எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
மெய்ஞானமரபு என்பது என்ன?
இந்து மெய்ஞான மரபு என்றால் என்ன என்னும் கேள்வியினை மிக விரிவாகவும் தெளிவாகவும் நாம் எழுப்பியாகவேண்டிய தேவை இன்று உள்ளது. இம்மரபின் உள்ளேயுள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள இது அவசியம்.
முதலில் இது குறித்து நமக்கிடையே உள்ள பிழையான புரிதல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்து மெய்ஞானமரபு என்று கூறும்போது இந்து மதத்தையே நாம் குறிப்பிட்டுகிறோம். சிலர் பெளத்த மதத்தையும் சமண ( ஜைன ) மதத்தையும் சேர்த்துக்கொள்வார்கள்.
இந்து மதம் என்றால் என்ன? இப்போது நாம் இந்து மதம் என்று குறிப்பிடுவது உண்மையில் சைவம், வைணவம், சாக்தேயம், கெளமாரம், காணபத்யம், செளரம் என ஆறு வழிபாட்டுமுறைகைளின் தொகுப்பு ஆகும். நமது பழைய வழக்கப்படி ஒரு மதம் என்பது ஒரு குறிப்பிட்ட இறைவனை வணங்கும் வழிபாட்டு மறபே.
இந்த பட்டியலில் சேர்க்கப்படாத ஏராளமான சிறு வழிபாட்டு முறைகளும் இந்துமதம் என்ற அமைப்புகுக்குள் காணப்படுகின்றன. பல்வேறு பிராந்திய வழிபாட்டு முறைகள் படிப்படியாக இந்து மதத்தில் சேர்வது இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பழங்குடி மக்கள் மற்ற மக்களுடன் தொடர்புகொள்வது அதிகரித்தது. அவர்களுடைய வழிபாட்டு முறைகள் இந்து மதத்தில் சேர்ந்தன. இது சமீப காலத்து உதாரணம்.
அதேபோல இந்து மதம் என்று பொதுவான அமைப்பில் இருந்து பல்வேறு புதிய வழிபாட்டு முறைகளும் தொடர்ந்து பிறந்து வளர்ந்து வருகின்றன. உதாரணமாக ஓஷோ போன்றவர்களின் புதுவகைத் தியான முறைகளைக் கூறலாம். இவர்களில் சிலர் தங்களை இந்து மதத்துடன் சேர்த்துப் பார்ப்பதை விரும்புவது இல்லை.
புத்தமதமும் சமணமதமும் அதிக மாற்றங்கள் இல்லாமல் இந்தியாவில் சிறிய அளவில் இருந்து வருகின்றன.
இந்த வழிபாட்டு முறைகளை இந்து மெய்ஞான மரபு என்று கூற முடியுமா? முடியாது. இவை மெய்ஞான மரபின் வெளிப்பாடு முறைகள் மட்டுமேயாகும். இவற்றுக்கு எல்லாம் பொதுவாக இருக்கும் ஞான ஓட்டத்தையே மெய்ஞான மரபு என்று கூற முடியும்.
அந்த சிந்தனை ஓட்டத்தின் அடிப்படையிலேயே வேறு வழிபாட்டு முறைகள் இந்து மதத்துடன் இணைக்கப்படுகின்றன. அந்த சிந்தனை ஓட்டதில் இருந்துதான் புதிய வழிபாட்டு முறைகள் உருவாகி வருகின்றன.
அதாவது இப்படிக் கூறலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினரின் குலதெய்வமான இசக்கி அம்மன் இந்து மெய்ஞான மரபில் இணைந்து இந்து தெய்வமாக ஆகிறது. இயற்கையின் ஒழுங்கையும் அழகையும் தியானம் செய்தால் பிரபஞ்சத்தை பற்றிய மெய்ஞானம் உருவாகும் என்று ஜே.கிருஷ்ணமூர்தி சொல்கிறார். இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையேயான உறவு என்ன?
இசக்கி அம்மன் வழிபாடு இந்து மதத்தில் இணைகிறது.ஜே.கிருஷ்ணமூர்த்தின் தியான முறை இந்து மதத்தில் இருந்து வளர்ந்து பிரிகிறது. இசக்கி அம்மன் வழிபாடு இந்து மதத்தில் உள்ள ஒரு சாராம்சமான பகுதியுடன் வந்து இணைகிறது. அந்த சாராம்சமான பகுதியிலிருந்துதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி உருவாகி வளர்ந்து வருகிறார்.
