காலமே உனக்கு வணக்கம் – 1 by சுனீல் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம்

காலமே உனக்கு வணக்கம் – 1

by  சுனீல் கிருஷ்ணன்

”அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே

நீ அன்னையாகி வருக.

காலமே உனக்கு வணக்கம்”

வெண் மணல் நிறைந்த வறண்ட பாலைவனத்தில், பவுர்ணமி நிலவொளியில் பிரம்மாண்டமாக விரியும் அந்த சக்கரம். அந்த மண், நதி புரண்ட மண். காலமெனும் நதி சுழிந்தோடி தன் அடையாளங்களை தொலைத்த மண். தன்னுள் பல நூற்றாண்டு ரகசியங்களை, மானுட தேடல்களை, நிராசைகளை, ஏமாற்றங்களை. என உயிர்த்துடிப்புடன் விளங்கிய அனைத்தையும் விழுங்கிய   மலைப்பாம்பை போல, மானுட ஞானத்தை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆழமான,வெறுமையான, வெதுவெதுப்பான மண். கூரைகள் இல்லாத வெட்டை வெளியில், நிலவொளியில் எதை தேடுகிறேன்? பிங்கலனும்  சங்கர்ஷணனும் உணர்ந்த அந்த தனிமை, ப்ரேசனரும் காசியபனும் உணர்ந்த அந்த தனிமை, பவதத்தரும், சூரிய தத்தரும், ஆரிய தத்தரும் யுகம் யுகமாக கண்டுணர்ந்த அந்த தனிமை, பாவகனும், பத்மனும், யோக விரதரும் அறிந்து தவித்த அந்த மகத்தான தனிமை, அது என்னையும் குளிர செய்கிறது. . ஆம் இந்த பிரபஞ்சத்தில் நான் தனித்து நிற்கிறேன். ஏன் எனும் கேள்வி மட்டுமே என்னுள் எஞ்சி இருக்கிறது..

விஷ்ணுபுரத்தை முதல் முறை வாசித்த சமயம், அதுவே நான் வாசித்த முதல் பெருநாவல். எந்த ஒரு மகத்தான இலக்கிய ஆக்கமும்  அதை அணுகும்  வாசகனை கலைத்து மீண்டும் கட்டி எழுப்பும். அந்த அனுபவத்தை முதன்முதலாக எனக்கு  விஷ்ணுபுரமே அளித்தது. மலை உச்சியை நோக்கி மூச்சிரைக்க, பதைபதைப்புடன் ஓடி, அதன் சிகர நுனியில் ஏறி நின்று கீழே பார்த்தால் புலப்படும் அந்த ஒட்டுமொத்த காட்சி கொடுக்கக் கூடிய வார்த்தைகளில் அடைபடாத அந்த பிரமிப்பு, திகைப்பு, பீறிட்டு கிளம்பும் அர்த்தமற்ற ஆழ்ந்த துக்கம் போன்றவையே முதல் வாசிப்பில் என்னை நிறைத்தது.

வாசகனின் வாசிப்பு பெருகிய பிறகு மீண்டும் ஓர் படைப்பை மீள் வாசிப்பு செய்யும் போது, பெரும்பாலான படைப்புகள் நம்மை ஈர்ப்பதில்லை. ஆனால், வெகு சில படைப்புகள் மட்டுமே நம் வாசிப்பின் விரிவை பொருத்து தன்னை வாசகனுக்கு முன் விரித்துக்கொண்டே போகும். நுனிகள் அகப்படாத, சுருட்டி வைக்கப்பட்ட மாய ஜமக்காளம் போல முடிவற்ற உள் மடிப்புகள் கொண்டது. எத்தனை முறை மீள்வாசிப்பு செய்தாலும் அதையும் தாண்டி அதில் ஏதோ ஒன்று எஞ்சி நிற்கும். அப்படைப்புகளே காலத்தை கடந்து நிற்கும் செவ்வியல் படைப்புகளாகும். வாசிப்பின் இடைவெளி, வாழ்வனுபவ செறிவு ஆகியவை  இனைந்து ஓர் படைப்பின் களத்தை விரிவு படுத்துகிறது. அவ்வகையில் விஷ்ணுபுரம் பாலைவனத்தில் தாகமெடுத்து திரியும் பயணி கண்டெடுக்கும் வற்றாத நீர் ஊற்று. ஒரு போதும் அவன் தாகம் முழுவதுமாக தீர்வதில்லை.

