வேதங்கள் எவ்வகை நூல்கள்?

ஜெயமோகன்.இன் தளத்தில் மே 20 2012 அன்று வெளியான “வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?” என்ற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. முழு கட்டுரையையும் வாசிக்க இங்கே சொடுக்கவும். – ”விஷ்ணுபுரம்” தள நிர்வாகம்

***

வேதங்கள் எவ்வகை நூல்கள்? ஏன் அந்த முக்கியத்துவம் அவற்றுக்கு வந்தது? அந்த முக்கியத்துவத்துக்கான அடிப்படை அவற்றில் உண்டா?

 படம்: விக்கிபீடியா

சுருக்கமாகச் சொன்னால் என்னுடைய விளக்கமாக இப்படிச் சொல்வேன். வேதங்கள் இந்து ஞானமரபின் வைதீகத்தரப்புகளுக்கு சுருதிகள். சுருதி என்ற சொல்லை மூலநூல் canon பொருளில் பயன்படுத்துவதே உகந்தது. ஆனால் செவ்விலக்கியம் classic என்ற பொருளிலும் பயன்படுத்தலாம்.

செவ்விலக்கியம் என்பது அந்தப்பண்பாட்டில் பின்னர் உருவான அனைத்து சிந்தனைகளுக்கும் அழகியலுக்கும் தொடக்கப்புள்ளிகள் கொண்ட ஒரு தொன்மையான இலக்கியத்தொகை. அது அந்தப்பண்பாட்டின் விதைநிலம்.

தமிழில் சங்க இலக்கியங்களை செவ்விலக்கியம் என்று சொல்லலாம். இன்றுவரை தமிழில் உருவான எல்லா இலக்கிய எழுச்சிகளுக்கும் அதில் தொடக்கத்தைக் காணமுடியும். தமிழ்ப்புதுக்கவிதைக்குக்கூட சங்க இலக்கியமே தொடக்கம் என்று பிரமிள் எழுத்யிருக்கிறார்.

செவ்விலக்கியம் என்பது இலக்கிய உச்சம் அல்ல. அதன் பெரும்பகுதி இலக்கியரீதியாக பொருட்படுத்தக்கூடியதாக இருப்பதில்லை. அது தொன்மையான பழங்குடிவாழ்க்கையில் இருந்து இலக்கியம் முளைவிட்டபோது உருவான முதல் வடிவம் அவ்வளவுதான்.

ஆகவே பழங்குடி வாழ்க்கையில் உள்ள எல்லாமே அதில் இலக்கியமாக மாறியிருக்கும்.தண்ணீர் பட்டதும் மண்ணில் உள்ள எல்லா விதைகளும் முளைப்பது போல. அதிலிருந்து தேவையானவற்றை மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகள் வளர்த்தெடுத்துக்கொள்கின்றன.

ஒரு வகையில் செவ்விலக்கியத்தை ஒரு பண்பாட்டின் ஆழ்மனம் என்று சொல்லலாம். அங்கே இருப்பவற்றை அவ்வப்போது அப்பண்பாடு கனவுகளாக க்ண்டுகொண்டிருக்கிறது. மறு ஆக்கம்செய்து நனவாக்கிக்கொண்டிருக்கிறது.

வேதங்கள் அத்தகையவை. வேதங்களைப்பற்றிய ஒரு கட்டுரையில் ஷெர்பாட்ஸ்கி அவற்றை தொல்பிரதிகள் [primitive texts] பண்படாபிரதிகள் [savage texts] என்று சொல்வதை வாசித்து அதிர்ந்ததை நினைவுகூர்கிறேன். ஆனால் பின்னர் அந்த விவரணை மிகச்சரியானது என புரிந்துகொண்டேன். அது ஓர் எதிர்மறைக்குறிப்பல்ல.

