2.தத்துவம் – ஒரு எளிய அறிமுகம்: பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

பரவலாக கேட்கப்படும் கேள்வி இது. ’சரி, புதிய தத்துவம் என்று எதைச் சொல்கிறீர்கள்?’ என்று நான் கேட்பேன். அவர்கள் மார்க்ஸியம் என்றோ, அணுக்கொள்கை என்றோ பதில் கூறுவார்கள். இத்தத்துவங்களின் நடைமுறை சார்ந்த அம்சங்கள், சில தருக்க முறைகள் மட்டுமே புதியவை. அடிப்படைகள் முழுக்க புராதன கிரேக்க சிந்தனையில் இருந்து பெறப்பட்டவை என்று நான் விளக்குவேன்.

தத்துவம் என்பது தொழில்நுட்பம் அல்ல. புதியது வந்ததும் பழையது போய்விடாது. ஒவ்வொன்றும் பிறிதின் தொடர்ச்சியாகவே எழமுடியும். தத்துவம் என்பது தருக்கங்களின் தொகுப்பு என்றேன். அத்தருக்கங்கள் எங்கிருந்து வருகின்றன? மனித மூளை செயல்படும் விதங்களில் இருந்து அல்லவா? மனித மூளை அன்றும் இன்றும் ஒன்றுதான். புறச் சூழல்தான் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆகவே கலையிலும் தத்துவத்திலும் அடிப்படைகள் மாறுவதே இல்லை. அவற்றை எடுத்துரைக்கும் முறையும், புரிந்து கொள்ளப்படும் சூழலும் மட்டும் மாறியபடியே இருக்கும். மிகப்புராதனமான தத்துவ சிந்தனையின் அடிப்படைகள் இன்றைய நவீனச் சிந்தனைகளில் தொடர்வதைக் காணலாம்.

ஆகவேதான் அதி நவீன சிந்தனைகள் பெருகி வந்தபடியே இருக்கும் மேற்கத்திய அறிவுச் சூழலில் கூட அதிபுரான கிரேக்க சிந்தனையாளர்கள் முதற்கொண்டு எவருமே புறக்கணிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப வேறு வேறு கோணங்களில் வாசிக்கப்படுகிறார்கள். மறுகண்டுபிடிப்புச் செய்யப்படுகிறார்கள்.

முக்கியமான எந்த சிந்தனையும் கால்வதி ஆவதில்லை என்பதையும் நாம் முதலில் புரிந்துகோள்ள வேண்டும். உதாரணமாக ஹிட்லர் என்ற எதிர்மறை சக்தியின் உருவாக்கத்தில் நீட்சேக்கு பங்கு உண்டு என்பது வெளிப்படை. ஆகவே அவர் வெறுத்து ஒதுக்கப்பட்டார். அத்துடன் நவீன அறிவியல் நீட்சேயின் பல சிந்தனைகளை தவறெனக் காட்டியது.

அதே போல கார்ல் மார்க்ஸின் பொருள் முதல்வாதச் சிந்தனைகள் உருவானபிறகு ஹெகல் காலாவதியாகிவிட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் பின் நவீனத்துவ சிந்தனைகள் உருவானபோது இவர்கள் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டு உயிர்த்தெழுந்தார்கள். சமூக அதிகாரம் முதலியவை குறித்த இவர்களுடைய பார்வைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

ஐம்பதுகளில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த சார்தர், சி.ஜி. யங் முதலியோர் இன்று பின் நவீனத்துவர்களால் நிராகரிக்கப்படுகிறார்கள். அவர்கள் நாளை உயித்தெழக் கூடும். இன்று மறக்கபட்டுள்ள ஹென்றி பெர்க்ஸன், பிஷப் பெர்க்லி முதலியோர் மீண்டு வரும் அறிகுறிகள் தெரிகின்றன.

சிந்தனை பழமையாவது, காலவதியாவது குறித்தெல்லாம் பேசுபவர்கள் இங்கேயுள்ள ‘சிந்தனை இறக்குமதியாளர்கள்’ தான். மேற்கே எது புத்தம் புதிதோ அதைப்பற்றி பேசவேண்டும் என்ற துடிப்பே காரணம். மேற்கு ஒரு போதும் பழைமையைப் புறக்கணித்ததில்லை என்பதை இவர்கள் கவனிப்பதில்லை.

இந்தியச் சிந்தனையின் இன்றைய முக்கியத்துவம் என்ன?

