் பரிகாரமாகாத வாய்ச்சொல் ஞானம், அடையாளங்கள், விருப்பங்கள் என அனைத்தையும் எடுத்த எடுப்பிலேயே அவன் தாண்டிவிட்டதன் குறியீடு அது.

பிரளயத்திற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியவுடன், தன் வாலை தானே விழுங்கும் பாம்பு குறியீடாக வரும். வாலில் தொடங்கி தன் உடலைத் தானே விழுங்கிய பாம்பின் விழுங்கமுடியாத கடைசி மிச்சத்துடன் ஒரு பந்து போல சுருங்கி நீருக்குள் விழும் (ஒரு சொல் மௌனத்திற்குத் திரும்பியது போல). இந்து மதத்தின் பல மரபுகளில் இந்தக் குறியீடு முக்கியத்துவம் வாய்ந்தது. புராணங்கள் காலத்தை சர்ப்பமாக உருவகிக்கின்றன. பிரளயத்தில் காலமும் வெளியும் உள் ஒடுங்கும். அடுத்த யுக ஆரம்பத்தில் இந்த மிச்சமே (ஆதி சேஷம்) விரிந்து காலமும் வெளியுமாக மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி உண்டாகிறது. நீரில் இருந்தே உயிர்களின் தொடக்கம் இருக்கும் என்கிறது. மகாவிஷ்ணு இந்த ஆதிசேஷனில் மீது தான் அறிதுயில் கொள்கிறார்.

நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இன்னொரு குறியீடு கருப்பு நாய். அது படைப்புக் கடவுள் பிரம்மனின் வாகனம் காலபைரவன் தான். காலத்தின் குறியீடான அவனே ஒவ்வொருவருடைய காலம் முடியும் போதும் காலனாக வருகிறான். படைப்பு அழிவைத் தன் கர்ப்பத்தில் சுமக்கிறது. பிரளயத்தில் கடைசியாக விஷ்ணுவின் சன்னிதியில் வந்து நிற்கிறான். காலம் அகாலத்தில் ஒடுங்குகிறது அல்லது காலத்தின் கணக்கு எல்லாருக்கும் ஒன்று தான்!

முதல் பகுதியின் தோற்றுவாயில் பிரும்மாண்டமான ஸ்ரீசக்ரத்தை வரைபவன் ஒரு வெண் பறவையாக மாறி பறந்து சென்று எங்கோ ஒருவனின் கனவில் நுழைந்து அவன் நனவில் எழ விரும்புகிறான். அதை தொடர்ந்து பல இடங்களிலும் நீண்ட கழுத்துள்ள வெண்பறவை ஒரு குறியீடாக வருகிறது. ஞான சபையின் மேற்கூரையில் எல்லா ரிஷி சிலைகளின் சிலைமீதும் அந்தப் பறவை அமர்ந்திருப்பதை அஜிதன் காண்கிறான். பிரளயத்தில் விஷ்ணுபுர பேராலயத்தின் கோட்டைச் சுவரில் அவை பற்ந்து வந்து மோதி உயிரை விடுகின்றன. காலந்தோறும் விஷ்ணுபுரத்தை தேடி வந்து கொண்டிருக்கும் ஞானதாகிகளே வெண்பறவைகள். அது அவர்களின் தேடல் அல்லது கேள்விகள் என்றும் பொருள் கொள்ளலாம். அவை எப்போதும் ஏதோ திசைவெளியிலிருந்து விஷ்ணுபுரத்தை தேடி வந்து கொண்டெ இருக்கின்றன. கடைசியில் பிரளயத்தில் விஷ்ணுபுரம் அழியும் போது அவையும் சேர்ந்து அழிகின்றன. மீண்டும் விஷ்ணுபுரம் தோன்றும் போது கூடவே அவையும் எழும்.

நிறுவணப்படுத்தப்படும் ஞானம்

வளைந்து பிண்ணிய குறுகலான சந்துகளில் வழிதவறிச் சென்று, தொலைந்து விட்டோம் மீளவே மாட்டோம் என்று மனம்பதறி திசைமறந்து அலையும் போது, ஒரு சந்தின் திருப்பத்தில் எதிர்பாராமல் சட்டென்று தெரியும் பரபரப்பான பிரதான சாலை போன்று தங்கள் ஞானத்தேடலில் மிகச்சிக்கலான அகப்பாதைகளில் அலைக்கழிக்கபட்டு தவித்து ஒருகணத்தில் உண்மையை தரிசிக்கின்றனர் சிலர். அதன் பிறகு அவர்களின் வெறுமையில் துணையிருப்பது தனிமையும் மௌனமுமே. அத்தகைய ஞானிகளை முச்சந்தியில் மேடைகட்டி அமர்த்தி அதிகார அரசியல் செய்கின்றனர் அனுக்கர்கள்.

