விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்: கடிதங்கள் – 2

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்

கடிதங்கள்

ஜெயமோகன்.இன் இல் இருந்து

[எழுத்தாளர் ஜெயமோகனுடன்  வாசகர் Dr.சுனீல் கிருஷ்ணன்.

இடம்:  விஷ்ணுபுரம் வாசிப்பரங்கு. காரைக்குடி]

அன்புள்ள ஜெ:

மிகவும் உக்கிரமான வரிகள் இவை.. இன்று முழுக்க திரும்பத் திரும்ப…. இதன் முன் செயலற்று அமர்ந்திருக்கிறேன்.

“ஆயிரம் காதத் திரையை

செவ்வலகால் கிழித்து வந்து

என் முன் அமர்ந்து நொடிக்கும்

இவ்வெண் பறவையின் முன்

செயலற்று

அமர்ந்திருக்கிறேன்.

 

எண்ணங்கள் மீது

கவிகிறது வெண்மை.

சஞ்சலங்கள் மீது

கவிகிறது வெண்மை.

இருத்தல் மீது

கவிகிறது முடிவற்ற வெண்மை…”

அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்,

தியானத்தில் மெல்ல மெல்ல கூடணையும் புள் நிறைந்த மரம்போல மனம் சொற்கள் கலைந்து அடங்குகிறது. அப்போது பொருளற்ற தன்னிச்சையான சொற்சேர்க்கைகள் ஆழ்ந்த பொருளுள்ள சொற்சேர்க்கைகள் வெறும் நினைவுச்சித்திரங்கள், படிமங்கள் என ஒரு பெரும் சுழித்தோடல் நமக்குள் நிகழ்கிறது. விஷ்ணுபுரத்தில் மூன்றுபேர் மூன்று நிலைகளில் அந்த தியான நிலையை தீண்டும் வரிகள் உள்ளன. முதலில் பக்தியும் நெகிழ்ச்சியும் ஓங்கிய நிலையில் திருவடி. இரண்டாவதாக அறிவார்ந்த தளம் ஓங்கிய பிங்கலன். மூன்றாவதாக செயலின்மை நிலை ஓங்கிய பாவகன். மூன்றிலும் தற்செயல் மொழி உருவாக்கும் நீளமான சொற்பிரவாகம்தான். மூன்றும் வெவ்வேறானவை. விஷ்ணுபுரத்தில் வெகுகாலம் காத்திருந்து ‘பெற்றுக்கொண்டு’ எழுதப்பட்ட வரிகள் அவை.  எனக்கே அவற்றில் பலவரிகள் மிகப்பிடித்தமானவையாகவும் அவற்றின் பொருளென்ன என்று மீள மீள மனதைப் போட்டு மீட்டுவனவாகவும் இருந்தன

இசைக்கும் வெளி உன் நடனம்

அடி என் சாகரத்திரைச்சீலை

விலக்கி

புன்னகைக்கும் பெருமுகம்

 

காட்டுவெளியின் இலைகள்

நாநுனியென துடிதுடித்து

காற்றை நிரப்பும்

ஓயாத பெயர்

 

இருட்படுகையில் ஓடும்

பெருநதியின்மீது கண்கள்

உருண்டு மின்னும்

தனித்த பரமீனின் செவிள்களின்

சிறகுகளில்

பூத்த நிலவுக்குமிழ் நீ

ஆகியவரிகளை நான் பின்னர் என் ஆழ்ந்த மனநிலையில் ட்டிக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக மூன்றாவது. அதில் ஒரு சித்திரம் உள்ளது. கடைசிவரை அதை முழுமையான சித்திரமாக ஆக்கிக்கொள்ளவே முடியவில்லை. தியானத்தில் சித்திரங்கள் அப்படித்தான் பார்க்கும்போதே கலைந்துகொண்டு ஆனால் கலையாமல்நின்றுகொண்டு இருக்கும்…

