விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 2

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 2

– ஜடாயு

தத்துவமாக்கலும் காவியமும்:

விஷ்ணுபுரம் நாவலின் இரண்டாம் பாகம் முழுவதும் தத்துவ விவாதங்களால் நிரம்பியது. ஆனால் அந்த தத்துவ விவாதங்கள் கறாரான தத்துவ மொழியிலேயே முழுவதுமாக இல்லாமல், பெரிதும் கவித்துவமான இலக்கிய மொழியிலேயே உள்ளன.  நாவலில் வரும் இந்திய ஞான மரபுத் தரப்புகளின் சம்பிரதாயமான தத்துவக் கோட்பாட்டு நூல்களை வாசிக்கும்போது நாம் எதிர்கொள்ளும் வறட்டுத் தன்மையும், தூய தருக்கவாதமும் இந்த விவாதங்களில் இல்லை என்பதை தத்துவ நூல்களை நேரடியாகக் கற்றவர்கள் உணர முடியும். தத்துவ விவாதங்கள் கூட அவற்றின் காவியமாக்கப் பட்ட நிலையிலேயே விஷ்ணுபுரத்தில் உள்ளன. ஜெயமோகனே தனது விளக்கங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இது கவனிக்கப் பட்ட விஷயம். ஆனால் கவனிக்கப் படாத இன்னொரு விஷயமும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம்.

காளிதாசனை “அத்வைத கவி” என்று வேதாந்த ஆசான்களும், உரையாசிரியர்களும் சிலாகித்திருக்கிறார்கள். அவனது காவியங்களில் உவமைகளிலும், சித்தரிப்புகளிலும் அத்வைத தத்துவத்தின் நுட்பமான சிதறல்கள் உள்ளன என்று அவர்கள் ரசனையுடன் சுட்டிக் காட்டுவார்கள். காளிதாச காவியங்களைப் போலவே, ஏன் அதைவிடவும் கூட அதிகமாக இது விஷ்ணுபுரத்திற்கும் பொருந்தும்.  அடிப்படையில் விஷ்ணுபுரம் ஒரு “தத்துவ காவியமும்” தான். எப்படி கௌஸ்துப காண்டத்தில் தத்துவங்கள் காவிய மயமாக்கப் பட்டுள்ளனவோ,  அதே போல ஸ்ரீபாத காண்டத்திலும், மணிமுடிக்  காண்டத்திலும், காவியம் முழுவதும் தத்துவ மயமாக்கப் பட்டுள்ளது. பிங்கலனும் சங்கர்ஷணனும் திருவடியும் லட்சுமியும் லலிதாங்கியும் பிரசேனரும் கொள்ளும் வெறுமையும் தனிமையும் எல்லாம் காலரூபமாக சுழன்று நிற்கும் மகாசூன்யத்தின் மூர்த்திகரணங்கள் அன்றி வேறென்ன?  வேததத்தனும், பாவகனும், பத்மனும் கொள்ளும் உணர்ச்சிகளும், வெண்பறவைகள் தலைசிதறி அழிவதும் வெளியே நிகழும் மகா பிரளயத்திற்கு ஈடாக உள்ளேயும் மனோநாசம் நிகழ்வதற்கான தத்துவப் படிமங்கள் அன்றி வேறென்ன?

நாவல் என்ற நவீன இலக்கிய வடிவத்தில் தத்துவ அம்சங்களுக்கும், தத்துவ சிக்கல்களுக்கும் எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பது இலக்கிய விமர்சகர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கருத்து. பொதுவாக, பெருநாவல்களில் சித்தரிப்புகள், உரையாடல்கள், கதைப்பின்னல்கள் இவற்றோடு கூட ஒரு சில அத்தியாயங்களில் தத்துவ சிந்தனைகள் அழுத்தம் தரப்பட்டு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

ஆனால், விஷ்ணுபுரத்திலோ நாவலின் ஒவ்வொரு இழையிலும் தத்துவத் தேடலுக்கான வெளி உள்ளது. நாவல் முழுவதிலும், ஆழமான தத்துவத் திறப்புகளை சென்று தீண்டாத ஒரு அத்தியாயம் கூட இல்லை எனலாம். இதுவும் விஷ்ணுபுரத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.

இவ்வாறு காவியமாக்கல், தத்துவமாக்கல் இரண்டும் ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்து விஷ்ணுபுரம் நூல் நெடுகிலும் விரவியுள்ளன என்று சொல்லலாம்.

கவித்துவ தரிசனம்:

“கவியின் கண் காலத்தின் கண் அல்லவா?“ – சங்கர்ஷணன்.

