விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்: கடிதங்கள் – 4

தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்

ஜெயமோகன்.இன் இல் இருந்து

[விஷ்ணுபுரம் வாசிப்பரங்கு. காரைக்குடி]

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின்  நித்ய சய்தன்ய நிதி நினைவு கூட்ட  உரை படிக்க நேர்ந்தது…  ஒரு மிக நல்ல வாசிப்பு அனுபவமாக உணர்ந்தேன்.. நன்றி..

இருத்தல்  குறித்த தீராத கேள்விகள் எப்போதும் என்னுள் உள்ளன. இதனால் என்ன,இதன் அர்த்தம் என்ன? கேள்விகள் எப்போதும் கேள்விகளை மட்டுமே தருகின்றன.. சலித்து உலகியல் வாழ்விற்கு திரும்பும் போது அதன் போதை போதுமெனக்கு என்று சுகப்படுகிறேன்.. யோகிகள் ஞானிகள் இவர்கள் எல்லோரும் எதை அடைந்தார்கள்? எண்ணிலடங்கா தத்துவங்கள், அவற்றை மறுத்த எண்ணிலடங்கா  தத்துவங்கள் இவற்றால் இந்த குறு கோளம்  என்ன அடைந்தது?உண்மை என்பது நம் எண்ணத்தின் பிம்பமன்றி  வேறொன்று தனியாய் நம்மை சுற்றி உள்ளதா என்ன? என்னால் உணர முடிகிறது இவை எனது புதிய கேள்விகள் அல்ல என்று .. பன்னெடுங்காலமாய் மனிதனின் ஆதி கேள்விகளாய் இவை இருந்து உள்ளன.. ஆனால் இவற்றால் நாம் நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோமோ என்ற எண்ணம்..

தர்க்கத்தால் உணர முடியாதவற்றை ஒரு மாபெரும் உண்மையாக கற்பித்து கொண்டு ஒன்றும் இல்லாத ஒன்றை தேடி ஒடுகிறோமோ என்ற சங்கடம் அல்லது பயம். ஒரு உயிரியலாளனாய் என்னால் எப்போதும் மானுடத்தின் ஆக பெரிய அர்த்தம் வாழுதல் மற்றும் இனம் பெருக்குதல் என்ற விதியே என்று தோன்றுகிறது.. எல்லா மிக பெரிய தத்துவங்களும் சமூக தளத்திலும் ஆச பாச தளத்திலும் எல்லாவற்றையும் விட முக்கியமாய் மனித மனம் என்ற வட்டத்திலும் மட்டுமே பெருமளவு செயல்படுகின்றன.. இவை சார்ந்த எண்ணங்கள் இவை சார்ந்த கேள்விகள் இவை சார்ந்த உண்மைகள் அல்லது நிராகரிப்புகள்.. வைரஸ் எனப்படும் உயிருக்கு என்ன தத்துவம் என்ன உண்மை. பேரண்டத்தை யோசிப்பவர்கள் உயிர் துணுக்கை யோசிக்கிறார்களா? யோசித்து இருக்கலாம்.. ஆனால் அவை ஒரு மையப்புள்ளியில் குவிந்து தத்துவம் மலர்ந்ததா?  புத்தன் கண்ட உண்மையால் என்ன தான் நிகழ்ந்தது?நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு பெரு நிகழ்வின் பாகங்களாக பார்த்து ஒரு விளையாட்டாய் கற்பிதம் கொள்ளுதல் என் மூளையை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு  படிமம் என்பதை மீறி அதில் வேறு ஏதேனும்   உள்ளதா??

விஷ்ணுபுரத்தின் அத்தனை தத்துவ விவாதங்களையும் மீறி என்னை இன்னும் ஆட்கொண்ட தரிசனம் ஒரு ஞானி காட்டில் எதோ ஒரு மிருகம் கடித்து இறக்கும் அந்த நிதர்சனம். அவனது உண்மை என்னாயிற்று? அவனது அர்த்தம் என்று அவன் உணர்ந்தது என்ன?மிக சுருக்கமாய் கேட்க வேண்டும் என்றால் நித்ய சய்தன்ய யதி அவர்களின் ஞானத்திற்கும் என் அம்மா சுட்டு போடும் தோசைக்கும் என்ன வித்யாசம்?