 நினைவுனர் கண்ட கனவுணர

கனவு தான். உண்மையில் விஷ்ணுபுரம் யாருடைய கனவு? யுகம் யுகமாக தொடரும் ஒற்றை கனவு. ஒரு மகத்தான கவியின் மனதில் உதித்த கனவு. காலந்தோறும் பல்கி பெருகும் மானுட பெருங்கனவு. நம் மரபுகளில் கூட, இத்தனை முரண்களையும் விசித்திரங்களையும் உருவாக்கிய  இறைவன் ஆதி கவி என்றும் மகத்தான கவி என்றும் பாடப்படுகிறார். காண்பவர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும் கனவு. சங்கர்ஷனின் கனவு, திருவிக்ரமரின் கனவு, ப்ரேசனரின் கனவு.  கனவிற்குள் இருக்கும் போது அது தானே நினைவு . அது கனவென்று ஆவது விழித்த பின்னர் தான். விழிப்பு என்பதும் மற்றுமொரு கனவாக இருந்தால்? என்றேனும் விழித்தெழ முடியும் என்று நம்பும் மனம் அனைத்தையும் கனவென நம்புகிறது. ஜெயமோகனின் அறைகள் சிறுகதையில் உள்ள அறை கதவை போல, அந்த கதவுக்குள் உள்ள கதவென முடிவிலியை நோக்கி விரியும் கதவுகள்.

ஒரு யானையின் கனவு எப்படி இருக்கும்? அது காணும் உலகும், அதனுடைய ஆழ்மன ஏக்கங்களும் எப்படி இருக்கும்? அங்காரகன் நிலவை பழுப்பு நிற பழமாக காண்கிறது, கால்கள் இல்லாத யானையைப்போல் மேக நிழல் புல்வெளியின் மீது படர்கிறது. கரும்பாறை மெல்ல தன் தாயாக உருமாறுவதை அது உணர்கிறது, கல் தூண்களில் கால் கட்டப்பட்ட யானை தன் தாயை எண்ணி ஏங்குகிறது. சக மனிதன் காணும் கனவின் தீவிரத்தை கூட உள்வாங்க முடியாத மானுட மனத்தின் முன்பு ஒரு யானையின் கனவு கண் முன் நிறைகிறது, அது உணரக்கூடிய பிரத்யேக மனங்களையும், காணக்கூடிய காட்சிகளையும் நாம் கண்டு உணர்கிறோம். விஷ்ணுபுரத்தின் கட்டற்ற கற்பனைக்கு இது ஓர் சிறிய சான்று.

கால பைரவனின் குறியீடாக, மரணத்தின் குறியீடாக சுடரும் இரு சிவப்பு தழல்களை கண்ணில் சுமந்து திரியும் நாயை நாம் நாவல் முழுவதும் காண்கிறோம். மரணத்தை உணர்த்தும் அந்த நாய் பிரியையின் கனவில் வருகிறது. சூரியன் கருத்து, அதற்கு இரு காது மடல்கள் முளைத்து கரிய மேகத்தையே தன் உடலாக கொண்ட அந்த நாய் மெல்ல தன் கோரைப் பற்களால் விஷ்ணுபுரத்தை விழுங்கும் அந்த கனவு பிரளயத்தின் ஆக சிறந்த குறியீடு. ஒவ்வொரு மரணத்திற்கும் முன்பு வந்த கால பைரவன், ஒட்டுமொத்த விஷ்ணுபுரத்தின் மரணத்தை முன்னறிவிக்கிறது.

தன் இளமை பருவத்தில் லட்சுமி காணும் கனவு, அவளுடைய லட்சிய ஆண் பிம்பத்தை அணுவணுவாக செதுக்கி அவனுக்கு உயிர் கொடுத்து, தனக்குள்ளே புதைந்த ரகசியமாக அதை பேணி பாதுகாத்து வைக்கிறாள். தன்னுலகத்தை துல்லியமாக இரண்டாக வகுத்துக் கொண்டாள். தேவையான நேரத்தில் எந்த குற்ற உணர்வும் இன்றி தன் கனவை அவளால் உருவாக்க முடிந்தது.