ஜெ

@@@

அன்புள்ள ஜெ,

இப்போதுதான் விஷ்ணுபுரத்தை படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கிறேன். வாசிக்க ஆரம்பித்து 7 மாதம் ஆகின்றது. மெதுவாக ‘உந்தி பகுதியை தாண்டியாயிற்று. எனக்கு ஒரு நாவலை வாசிக்கும் அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. அதாவது  தொடர்ச்சியான ஒரு கதை ஓட்டத்தில் நீந்திச்சென்றதுபோலவே இல்லை. ஒவ்வொரு நாளும் படிக்கும் ஒரு அத்தியாயம் அதுவே ஒரு தனி சிறுகதை போல இருக்கின்றது. அதையே இரண்டு முறை படிக்க வேண்டியிருக்கின்றது. அது பலவகையான உணர்ச்சிகளை அளிக்கின்றது. நிறைய யோசிக்கச் செய்கின்றது. நிறைய சந்தர்ப்பங்களில் பரவசமான நேரங்களெல்லாம் அமைந்திருக்கின்றன. மனசினுடைய பரபரப்பு தாளாமல் வெளியே இறங்கி பைக்கை எடுத்துக்கொண்டு ரோட்டில் ஓடியிருக்கின்றேன். நிறைய வரிகளை கிறுக்கன் போல நாள்கணக்கில் மனதுக்குள் சொல்லிக்கொண்டே அலைந்திருக்கின்றேன். நிறைய கருத்துக்கள் என் மனத்தில் வரும்போது அவை நாவலில் நான் படித்த வரிகளின் வேறு வடிவங்கள்தான் என்று தெரிந்திருக்கின்றது.

மொத்தத்தில் இந்த நாவல் என்னுடைய சிந்தனையையே ஒட்டுமொத்தமாகவே மாற்றியிருக்கின்றது. என்னுடைய கனவுகளில்கூட இந்நாவலின் காட்சிகளை கண்டிருக்கின்றேன். சில இடங்களுக்கு உண்மையிலேயே போய்விட்டு வந்தது போலவே சில மாதங்கள் கழிந்து தோன்றுகிறது. என்னுடைய வாசிப்பில் இதுவரை இதுபோல ஒரு வாசிப்பு அனுபவம் கிடையாது. ஒரு புத்தகம் என்னை இந்த அளவுக்கு மாற்றும் என்று நான் நினைத்ததே இல்லை.

ஆனால் உந்தி பகுதியிலே உள்ள நிறைய தர்க்கங்களின் பொருத்தப்பாடு எனக்கு புரிபடவில்லை. நான் இன்னமும் நாவலை முடிக்கவில்லை என்பதனால் ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. ஆனால் இப்படி நாவலில் சொல்ல வேண்டிய விசயங்களை தர்க்கபூர்வமாக சொல்லி முடிக்க வேண்டுமா? பொதுவாக நாவல்களில் சொல்ல வேண்டிய விசயங்கள் குறிப்பால்தானே உணர்த்தப்பட்டிருக்கும். இது என்னோட சிறிய சந்தேகம்தான். தப்பாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்

 சரவணன்

@@@

அன்புள்ள சரவணன்,

விஷ்ணுபுரத்தில் உள்ள இரண்டாம் பகுதி எந்த கருத்தையும் விவாதித்து நிறுவும் நோக்கம் கொண்டது அல்ல. மானுடத்தின் தேடலின் கதை விஷ்ணுபுரம். அப்படியானால் அதில் ஞானத்தின் மூன்று முகங்களும் வரவேண்டும் அல்லவா? பக்தி அல்லது கர்மம் முதலில். ஞானம் இரண்டாவதாக. கைவல்யம் மூன்றாவதாக. ஆகவே இரண்டாவதாக தர்க்கங்கள் வருகின்றன. தர்க்கம் மூலமாக எப்படி மனிதனின் தேடல் முன்னால்செல்கிறது என்ற சித்திரத்தையே நாவலின்

அப்பகுதி அளிக்கிறது. அதில் வரும் தர்க்கங்கள் எவையுமே உண்மையான தத்துவத் தர்க்கங்கள் அல்ல. அவையெல்லாம் தர்க்கங்கள் போன்ற புனைவுகளே. பெரும்பாலான தர்க்கங்கள் இலக்கிய உருவகங்களாகவே உள்ளன. எவையும் நிறுவப்படவில்லை. நிறுவப்பட்ட ஒன்றின் எல்லை உடனே வெளிப்பட்டுவிடும் என்பதே விஷ்ணுபுரத்தின் இயல்பாகும்.