ஒரு உண்மையான தரிசனம் என்பது  ஒருபோதும் தருக்கத்துக்கு உட்பட்டதாக இருக்க முடியாது..  அது ஒரு கவிதையாகவோ கலையாகவோ மட்டுமே இருக்க முடியும்  என்று அஜிதன் ஓரிடத்தில் சொல்கிறான்.  விவாதத்தின் போது, எந்த எதிர்த் தரப்பையும் அத் தரப்பின் கவித்துவ தரிசனத்திற்கு செல்ல விடாமல் எதிராளியை முற்றிலும் தர்க்கச் சுழல்களில் சிதறடித்து நிலைகுலைய வைத்து, எதிராளி தடுமாறும் தருணம் தனது தரப்பின் கவித்துவ தரிசனத்தால் அதை முறியடிப்பது தான் பவத்த்தரின் உத்தி என்பதையும் சரியாகக் கணிக்கிறான் அஜிதன். இதே உத்தியை பவத்தருக்கு எதிராகப் பயன்படுத்தி வெற்றியும் காண்கிறான்.

தர்க்கமும் அது சார்ந்த வாள் சுழற்றல்களும் அடிப்படையில் வாதிப்பவனின் அகங்காரத்தின் வெளிப்பாடுகளே. ஆனால், கவிதை அப்படியல்ல, அது தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவின் வெளிப்படு தருணம், எனவே அது எப்போதும் தர்க்கத்தை விட ஒரு படி உயர்ந்த தளத்திலேயே  உள்ளது.  நேரடியாக சொல்லப் படாவிட்டாலும் கௌஸ்துப காண்டத்தில் உறுதியாக இக்கருத்து கோடிட்டுக் காட்டப் படுகிறது. ஞானத் தேடல் கொண்டு மெய்யுணர்வின் முழுமையை தரிசித்து அதைப் பாடுபவனை ரிஷி, கவி என்ற இரண்டு சொற்களாலும் வேறுபாடின்றியே வேத இலக்கியம் குறிப்பிடுகிறது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

தர்க்கங்களின் தடைகளை உடைப்பது கவிதை. தர்க்கங்களும் எதிர்த் தர்க்கங்களும் உருவாக்கி வைத்திருக்கும் திரைகளை விலக்குவது கவிதை. அதனால் தான் விஷ்ணுபுரத்தின் ஞான தாகிகள் தங்கள் தரப்புக்காக தீவிரமாக பேசும்கூட, எதிர்த் தரப்பின் கவித்துவ தரிசனத்தை நிராகரிப்பதில்லை. அது மட்டுமல்ல, சமயங்களில் அதனை விதந்தோதவும் செய்கிறார்கள்.

“நசிகேத ரிஷி தன் தளிர்க்கரங்களால் மரணத்தின் கதவைத் தட்டினார்” என்கிறார் பௌத்த ஞானி அஜித மகாபாதர். அவர் பேசுவது வேதாந்த மரபைச் சேர்ந்த உபநிஷத ஞானம். “குசப்புல்லில் துளித்துளியாக நீர்மொண்டு கடலை வற்றவைப்பது போன்றது மனக்கொந்தளிப்பை தர்க்கத்தால் பின்தொடர்வது…” மிருகநயனிக்கு அருகில் அஜிதர் தீவிரமாக விசாரம் செய்யும்போது அவர் நினைவில் எழும் இந்தச் சொற்கள் அத்வைத மகா குருவான கௌடபாதர் வாய்மொழியாக வந்தவை.

“நான் என்று கூறூம்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கி குறுக்காதே” என்று பிங்கலனுக்கு உபதேசிப்பவர் சிரவண மகாப்பிரபு. சுயமைய நோக்கு கொண்டது என்றும் குறுக்கல்வாதம் என்றும் அஜிதனால் குற்றம் சாட்டப் படும் வேதாந்த மரபின் பிரதிநிதி. ஆனால் அவரது இந்தச் சொற்கள் அஜிதன் பகரும் ஆலய விஞ்ஞானத்தின், மகா தர்மத்தின் சாரத்தைத் தான் உண்மையில் எடுத்துரைக்கின்றன.  “கற்றபடி இரு. மனிதர்களை முடிவின்றி மன்னித்தபடி இரு. மனங்களை ஒன்று  சேர்த்தபடி இரு. மகா இயற்கையிலிருந்து ஆசி பெற்றபடி இரு. எளிய உயிர்களுக்கு அந்த ஆசியை அளித்தபடி இரு” – இந்த நாவலின் சாரமாகத் திரண்டு வரும் “ததாகதரின் பெருங்கருணை”யே நம் முன்நின்று உரைப்பது போன்ற சொற்கள். ஆனால் இந்த உபதேசத்தை தன் மரணத் தருவாயில் சீடனுக்கு வழங்குபவரோ விஷ்ணுபுர மகாவைதீகரான பவதத்தர்.