மகாசிற்பி ப்ரசெனர் காணும் அந்த கனவு, மணல் மூடிய நிலப்பரப்பின் ஆழத்தில் உறங்கி கொண்டிருக்கும் விஷ்ணுவின் கால்களை தோண்டி எடுக்கிறார். கனவில் துல்லியமாக அந்த ஸ்ரீ சக்கரத்தை காண்கிறார். அந்த பிரம்மாண்டமான மணற்பரப்பில் பரந்து விரியும் சக்கரம், உண்மையில் அந்த சக்கரம் விஷ்ணுபுரம் தான் என்பதை காசியபர் உணர்த்துகிறார். ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவில் மனம் பதைபதைப்புடன் விழித்துக்கொள்கிறது.

பத்மனின் கணவனுபவங்களும் இத்தகையதே. கரிய நாயை தன் கனவில் காணும் பத்மன் பயந்து தலையை உலுக்கி மற்றொரு கனவில் துயில் எழுகிறான். அங்கு இரண்டு தலைகளும் ஏழு கால்களும் கொண்ட கன்றுகுட்டியில் மேல் அமர்ந்து வரும் தீர்க்க சியாமையை புனர்கிறான். மீண்டும் தலையை உலுக்கி கனவில் இருந்து விழித்து எழுகிறான்.

மெய்நிகர் அனுபவம்

ஜெ தன்னுடைய நாவல்களில் எப்போதுமே அபாரமான புலன் அனுபவங்களை அளிக்க தவறுவதில்லை. வாசிப்பில் நம் புலன்கள் திறந்துகொள்ளும் அற்புத தருணங்களுக்கு விஷ்ணுபுரத்திலும் குறைவில்லை.

விஷ்ணுபுரத்திற்குள் நுழைகையில் முதலில் நம்மை ஆட்கொள்வது அதன் பிரம்மாண்டம் தான். தோரனவாயிலும், அதில் உள்ள கருடனும் விஸ்வக்சேனனும், விண்ணை முட்டும் ராஜ கோபுரமும், யானைகள் ஆட்டும் எண்ணெய் செக்கும், தொனிகளில் நிறைந்து வழியும் அப்பமும். இவை  மட்டுமின்றி  வெற்றிலை சாறு துப்பிய சகதி, மலமும் குப்பைகளும் நிறைந்த சந்துகள், அக்கார அப்பத்தின் குடலை பிரட்டும் வீச்சம்,  என ஒவ்வொரு துளியிளும் ஸ்ரீபாதம் முழுவதும் அந்த பிரம்மாண்டம் விரவி கிடக்கிறது.

இந்த நாவல் முழுவதுமே அபாரமான காட்சிகள் நிறைந்தது. நகரத்தின் பிரம்மாண்டத்தை சூட்ட ஜெ இரண்டு விதமான கோணங்களை தெளிவாக பயன்படுத்துகிறார். மேலிருந்து கீழே நோக்கும் போது கண் முன் விரியும் ஒட்டுமொத்த பிரம்மாண்டத்தை காட்சிபடுத்துவது, பறவையின் பார்வையிலோ அல்லது சிகர உச்சியில் இருந்து கீழ் நோக்குவது போலோ, , அல்லது கீழே நின்று மேல் நோக்கி அண்ணாந்து பார்ப்பது. ஜெ ஒரு யுத்தியாகவே நகரத்தை பறவை பார்வையில் வர்ணிக்கிறார். அவரால் சட்டென்று சிறகு விரித்து மேலெழுந்து அந்த கோணத்தில் காட்சிபடுத்த முடிகிறது. தோரண வாயிலை நெருங்கும் வண்டிகளில் இருந்து எழும் நாராயண நாம கோஷம்  ‘ பல்லாயிரம் கால்களுடன் பாதை நிறைந்து ஊர்ந்துவரும் மாபெரும் விலங்கொன்றின் குரலாக ஆயிற்று’ என்கிறார், எத்தனை மகத்தான கற்பனை! யானைகள் உள்ள கஜ மண்டபத்தை பற்றி விளக்கும் போது, தூரத்தில் இருந்து கண்டால் யானைகள் சிறு பன்றிகளாக தென்படுகின்றன, அருகிலிருந்து நோக்கும் போது பெரும் கரிய மதில் சுவராக அனைத்தையும் மறைத்து நிற்கின்றன. தோரணவாயிலில் செதுக்கப்பட்டுள்ள கருடன் மெல்ல மறைந்து அவன் காலுக்கு கீழே உள்ள கொடியின் ஒரு இலை மட்டும் அத்தனை பிரம்மாண்டமாக தென்படுகிறது. எந்த வராக ப்ருஷ்ட மலையில் நோன்பிருந்து ஏறி ராஜகோபுரத்தை தரிசிக்க வேண்டுமோ, அதே பன்றி குன்றில் நின்று பார்க்கும் போது ராஜகோபுரம் சோனாவின் பெருவெள்ளத்தில் மறைந்து போகிறது.

