10. தரிசனங்களின் பின்னணி – பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்

பெளத்த, சமண மதங்களின் வெகுஜனத்தன்மைக்கு எதிரான பேரியக்கமாக பக்தி காலகட்டம் உருவாயிற்று என்றோம். பெளத்த சமண மதங்களின் தத்துவார்த்தமான அறைகூவலுக்கு எதிராக உருவான வைதிகத் தத்துவ தரிசனங்கள்தான் பிற்கால வேதாந்தங்கள். இவை அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்ட்வைதம் என்று மூன்று தனிப்போக்குகளாக உள்ளன.

வேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதத்தின் இறுதி என்று பொருள். வேதங்களின் விரிவாக்கமான உபநிஷதங்களே உண்மையில் வேதாந்தங்கள். அவை முற்காலக் கட்ட வேதங்கங்கள் எனலாம். இவை தருக்கப்பூர்வமானவை. வேதாந்தம் என்ற சொல் தருக்கம் என்ற பொருளில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

பெளத்த, சமண மதங்கள் தருக்க முறையை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்தன. குறிப்பாக பெளத்த மெய்ஞானம் நியாய மரபின் தருக்க முறைகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. நாகார்ச்சுனர், அசங்கர், வசுபந்து, திக்நாகர், தர்ம கீர்த்தி முதலிய முக்கியமான பெளத்த ஞானிகள் அனைவருமே நியாய இயலுக்கு உரை எழுதியுள்ளனர்.

ஆகவே வைதிக மரபும் வேறு வழியே இல்லாமல் நியாயயியலை கற்றுக் தேர்ச்சி அடைய நேரிட்டத்து. குறிப்பாக வேதாந்த ஞானியாகிய சங்கரர் நியாயியலை மிகச் சிறப்பாக பயின்று பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தி அவர்களை வென்றார். நியாயத் தருக்க முறைகளைப் பயன்படுத்தி வேதங்களையும் உபநிஷதங்களையும் பிரம்ம சூத்திரம் முதலிய யோக நூல்களையும் சங்கரர் புதிதாக விளக்குகிறார். இவ்வாறு புதிய தருக்க முறைப்படி முன்வைக்கப்பட்ட வேதாந்தமே பிற்கால வேதாந்த மரபு ஆயிற்று.

சங்கரர் பெளத்தர்களின் தருக்க முறையை மிகவும் சார்ந்திருக்கிறார். அவரை அவரது எதிரிகள் பிரசன்ன பெளத்தன் (மாறு வேடமிட்ட பெளத்தன்.) என்று பழித்தார்கள். அத்வைதத்துக்கும் திகனாகர் மற்றும் தர்மகீர்த்தியின் விஞ்ஞானவாதத்திற்கும் இடையேயான உறவு மிகவும் மெல்லியதேயாகும். விஞ்ஞானவாத பெளத்த மரபில் புத்தர் ‘த்வைத கண்டகன்” , ‘அத்வைதன்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறார் (இருமையை கண்டிப்பவன், இருமையற்றவன்.)

விஞ்ஞானவாத பெளத்த மரபு, நாம் அறிவதெல்லாம் நமது அறிதலை மட்டுமே என்று கூறியது. உதாரணமாக தண்ணீரைப் பற்றி நாம் அறிவது என்ன? குளுமை, வடிவமற்றதன்மை, தாகம் தீர்க்கும் இயல்பு… இவையெல்லாம் நமது உடலின் இயல்பு, நமது தேவை ஆகியவற்றால் தீர்மனிக்கப்படுபவை. அதற்கு அப்பால் போவதற்கு நம்மால் முடிவதில்லை. ஆகவே நாம் பிரபஞ்சமாக கண்டு கொண்டிருப்பது நமது சுயத்தையும் அகங்காரத்தையும் மட்டும்தான்.

நமது அகங்காரத்தை கடந்து சென்று நாம் பிரபஞ்சத்தை அறிய முற்பட்டால் நமது அறிதல்கள் அனைத்தும் இல்லாமல் ஆகின்றன. நாம் இல்லாமலாகின்றோம். பிரபஞ்சம் மட்டுமே இருக்கிறது. நாம் அதில் துளியாக இருக்கிறோம். அறிதல், அறிபடுபொருள், அறிபவன் மூன்றும் ஒன்றாக ஆகிவிடுகிறது. இதுவே விஞ்ஞான வாதம், விஞ்ஞானம் என்றால் அறிதல் என்று பொருள்.