ஞானசபை விவாதத்தில் விவாதிக்காதவர்களாக சித்தனும் அவன் மடியில் அமர்ந்த மகா காஸியபனும் வருகிறார்கள் என்பதைக் கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஞானசபை விவாதங்களை அதில் பங்குகொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் புரிந்துகொள்கிறார்கள். சித்தன் சொல்கிறான், ‘சீடா ஞானமென்பதே முடிவில்லாத பாடபேதங்களின் வரிசைதானே?’

 ஜெ

@@@

 அன்புள்ள ஜெயமோகன்;

தங்களின் விஷ்ணுபுரம் நாவலை ஒரு வாரம் முன்பு தான் படித்தேன். இந்த ஒரு வாரமாக உங்களுக்கு கடிதம் எழுதலாமா வேண்டாமா என்கிற இடையறாத ஒரு சிந்தனை? காரணம் இதற்க்கு முன் தங்களுக்கு நான் எழுதிய அனைத்து கடிதங்களுமே இப்போது படிக்கும் போது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக எனக்கே தோன்றுகிறது.இதுவும் நிச்சயம் அப்படித்தான் என்றாலும் இதை எழுதியே தீர வேண்டும் என்கிற தீவிரமான விருப்பம் தான் காரணம்.

இந்த நாவல் முக்கியமாக கடந்த ஐந்து வருட கால தொடர் சிந்தனையை அல்லது அவஸ்தையை மீண்டும் ஒரு முறை அசை போடவும் தொகுத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியது.எனக்கு முதலில் படிக்கக் கிடைத்த உங்களின் ஒரு கீதை கட்டுரையில் நீங்கள் ஒரு வரி எழுதியிருந்தீர்கள். கீதை உயிர் கரைக்கும் ஒரு மருந்து போல என இந்த வார்த்தைகளை எழுதும் போது நீங்கள் என்ன ஒரு மன உச்சத்தை அடைந்திருக்கக் கூடும் என்று அப்போதே ஓரளவுக்கு என்னால் ஊகிக்க முடிந்தது.காரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் என் தாத்தாவின் பகவத் கீதை நூலை ஏதோ ஒரு காரணம் யோசித்தால் ஏதோ ஒரு சாபமோ என்று கூட சமயங்களில் தோன்றும். இன்னும் உண்மையை சொல்லப் போனால் ஒரு போட்டி மனோபாவம் காரணமாகத் தான் படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக இரண்டாவது அத்தியாயத்தையே ஒரு நாற்பது முறை படித்திருப்பேன் அதை தாண்டி படிக்க முடியவில்லை.. அதையே திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருப்பேன் குறிப்பாக அந்த கடைசி பதினெட்டு ஸ்லோகங்களும் கிட்டத்தட்ட என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் தந்து விட்டதாக ஒரு பூரிப்பு.நான் என்னை சார்ந்தவர்களுக்கு புரியாத ஒரு இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அவர்களால் என்னுடைய உயரத்தை அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆன்மீக உச்சம் அடைந்து விட்டதாக அகம்பாவம் கொழுந்து விட்டெரிய திரிந்தேன்.

