எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தரிசனங்களின் பின்னணி
பக்தி காலகட்டம்
அவைதிக மதங்களான பெளத்தமும் சமணமும் இந்தியா முழுக்கப் பரவின. அவற்றை எதிர்த்து வைதிக மதங்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன. அதன் விளைவாக அவை தங்கள் அமைப்பை மாற்றி அமைத்துக்கொண்டன. இதன் விளைவாக உருவானதே பக்தி காலகட்டமாகும்.
பெளத்த, சமண மதங்களுக்கு முன்பு வைதிக மதம் என்பது வேள்வி முதலிய சடங்குகளிலானதாக இருந்தது. அது மன்னர்கள், வணிகர்கள் பிராமணர்கள் சம்பத்தப்பட்டதாக இருந்தது. அதற்கும் கீழே உள்ள மக்கள் தங்கள் குல மரபுக்கு உரிய தெய்வங்களைத் தங்கள் வழக்கப்படி வணங்கினர். அவர்களுக்கும் வைதிக மரபுக்கும் உறவே இருக்கவில்லை.
பெளத்த, சமண மதங்கள் முதலில் ஏழை, எளிய மக்கலுக்கு இடையே ஊடுருவிச் சென்றன. புத்த பிச்சுக்களும் சமண முனிகளும் ஊருக்குள் தங்கக்கூடாது என்ற விதியே இருந்தது. ஆகவே அவர்கள் விலக்கபட்ட எளிய மக்களை அணுகினார்கள். அவர்கள் பள்ளிகள் அமைத்து கல்வி கற்பித்தனர்.
(தமிழில் பள்ளி என்ற வார்த்தையே சமணர்களின் வழிபாட்டு இடமான பள்ளி என்ற சொல்லில் இருந்து வந்ததுதான்.) மருத்துவத்தைப் பரவலாக மக்களுக்குக் கொண்டு சென்றனர். ( தமிழில் சமண முனிகளே இலக்கண நூல்களையும் மருத்துவ நூல்களையும் நிறைய இயற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.) விளைவாக அடித்தட்டு மக்களிடையே அவைதிக மரபுகள் செல்வாக்கு பெற்றன.
மெல்ல இம்மரபுகள் செல்வாக்கு அரசர்களையும் வணிகர்களையும் இழுத்துக்கொண்டது. பல நாடுகள் பெளத்த, சமண மதங்களால் முற்றிலும் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் வைதிக மரபு விழித்தெழுந்து கொண்டு பெருவாரியான மக்களை உள்ளே இழுக்க முயன்றது. இதன் விளைவே பக்தி காலகட்டம்.
பக்தி கால்கட்டத்தின் சிறப்பியல்புகள் என்ன? பக்தி காலகட்டத்தில் கலைகளும் புராணங்களும் வளர்ச்சி அடைந்தன என்பதைக் காணலாம். இவை பக்தி கால கட்டத்தின் இரு முக்கிய சிறப்பியல்புகளை காட்டுகின்றன. ஒன்று: வெகு ஜனமயமாக்கப் பட்ட வழிபாடு.பல்வேறு போக்குகள் ஒரு பொதுச்சரடில் கோர்க்கப்படுதல்.
பக்தி காலகட்டம், இறைவழிபாட்டை வெகுஜனமாக்கியது எப்படி? தத்துவம், வேள்வி என்ற இரு வழிமுறைகளிலிருந்தும் விலகி பக்தி எனும் எளிய முறையை அது முன்வைத்தது. ஆலயங்கள் பெருமளவு கட்டப்பட்டு அங்கு அனைத்து மக்களும் கூட வழி செய்யப்பட்டது. மக்கள் ஏற்கனவே தங்கள் கடவுள்களை வழிபட்டுக்கொண்டிருந்த முறைகளையே புதிய சடங்குகளாக முறைப்படுத்தியது. உணவுகளையும் ஆடைகளையும் படைத்தல் , அலங்காரம் செய்தல் முதலியவை அவை.
