எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தரிசனங்களின் அடிப்படைகள்
தரிசனங்களின் அமைப்பு முறை
ஒரு தரிசனத்தின் பொதுவான அமைப்பு முறை எப்படிப்பட்டது? இந்து மரபின் ஆதி தரிசனங்கள் நன்கு வளர்ந்து மேம்பட்ட நிலையில் உள்ளன. பெரும்பாலான தரிசனங்களை நாம் மதங்களின் ஒரு பகுதி என்ற நிலையிலேயே காணமுடிகிறது. வேறு பல தரிசனங்களைப் பல்வேறு துறைகளில் அவை பிரதிபலிப்பதை வைத்து ஊகித்து அறியவேண்டியுள்ளது. ஆகவே இந்து மரபின் ஆறு தரிசனங்கள் எப்படி உள்ளன என்பதை வைத்து இந்த நிர்ணயத்தினை நடத்துவதே உசிதமானது.
ஒரு தரிசனம் பெரும்பாலும் ஒர் ஆதி குருவின் மொழியிலிருந்து தொடங்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனம் கபிலரின் கூற்றுகளிலிருந்தே தொடங்குகிறது. ஆகவே கபிலர் சாங்கியக் குரு என்று அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அத்தரிசனம் அவரால் சூனியத்தில் இருந்து உருவாக்கப்பட்டது அல்ல. உலகத்தில் இதுகாறும் உருவான எந்த தரிசனமும் அப்படி ஒரு தனி நபரால் திடீரென்று கண்டடையப்பட்டது அல்ல என்று உறுதிபடக் கூறிவிட முடியும்.
தரிசனங்களின் விதைகளை நாம் நம் மொழியில் சாதாரணமாகவே காண முடியும். நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள்,பழங்கதைகள் முதலியவற்றில் அவை புதைந்து கிடக்கும். அதேபோல புராதனமான சடங்குகள், தெய்வ வடிவங்கள் ஆகியவற்றிலும் அவை உறைந்திருக்கும். அவை மனித மனத்திலிருந்து இயல்பாகவே உருவாகி மொழியிலும் கலையிலும் வெளிப்பட்டவை ஆகும்.
ஒரு விழிப்புற்ற மனம் அந்தத் தரிசனத்தைக் கண்டுபிடிக்கிறது அவ்வளவுதான். விதையை அந்த மனம் பெரிய மரமாக ஆக்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனத்தின் சாராம்சம் என்ன?
நம் கண் முன் உள்ள எல்லாவற்றையும் அது இயற்கை ( பிரகிருதி) என்று கூறி அடையாளப்படுத்துகிறது. இதற்கு மூன்று குணங்கள் உள்ளன என்கிறது. சத்துவகுணம், ரஜோகுணம், தமோகுணம். இந்த மூன்று குணங்களும் இயற்கையில் மாறி மாறி வருகின்றன. இந்த மாற்றங்களைத்தான் நாம் இயற்கையின் இயக்கமாகக் காண்கிறோம்.
இயற்கையில் இந்த மூன்று குணங்களும் சமநிலையில் இல்லை. மூன்று தட்டுகள் கொண்ட தராசு போன்றது இயற்கை. தட்டுகள் ஆடியபடியே உள்ளன. ஒவ்வொரு சமயம் ஒரு தட்டு மேலெழுகிறது. தொடர்ந்து இயற்கையில் இம்மூன்று குணங்களும் ஒன்றொடொன்று மோதியபடியே இருக்கின்றன.
இந்த மூன்று குணங்களும் முற்றிலும் சமநிலையில் இருந்த நிலை ஒன்று இருந்திருக்கவேண்டும். அப்போது இயற்கையில் இயக்கமே இருந்திருக்காது. சலனமே இல்லாமல் இயற்கை இருந்திருக்கவேண்டும். அதை முதல் இயற்கை (மூலபிரகிருதி) என்று சாங்கியம் வகுத்துக் கூறுகிறது. இயற்கையில் நிகழும் மாற்றங்களின் அடிப்படையிலேயே காலம் அறியப்படுகிறது. முதல் இயற்கையில் மாற்றங்களே இல்லை. எனவே அதற்குக் காலமும் இல்லை.