இந்த கேள்விகளை   பதில்களுக்காக என்பதை  காட்டிலும் பகிர்தல் என்ற அனுபவத்திற்க்காகவே கேட்டுள்ளேன் என்று உணர்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த தத்துவ குழப்பங்களை மீறிய மற்றொரு   ஐயம் .. தல்ஸ்தோய் தாஸ்தவெஸ்கியை ஆன்மிக தெளிவு உள்ளவர் என்று நித்ய குறிப்பிட்டதாய் எழுதி உள்ளீர்கள் ..   ஆனால் என்னளவில் தல்ஸ்தோய் நிறைய ஆன்மிக தத்துவ குழப்பங்கள் கொந்தளிப்புகள் உள்ளவராகவே உணர்ந்து உள்ளேன்.  அன்னா பாத்திரத்தின் படைப்பு லெவினின் கேள்விகள் (லெவின் தல்ஸ்தோயின் சுயத்துடன் ஒத்து போகும் பாத்திரமாக பலரால் குறிப்பிடப்பட்டுள்ளது ) இவை எல்லாமும்  மட்டுமன்றி ஒட்டு மொத்த சித்திரமும் தீராமல் கேள்விகளுக்குள் உழல்வதாகவே உணர்கிறேன். தல்ஸ்தோய் பின் அன்னா தவறான படைப்பு என குறிப்பிடுவதும் தற்கொலை முயல்வதும் (முயன்றதாக படித்து உள்ளேன்)   அவரது கொந்தளிப்பின் வெவ்வேறு நிலைகளாகவே  கொள்ள முடிகிறது..என்னளவில் ஒரு கதை சொல்லி இந்த கொந்தளிப்பு வியப்பு குழப்பம் இவற்றின் மூலமே படைக்கிறான். தெளிவு பெற்றவன் (அல்லது தெளிவு என்ற கற்பிதம் கொள்பவன்) மகத்தான கதை சொல்ல மாட்டான் என்றே தோன்றுகிறது.. புரிதலில் அல்லது என் அனுபவத்தில் பிழை இருந்தால் சுட்டவும்.

 நன்றி .

ராஜ ரத்தினம்

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கேள்விகள் எவையுமே விவாதத்துக்கு உரியவை அல்ல. அவை அந்தரங்கமாக கேட்டுக் கொள்ளப்பட வேண்டியவை. அந்தரங்கமாகவே கண்டுகொள்ளப்படவும் வேண்டியவை. ஒரு தருணத்தில் இம்மாதிரியான வினாக்களுக்கு நாம் ஆளாகிறோம். ஜெ.கிருஷ்ணமூர்த்தி அன்னிபெசண்டை தூக்கி எறிகிறார். புத்தர் குருநாதர்களை உதறி தன் தனிவழியை தேர்கிறார். ஒவ்வொருவரும் அவரவருக்குரிய வகையில் அவரவர் பாதையை தேர்வுசெய்கிறார்கள். ‘அனைவருமே இருபது வயதில் தேடுகிறார்கள், நாற்பது வயதில் சமாதானம் செய்துகொள்கிறார்கள்’ என்று விஷ்ணுபுரத்தில் ஒரு பாவகன் சொல்கிறான். கண்டடைகிறவர்கள் தங்களுக்குள்ளேயே கண்டடைகிறார்கள். குருக்களோ நூல்களோ அவர்களுக்கு பதில் சொல்வதில்லை, சிலசமயம் அவை உதவுகின்றன.

ஏன் இந்த தேடல் என்று கேட்டீர்கள். இந்த வினாவைக் கேட்கக்கூடிய மன அமைப்பு நமக்கு இருப்பதனால்தான். நாம் உணவை மட்டும் உண்பதில்லை, உணவைப்பற்றிய ஞானத்தையும் சேர்த்தே உண்கிறோம். வெறும் உணவை உண்பது வரை சிக்கலே இல்லை. ஆனால் நம் கோளத்தின் மிகமிக காலத்தால் பிந்திய பழங்குடிச்சமூகம் கூட பிரபஞ்ச கற்பனையை, கால உருவகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. மண்மீது மட்டுமல்ல தத்துவம் மீதும்தான் நிற்க வேண்டியிருக்கிறது. நான் சொல்வது சாதாரண மனிதர்களால். தத்துவமின்மையில் நிற்க சித்தர்களாலேயே முடியும். ‘காசியபா, மண்மீதன்றி எதன் மீதும் நிற்க வேண்டாம். வான் கீழன்றி எதன் மீதும் நிற்க வேண்டாம்’ என்று விஷ்ணுபுரத்தில் சுடுகாட்டுச்சித்தன் சொல்கிறான்.