திருவடி ஆழ்வார் ஆகிறார், சோமன் அவருடைய சிஷ்யனாகிறான். பீதாம்பரமும், பரமனும் திருவடியை வைத்து பிராமணர்களை ஓரங்கட்டி ஆழ்வார்மடம் அமைத்து கோயில்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் திட்டத்தைப் பேசுகிறார்கள். வெளியே ஸ்ரீபாத திருவிழாவின் பிரம்மாண்டமான தேர் இரண்டு ஆட்டுக்குட்டிகளின் மீதேறி நசுக்கி குருதி பலி கொடுத்து அசைந்து நகர ஆரம்பித்திருக்கும்.

திரும்பத்திரும்ப ஞானத்தைப் புறவயமாக நிறுவ முயலும் ஒவ்வொரு ஞானியையும் அதிகார வேட்கையுள்ளவர்கள் ஒடிவந்து ஒட்டிக்கொள்கின்றனர். தங்கள் தருக்க உத்வேகத்தை இழந்தால் ஞானிகளை அவர்கள் கொல்லவும் தயங்குவதில்லை. அவர்களுக்குத் தேவை அடுத்து தர்க்கங்களை உருவாக்கிக் கொடுக்கும் இன்னொரு ‘ஞானி’. பவதத்தரைக் கொல்லச் சதி செய்யும் அதிகாரி வீரசிங்கர், அஜிதனை வைத்து ‘தர்ம’ ராஜ்ஜியம் நடத்தும் சந்திரகீர்த்தி போன்றவர்கள் மூலமாக இது சுட்டிக் காட்டப்படுகிறது. சந்திரகீர்த்தி லௌகீக நியாயங்கள் பேசிப் போலி தருக்கங்களை உருவாக்கி, உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளால் ஆவேசமாக சாமான்யர்களின் மீட்சிக்காக மகாதருமம் தன்னை இவ்வாறு தூண்டுவதாகச் சொல்கிறான். அஜிதன் ஒத்துக்கொண்டு ஒதுங்கியிருக்காவிட்டால், புதர் மறைவில் ஒளிந்திருந்த லாமாமகாபாதரின் வேங்கை போன்ற சிஷ்யர்கள் அஜிதனை மகாநிர்வானத்துக்கு அனுப்பியிருப்பார்கள்.

ஞானத் தேடல் தன் மனத்தின் தவிப்பையும், கேள்விகளுக்கு விடையும் கண்டடைவதற்குக் கருவியாகும் வரை உபயோமானது. அதற்கான தர்க்கம் மனத்தின் ஊசலாட்டத்தை நிறுத்தி நிலைப்படுத்த உதவும். ஆனால் அந்த ஞானத்தைக் கொண்டு பிறரை வென்றடக்கவும், தனது ஞானத்தை பொது ஞானமாக நிலைநிறுத்தவும் முனையும் கணமே அது சுமையாக அழுத்த ஆரம்பித்து விடுகிறது. இந்த ஞானப் பந்தயங்களில் இருந்து விலகியதாலேயே சித்தன் சுதந்திரமானவனாக இருக்கிறான். அவனுக்கு இந்த விவாதமெல்லாம் வெறும் விளையாட்டு. அஜிதன் இதையே உணர்கிறான், சித்தனின் கட்டற்ற தன்மையை நினைத்து ஏங்குகிறான். சித்தனின் தந்தையான பவதத்தரும் கூட அந்த நிலையை அடைந்து அழுத்தும் ஞானத்தின் சுமையிலிருந்து விடுதலை பெற ஏங்குகிறார்.