மெய்நிகர் அனுபவம் என நான் இங்கு சூட்ட முயல்வது காட்சி படுத்துதல் மட்டுமல்ல. பிற புலன்களிலும் அந்த அனுபவத்தை நம்மால் உணர முடியும். காடு நாவலில் மொச்சை மனம் கொண்ட மிளாவை பற்றிய விவரணை வரும், அந்த மனம் நாசியை விட்டு அகல்வதற்கு பல நாட்கள் ஆகின. அதேப்போல் லட்சுமி தன்னை கிளர்சியுற செய்யும் முதல் வாசமாக கம்பீரமான ஆட்டு கிடாவின் உடலில் இருந்து எழுந்த வீச்சத்தை தான் உணர்கிறாள், அவளுடைய கனவு ஆண் பிம்பத்தோடு அந்த வீச்சம் நுட்பமாக பின்னி பிணைந்துள்ளது. தோணிகள் நிரம்ப அக்கார அப்பத்தை சுட்டு நிரப்பும் சமயக்காரர் வீமன் குடலை பிரட்டும் அக்கார அப்பத்தின் வீச்சத்திலிருந்து தப்பித்துக்கொள்ள கள்ளை மொண்டு அள்ளி குடித்து ரத்த வாந்தி எடுக்கிறான். சுவர்ண காண்டத்தின் பேரொலி நம் காதுகளில் அதிர்வதை உணர முடிகிறது. சாருகேசியுடன் மஞ்சத்தில் இருக்கும் போது பிங்கலனுக்கு ‘ஒலியின்மை’ ஒரு ரீங்காரமாக மாறி நிறைக்கிறது.

ஸ்ரீபாதத்தில் உஷையின் அழகில் மையல் கொள்ளும் மகாபத்மன் விஷ்ணுபுரத்தின் விராட வடிவம் என்றால், அந்த விராட வடிவத்தின் ஆழ்மனம் தான் சித்தனும் காசியபனும் காணும் சூரிய ஒளிபடாத, நாற்றமெடுக்கும், சிதைந்த பிம்பங்களை காட்டும் பாதாளக் குளம்.

சங்கர்ஷணன் தன்னுடைய காவியத்தின் மூன்று பாகங்கள் எதை முன்னிறுத்துகிறது என்று விளக்கும் போது, கௌஸ்துபம் ஞானத்தையும் ஸ்ரீபாதம் சரணாகதியையும் மணிமுடி விஸ்வரூபத்தையும் குறிப்பதாக முன்வைக்கிறான். மனிதன் ப்ராம்மண்டங்களை கண்டு அஞ்சுகிறான், தன் தர்க்க சட்டகத்துக்குள் அகப்படாதவைகள் அவனுக்கு எப்போதுமே குழப்பத்தை உண்டாக்குகின்றன. ஒன்று அதை கண்டு அவன் மனம் வியப்பு கொள்கிறது, இல்லையேல் அதை தன் தர்க்க எல்லைக்குள் கொணர்ந்து மறுதலிக்கிறது. வியப்பு காலபோக்கில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த அச்சம் அதிகாரத்தை நிலைநிறுத்த பயன்படுத்தப்படுகிறது. இதையே நாம் விஷ்ணுபுரத்தில் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.  அச்சமூட்டும்  பிரம்மாண்டத்தின் தூல வடிவு தான் ஸ்ரீ பாதத்தில் நாம் காணும் விஷ்ணுபுரத்தின் வர்ணனை. அங்கு அவனுடைய அகங்காரம் விஷ்ணுபுரத்தின் பேராலயம் எனும் மதகஜத்தால் நசுக்கப்படுகிறது. தன் போதாமைகளை கண்டு அரற்றுகிறான், தனிமையில் உழல்கிறான், பெருவெள்ளத்தில் கரைந்துவிடக்கூடாது என தத்தளிக்கிறான். ஞானத்தை முன்னிறுத்தும் கௌஸ்துப காண்டத்தில் இத்தகைய பிரம்மாண்ட வர்ணனைகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s