சாதாரண மனிதர்கள் மரபும் மதமும் உருவாக்கியளித்துள்ள தத்துவங்கள் மீது முழுமையாக நம்பி நிற்கிறார்கள். அப்போது அவர்களுக்கு தேடல் இல்லை. அதன் கீழே நிற்க முடியாதவர்களுக்கு வேறு எவ்வளவோ தொலைவு சென்றாக வேண்டியிருக்கிறது. ‘தேடலும் அதன் பொருளும் விஷ்ணுவே என்று சொன்னால் உன் மனம் அதை மிச்சமின்றி ஏற்குமா?’ என்று பிங்கலனிடம் குரு கேட்கிறார். ‘இல்லை’ என்கிறான். ‘அப்படியானால் உன் இடம் ஞானம்தான்.  ஞானம் தேடி ஓடு’ என்கிறார் குரு. இன்னொரு இடத்தில் வருகிறது ‘ஞானமென்பதே முடிவற்ற பாடபேதங்களின் வரிசைதானே’ என்று. விஷ்ணுபுரத்தில் இவ்வினாக்களுக்குள் விரிவாகவே சென்றிருக்கிறேன். அந்நாவல் விடையளிக்காது, ஆனால்  நத்தை சென்ற தடம் போல ஒரு பளபளக்கும் பாதை அது. அவ்வளவுதான்

மனிதன் மீண்டும் மீண்டும் வினவிக் கொண்டே இருப்பான்.அவனது விடைகள் எத்தனை மகத்தான வடிவம் கொண்டாலும் அவை பிரபஞ்ச விரிவின் முன் சிறு துளியெ. ஓர் எறும்பு எத்தனை முயன்றாலும் அது வாழும்  மலைத்தொடரை தன் உள்ளே வாங்கிக் கொள்ள முடியாது என்று ராமானுஜ பாஷ்யத்தில் வரும். ஆனால் ஏதோ ஒருவகையில் அது தன்னை மலையாகவும் உணர முடியும்.

ஏன் இந்த அளவுக்கு தத்துவங்கள்? நான் என்ன எண்ணுகிறேன் என்றால் தத்துவம் மூலம் மூளையை அதன் உச்ச எல்லை வரை கொண்டுசென்று உறையச் செய்தபின்னரே அடுத்த படியை எடுத்து வைக்க முடியும் என்பதனால்தான். மீண்டும் விஷ்ணுபுரம். தத்துவத்தின் உச்சியில் ஒரு கால் வைக்கத்தான் இடமிருக்கிறது. மறு கால் அந்தரத்தில் தவிக்கிறது என்று அஜிதன் உணர்கிறான்.

தல்ஸ்தோய் பற்றி. போரும் அமைதியும் எழுதிய தல்ஸ்தோய் கொந்தளிப்பானவர். ரயில் நிலையத்தில் இறந்த தல்ஸ்தோய் ஞானி. நடுவே ஒரு நெடும்பயணம் உள்ளது. நீங்கள் சொல்வது உண்மை– ஆன்மீகமான கொந்தளிப்பே இலக்கியமாகும். ஆன்மீகத்தெளிவு சொற்களைக் கடந்தது. நித்ய சைதன்ய யதி ஆன்மீக அறிஞர். நாராயண குரு ஞானி. இவ்வேறுபாடு முக்கியமானது. இலக்கியம் கொந்தளிப்பிலிருந்தே உருவாகும் , கண்டடைதலில் இருந்து அல்ல. பிரமிள் பற்றி நான் எழுதிய கட்டுரை — உள்ளுணர்வின் தடத்தில் என்ற நூல் தமிழினி பிரசுரம்– அதை விரிவாகவே பேசுகிறது.

இந்தக் கடிதமும் அந்த நிலையில் நின்றபடித்தான்.

ஜெ

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s