குழந்தைகள், பெண்கள்

பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு (மகனுக்கு) உயிரும் உடலும் மட்டும் அளிக்கவில்லை. எண்ணங்களால் தாங்கள் விரும்பும் உருவத்தையும் அளிக்கின்றனர். அந்த உருவம் பெரும்பாலும் அவர்களின் பகல்கனவு அல்லது ஆழ்மனதில் இருக்கும் கற்பனையான ஆண் பிம்பமாகவே இருக்கிறது. லட்சுமி அநிருத்தனுக்கு தருவதும், சாருகேசி உத்தரனுக்குத் தருவதும் அது தான். அல்லது தங்களுக்குள் இருக்கும் புரியாத ஆண் தன்மை தான் அவர்களின் ஆண் குழந்தைகள்.

சாருகேசிக்கு அவள் ஓவியத்தில் கண்ட அமைதி நிரம்பிய துக்கம் கொண்ட கண்களுடைய புத்த பிட்சுவே மறுபிறப்பு எடுப்பதற்காக அவளுள் குடியேறி இருக்கிறார். பிங்கலன் வெறும் நிமித்தம் தான்.  இனி அவளுக்கு அவன் முக்கியமே இல்லை. லட்சுமிக்கு அவள் இளமையில் பகல்கனவுகளில் உருவாக்கிக் கொண்ட சிதறிய ஆண் பிம்பம் தான் அவளுடைய ஆழ்மனதில் இருக்கிறது. மெதுவாக அந்த உருவத்தை வளர்த்தெடுத்து தன் மகன் அநிருத்தனுடன் பொருத்துகிறாள். அவளால் வலது பக்கமாக புரண்டு படுத்தால் தன் அந்தரங்க உலகத்துக்குள் சென்றுவிடமுடியும். அங்கே அவள் கற்பனை ஆண் பிம்பமாக அநிருத்தன்.

அநிருத்தன் இறந்த செய்தியைக் கேட்டதும் மயங்கி விழுகிற லட்சுமியைப் பார்க்கும் பெண்கள், நெஞ்சம் பதற கவனிக்கிறார்கள். அவள் மார்பில் தாய்பால் சுரந்து கொண்டிருக்கிறது. பின்னர் பிங்கலனைக் கூடும் போதும் சங்கர்ஷணன் நினைவு ஒரு கணம் வருகிறது. தன்னை மறந்து ‘அநிருத்தா’ என்கிறாள், அப்போதும் அவள் மார்பில் தாய்ப்பால் சுரக்கிறது. லட்சுமி, பிங்கலன் இருவருக்குமே அந்தக் கணம் மிகப்பெரிய திருப்பத்தைத் தருகிறது. நாவலில் இது மிகமிக உக்கிரமான ஒரு நிகழ்வு. பல்வேறு உளவியல் ஊகங்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருள் பொதிந்த முக்கியமான ஒரு குறியீடு.

பத்மாட்சிக்கு அவள் இருப்பை அர்த்தப்படுத்துவதே ‘மகாபத்மபுராணம்’ தான். அவள் குழந்தை அதுதான். சங்கர்ஷணன் அவளை அந்த நூல் வந்தடைய ஒரு நிமித்தக்காரன் மட்டுமே. அவளுக்கு சங்கர்ஷணன் ஒரு பொருட்டே அல்ல.

தந்தை மகன்

அக்னிதத்தன் தன் தந்தையைக் கொன்றவன். புத்ரசோகம் அவன் குலத்தைத் தொடர்ந்து துரத்தும் சாபம். பவதத்தர்-விஷ்ணுதத்தன், சூரியதத்தர்-ஸ்வேததத்தன், ஆரியதத்தர்-வேததத்தன் என தலைமுறைகளுக்கு அது நீள்கிறது.

விஷ்ணுபுரம் ஞானசபைத் தலைமையையும், வைதிக ஞானத்தையும் உதறி பெருச்சாளித் தோல் கோவனம் அணிந்து, பிச்சையெடுத்துப் புழுதியில் தூங்கும் சுடுகாட்டுச் சித்தனாகிறான் விஷ்ணுதத்தன். தன் மகனை மிகவும் விரும்பிய பவதத்தர் புத்ர சோகத்தால் உடைந்துவிட்டவர். அஜிதனின் இளமையும், ஞானமும், சிரிப்பும் அவருக்கு தன் மகனையே நினைவூட்டுகின்றன. அது பவதத்தரின் மிகப்பெரிய பலவீனம். அஜிதன், “பித்ருபுத்ர தொடர் மரணமின்மை ஆகாது. அது மனித மனதின் ஆற்றாமை தான்” என்றதும் பவதத்தர் ஞானசபையிலேயே உணர்ச்சி ததும்ப குரல் உடைந்து இடறுகிறார். பிள்ளைப் பாசத்தால் உணர்வு ரீதியாக அஜிதனிடம் மனதளவில் அவர் ஏற்கனவே தோற்றுவிட்டார். அல்லது தன் மகனுக்கு (அஜிதனுக்கு) ஞானசபையின் அதிகாரத்தைத் தந்துவிட்டு ஒரு தந்தையின் நிறைவுடன் உயிர்துறக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