இன்று நாம் ஏன் இந்திய சிந்தனைகளை பயில வேண்டும்? இக்கேள்விக்கு பதிலளிக்கும் முன் நாம் அறியவேண்டியது இப்படி கேட்பவர்கள் தமிழ் நாட்டிலுள்ள பெரியாரியர்கள் மட்டுமே என்பதுதான். பொதுவாக சிந்தனைக்கு எதிரான பொதுப் போக்கு மனப்பான்மை (Populist1 Tendency ) இவர்களுக்கு உண்டு1.இவர்கள் எவருமே இந்திய சிந்தனை மரபு குறித்து மட்டுமல்ல, எந்த சிந்தனை மரபு குறித்தும் ஆழமாக ஏதும் எழுதியதில்லை.

1.  Populism என்றால், சிந்தனையின் ஆழமான முரண்பாடுகளுக்குள் இறங்கிச் செல்லாமல் மேலோட்டமான கருத்துக்களைப் பிரச்சாரம் மூலம் வலியுறுத்தி சமூகத்தில் பிரபலமடைதல் என்று பொருள். ‘ வளர்முக நாடுகளில் பாப்புலிசம்’ என்ற முக்கிய நூலில் உலகளாவிய பாப்புலிச போக்குகளை விளக்கும் வி.ஹொரெஸ் (முன்னெற்ற பதிப்பகம் மாஸ்கோ வெளியீடு 1986.) தமிழகத் திராவிட இயக்கத்தை முக்கியமாக உதாரணம் காட்டுகிறார்.

மாறாக இந்திய மார்க்ஸியர்களான ஈ.எம்.எஸ்., கே. தாமோதரன், தேவி பிரசாத் சட்டோபாத்யாய உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்திய சிந்தனை மரபு குறித்து ஆராய்ந்திருந்திருக்கிறார்கள். இந்திய தலித் சிந்தனையாளர்களான அம்பேத்கர், அயோத்தி தாச பண்டிதர், பூலே போன்றவர்கள் மிக மிக விரிவான ஆய்வுகள் செய்துள்ளார்கள்.

ஏன் என்பது அடுத்த கேள்வி. இங்குள்ள வாழ்வு; அதன் கொள்கைகள், நம்பிக்கைகள், அமைப்புகள் அனைத்துமே இந்திய சிந்தனை மரபின் கூறுகளால் கட்டப்பட்டவை. இந்திய சமூகத்தைப்  புரிந்துகொள்ள இந்திய சிந்தனை மரபை ஆரிவது அவசியம். பல இடங்களில் இதைக்குறிப்பிடும் அம்பேத்கார் இந்திய சிந்தனை மரபு குறித்து ஒரு சாராரால் உருவாக்கப்பட்ட பிழையான சித்திரத்தை ஆராயாமல் ஏற்பதனால்தான், நாம் இந்திய சமூகம் குறித்து பிழையாகப் புரிந்துகொண்டுள்ளோம் என்கிறார்.

ஆகவே இங்குள்ள வாழ்க்கையில் இருந்து அசலான சிந்தனைகளை உருவாக்கிகொள்வதற்கும் சரி, இங்குள்ள வாழ்கையின் அடிப்படையில் மேலைத்தேய நவீன சிந்தனைகளை புரிந்து கொள்வதும் சரி, கண்டிப்பாக இந்திய சிந்தனை மரபு குறித்த ஞானம் அவசியம். இந்தியாவின் முக்கிய சிந்தனையாளர் அனைவரிடமும் இந்த தெளிவு இருந்தது.

தத்துவங்கள் சில சமயம் அபத்தமான முடிவுகளுக்கு வருகின்றனவே?

தத்துவத்தில் ஐம்பது வருடம் பின் சென்று அன்றைய முடிவுகள் சிலவறை எடுத்து இப்போது பார்த்தால் நமக்கு தூக்கி வாரிப்போடும். நீட்சே சொன்னார்., பிரபஞ்சத்தில் ஜடப்பொருள் எல்லைக்குட்பட்டது; ஆனால் காலம் முடிவற்றது. ஆகவே இங்கு பொருளின் பலவித சேர்க்கையின் மூலம் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தாக வேண்டும். நிரந்தரச் சுழற்சி (Eternal Recurrence) என்ற பெயரில் இதை முன் வைத்தார்

பொருளும் பிரபஞ்சத்தில் எல்லையற்றதே என அறிவியல் நிறுவிய பிறகு நீட்சேயின் சித்தாந்தம் மூடத்தனமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி என்றால் நீட்சே ஒரு மூடனா? பண்டைய தத்துவங்களில் பல இன்று தவறான முடிவுகளைத் தருவனவாகத் தெரிகின்றன. ஆகவே அவை பயனற்ற குப்பைகளா?