அத்துடன் கலைகளும் கேளிக்கைகளும் வழிபாட்டுடன் இணைக்கபட்டன. ஆழமான அர்த்தங்கள் உடைய மந்திரங்களுக்கும் சூக்தங்களுக்கும் பதிலாக எளிய இசைப்பாடல்கள் உருவாயின. இதையொட்டியே பெரும் திருவிழாக்கள் உருவாகி வந்தன. திருவிழாக்கள் பெரும் சந்தைகளும் கூட என்பதை நாம் அறிவோம். தீர்த்தமாடுதல், விரதங்கள் என்று இம்மரபு வளர்ந்தது.
பல்வேறு இன, குல மக்கள் வழிபட்டு வந்த பல்வேறு கடவுள்களையும் ஒன்றாக இணைக்கும் பொருட்டு உருவானவையே புராணங்கள். இவை சடங்குளுக்கும் நம்பிக்கைகளுக்கும் தத்துவார்த்தமான அர்த்தம் தந்து வைதிக மரபுடன் இணைந்தன. சிறு கடவுள்களை மையக் கடவுள்களுடன் தொடர்பு படுத்தி, கதைகளை உருவாக்கி இணைந்தன. இவ்வாறு சிறு மதங்கள் பெரிய மதங்களாக மாறின.
இந்த மத மரபு என்று நாம் இன்று காணும் பெரும்பாலான விஷயங்கள் பக்தி காலகட்டத்தில் உருவானவைதான். பல மூல நூல்களுக்கு உரைகள் எழுதப்பட்டன. இதிகாசங்களும் , பகவத் கீதையும் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. மலையாளத்தில் ராமாயணமும் மகாபாரதமும் துஞ்சத்து எழுத்தச்சனால் மொழிபெயற்கப்பட்ட பின்புதான் அம்மொழியின் இலக்கிய மரபே பிறந்தது. ஞானேஸ்வரி மராட்டிய மொழியில் கீதையை மொழி பெயர்த்த பிறகுதான் அம்மொழி இலக்கியம் பிறந்தது.
பக்தி காலகட்டமானது பல்வேறு கட்டங்களாக பற்பல நூற்றாண்டு காலம் தொடர்ந்து நிகழ்ந்த ஒன்றாகும். இந்து ஞான மரபு இக்காலகட்டம் மூலமே இந்தியா முழுக்கப் பரவியது. இந்து சிற்பக்கலை, இந்து இசை, இந்து இலக்கிய மரபு, இந்து வாழ்க்கை முறை அனைத்தும் உருவாகி வந்தன.
இங்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்த வேண்டியுள்ளது. வரலாற்று ரீதியாக இந்து ஞான மரபை அணுகுபவர்கள் பக்தி இயக்கம் என்று குறிப்பிடுவது அதன் இறுதிக்கால கட்டத்தையே. இந்தகாலகட்டத்தின் சிரமண சாதிகள் எனப்படும் உழைக்கும் சாதிகளை சேர்ந்த மக்கள் இந்து ஞான மரபுடன் நேரடியான தொடர்பினைப் பெற்றார்கள். அவர்களுக்குள் இருந்து பல ஞானகுருநாதர்கள் உருவாகி வந்தனர். கபீர், குருநானக், சைதன்யர், துகாராம், ஞானேஸ்வர் முதலியோர் அவர்கள்.
பக்தி மரபின் தொடக்ககாலகட்டதை முதல் இந்து மறுமலர்ச்சிக் கால கட்டம் என்று கூறுவது வழக்கம். இது குப்தர்களின் காலகட்டத்தில் தொடங்கியது என்பார்கள். பக்தி இயக்கம் வேறு பக்தி காலகட்டம் வேறு. பக்தி காலகட்டத்தின் முதிர்ச்சி நிலையையே பக்தி இயக்கமாக ஆகியது. அது தென்னிந்தியாவில் உருவாகி வடக்கே பரவியது.
தத்துவாத்தமாகப் பார்க்கும்போது பெளத்த, சமண மதங்களின் இறுதிக் காலகட்டத்தில் தோன்றிய இந்து எழுச்சி முதல் ராமானுஜர், பசவண்ணர் ஆகிய பிற்காலத்திய ஞானகுருக்களின் காலம் வரை உள்ள பெரும் காலகட்டத்தை ஒட்டுமொத்தமாக பக்தி காலகட்டம் என்று கூறுவது சரியாக இருக்கும்.பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம் பக்தி காலகட்டத்திற்குள்ளே உள்ள ஒரு காலகட்டமேயாகும்.
அடுத்து வருவது…
பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்