சர்வக்ஞராக அல்லாமல் வாழ்வில் ஒருநாள் கூட ஒரு தந்தையாக தன்னிடம் அன்பாகப் பேசாத சூரியதத்தரை வெறுத்து அவருக்கு நேர்எதிர்த் திசையில் ஸ்வேததத்தன் போகிறான். சர்வக்ஞர் பதவியைத் தூக்கி எறிந்து பிங்கலனின் வாமமார்கத்தில் இணைகிறான்.

சாருகேசி – அநிருத்தன் உறவுச் சித்திரம் போல சங்கர்ஷணன்-அநிருத்தன் உறவும் மிக அழுத்தமான, மிக அந்தரங்கமான நுண்ணிய உணர்ச்சிகளால் பிண்ணப்பட்டது. சங்கர்ஷணன் தன் மகன் அநிருத்தனின் மரணத்திற்கு தான் எவ்விதத்திலும் காரணமில்லை என்றாலும், ஏன் மனைவியை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஒளிகிறேன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். அதன் விடையாக தன் மகன் தன்னுடைய அழிவிலிருந்து உருவாகுபவனாக, தனது தோல்விகளில் வெற்றியடைபவனாக அவன் ஆழ்மனத்தில் எண்ணியிருப்பது தெரிகிறது. தன் ஆத்மாவின் வெறுப்புதான் தன் மகனைக் கொன்றதாக உணர்ந்து துடிக்கிறான்.

ஒவ்வொரு தந்தையும் தன் மகனின் வழியாக தாங்கள் இளமையோடு நீடித்து வாழ்வதாகவே எண்ணிக் கொள்கிறார்கள். மகன் தன் நீட்சி –ஆனாலும் தன் முக்கியத்துவத்தை உடைத்து வளர்ந்துவிடக் கூடாத, தன் நிழலைப் போல இருக்க வேண்டுமெனவே விரும்புகின்றனர். தன் மனைவிக்கு மகனிடம் தடைகள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் மனம் ஜீரனிக்க மறுக்கிறது. ஒரு கட்டத்தில் மகனைத் தன் போட்டியாளனாக உணரும் மேற்கின் உளவியல் கருத்துக்களின் சாயல் சங்கர்ஷணனின் புலம்பல்களில் நிறையவே தெரிகிறது.

கலையின் கர்வம்

பொருளியல் தேவைகளுக்கும், பதவி, அதிகாரம் என உலகியல் வேட்கைகளுக்கும் ஆட்பட்டு தங்கள் சுயத்தை விலைபேசும் படைப்பாளிகளையும், அறிவுஜீவிகளையும் நாம் இன்று காண்கிறோம். இவர்களின் மனசாட்சியை நோக்கி அற ஆவேசத்துடன் கேட்கப்படும் கேள்விகள் விஷ்ணுபுரத்தில் வருகிறது.

தூய கலை கலைஞனுக்கு உள்ளார்ந்த ஒரு கர்வத்தை கொடுக்க வேண்டும். தன் படைப்புத் திறன், காலத்தை விலகி நின்று பார்க்கும் கூரிய மனம் ஆகியவை அவனையறியாமல் அவனுக்கு பெருமையும் தலைநிமிர்வும் தரவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் உலகியல் யதார்த்தங்களுக்கும் அதன் அரசியல், சமூக, பொருளாதார, அதிகார அழுத்தங்களுக்கும் பணிந்து வளைந்துகொடுத்து படைப்பாளி கூணிக் குறுகிப் போவான். பணமும் பதவியும் இல்லாவிட்டாலும், தான் படைப்பவன், வெகுஜனங்களின் சாமானிய தளத்தில் தன் மனம் இயங்கவில்லை, உயர்ந்த உண்மைகளை கலைகளின் வழியாக தரிசிப்பவன் என்ற நிறைவும் சுயமரியாதையும் தான் கலைஞனின் படைப்புத் திறனுக்கு ஆதாரசக்தி. தன்மானத்தை விற்று உருவாக்கும் படைப்புக்கும் அதன் படைப்பாளிக்கும் எவ்வித உண்மை மதிப்பும் இல்லை. இதை உண்மையான படைப்பாளி தன் அக ஆழத்தில் அறிவான்.