அத்வைதம் இதை விரிவு படுத்துகிறது. ஜீவாத்மா தன் அகங்காரத்தால் தன்னை பிரித்தறிகிறது. பிரபஞ்சத்தைத் தன்னில் இருந்து வேறாகக் கண்டு தன் சுயத்தை கணக்கிடுகிறது. பரமாத்மாவை அறிய முற்படுகிறது. அகங்காரத்தை அது களையும்போது மாயை கலைந்துவிடுகிறது. அந்த நிலையில், ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு அல்ல. அறிவதும் அறியப்படுவதும் அறிவும் எல்லாம் பரமாத்மாவேயாகும்.

இந்து மரபின் மெய்ஞானத்தை முழுக்க இவ்வாறு தத்துவார்த்தமாக மறுவிளக்கம் அளித்து சங்கரர் மறு பிறவி எடுக்கச் செய்தார். இதன் விளைவாகவே இந்து ஞான மரபு புத்துயிர் பெற்றது. வைதிக மரபு அவைதிக மரபினை வென்றது. சிலர் இன்று கூறுவது போல பெளத்த, சமண மதங்களை வைதிக மதம் வன்முறை மூலம் துரத்தியது என்பது சரியல்ல. எந்த மதத்தையும் வன்முறை மூலம் அழிக்க முடியாது என்பதையே வரலாறு காட்டுகிறது. ரோமசாம்ராஜ்யத்தால் கிறிஸ்தவத்தை அழிக்க முடியவில்லை. முகலாயர்களால் சின்னஞ்சிறிய சீக்கிய மதத்தைத் கூட அழிக்க முடியவில்லை. பெளத்தமும் சமணமும் பக்தி மரபாலும் புது வேதாந்தமரபாலும் தோற்கடிக்கப்பட்டன என்பதே உண்மையாகும்.

அத்வைத மரபுக்கும் அன்றைய காலகட்டத்துக்கும் ஒரு முரண்பாடு இருந்தது. ஏற்கனவே கூறப்பட்டதுபோல அது பக்தி காலகட்டம். அத்வைத மரபு பக்திக்கு எதிரானது. அவித்யை என்று கூறப்படும் அறியாமையினை மெய்யறிவின் மூலம் வென்று இரண்டற்ற நிலையை அடைவது பற்றி மட்டுமே அது பேசுகிறது ! அது முழுக்க முழுக்க அறிவார்ந்தது. ஞானமே முக்திக்கு வழி என்று கூறுவது.

ஆகவே பக்தியை முக்திக்கு வழியாக முன்வைத்த அக்கால மெய்ஞானிகள் சிலர், அத்வைத தரிசனத்தை சற்று மாற்றியமைக்க தலைப்பட்டனர். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்று கூறினால், ஜீவாத்மா பரமாத்மாவை வழிபட வேண்டிய தேவையே இல்லை. ஆகவே இரண்டும் வேறு, வேறு என்றனர் அவர்கள்.

இவர்களில் மத்வாச்சாரியார் வகுத்த துவைதம், ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்றது. பரமாத்மா எந்தவித நிபந்தனைகளும் வரையர்றைகளுக்கும் அப்பாற்பட்டது. எந்தவிதமான முறைகளும்  இல்லாதது. ஜீவாத்மா உடலும் உயிறுமாக மாறக்கூடியது. காமம் குரோதம் மோகம் போன்ற குறைகளுக்கு ஆட்படக்கூடியது. இவற்றை வெல்ல ஜீவாத்மா பரமாத்மாவை வழிபடவேண்டும் என்றார். இது துவைதம் ( இருமைவாதம் ) எனப்பட்டது.

பக்தி நெறியை முதன்மைப்படுத்தியவர் ராமானுஜர். பிரியமும் சேவையும் (பிரபத்தி) தான் மானுட விடுதலைக்கு வழி என்றார். ஆகவே அவரும் இருமைவாதத்தையே முன்வைத்தார். ஆனால் தன் குறைகளும் அடையாளங்களும் நீங்கப்பெற்ற ஜீவாத்மா இறுதியில் பரமாத்மாவுடன் இணைந்துவிடுகிறது என்றார். இதன் பெயர் வசிஷ்டாத்வைதம்.

அடுத்து வருவது…

இந்து மறுமலர்ச்சி காலகட்டம்

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s