பண்பாடு என்னும்போது நாம் உத்தேசிப்பது ஒரு மக்கள்தொகுதி காலப்போக்கில் உருவாக்கிக்கொண்டுள்ள ஞானத்தொகுதியைத்தான். பண்படுதல் என்பது அந்த ஞானத்தொகுதியுடன் கொள்ளும் இசைவு மட்டுமே. அந்த ஞானத்தொகுதி உருவாவதற்கு முந்தைய நூல்களையே தொல்பிரதிகள் பண்படாபிரதிகள் என்கிறோம்.

பண்பாட்டில் பொருந்திய மனம் அனைத்தையும் அது பொருந்தியிருக்கும் பண்பாட்டுச்சூழலின் நீட்சியாகவே அணுகுகிறது. வேறு வழியே இல்லை.ஆனால் பண்படாமனம் பிரபஞ்சத்தின் முடிவின்மையையும் இயற்கையின் பேரழகையும் புத்தம்புதிய கண்களுடன் அணுகுகிறது. புத்தம்புதிய தரிசனங்களை நோக்கிச் செல்கிறது.

உலகமெங்குமுள்ள பழங்குடிக்கற்பனைகளில் உள்ள பிரமிப்பூட்டும் கற்பனைவளத்தின் ரகசியம் இதுவே. செவ்வியல் என்பது இந்த ஆதிக்கற்பனைகளின் நாற்றங்கால். ஆனால் பெரும்பாலான பழங்குடிக்கற்பனைகள் இயற்கையை தன்னுடைய வாழ்க்கைக்கு ஏற்ப விளங்கிக்கொள்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இயற்கையை தன்னை நோக்கி இழுத்துக்கொள்கின்றன. தன்னை இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நோக்கி விரித்துக்கொள்வதில்லை.

வேதங்கள் அதி உக்கிரமாக தங்களை இயற்கைநோக்கி விரித்துக்கொண்டு பிரபஞ்சதரிசனத்தை சென்றடைபவை. எளியபழங்குடிப்பாடல்களாக ஆரம்பிப்பவை தத்துவத்தளம் நோக்கி விரிந்து என்றுமுள ஞானச்சிக்கல்களை தொட்டு விடுகின்றன. அதுவே அவற்றின் சிறப்பு.

வேதங்களில் முதன்மையானதும் மூத்ததுமான ரிக்வேதத்தையே உதாரணமாகக் கொள்ளலாம். அதன் ஆரம்பப்பாடல்கள் மிக எளிமையான பிரார்த்தனைகள். முதலில் அப்பாடல்களில் இயற்கைச்சக்திகள் நேரடியாகவே அடையாளம் காணப்படுகின்றன, அவற்றை நோக்கி பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன

ஆனால் அடுத்தகட்டத்தில் அந்த இயற்கைச்சக்திகள் குறியீடுகளாக ஆகின்றன. ஒரு பருப்பொருளை குறியீடாக ஆக்கிக்கொள்வதன் பரிணாம மாற்றம் என்பது மிகமிக வியப்புக்குரியது. பருப்பொருள் என்பது திட்டவட்டமாக அறியப்படுவது. குறியீடு என்பது நுண்மையானது, பல அர்த்தங்கள் நோக்கி விரியக்கூடியது

தீ என்ற பருப்பொருளை ரிக்வேதம் அறியும் விதத்தை மட்டுமே வைத்து இதைப்புரிந்துகொள்ளலாம். தீ முதலில் பருப்பொருளான ஒன்றாக அறியப்படுகிறது. பின்பு அதன் குணங்களே தீ என குறிக்கப்படுகின்றன. ஒளியும் வெப்பமும் நிறமும் எல்லாம் ஒன்றா ச் வெஇரு என்பது பற்பல நெருப்புகளாக மாறுகிறது. ஒளியும் வெப்பமும் செம்மையும் எல்லாமான ஒன்று என அறியப்படுகிறது

மெல்ல தீ ஒரு ஆற்றலாக அறியப்படுகிறது. பின்பு ஓர் இயல்பாக விரித்தெடுக்கப்படுகிறது. பிரபஞ்சவெளி முழுக்க நிறைந்துள்ள ஒரு பெருவல்லமை அது. நீரிலும் தளிரிலும் அது இருப்பதாக உணர்கிறார்கள் வேதரிஷிகள். சொல்லிலும் எண்ணங்களிலும் அதை காண ஆரம்பிக்கிறார்கள்.