பெருந்தச்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவுடன் கடைசிக் கணங்களை தன் பிள்ளைகளுடன் செலவிட விரும்புவதாக கூறுகிறான். அநீதிமுன் தன்மானம் இழந்து துவண்டு நிற்கும் பெருந்தச்சனின் நிலையைக் கண்டு சோமனுக்கு வெறுப்பும் கோபமும் வருகிறது, “கடைசிக் கணங்களை மக்களுடன் செலவிடுகிறானாம், அற்பப் புழு, உளியை எடுத்து தன் தலையை வெட்டிக் கொண்டிருக்க வேண்டாமா? அவனுடைய கலை இதற்குக் கூடவா தைரியம் தரவில்லை?” என்று எரிச்சல் படுகிறான். இத்தகைய கணங்கள் கலையின் தோல்வி என்பதே அவன் எரிச்சலுக்குக் காரணம்.

சங்கர்ஷணன் காவிய அரங்கேற்றம் முடிந்த பின் குடித்துவிட்டு தாழ்வுணர்ச்சியும், குற்ற உணர்வும் மேலோங்க சாருகேசியிடம் புலம்புகிறான், “வெற்றுக்கர்வத்தை சாந்தி செய்வதற்காக ஆத்மாவைக் கறைபடுத்திய அசடன். நான் உண்மையானவனாக இருந்திருந்தால், என் காவியம் ஆத்மாவின் குரலாக இருந்திருந்தால் சூரியதத்தரின் அழைப்பை மறுத்திருக்க வேண்டும். என் நூலை அணைத்தபடி சோனாவின் ஆழ்கயத்தில் மூழ்கி உயிர்விட்டுருக்க வேண்டும்”.

சோமனின் குரல் விமர்சகனுடையது என்றால், சங்கர்ஷணனுடையது படைப்பாளியின் அந்தராத்மாவின் குரல்.

பூஜ்யம் முதல் ஒன்று வரை

பிரளயம் பூஜ்யம் எனக்கொண்டால், படைப்பு ஒன்று. பூஜ்யத்திலிருந்து ஒன்று வரை நகர்ந்து பின்னர் பூஜ்யத்தை அடைகிறது காலம். மீண்டும் அதே வட்டம். காலம் சக்கரமென மாறாமல் சுழன்று கொண்டே இருக்கிறது.

காலநதி சுழன்று ஓடும் விஷ்ணுபுரத்தில் ஒவ்வொரு எண்ணமும், செயலும், ஒரு சருகு மல்லாந்து படுக்கும் அசைவும் கூட மீண்டும் நிகழும். தழல் எரியும் நாவும், கூரிய தர்க்கமும் உடைய அக்னிதத்தன் தன் சொல்லால் விஷ்ணுபுரத்தை நிர்மாணித்தான். அவன் வம்சத்தின் கடைசி ஆண்மகன் வேததத்தனோ ஐம்புலன்களும் ஒன்றே என்று அறிந்த, தருக்கத்தால் மறைக்கப்படாத தூய மனம் கொண்ட மோன விரதன்.

இந்து மரபு, வேதங்கள் மனிதரால் உண்டாக்கப்பட்டதல்ல, பிரபஞ்ச உற்பத்தியின் போதே வேதங்களும் நாத வடிவாக தோன்றுகின்றன. பின்னர் ரிஷிகள் அவற்றை தங்கள் தவத்தால் கண்டடைகிறார்கள். யுக முடிவில் மகாபிரளயத்தில் பிரபஞ்சம் அழியும் போது வேதங்களும் அழியும் என்கிறது. அடுத்த யுகத்தின் தொடக்கத்தில் மீண்டும் இவை தோன்றும். அவ்வாறு காலச்சுழற்சி தொடரும் என்கிறது. விஷ்ணுபுரத்தின் வைதிக ஞான மரபின் கடைசி சர்வக்ஞன் பெயர் வேததத்தன் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

