விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 3

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 3

– ஜடாயு

மூன்று மகத்தான கவிதைகள்:

மூன்று பாகங்களிலும் அவற்றின் சாரமாக முத்திரை பதித்து வரும் கவிதைகள். இந்த மூன்று கவிதைகளும்  மிக நுட்பமான, அந்தரங்கமான அக அனுபவங்களை ஆழ்ந்த படிமங்களாக குறியீடுகளாக சொல்லில் வடித்துக் காட்ட முயலும் அமானுஷ்ய முயற்சிகள்.  பிரக்ஞையின் விளிம்பில் நின்று மொழியின் எல்லைகளுக்கும், சாத்தியங்களுக்கும் சவால் விடும் எழுத்து இது என்று உறுதியாகக் கூறலாம்.

முதல் பாகத்தில் வரும் கவிதை சதுப்பு நிலத்துக்குள் புகுந்த திருவடியின் தியானம் (41-வது அத்தியாயம்).  “இசை – வெளி  – நடனம்” என்பது தியான மந்திரம்.

“…. சிலிர்த்த வரிகளில் உன் புரியாத காவியம்

இசைக்கும் வெளி உன் நடனம்

அடி, என் சாகரத் திரைச்சீலை விலக்கிப்

புன்னகைக்கும் பெருமுகம், விண்ணலைகள்

கூடும் பிரிய கோஷம், பிரதிபலித்து

வெளிப்பது உன் விழி  நாதம் ….

….  உன் கூந்தல் மலர் எனப் புலரி

உன் பாதத் தடமென சொற்கள்

எங்கும் விரிந்த  உயிர்ப்பின்

கிளைகளில் ஊசலாடி எழும்

தூய்மையின் புலரி மந்திரம்…

… நீலமெனப் பெருவெளி இள

நீலமெனக் காலம் இள

நீலமென ஓங்காரம்… “

இரண்டாம் பாகம், கௌஸ்துப காண்டத்தில் வரும் கவிதை (31ம் அத்தியாயம்) மிருக நயனியின் நீழலில் அஜிதனின் தியானம்.  “ வெண்மை – காலம் – இன்மை ” என்பது தியான மந்திரம்.

“ஆயிரம் காதத் திரையை

செவ்வலகால் கிழித்து வந்து

என் முன் அமர்ந்து நொடிக்கும்

இவ்வெண் பறவையின் முன்

செயலற்று அமர்ந்திருக்கிறேன்…

.. ஒரு நூறு பாதங்கள் ஊன்றி

வானாகிக் கவிழ்ந்து

வெளியில் தலைதூக்கி

எண்ணற்ற முலைநுனிகளால்

அமுதூட்டும் கருணை..

… இன்மையின் சாரமெனக் காலம்

எனும் இன்மையின் சாரமென

இன்மை.”

மூன்றாம் பாகம் மணிமுடிக் காண்டத்தில் வரும் கவிதை (22-ம் அத்தியாயம்). பாவகனின் தியானம். “ உனது மகத்தான தனிமை ” என்பது தியான மந்திரம்.

“.. ஊறும் ஈரத்தில் முளைத்த வனம்

எங்கும் அதிரும் வலிக்கொப்புளங்கள்

எழுந்து சிகரம் எழுப்பி உயர்ந்த

மௌனத்தில் வழியும் மந்திரச் சொற்களின்

வெண்மையில் ஒளிரும் விலகும்

உனது மகத்தான தனிமையின் காலம்…

…இக்கணம் பூத்தெழும் முடிவின்மையில்

எது உன் பெயராகும்? எது

உன் அமர மந்திரம்? எது

நீ வெளித்த ரூபம்? எண்ணும் பொருள்களின்

வான் விளிம்பில் வடிவங்களெனப் பிறந்த

இவ்வனைத்திலும் திமிறும் பிழை நீ…

தசையெரிக்கும் வெப்பம் கண் அழிக்கும் ஒளி

உனது அலையற்ற பெருமவுனத்தில் எஞ்சுவது

உன் மகத்தான தனிமை.”