அறிதலின் இந்தப்பயணம் மெல்ல மண்ணில் அறியப்படும் அனைத்தையும் பிரபஞ்ச அளவுக்குக் கொண்டுசென்று புரிந்துகொள்ள அவர்களை தூண்டுகிறது. மண், நீர், காற்று அனைத்துமே பிரபஞ்சமளாவிய பொருளில் ஆராயபப்டுகின்றன. காலம் தூரம் ஆகியவை அவ்வாறு அணுகப்படுகின்றன. பசி, ருசி, மூச்சு எல்லாமே பிரபஞ்ச அர்த்ததில் விளக்கப்படுகின்றன

இந்த தளத்தில் எழும் பிரபஞ்சவினாக்களை நாம் ரிக்வேதத்தின் முதிர்வுப்பகுதியாகிய பத்தாம் காண்டத்தில் தொடர்ச்சியாகப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இன்றைய அறிவியல் பிரபஞ்சம் நோக்கி கேட்கும் கேள்விகள் எல்லாமே அதில் கேட்கப்பட்டுவிட்டன. இன்று நம்மிடம் உள்ள உருவகங்கள் பெரும்பாலும் அங்கேயே உருவாக்கப்பட்டுவிட்டன.

வேதங்கள் பெரும் தொகைநூல்கள். அவற்றின் மிகப்பழைய கவிதையில் இருந்து மிகப்புதிய கவிதை வரைக்குமான காலமென்பது குறைந்தது இரண்டாயிரம் வருடமாக இருக்கலாம். இந்த பெரும் காலவெளியில் மனிதசிந்தனை அடைந்த வளர்ச்சி, தாவல் அவற்றில் பதிவாகி இருக்கிறது. ஆகவேதான் அது எப்போதும் ஆய்வாளர்களை கவர்கிறது

இந்தியமரபில் பின்னர் உருவான சிந்தனைகளைப் பொறுத்தவரை வேதங்கள் அவற்றின் தொடக்கப்ப்புள்ளிகளின் தொகுப்பு. ஆகவே அவற்றை சுருதிகள் என்றார்கள். சுருதி என்ற முக்கியத்துவம் எப்போதும் அந்நூல்தொகைக்கு இந்திய ஞானமரபில் இருந்துகொண்டே இருந்தது.

சுருதி என்றால் முன்னறிவு என்று பொருள். நேர்க்காட்சி [பிரத்யட்சம்] உய்த்தறிவு [அனுமானம்] ஆகிய இரு அறிதல்முறைகளுக்கு நிகரான முக்கியத்துவமுள்ள ஒன்றுதான் முன்னறிவு [சுருதி] வேதங்களை வைதீக மரபுகள் எல்லாம் சுருதி என்று கொண்டன. வேதமறுப்பு சிந்தனைகள் வேதங்களையும் அவற்றைப்போன்ற எல்லா பழைய சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக சுருதி என்றன.

வேதங்களை அணுகுவதில் உள்ள இருவகை பிழைப்போக்குகள் உள்ளன.வேதங்களில் உள்ள எளிய பாடல்களை மட்டுமே எடுத்துக்காட்டி அவை வெறும்பழங்குடிப்பாடல்கள் மட்டுமே என வாதிடுவது ஒன்று. அவற்றில் உள்ள ஞானக்குறிப்புள்ள வரிகளை மட்டுமே சுட்டிக்காட்டி அவற்றை உலகஞானம் அனைத்தும் அடங்கிய பெட்டகங்களாக அணுகுவது.

வேதங்களை இந்தியஞான மரபின் செவ்வியல் பரப்பாக, இவையனைத்தும் உருவாகி வந்த தொடக்கநிலமாக, இந்திய ஞானமரபின் ஆழ்மனமாக , எடுத்துக்கொள்வதே சரியானது.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s