சோனாவில் ஒரு கற்பாறையில் ஒதுங்கியிருந்த அக்னிதத்தனைக் காப்பாற்றி கைபிடித்து ஓடத்தில் எற்றிக்கொண்டு வந்தவள் ஒரு செம்பி. அதுவே விஷ்ணுபுரத்தின் துவக்கம். காலச்சக்ரம் சுழல்கிறது. இறுதியில் பிரளயத்தில் அக்னிதத்தனின் குலத்தின் கடைசி வாரிசு வேததத்தன் சோனாவின் வெள்ளத்தில் ஒரு கரிய பாறையில் ஒட்டிக்கொண்டு இருக்கிறான். செம்பர் குல வழித்தோன்றல் பெண் ஒருத்தி ஓடத்தில் வந்து கை நீட்டுகிறாள். ஆனால் பிடி நழுவி சோனாவில் மூழ்குகிறார்கள். ஒரு நாடகீய உச்ச தருணத்தில் வட்டம் தொடங்கிய புள்ளியில் வந்து முழுமை அடைகிறது.

ரூபிக்கின் கனசதுரத்திற்கு (Rubik’s cube) 43,252,003,274,489,856,000 வரிசை மாற்றங்கள் (Permutations) சாத்தியமுண்டு. இத்தனை கோடானுகோடி வரிசைமாற்றங்களுக்கு நடுவில் அதன் ஆறு பக்கங்களையும் முழுமையாக்கும் நகர்வுகள் உண்டு. அந்த சரியான சில நகர்வுகள் பிற கோடிக்கணக்கான நகர்வுகளுக்கும் பொருள் ஆகின்றன. விஷ்ணுபுரத்தின் முழுமையும் அப்படி எண்ணற்ற சம்பவங்கள் மற்றும் மனிதர்களால் பின்னப்பட்டுள்ளது. கடைசியில் அவை ஒட்டுமொத்தமான ஒரு முழுமையையும் பொருளையும் அடைகின்றன. பிரபஞ்ச தரிசனமும் இதுவே.

விஷ்ணுபுரம் ஒரு கனவு. மனிதகுலம் தன் துயிலில் இதைக் கண்டு கொண்டிருக்கிறது. பிரளயம் விழிப்பு போல.

விஷ்ணுபுரம் ஒரு புராணம். ஒரு சூதன் தன்னைத் தானே பிரதி எடுத்துக்கொண்டு யுகம் தோறும் மீண்டும் மீண்டும் கதை சொல்லிக் கொண்டிருப்பான். ஏனென்றால் அதுவே அவன். நிறுத்தினால் அவன் இல்லாமலாகி விடுவான்.

ராஜகோபுரத்தின் உச்சிமண்டபத்தின் தரையின் தூசுப்படலத்தில் எண்ணற்ற சிறு பூச்சிகள் சேர்ந்து தங்களை அறியாமல் ஒரு மாபெரும் சக்கரத்தை வரைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பூச்சியின் வாழ்வும் ஒரு எழுத்து. அவை அனைத்தும் சேர்ந்து சக்ரம் முழுபெற பங்காற்றுகின்றன. ஆனால் அதன் அர்த்தம் அவற்றால் அறியாமுடியாத எல்லைக்கப்பால் உள்ளது.

கீழே விஷ்ணுபுரம் ஸ்ரீசக்ர வடிவமாக மின்னிக் கொண்டிருக்கிறது. விஷ்ணுபுரத்தின் ஞான சபையில் சொல்லப்பட்ட ஒரு சொல் கூட வீணாவதில்லை. அந்த மண்ணில் தோன்றிய யாருடைய ஞானத்தேடலும் பொருளற்றுப் போவதில்லை. அதன் படைப்பு அழிப்பு சுழற்சியில் அனைத்தும் அர்த்தமும் பூரணமும் அடைகிறது.

இது விஷ்ணுபுரத்தின் உண்மை. இதுவே பிரபஞ்ச உண்மையும் கூட.

ஓம். அதுவும் பூர்ணம். இதுவும் பூர்ணம்.

–    பிரகாஷ் சங்கரன்.

(www.jyeshtan.blogspot.com)

One thought on “விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்

  1. ramji yahoo (@ramjiyahoo) says:

    உங்களின் பூரணமான விமர்சனப்

    பதிவிற்கு நன்றிகள்

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s