இந்த மூன்று கவிதைகளையும் ஒருசேர எண்ணிப் பார்க்கும் போது திருவாய்மொழியின் கடைசி பாசுரம்  நினைவில் எழுகிறது –

“சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே.”

முடிவில் பெரும் பாழேயோ – என்கிறான் பாவகன்.

பர நன் மலர்ச் சோதியோ – என்கிறான் திருவடி.

சுடர் ஞான இன்பமேயோ – என்கிறான் அஜிதன்.

இவர்கள் அனைவரும் விடுபட்ட நிலையின் விளிம்பு வரை வந்து நின்றுவிட்டவர்கள். “அவா அறச் சூழ்ந்தாயே” என்று நம்மாழ்வார் பாடும் இறுதி நிலையை அடைந்தவன் சுடுகாட்டுச் சித்தன் ஒருவனே.

அவனது தியானம் நாவலில் இவ்வாறு கவிதையாக விரித்தெழுதப் படவில்லை. “சட்டியும் பானையும் போயாச்சு – சூளை மண் மட்டுமே மிச்சமாச்சு” போன்ற அவனது தெருப்பாடல்களும், விஷ்ணுபுர வீதிகளில் அவன் சீடனுடன் ஆடிச் செல்லும் திகம்பர நடனத்தின் அசைவுகளுமே அவனது ஞானத்தின் சுவடுகளாக, அவன் விட்டுச் சென்ற கவிதையாக எஞ்சுகின்றன.

இந்தக் கவிதைகளை எல்லா வகையிலும் ஸ்ரீஅரவிந்தரின் “சாவித்ரி”யுடன்  ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. அந்த முழுநீளக் காவியமும் இது போன்ற அக அனுபங்களால் தூண்டப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகவே எழுதப் பட்டது. ஆன்ம தாகம் கொண்ட ஒரு ஆத்மாவின் அகப் பயணத்தையும் அது கடந்து செல்லும் பரிணாம நிலைகளையும் “சாவித்ரி” குறிப்பதாகவும், ஐம்பதாண்டுகள் அந்தக் காவியத்தின் கரு தன்னுள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த்தாகவும் ஸ்ரீஅரவிந்தர் கூறியுள்ளார். “Savitri is the record of a seeing, of and experience which is not of the common kind and is often very far from what the general human mind sees and experiences”  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சாவித்ரி”யை எம்.பி.பண்டிட் அவர்களின் வழிகாட்டி நூலின் உதவியுடன் நான் படிக்க முயன்றபோது அதன் சில அத்தியாயங்களின் சில பாடல்களுக்கு மேல் செல்வது சலிப்பாகவும், கடினமாகவும் எனக்கு இருந்தது. ஒரு இலக்கிய வாசகனாக தொடர்ந்து இதே போக்கில் வந்து கொண்டிருந்த அதன் நீள்கவிதை என்னை தீவிமாக வசீகரிக்கவில்லை. ஆன்ம அனுபவத் தேடல் என்ற அளவில் அதனை அணுக உதவக் கூடிய வழிகாட்டுதல்களும் எனக்கு வாய்க்கவில்லை. அதற்கு நான் முயற்சி செய்யவுமில்லை.

ஆனால், இந்தக் கவிதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் போது அவை மேலும் மேலும் நெருங்கி வருவதாக உணர்ந்த படியே இருக்கிறேன். அவை பித்துக் கொள்ளச் செய்கின்றன. விஷ்ணுபுரத்தின் கதைப் பின்னணியில் வைத்து வாசிக்க முடிவதால் இந்தக் கவிதைகள் தரும் திறப்புகளை நாம் இன்னும் அந்தரங்கமாக, எளிதாக அணுக முடிகிறது என்று தோன்றுகிறது.

சொல் – மனம் – மொழி:

“இந்த விஷ்ணுபுரமே இடைவிடாது காலப்பெருக்கில் நிகழ்ந்து கொன்டிருக்கும் தியான மந்திரம் தான். ஒரு சொல் பிறக்கும். ஒலித்து ஓய்ந்து மவுனத்திற்குத் திரும்பும். மறுசொல் பிறந்து வரும். யாருடைய தியானம் இது?”