அது என்ன? இயற்கையில் உள்ள அழகினையும் ஒழுங்கையும் கண்ட பழைய ரிஷிகள். இயற்கையைத் தாய் வடிவிலும் இளம் கன்னி வடிவிலும் உருவகித்துக் கொண்டார்கள். ராத்ரி தேவி, உஷை தேவி என்று இரவையும் காலையையும் கூட பெண் தெய்வங்களாகக் கண்டு வழிபட்டார்கள்.
இந்த தரிசனத்திலிருந்து சக்தி வழிபாடு உருவாகி வளர்ந்தது. கல்வி, செல்வம், ஈரம் அனைத்தும் பெண் தெய்வங்கள் உருவகம் செய்யப்பட்டன. புராதன தாய்த் தெய்வமான இசக்கி அம்மன் இந்த வரிசையில் போய்த்தான் இணைகிறது. அதாவது இயற்கையைப் பற்றி ஆதி தரிசனத்தில் இசக்கி அம்மனும் ஒரு பகுதி ஆகிவிடுகிறது.
இவ்வாறு இனைந்த பிறகு இசக்கி அம்மனைப் பற்றி பாடப்படும் துதிகள் முழுக்க இயற்கையின் அழகு, கருணை ஆகியவற்றைப் பற்றிய வரிகளாக இருப்பதைக் காணலாம்.
இயற்கையைப் பற்றிய அந்த ஆதி தரிசனத்தில் இருந்தே ஜே.கிருஷ்ணமூர்த்தியும் பிறந்து வருகிறர். பழைய காலத்தில் அந்த தரிசனத்தை உருவமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள முயன்றார்கள். அதனால்தான் பல்வேறு தெய்வ உருவங்களைக் கற்பிதம் செய்தார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி அந்த ஆதி தரிசனத்தை நேர்மாறாக உருவமற்ற தூய அனுபவமாக அடையச் சொல்கிறார். அதற்கு வழிகாட்டுகிறார்.
இயற்கையைப் பற்றிய இந்த ஆதி தரிசனத்தைப் போலவே பிரபஞ்ச உருவாக்கத்தைப் பற்றியும் பிரபஞ்சம் இயங்கும் முறை பற்றியும் ஏராளமான தரிசனங்கள் உள்ளன. இத்தகைய தரிசனங்களின் வெளிப்பாட்டு நிலையையே நாம் வழிபாட்டு முறைகள் என்கிறோம்.
அதாவது பிரபஞ்சத்தை ஓங்கார வடிவமாகப் பார்ப்பது ஒரு தரிசனம். அந்தத் தரிசனைத்தையே பிள்ளையாரின் வடிவமாக மாற்றிக்கொண்டால் அது காணபத்யம் என்ற வழிபாட்டு முறை.
காளி, பள்ளி கொண்ட விஷ்ணு, அரங்கத்தில் ஆடும் நடராசர் என நாம் காணும் எல்லாக் கடவுள்களும் தரிசனங்களேயாகும் என்பதை விளக்க வேண்டியது இல்லை. ஒரு தரிசனம் வளர்ந்து பல்வேறு வழிபாட்டு முறைகளை ஒன்றாக இணைத்துக் கொள்வதும் சாதாரணமாக நடப்பதுதான்.
உதாரணமாக பிரபஞ்சம் என்பது பிரம்மாண்டமான சக்திப் பிரவாகம் என்பது ஒரு தரிசனம். இதிலிருந்து சக்தி வழிபாடு ( சாக்தேய மதம் ) பிறந்தது. பலநூறு அம்மன்கள் சக்தியின் வெவ்வேறு வடிவங்களாகக் கருதபட்டனர். இந்தியா முழுக்க உள்ள பல்லாயிரம் புராதனமான தாய்த் தெய்வங்கள், சக்தியின் பல்வேறு தோற்றங்களாக எப்படி ஒன்றாகத் தொகுக்கப்பட்டன என்பதனை டி.டி.கோசாம்பி என்கிற வரலாற்று ஆராய்ச்சியாளர் விரிவாக விளக்கிக் காட்டுகிறார்.1
1. டி.டி.கோசாம்பி மார்க்சிய அடிப்படையில் வரலாற்றாய்வை மேற்கொண்ட இந்திய ஆய்வாளர். இவரது “ஐதீகமும் உண்மையும்’ ( Myth and Reality ) என்ற நூலின் மூன்றாவது அத்தியாயம் சக்தி வழிபாடு எப்படி பண்டைய தாய்த் தெய்வ வழிபாடுகளின் தொகுப்பாக ஊருவாகி வந்தது என்பதைக் குறித்து பேசுகிறது
அதாவது, சக்தி குறித்த தரிசனம் நார் போல. அம்மன்கள் மலர்கள் போல. சாக்தேய மரபு என்பது ஒரு மலர் மாலை.