 onefineday- இப்படித்தான் அந்த நாளை சொல்ல வேண்டும் என்னுடைய உறவினர் ஒருவருடன் விவாதம் புரிந்து கொண்டிருந்தேன்.முழுமையற்ற அவருடைய கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்வதாக நினைத்து சில கேள்விகள் எழுப்பினேன்.அவர் விடை தெரியாமால் விழித்ததில் ஒரு மகிழ்ச்சி ஆனால் அன்றைக்கு எங்களூர் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது  அதே கேள்விகள் அவரை கேட்ட அதே கேள்விகளை என்னை நானே கேட்டுக் கொண்ட போது என்னாலும் அதற்க்கு விடை சொல்ல முடியவில்லை. என்னுடைய மனம் இரண்டாக பிரிவதாகவும் ஒரு மனம் தொடர்ந்து கேள்விகளையும் ஒரு மனம் தொடர்ந்து விடைகளையும் உற்ப்பத்தி செய்து வந்தது.கேள்விகளை கேட்கிற அந்த மனம் ஒவ்வொரு விடையையும் தான் படித்த ஏதேனும் ஒரு வாதத்தை முன் வைத்து கேள்விகளை அர்த்தமற்றுப்போக வைப்பதையும் விடை காண்கிற என்னால் அந்த துயரத்தை தாங்க முடியாமல் மருகுவதும் பல நாட்கள் தொடர்ந்தது.என் நோக்கில் அப்போது கீதை ஒரு மெல்லக்கொல்லும்விஷம் போல என்னை துளித்துளியாக அது கொன்று விடும் என்கிற அச்சம் என்னை பீடித்திருந்தது. எனக்கு ஒன்று புரிந்தது விடைகளை தயாரிக்கிற நான் எவ்வளவு உண்மையோடு ச்ரத்தையோடு ஒவ்வொரு வாதத்தையும் அனுமதிக்கிறேன் அனால் பிடிவாதமாக என்னுடையா எல்ல ந்யாயங்களும் மறுக்கப் படுகிறதென்றால் விடை இதற்க்கு முக்கியமில்லை. கேள்விகள் மூலமாக நான் திணற வேண்டும் அதை பார்த்து ரசிக்க வேண்டும் இன்னும் ஒரு சிந்தனை நான் ஏன் இவ்வளவு தீவிரமாக என்னுடைய தரப்பை முன்வைக்க வேண்டும் இந்த தீவிரத்தில் ஒரு தீர்மானம் தெரிகிறது அதை போல இதுவும் ஒரு பிடிவாதமே அதில் மூர்க்கம் அப்பட்டமாக தெரிகிறது. இதில் கொஞ்சம் மிதம் தெரிகறது வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை. இல்லை இது ஒரு மனபிரழ்வா அதன் ஆரம்ப நிலையா? எதற்காக இதை படித்துத் தொலைத்தோம் ஒரு மரங்கொத்திப் பறவையை போல கேள்விகள் கொத்தி தின்கிறது.எந்த பதிலுக்கும் மனம் சமாதானமாகவில்லை.