பிறகு எப்போதோ ஒரு கணத்தில் முக்குணங்களின் சமநிலை குலைய நேரிட்டது. குலைந்த சமநிலையை மீட்பதற்காக மூன்று குணங்களும் மாறி மாறி மோதின. இதன் விளைவாகப் பல்வேறு இயற்கைப் பொருட்களும் உயிர்களும் உருவாயின. நான் காணும் பிரபஞ்சம் உருவாயிற்று. மீண்டும் முக்குணங்களின் சமநிலை உருவாகும் போது நாம் காணும் இந்த இயற்கை தன் முதல் நிலைக்குத் திரும்பிவிடும். இதுதான் சாங்கியத் தரிசனத்தின் சாரம்.
சாங்கிய தரிசனத்தை ”ஆதி இயற்கைவாதம்” என்று சுருக்கமாகக் கூறிவிடலாம். இதை கபிலர் எங்கிருந்து பெற்றிருக்கக்கூடும்? யோசித்துப் பார்த்தால் தெரியும். மனிதன் முதலில் வழிபட்ட தெய்வம் இயற்கைதான் என்று. பிரகிருதி என்ற சொல்லுக்கு மண் என்றும் பொருளுண்டு. மண்ணை வழிபடும் மரபுக்கு நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்குப் பழமை உண்டு.
இன்று விவசாயச் சடங்குகளில் மண்ணின் சமநிலையைக் குலைப்பதற்காக விவசாயி மன்னிப்பு கோரும் சடங்குமுறைகள் பல உண்டு. மண் தன் பரிபூரண நிலையில் இருப்பதாகவும் மழை அதன் பரிபூரண் நிலையைக் குலைத்துவிடுவதன் வழியாகவே உயிர்களும் வாழ்க்கையும் உருவாகிறது என்றும் பல பழங்குடி வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை உள்ளது. பருவ மாற்றங்கள் வழியாக மண் மீண்டும் தன்னுடைய ஆதி முழுமைக்குத் திரும்புகிறதாக நம்பப்படுகிறது.
ஆகவே புராதனமான நில வழிபாடு. இயற்கை வழிபாடு முதலிய கருத்துக்களில் இருந்துதான் சாங்கியத் தரிசனத்தின் விதை கிடைத்ததுள்ளது. பிரபஞ்ச இயக்கத்தையே விளக்கக்கூடிய ஒன்றாக சாங்கியம் அதை வளர்த்து எடுத்தது. இதுதான் கபிலரின் சாதனையாகும்.
இவ்வாறு ஒர் ஆதிகுருவால் முன் நடத்தப்படும் தரிசனம், உடனடியாக ஒரு தத்துவ அமைப்பினை உருவாக்கிக்கொள்கிறது. அந்த முதல் கட்ட தரிசனத்தை வாழ்கையின் எல்லாக் கட்டங்களும் எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்று முயற்சி செய்யும் போதுதான் தத்துவத்தின் அவசியம் ஏற்படுகின்றது
உதாரணமாக ஆதி இயற்கையின் பரிணாம நிலைட்கள்தான் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் என்று சாங்கியம் குறிவிடுகிறது. உடனே எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. ஒரு தனி மனிதனின் மனத்தில் இந்த முக்குணங்கள் எப்படி செயல்படுகின்றன? முக்குணங்கள் எப்படி சமநிலை அடைகின்றன? இவ்வாறு பல வினாக்கள்.! இவற்றுக்கெல்லாம் தர்க்கபூர்வமாக விடையளிக்க முற்படும்போது தத்துவ அமைப்பு உருவாகி வருகிறது. சாங்கியத்திற்கு அப்படி ஒரு விரிவான தத்துவ அமைப்பு உண்டு.
இப்படி ஒரு தத்துவ அமைப்பு உருவானதுமே அதைப் பல்வேறு அறிவுத் தளங்களுக்கு விரிவடையச் செய்யும் முயற்சிகள் தோன்றி விடுகின்றன. பல்வேறு விதமான நூல்கள் அத்தத்துவ அடிப்படையில் உருவாக்கபடுகின்றன. அத்தரிசனம் ஒவ்வொரு அறிவித்துறைக்குள் நுழையும்போதும் சிறு சிறு மாறுதல்களைப் பெற்று வளர்ந்து பரவியபடியே உள்ளது.