காவியம், கவிதை, இலக்கியம் எல்லாவற்றுக்குமான கச்சாப் பொருள் மொழி. அதன் அடிப்படை அலகு சொல்.  இவையனைத்தும் சிருஷ்டிகர செயல்பாட்டில் இயல்பாகப் பீறிட்டெழும் விஷயங்களா? அல்லது அடிப்படையில் மொழி என்பது ஒரு கட்டுமானம் மட்டும் தானா? எண்ணம், சொல், பொருள், மொழி இவற்றுக்கிடையே உள்ள உறவு என்ன? நாதம், த்வனி, இசை இவற்றுக்குள் உள்ள உறவு என்ன? போன்ற கேள்விகள் நாவலின் ஊடாக தத்துவார்த்த தளங்களில் எழுந்து வருகின்றன.

“ஒருவேளை  இப்போதே என்  மனம் தடுமாறி விட்டிருக்கிறதா? சொற்களுக்காகத் தவமிருந்தவன் நான். இப்போது சொற்களை வெறுக்கிறேன். இச்சொற்பிரவாகத்தை ஒரு கணம் நிறுத்தி விட்டு தூங்கினால் போதும். பெருமாளே ஓர் இரவு என்னை மறந்து தூங்கினால் போதும்” என்று அலைபாய்கிறான் சங்கர்ஷணன்,

ஒரு கட்டத்தில் படைப்பாளியின் சொற்கள், அவனது மொழி, அவனது ஆளுமையையும் மீறிச் சென்று விடுகிறது. அத்துமீறிப் போய்விடுகிறது.  அப்போது அவனிடம் குடிகொள்ளும் வெறுமை, அதைத் தான் இந்த வரிகள் தொட்டுக் காட்டுகின்றன.

மொழியின் கட்டற்ற தன்மையைக் காட்டும் இன்னொரு இடம் மணிமுடிக் காண்டத்தில் வருகிறது. ஆரிய தத்தரின் கடைசிக் காலம். பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்று வாக்கு நான்கு கட்டங்களாக முகிழ்த்தெழுவது பற்றிய ஒரு அதீதமான வர்ணனை அதில் உள்ளது.

சொல் முதலில் மனதின் விதையாக, சிந்தனையாக முளைக்கிறது – பரா. அதற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உருக்கொள்கிறது. அகத்திலிருந்து ஒரு சொல் கிளம்பி வருகிறது. சொல்லின் ஜனனம். உண்மையில் நாம் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குழந்தை பிறப்பது போல. பிறகு அது கடைசியாக வாய்மொழியாக, வைகரியாக வெளிப்படுகிறது. ஆரிய தத்தரின் அந்தக் கணங்களில் அவரது அகம் முழுதாக விழித்திருக்கிறது. ஆனால், அது சொல்லாக வெளிப்பட முடியவில்லை. அந்தத் தவிப்பு! அது சாதாரணமாக வாய்பேச முடியாத ஒருவனின் ஆற்றாமையாக அல்ல, இன்னும் ஆழமான தளங்களுக்கு உள் சென்று அந்தத் தவிப்பு விவரிக்கப் படுகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு அவஸ்தையின் குறியீடாகவே அங்கு அது வருகிறது.

கலை:

“மனிதக் காமம்… மனிதனுக்குத் தான் மாமிசம் போதவில்லை. சிற்பி சொல்வதுண்டு, காமத்தில் அதிருப்தி கொள்ள ஆரம்பித்த பிறகு தான் மனிதன் கலைகளையும் இல்க்கியத்தையும் படைத்தான் என்று. கவிஞனுக்கு பூமி மீது பெண்னே இல்லை என்பார்..”

மனதில் ஒரு சொல் பிறக்கும் உள்முக ஓட்டத்தைக் கீறிக் காண்பிப்பது மட்டுமல்ல, அதன் நீட்சியாக ஒரு கலைப் படைப்பு உருவாவதில் உள்ள அவஸ்தை பற்றியும் பேசுகிறது விஷ்ணுபுரம்.