இப்படிப்பட்ட தரிசனங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால்தான் இந்து மெய்ஞான மரபினை நாம் அறிய முடியும். மெய்ஞான மரபு என்பது தரிசனங்களின் வரிசையே ஆகும்.
இது குறித்து பேசும்போது உருவாகும் இன்னொரு பிழையான புரிதலையும் இங்கு தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். மெய்ஞான மரபு என்பதைப் பலர் நம்பிக்கைகளின் தொகுப்பாக உருவகித்து வைத்துள்ளனர். மதநம்பிக்கைகள், தத்துவ நம்பிக்கைகள், சடங்கு நம்பிக்கைகள். இவ்வாறு அந்நம்பிக்கைகள் பலவகைப் படுகின்றன
இந்துமதம் குறித்தும் இந்த மெய்ஞான மரபு குறித்தும் பேசுகின்ற மேற்கத்தியத் தத்துவ அறிஞர்கள் சிலரும் இந்த கண்ணோட்டத்தை முன் வைத்துள்ளனர். 2
2. உதாரணமாக ருஷ்ய வரலாற்றாய்வாளர்களான கே.ஏ.அந்தோனவா,கே.எம்.போன்காரத் லெவின் ஆகியோரின் ‘ இந்தியாவின் வரலாறு’ என்ற நூலில் தரப்பட்டுள்ள விளக்கம் இதுவே. மார்க்ஸிய வரலாற்றாய்வாளரான கே.தாமோதரன் தன் ‘இந்தியச் சிந்தனை’ என்ற நூலிலும் இதே விளக்கத்தையே தருகிறார்.
இந்துமதம் என்பது மறுபிறவி, கர்மவினை போன்ற சில நம்பிக்கைகளைப் பொதுவாகக் கொண்ட ஒரு அமைப்பு என்று இவர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல ஆலய வழிபாடு, தீர்த்த யாத்திரை போன்ற சில சடங்கு முறைகளைப் போதுவாகக் கொண்ட ஒர் அமைப்புதான் இந்துமதம் மற்றும் இந்து மெய்ஞான மரபு என்றும் சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக இவை மார்க்சிய மரபை சேர்ந்த வரலாற்றாய்வாளர்களின் பார்வைகள். இவை மேலோட்டமான பார்வைகள் மட்டுமே. நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் ஆதாரமாக இருப்பது அடிப்படையான தரிசனமேயாகும். அத்தரிசனத்தை ஒட்டி வாழ்கையை அமைத்துக் கொள்ளும் பொருட்டுதான் நம்பிக்கைகளும் சடங்குகளும் உருவாகி வந்துள்ளன.
இறுதியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், இந்துத் தத்துவ மரபுக்கும் இந்து மெய்ஞான மரபுக்கும் இடையேஉள்ள வித்தியாசம். இந்துத் தத்துவ மரபுதான் இந்து மெய்ஞான மரபு என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் 3
3. இந்திய ஞான மரபை இந்தியத் தத்துவ மரபாக அணுகலாமா என்று குறித்து மிக மிக விரிவான அளவில் விவாதங்கள் இந்தியவியல் அறிஞர்கள் நடுவே நடந்துள்ளன. டாக்டர் குந்தர், க்ளேசன் ஏப் அகேகானத்த பாரதி ஆகியோர் இந்திய ஞானமரபினைத் தத்துவ மரபாக மட்டும் கொள்ளலாகாது என்று வாதிடுபவர்களில் முக்கியமானவர்கள்.
சில கல்வி நிலையங்களில் அவ்வாறு கற்பிக்கப்படுவதும் உண்டு.
தத்துவம் என்பது என்ன? ஒரு சிந்தனைத் துறையில் உள்ள தர்க்கங்களின் ஒட்டு மொத்த தொகுப்பே தத்துவம் என்பது. அதாவது தர்க்கபூர்வமான விஷயங்கள் மட்டுமே தத்துவத்தின் எல்லைக்குள் வர முடியும்.