கவிதை:

“இப்போது தான் இந்தக் கனவிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் கூட அக்கனவின் ஒரு பகுதி எனவே ஆயிற்று… காற்றில் மிதந்தபடி, சிவப்பான  உதய ஒளி படர்ந்த வானத்தின் கீழ்மூலை நோக்கிச் சென்றபோது எங்கோ ஒருவனின் கனவுக்குள் புகுந்து, அவனுடைய நனவில் விழித்தெழ ஆசைப் பட்டேன்..”

இலக்கிய வடிவங்களிலேயே கனவுக்கு மிக நெருக்கமாக உள்ளது கவிதை. விஷ்ணுபுரம் நாவலும் அப்படிப் பட்டதே என்பதால், அதில் கவிதைக் கூறுகள் மிகுதியும் உள்ளன.  நாவலின் உரைநடை நெடுகிலும் கவித்துவம் ததும்பி நிறைந்து வழிகிறது.  லலிதாங்கி போல பூரண ஆபரணங்கள் பூண்டு வசீகர நடனமாடிக் கொண்டிருக்கும் உரைநடை ஜிவ்வென்று அப்படியே ஒரு துள்ளு துள்ளி  வெண்பறவையாக வானில் பறக்கிறது.  கனவு வெளியை அளைந்து களைத்தயர்ந்து மிக லாகவமாக மண்ணில் இறங்கி யானைக் கொட்டிலிலும் கூச்சல் பெருத்த ஊட்டுபுரைகளிலும் சஞ்சரித்து கொட்டமடிக்கிறது.

அது தவிர்த்து, வெளிப்படையான கவிதை வரிகளும் நாவலில் பல இடங்களில் பயின்று வருகின்றன.

“இருட்டால் போர்த்தப் பட்ட வெளி

வேறுபடுத்தும் அடையாளங்களின்மையால்

ஏதுமின்மையாக ஆகிவிட்டிருந்த வெளி

அது நீராக இருந்தது

அதன் பிறப்பு

வடிவமற்ற வெறுமையினால் மூடப்பட்டிருந்தது

தன் சுயமான மகிமையினால்

முதல் முடிவற்ற தவத்தால்

அது சத்தாக மாறியது.. “

ஞானசபை விவாதத்தின் தொடக்கத்தில் ரிக்வேத பண்டிதர்  பாடும் சிருஷ்டி கீதத்தின் சில வரிகள் இவை.  இது போன்று, இன்னும் சில வேத, உபநிஷத மந்திரங்களும் உயிரோட்டம் ததும்பும் கவிதை வடிவில் ஞான சபை விவாதங்களின் பகுதியாக வருகின்றன.  வேத இலக்கியத்தின் அற்புதமான தொல்கவிதைகளை ஒரு நவீனத் தமிழ் வாசகனுக்கு அதன் தூய வடிவில் எடுத்துச் செல்வதற்கு மிகச் சிறந்த வழி இத்தகைய கவிதையாக்கமே என்று எனக்கு உணர்த்தியது விஷ்ணுபுரத்தின் இந்தப் பகுதிகள் தான். எனது சமீபத்திய வேத கவிதையாக்க முயற்சிகளுக்கு உந்துதல் அளித்ததும் விஷ்ணுபுரம் நாவலின் இந்தப் பகுதிகள் தான்.

இன்னொரு வகை மாதிரி தரிசன மரபுகளின் சாரத்தை அழகிய கவிதைகளாக நாவலின் போக்கில் வடித்திருப்பது. கால தரிசன சூத்திரத்தை பிட்சு பாடும் ஓர் அற்புதமான கவிதை –

“வழி தவறிய குழந்தையொன்று

பிஞ்சுக்கால் பின்ன அலைகிறது

அழுத கண்களில் வான் நீலம் கரைகிறது

குழந்தை உனது பெயரென்ன?

பெயரிடப்படாத குழந்தை அது

குழந்தை உனது ஊரென்ன?

அது மண்ணின் உப்பை அறியாதது.

குழந்தை உனது தாய் யார்?

தாயன்றி அது வேறு ஏதும் அறியவில்லை.

அன்ந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே

நீ அன்னையாகி வருக.

காலமே உனக்கு வணக்கம்.”

 பௌத்த ஞானி எழுதியதாக வரும் “தச தர்சன சங்கிரஹம்”, ஜைன முனியின் ஆக்கமான “சத பிரஸ்ன மாலிகா” ஆகிய அத்தியாயங்கள் உயர் தத்துவம் கவிதையாகி வரும் அழகுக்கு சிறந்த உதாரணங்கள்.

தொடரும்..

One thought on “விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 2

  1. // எனது சமீபத்திய வேத கவிதையாக்க முயற்சிகளுக்கு உந்துதல் அளித்ததும் விஷ்ணுபுரம் நாவலின் இந்தப் பகுதிகள் தான்.//

    அவற்றை இங்கே படிக்கலாம் – http://www.tamilhindu.com/category/veda/

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s