“உன்னுடைய கவித்துவத்தின் எல்லையற்ற கருணையின் நிழலாக அதைவிட அழுத்தமான குரூரம் உள்ளது என்பது  அவளுடன் மண்ணோடு மறையப் போகிற ரகசியம்”  என்று தனக்குள் புலம்புகிறான் சங்கர்ஷணன்.

ஒவ்வொரு கவிஞனும், கலைஞனும் படைப்பாளியும் ஏதோ ஒரு விதத்தில் தன்னை சிதைத்து அழித்து உருமாற்றித் தான் தன் படைப்பை உருவாக்குகிறான், கலையை வளர்த்தெடுக்கிறான்.  இதனூடாக நிகழும் கலைஞனின் மனக்கொந்தளிப்புகள் அவனைச் சுற்றுயுள்ள சூழலிலும் கொந்தளிப்புகளை உருவாக்குகின்றன. இது ஒருவகை குரூரம் தான். ஆனால் இந்தக் குரூரத்திலிருந்து தான் உன்னதமான, அழகான கலை, இலக்கியப் படைப்புகள் பிறக்கின்றன.

எந்த ஒரு நல்ல கலைஞனும் தன் கலை மீது, படைப்புகள் மீது அபரிமிதமான பெருமிதமும் கர்வமும் கொள்வான். அது இயல்பானதே. ஆனால்  உன்னத கலைஞன் அதோடு நின்று விடுவதில்லை. அவன் மேலும் மேலும் உயரத்துக்குப் போக ஆசைப் பட்டுக் கொண்டே இருப்பான். தனது கலை வடிவத்தின் சட்டகங்களையும் இலக்கணங்களையும் மீறிய படியே இருப்பான். அவனது கலை அதன் முழுமையின் விளிம்பில் சென்று முட்டிக் கொள்ளும் கணத்தில் அவன் அடையும் விரக்தியும் வெறுமையையும் கூட சேர்ந்தது தான் அவனது வாழ்க்கை.

“ஈடிணையற்ற சிற்ப அற்புதம் ஒன்றை படைத்து காலத்தில் பதித்து விட வேண்டும்  என்ற லட்சியம் இருந்த்து. ஆனால் ஒரு கட்டத்தில் சிற்பியின் பிரக்ஞை தர்க்கத்தால் கட்டப்பட்டுள்ளது என அறிந்தேன். பூமியிலுள்ள சிற்பங்கள் எல்லாம் தத்துவத்தின் மூர்த்திகரணங்கள். சிற்பிகள் தத்துவத்தை ஒருபோதும் முழுக்கப் புரிந்து கொள்ள முடியாது, அப்படியானால், கழுத்துக் கயிற்றால் வழி நடத்தப்படும் பசு போன்றது தானா கலை? என்னால் அதை ஏற்க முடியவில்லை. என் கலை வழியாக நான் பிரபஞ்ச தரிசனத்தை அடைய வேண்டுமென உணர்ந்தேன். ஆகவே இலக்கணங்களை உதறினேன்” – இது பிரசேன சிற்பியின் வாக்குமூலம்.

“லங்கா தகனம்”  நாவலில் வரும் கதகளி ஆசான் இறுதியில் தனது திருஷ்டிப்  பொட்டை அழித்து விட்டு மேடையை நோக்கி நடந்து செல்கிறார்.  பூரண அலங்காரத்துடன் பார்ப்போரை பித்துக் கொள்ளச் செய்யும் லலிதாங்கியின் கையில் கட்டப் பட்ட திருஷ்டிக் கயிறு கூட்டத்தில் செல்கையில் கழன்று விடுகிறது. கலை தனக்குத் தானே இட்டுக் கொண்ட தன் அனைத்து வரம்புகளையும் உடைத்தெறிந்து பூரண நிலையை அடைகிறது.  அத்தகைய கலை ஆக்கவும், அழிக்கவும் சக்தி படைத்ததாகிறது. ஆசான் லங்கையை எரிக்கிறார். லலிதாங்கி திருவடிக்கு விஷ்ணு தரிசனத்தைக் காட்டுகிறாள்.

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s