இந்துத் தத்துவ மரபு எனும் போது இந்து மரபில் உள்ள பல்வேறு சிந்தனைப் போக்குகளை மட்டுமே கூறமுடியும். ஆனால் தரிசனம் என்பது சிந்தனையினால் உருவாக்கப்பட்டது அல்ல. தர்க்கமானது ஒர் எல்லை வரை மட்டுமே போகமுடியும். தரிசனங்களில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களே அதிகம்.
உதாரணமாக ‘பிரபஞ்சமே ஒரு சக்திப் பிரவாகம்’ என்ற ஆதி தரிசனம், தர்க்கபூர்வமாக ஒருவர் அடையப் பெற்ற ஒன்றாக இருக்க இயலுமா என்ன? தன்னை சுற்றி ஒவ்வொரு பொருளையும் எடுத்துப் பகுப்பாய்வு செய்து வந்த இறுதி முடிவா இது? இல்லை. அது ஒரு மனத்திறப்பின் கணத்தில் அடைந்த ஒட்டு மொந்தமான அகப்பார்வை மட்டுமே.
அத்தரிசனத்தைப் பிறருக்கும் விளக்கும் பொருட்டு அதற்கு தர்க்கபூர்வமான ஒர் அடிப்படையை உருவாக்கிகொள்ளாலாம். தர்க்கப்பூர்வமாக ஒர் எல்லைவரை விவாதிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தர்க்கம் நின்றுவிட நேரும்.
ஆகவேதான் எல்லாத் தரிசனங்களும் தர்க்கம் மூலமும், கவித்துவம் மூலமும், பல்வேறு உவமை உருவகங்கள் மூலமும் விளக்கபடுகின்றன. எல்லா வழிமுறைகளுமே அப்படி விளக்குவதற்குத் தேவையாக ஆகின்றன. சிந்தனை செய்தும், கற்பனை செய்தும், தியானம் செய்தும் அவற்றை அறிந்து கொள்ள வேண்டியதுள்ளது.
ரிக்வேதகால ரிஷி முதல் வள்ளலார் வரையான இந்திய மெய்ஞானிகளுக்கும் சாக்ரடீஸ் முதல் ரஸ்ஸல் வரையிலான மேற்கத்தியத்ததுவ ஞானிகளுக்கும் இடையேயுள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான். ஞானிகள் அடைந்தது மெய்ஞானம். தத்துவ ஞானிகள் அடைந்தது தத்துவன் ஞானம். மெய்ஞானத்தில் தத்துவமும் அடக்கம். கூடவே அது உள்ளுணர்வினால் அறியப் பட வேண்டியதும் கூட.
ஆகவே மெய்ஞான மரபைத் தத்துவப் போக்குகள் மூலம் அறிந்து விட முடியாது. தத்துவ மரபு தனியாகப் பயிலப்பட வேண்டியது அவசியமானதுதான். நமது சிந்தனைகளின் பாரம்பரியப் பின்புலம் என்ன என்று அறிவதற்கு அது இன்றியமையாதது. எந்தச் சிந்தனையும் பாரம்பரியத்திலிருந்து பிறவி கொள்வதேயாகும். எந்தச் சிந்தனையயும் அவற்றின் பாரம்பரியத்துடன் தொடர்புபடுத்தித்தான் யோசிக்கவேண்டும். ஆகவே கல்வி நிறுவனங்களில் இந்து / இந்திய தத்துவ மரபு கற்பிக்கப்படுவது மிக அவசியம்.
ஆனால் தத்துவ மரபு குறித்த கல்வி என்பது மெய்ஞான மரபு குறித்த கல்வி ஆகாது. இரண்டையும் ஒன்றாகக் காண்பதனால் தரிசனங்களையெல்லாம் வெறும் தத்துவ நிலைபாடுகளாகப் பார்க்கும் பிழை ஏற்படுகிறது. பெரும்பாலான இந்தியாவியல் அறிஞர்கள் ( Indologists ) இப்பிழையை செய்தவர்கள்தான்.
தரிசனங்கள் என்பவை தத்துவ நிலைபாடுகளும் கூடத்தான். ஆகவே மெய்ஞான மரபு என்பதும் தத்துவ மரபு கூடத்தான். ஆனால் தத்துவத்திற்கு அப்பால் கற்பனைகளும் உள்ளுணர்வும் செல்லும் தூரம் வரை தரிசனங்கள் நீண்டு செல்கின்றன, மெய்ஞான மரபும் அப்படி நீண்டு செல்கிறது.
ஒரே வரியில் இப்படிக் கூறலாம். அறிவு என்பதற்கும் ஞானம் என்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசம்தான் அது.
அடுத்து வருவது ..
தரிசனம் என்றால் என்ன?