உதாரணமாக சாங்கியத்தின் தத்துவ அடிப்படை இலக்கிய அழகியலில் பரவியபோது, முக்குணங்களின் அடிப்படையில் கதாபாத்திரங்களைப் பகுக்கும் முறை உருவாயிற்று. படைப்பின் இயல்புகளை அதனடிப்படையில் அளக்கத் தலைப்பட்டனர். பெருங்காவியங்களில் முக்குணங்களின் மோதல் நடக்கும். இறுதியில் அவை சமநிலையை அடைந்து சாந்தநிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. இதன் அடுத்தபடியாக ஒன்பது மெய்ப்பாடுகள் (நவரசங்கள்) பற்றிய கொள்கைகள் பிறக்கின்றன.
பண்டைய ரசவாதத்தைப் ( ரசாயன அறிவியலை ) பார்க்கையிலும் அதிகமாக அங்கு இந்த முக்குணங்களின் சம நிலை என்ற கருத்தின் பாதிப்பைக் காண்கிறோம். ஆயுர்வேத மரபில் உள்ள வாதம், பித்தம், கபம், என்ற மூன்று நாடிகளின் சமநிலை குறித்த கருத்தும் கூட இந்த தத்துவத்தின் ஒரு படிநிலைதான். சாங்கியத் தரிசனத்தின் செல்வாக்கு ஊடுருவாத இந்திய அறிவுத்துறை ஏதும் இல்லை என்றே கூறிவிடலாம்.
இறுதியாக ஒரு முக்கியமான இயல்பினைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஒரு தரிசனத்தின் தொடக்கத்தை எப்படி வகுத்துக் கூறிவிட முடியாதோ அப்படியே அதன் இறுதியையும் கூறிவிட முடியாது. அதாவது தரிசனங்களுக்கு அழிவே இல்லை. அதன் சாராம்சமான ஒரு பகுதி எப்போதும் மனிதச் சிந்தனையின் அம்சமாகவே இருக்கும்.
உதாரணமாக சாங்கியத் தரிசனத்தில் தத்துவ அடிப்படைகள் பல இன்று காலாவதியாகிவிட்டன. நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சலனத்தை சாங்கியம் கூறுவதுபோல அத்தனை எளிதாக வகுத்து விட முடியாது என்று இன்று நாம் அறிவோம். ஆனால் பிரபஞ்ச உற்பத்தி குறித்த பெரு வெடிப்புக் (Big Bang) கொள்கையும், பிரபஞ்சஇயக்கம் குறித்த கட்டின்மை இயக்கச் சித்தாந்தையும் ( Chaos Theory ) பார்த்தால் சாங்கிய தரிசனம் அவற்றில் இருப்பது தெரியும்.
பெருவெடிப்புக் கொள்கை, ஒரு கணத்தில் நடந்த ஒரு பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருள் முழுக்க ஒரே பிண்டமாக இருந்தது என்கிறது. பெருவெடிப்புக்குப் பிறகு அது பற்பல விதமான பருப்பொருட்களாக வெடித்துச் சிதறிப் பிரபஞ்சமாக ஆயிற்று என்கிறது. முக்குணங்களின் சமநிலை குலையும் கணம் என்று சாங்கியம் கூறும் கருத்தை இது மிக நெருங்கி வருகிறது.
அதேபோல கட்டின்மை இயக்கச் சித்தாந்தம், பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு சமநிலையைக் காணும் தேடல் இருப்பதாக சொல்கிறது. இயற்கையின் இயக்க விதி குறித்து சாங்கிய மரபு கூறுவதன் தொடர்ச்சி போலவே இது உள்ளது.
ஆகவே தரிசனத்தின் இயல்புகளைக் கீழ்கண்டவாறு தொகுத்து கூறலாம்.
- மனிதச் சிந்தனையின் ஆரம்பம் முதலே ஏதோ ஒரு வகையில் தரிசனம் இருந்துகொண்டிருத்தல்
- ஒரு முதல் ஆசிரியரால் தெளிவாக அது வகுத்து கூறப்படுதல்
- ஒரு தத்துவ அமைப்பு உருவாகுதல்
- அத்தத்துவ அமைப்பு பிற அறிவுத்துறைகளுக்கும் பரவுதல்
- எல்லாக்காலத்திலும் அழியாது தொடரும் சில அடிப்படைகூறுகளை அது கொண்டிருத்தல்
அடுத்து வருவது…
தரிசனங்களின் பின்னனி