விஷ்ணுபுரம் by ”ஈரோடு” கிருஷ்ணன்
அதிக பட்சமாக ஒரு படைப்பு நம்மை என்ன செய்யும் ? படிக்கும் நாட்களில் எப்போதாவது நமது பணிகளுக்கிடையே நினைவுக்கு வரும், படிக்கும் பொழுது நமது வாழ்வனுபவங்கள் நினைவுக்கு வரும். சில பகுதிகள் மனதில் தங்கும் , காலக் காற்று தேய்த்து தேய்த்து அவை சில வரிகளாக சுருங்கும் , பின் ஆண்டுகள் கடந்தபின் ஒரு தொலை தூர ஞாபகமாக அதன் விளிம்புகள் மட்டும் எஞ்சும் . எவ்வளவு தான் உற்சாகத்துடன் ஒரு ஆக்கத்தைப் படித்தாலும் அடுத்த புத்தகங்கள் வரிசையாக காத்துநிற்கும் புதுமையின் கவர்ச்சியில் அந்த ஆக்கம் இன்னொரு வாசிப்பை பெறுவது இல்லை . எண்ணிப் பார்க்கையில் நாமாக ஒரு படைப்பை மீண்டும் படிப்பதில்லை , நமக்கு ஒரு நெருக்கடியின் ஆணை தேவை.
விஷ்ணுபுரம் இந்த அரங்கின் கட்டாயத்தில் மீண்டும் இரண்டாம் முறை வாசித்தேன். படித்த 15 நாட்களும் அதற்குள் வசித்தேன், முதல் முறை வாசிப்பது போல உணர்ந்தேன். நாளெல்லாம் அதன் நினைவாக இருந்தேன். அதிகபட்சம் ஒரு படைப்பு என்னை என்ன செய்யும் என்பதன் சாத்தியக்கூறு பன்மடங்கு விரிந்தது, என்னவேண்டுமானாலும் செய்யும்.
ஆறேழு கனவுகள், ஒலிபெற்று மின்னி தகதகக்கும் புற உலகம், துல்லியமான கேட்க்கும் மாற்றம் நுகரும் அனுபவம் என என் புலன்களின் தரம் உயர்ந்தது. மங்கலான நிறம் நீர்த்த எனது புற உலகின் மேற்சட்டையை விஷ்ணுபுரம் ஒரு பாம்புபோல உரித்து ஒரு புது உலகை எனக்கு பரிசளித்தது. மரங்களின் பச்சை கூடிற்று,பூக்களின் சிவப்பு கூடிற்று , விடியலிலும் அந்தியிலும் சூழக் கண்ணாடியாகி பொருட்கள் எங்கும் சூரியன் பிரதிபலித்தது. சிறு வயதில் நான் தேய்த்துக் குளித்த சோப்பின் மணம், பழம் நறுக்கிய கத்தியின் மணம், நினைத்தவுடன் காதில் அதிரும் மணியொலி , வெங்காய உட் தோலின் பின்பக்க மிருது என விபூதியிட்டு துலக்கி காயவைத்த ஓட்டுப் பாத்திரமாக ஆனது என்னுலகம் , புலன்கள் இன்னும் உலகை உண்டது.
முதலில் ரோம எண் முறை எனக்கு அறிமுகமான போது அது வெகு சுவாரஸ்யமாக இருந்தது. VIII வரை ஏறி பின் IX பத்தில் குறையும். எனவே ஒன்பதை அறியும் முன் பத்தை அறிவோம். ஒன்பதாம் வரிசை நபரை குறிக்க ‘last but one’ என்போம். விஷ்ணுபுரத்தின் கூறுமுறையும் அக்தே, ஒரு பாத்திரத்தின் கதை நிகழ்காலத்தில் முக்காலும் பின் காலம் சென்று இறந்தகால நினைவாக காலும். நமது பக்கத்து இருக்கையில் அமர்ந்த பாத்திரங்கள் பின் சரித்திரமாக விளங்குவதும் அவர்களை நாம் அடையாளம் காண்பதும் ஒரு அற்புத அனுபவம்.
உண்மை என்பது உள்ளது , அரியப் படுவது மற்றும் மறுக்கப் படுவது ஆகியவற்றின் தொகுப்பு. குறிப்பாக சரித்திரத்தில் இந்த கலவையைக் காணலாம். விஷ்ணுபுரமும் ஒரு காலக் காவியமாக இவ்வாறே உள்ளது.
– விஷ்ணுபுரத்தில் எல்லாம் முன்னரே நடந்திருக்கும்.
– விஷ்ணுபுரத்தில் ஐம் பூதங்களும் ஒரு கனம் வழுவும்.
இந்த இரண்டு வாக்கியங்களே விஷ்ணுபுரத்தின் ஆதார சுருதி என எண்ணுகிறேன். இங்கு சாதாரண தருணம், சாதாரண சம்பவம் என்பதே இல்லை , இயல்பில் அசாதாரண பண்பு கொண்ட விஷ்ணுபுரம் மூன்று பகுதியிலும் அசாதாரண உச்சத்திற்கு செல்கிறது, ஸ்ரீ பாதத்தில் விழாவும் வாழ்வும் , கௌஸ்தூபத்தில் ஞானசபை விவாதம் மாற்றம் மணிமுடியில் பிரளையம் .
ஆக நிறைத்து பெரிதாகப் படாமல், வெட்டி மூர்க்கப் படுத்தப் படாமல் இங்கு எதுவும் காணப் படுவதில்லை. ஒன்றை அறிய அதை உடைக்கலாம், சூடாக்கலாம், குளிர்விக்கலாம் இது மூன்றும் விஷ்ணுபுரத்தில் நிகழ்ந்துள்ளது , அறிதல் உட்பட இந்த செயலுக்கு ஆட்படுகிறது .
இதில் எந்த ஒரு பாத்திரத்துடனும் முழுவதுமாக நம்மை நாம் காண்பதில்லை ஆனால் எல்லா பாத்திரத்துடனும் ஏதோ ஒரு கணத்தில் ,
எல்லா பாத்திரங்களுக்குள்ளும் நிரப்பமுடியாத மிருகநயநியாக ஒரு தனிமை, உச்சம் தொட்டு மீண்டபின் மீண்டும் அடையத்துடிக்கும் மனங்களின் ஆற்றாமை என நாம்மை இவைகளில் காண்கிறோம். இதில் எந்த ஒரு பாத்திரத்தின் பெருவாழ்வும் பிறப்பு முதல் இறப்பு வரை சொல்லப்பட்டதில்லை ஆனால் விஷ்ணுபுரத்தின் பிறப்பும் இறப்பும் .
ஒரு யானையை நாம் தூக்க முயன்றால் அகப்படும் பகுதியை மட்டும் பற்றி உந்துவோம் , அசையாத யானை பிடிபடாமல் நிற்கும் , அவ்வாறே விஷ்ணுபுரம் குறித்து இக்கட்டுரை . நான் படித்ததில் நுண்மையிலும் பெருமையிலும் ஈடு இணையற்ற படைப்பு , ஜெயமோகன் வழி இதை அடைந்த மனித குலம் கர்வம் கொள்ளலாம்.