சிந்தனையின் விளிம்பு எல்லையில் தத்துவவாதி குடியிருக்கிறான். ஓர் ஊரில் பல்லாயிரம் பேர் குடியிருக்கிறார்கள். ஊரை மேலும் எப்படி, எத்திசையில் விரிவுபடுத்தலாம் என்று பார்க்க, ஒரு சில முன்னோடிகள் எல்லா திசைகளிலும் கிளம்பிச் செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் சிலர் வழி தவறிடலாம். சிலர் தவறான முடிவுகளுக்கு வரலாம்.காரணம், அவர்கள் போவது பிறர் அதுவரை போகாத திசைகள் அல்லவா? அந்த முன்னோடிகளில் சிலரே நகரத்தை விரிவுபடுத்துவதற்கான வழியை கண்டுபிடிப்பார்கள். மானுட சிந்தனை வளர்வது இப்படித்தான். ஏற்கனவே தத்துவம் கண்டடைந்த இடத்தில் சொகுசாக வாழ்ந்தபடி தத்துவத்தின் முதிய முயற்சிகளை நாம் விமரிசனம் செய்கின்றோம்.

தத்துவத்தின் கண்டுபிடிப்பில் பத்துக்கு இரண்டுதான் உபயோகமாக இருக்கும். உடனே தத்துவம் 20% தான் சரியானது என்று கூறிவிட முடியாது. பத்து புதுக்கண்டுபிடிப்புகள் வந்தால் தான் இரண்டு சரியான புதுச் சிந்தனைகள் நமக்கு கிடைக்கின்றன.

இன்னொன்றும் கூறவேண்டும். ஒரு தத்துவக் கண்டுபிடிப்பு, அப்படியே நேரடியாக எடுத்துக் கொண்டால், தவறாக, நடைமுறைப் பார்வையில் அபத்தமாகக்கூட, இருக்கக்கூடும். ஆனால் அதற்கு குறியீட்டு ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் அறிவுத்துறையில் எற்படக்கூடும்

உதாரணமாக அபாவம் (இன்மை) என்பதும் ஒரு பொருண்மை இருப்புதான் என்று நியாய சாஸ்திரம் கருதுகிறது. அதாவது, ஒரு பொருள் இல்லாமலிருப்பதும் ஒரு வகை இருப்பே. இச்சிந்தனை வெறும் தருக்கம்தான். நடைமுறைக்குப் பயன்படாது. ஆனால் இது குறியீட்டு ரீதியாக விஞ்ஞானி சந்திர சேகருக்குக் கருந்துளைகள் ( Black Holes ) குறித்த ஆய்வுக்கு உதவியது.

வேறு எவ்விதமான அறிவு வளர்ச்சி இருந்தாலும் தத்துவ நோக்கு வளராவிட்டால் அசல் சிந்தனைகள் ஒரு சூழலில் ஏற்படாது என்பதே உண்மை. ஒவ்வொரு அறிவுத்துறையும் சாராம்சப்படுத்தப்பட்டு தத்துவம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டாக வேண்டும். பலர் எண்ணுவது போல தத்துவம் என்பது உளவியல், மானுடவியல், இயற்பியல் போல அறிவுத்துறை அல்ல. அது மனிதனின் ஆதார அறிதல் முறைகளில் ஓன்று.

அடிப்படையில் பொதுவாக, கற்பனை, தர்க்கம், தியானம் என மானுட அறிதல் முறைகளை மூன்றாக நாம் வகுக்கலாம். தருக்க பூர்வ அறிதல் முறையே தத்துவம் என்பது. நாம் சிந்திப்பதெல்லாமே தருக்கம் மூலம்தான். அதாவது தத்துவத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தத்துவம் மூச்சு போல. அனைவரிலும் அது உண்டு. அதைத் தவிர்க்க முடியாது.

தத்துவச் சிந்தனையாளர்கள் இம்மூச்சைப் பற்றி சிந்திப்பவர்கள், அதைப் பயிற்சி மூலம் கட்டுப்படுத்திப் புதிய புதிய விதங்களில் விட முயல்பவர்கள். அதாவது, சிந்தனை என்பது சுவாசம் என்றால் தத்துவச் சிந்தனை என்பது பிராணாயாமம்.

அடுத்து வருவது..

தரிசனங்களின் அடிப்படைகள் –  மெய்ஞானமரபு என்பது என்ன?

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s