 என்னுடைய உச்ச மன பலவீனம் காரணமாக சில ஆன்மீக பெரியவர்களை துறவியரை அணுகினேன். என்னுடைய கேள்விகளுக்கு பின்னாலிருக்கிற நோக்கத்தை அவர்களால் சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை.எல்ல கேள்விகளுக்கும் ஏதோ ஒரு பண்டித நோக்கில் அவர்கள் அளித்த பதில் எனக்கு மிகுந்த எரிச்சலையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. எந்த ஒரு பொருளை பார்த்தாலும் அது சார்ந்து கேள்விகளை எழுப்பி பதில்களை அடைவதாக பாசாங்கு செய்து இறுதியில் அடைவது என்னமோ ஒரு அத்ருப்ப்தியை அந்த விடைகளுக்கேலாம் இந்திய சிந்தனை மரபில் ஒரு இடம் இருப்பதை பின்னாளில் அறிந்து கொண்ட போது என்னை குறித்த ஒரு சுயத்ருப்தியும் அதே சமயம் கூடவே எழுகிற ஒரு அத்ருப்தியையும் விலக்கிவைக்க முடியவில்லை. உங்களின் கீதை தொடர்பான கட்டுரைகள் எனக்கு கீதை குறித்த ஒரு தெளிவை நிச்சயமாக கொடுத்திருக்கிறது எந்த கொந்தளிப்பும் இல்லாது அந்த நூலை இன்றைக்கு நான் அணுக முடிவதற்கு நீங்கள் ஒரு முக்கிய காரணம். உங்களின் விஷ்ணுபுரம் முதல் நூறு பக்கங்கள் போவேனா என்று என்னை துன்பப்படுத்தியது.அதற்குப்பின் பெரும்பாலும் இத்தனை அலுவலக பணிகளுக்கு நடுவிலும் மூன்று நாட்களில் இரவெல்லாம் விழித்துப் படித்து முடித்ததற்கு ஒரே ஒரு காரணம் என் நோக்கில் அது என் கதை. தமிழ் எழுத்தாளர்களை பற்றி நிலவும் ஒரு கிண்டல் வசை ஏளனம் எவ்வளவு நியாயமற்றது முழுமையற்றது என்று புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் விஷ்ணுபுரத்தை நான் பார்க்கிறேன்.காரணம் உங்களுடைய கட்டுரைகளை என்னுடைய உறவினர்களில் நண்பர்களில் ஒரு சிலருக்கு அனுப்புவேன். பெரிய இல்லக்கிய பயிற்ச்சி இல்லாத என்னுடைய நண்பர்கள் சந்தோஷ் நெஜமாவா ரொம்ப நன்னாயிருக்கு ஆனா தமிழ் படிக்கறதுல தான் ச்ரமம்?இலக்கிய பயிற்ச்சி நிறைந்தவர்கள் உங்களை நியாயமில்லாமல் விமர்சிப்பதையும் பார்த்து இந்த பரிந்துரைகளை எல்லாம் நிறுத்தி விட்டேன் நான் என் அவர்களுக்கு உதவ வேண்டும்? அதுவும் விஷ்ணுபுரத்தை படித்ததும் அந்த எண்ணம் மேலும் பலப்பட்டது.

விஷ்ணுபுரம் படித்து முடித்தவுடன் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னோடு பழகிய ஒரு நண்பனின் ஞாபகம் வந்தது.எனக்கு கணக்கு வராது பொதுவாகவே கணக்கை மனப்பாடம் செய்து பாஸ் பண்ணுபவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று நம்புகிறேன். எனவே கணக்குப்பாடம் நடக்கும் போது மிக கவனமாக கவனிக்க முயற்சி செய்வேன்.அவன் கணக்கில் ரொம்ப கெட்டிக்காரன் சாதரணமாக தொண்ணூறு மார்க்குக்கு மேல் வாங்கி விட்டு நூறு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பன். அவனுடைய முக்கியமான வேலை என்னவென்றால் நாங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்போம் எல்லாம் புரிந்த மாதிரியே இருக்கும் ஒரு கேள்வி ஒரே ஒரு கேள்வி கேட்ப்பான் அவ்வளவு தான் அது வரை புரிந்ததெல்லாம் மறந்து விடும்.வாத்தியார் அந்த கேள்விக்கு பதில் சொல்ல விட்டாலும் அந்த கேள்விக்கான பதில் அவனுக்கு தெரிந்து விடும்.அல்லது முன்னாடியே தெரிந்திருக்கும். இந்த கடிதம் எழுதும் போது என் மனம் அந்த நண்பனின் இடத்தில் உங்களை வைத்துப் பார்த்தது விஷ்ணுபுரம் படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வு ஒன்று தான் இது வரை எனக்கு கணக்கு மட்டும் தான் வராது என்று நினைத்திருந்தேன். சென்ற கடிதத்தில் என்னை நலம் விசாரித்ததற்கு மனமார்ந்த நன்றி.

உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் என் மனபூர்வமான அன்பு.

வணக்கத்துடன்

சந்தோஷ்

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s