எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தரிசங்களின் பின்னணி
இந்து மறுமலர்ச்சிக் காலகட்டம்
பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இந்தியா மீது வெளியே உள்ள நாகரிகங்களின் நேரடியான பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சியும் ஆங்கிலக் கல்வியும் இந்து மரபின் சிந்தனைகளை உலகளாவிய தத்துவப் போக்குகளுடன் ஒப்பிட்டு ஆராயவேண்டிய நிர்பந்தத்தை எற்படுத்தின.
அத்துடன் பதினாறாம் நூற்றாண்டு முதலே இந்தியா முழுக்க நிலையான அரசுகளோ, ஒழுங்கான நிர்வாக முறையோ இல்லாத அராஜக சூழல் நிலவி வந்தது. முகலாய ஆட்சியில் இந்து மரபு மீது தொடுக்கப்பட்ட தொடர்தாக்குதல்களின் காரணமாக இந்து மரபு தன்னை இறுக்கமான விதிகள் அடங்கிய, மாறாத அமைப்பாக மாற்றிக்கொண்டிருந்தது. அந்த இறுக்கம் காரணமாக அது பலநூறு வருடம் மாறாமல் அப்படியே இருந்து வந்தது.
ஆகவே இந்து ஞான மரபினை காலத்திற்கு ஏற்பச் சீர்திருத்தி அமைக்கவேண்டும் என்ற தேவையை சில அறிஞர்கள் உணர்ந்தார்கள். இந்து ஞான மரபில் உள்ள தொன்மையான விஷயங்கள் பல காலப்போக்கில் முக்கியமிழந்து பின்னகர்ந்து விட்டிருந்தன. அவற்றை மீட்க வேண்டிய தேவையையும் சில அறிஞர்கள் உணர்ந்தார்கள்.
இந்து ஞானமரபு பக்தி மரபாக எளிமையாக்கபட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டிருந்தன. ஆகவே படிப்படியாக பக்திச் சடங்குகளும் நம்பிக்கைகளுமே இந்து மரபாக மாறிவிட்டன. தத்துவமும் ஞானமும் மறக்கப்பட்டன. ஆகவே தத்துவத்தையும் மெய்ஞானத்தையும் பக்தி சடங்குகளுக்கு மேலாக தூக்கி நிறுத்தவேண்டிய தேவையும் எற்பட்டது.
பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டிகளில் இந்து ஞான மரபில் மறுமலர்ச்சியை உருவாக்கிய அறிஞர்களும் ஞானியரும் இம்மூன்று வகையைச் சேர்ந்தவர்கள். பண்டித ரமாபாய், ராஜாராம் மோகன்ராய் முதலியவர்கள் சீர்திருத்தவாதிகள். சுவாமி தயானந்த சரஸ்வதி முதலியோர் பழைமையின் சாரத்தை மீட்க முயன்றவர்கள். விவேகானந்தர், அரவிந்தர், நாரயண குரு, வள்ளலார் முதலியோர் தத்துவார்த்தத்தையும் மெய்ஞானத்தையும் முதன்மைப்படுத்த முயன்றவர்கள்.
இது ஒரு பொதுவான வகைப்படுத்தல் மட்டுமேயாகும். இவர்கள் அனைவருமே மூட ஆசாரங்களைக் கடுமையாகக் கண்டித்தவர்கள்தான். பழமையின் சாரத்தை புதுமையுடன் பிணைக்க முற்பட்டவர்கள்தான். இவர்கள் மூலம்தான் இந்து ஞானமரபு இன்று நாம் காணும் வடிவில் நமக்கு கிடைத்தது.
இந்த காலகட்டத்திற்கு சில குறிப்பிட்டதக்க முக்கியத்துவங்கள் உண்டு. அச்சு ஊடகம், நவீன தொடர்பு முறைகள், பொதுவான கல்வி முறை ஆகியவை உருவான பிறகு உருவான மறுமலர்ச்சி அலை இது. ஆகவே பல முக்கியமான வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. ஒன்று, மூல நூல்கள் அனைவருக்கும் படிக்க கிடைத்தன. மூல நூல்களைச் சார்ந்து விவாதிக்கும் போக்கு வலுப்பட்டது. இரண்டு, பல்வேறு மத மரபுகளும் தரிசன மரபுகளும் ஒன்றொடொன்று சகஜமாக உரையாட ஆரம்பித்தன. மூன்று, விவாதிக்கப்படும் கருத்துகள் சம்பந்தபட்ட அறிஞர்களுடன் நின்றுவிடாமல் மக்களிடையே பரவ வாய்ப்பு ஏற்பட்டது.
இந்த மாற்றங்களுக்கு ஆங்கில மொழியும் இந்தியவியல் (Indology) என்ற தனி அறிவுத்துறையும் ஆற்றிய பங்கு அதிகம் என்பதையும் இங்கு கூறியாகவேண்டும். சம்ஸ்கிருதம், பிராகிருதம், பாலி, திபேத்தியமொழி ஆகியவற்றில் இருந்த புராதண நூல்கள் தொடர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயற்கப்பட்டு அச்சிட்டப்பட்டு அனைவருக்கும் கிடைத்தன. ஆங்கிலம் அன்று அனைவரும் கற்கும் மொழியாக இருந்தமையினால் மூல நூல்களை யார் வேண்டுமானாலும் பயிலலாம் என்ற நிலை ஏற்பட்டது. மேலும் இந்த மொழிபெயர்ப்புகள் பல்வேறு பாட பேதங்களுடன் ஒப்பிடப்பட்டு திருத்தபட்ட பதிவுகளாக வெளிவந்தமை, இந்து மெய்ஞான மரபு அதன் உண்மை வடிவில் அனைவருக்கும் கிடைக்க வழி வகுத்தது.
இந்தியாவியல் என்ற அறிவுத்துறையானது மானுடவியல், கலைச்சித்தாந்தம், வரலாறு, மெய்யியல் மற்றும் தத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள ஒன்று. இதைத் தொடங்கி வைத்தவர்கள் இந்தியாவுக்கு கிறித்தவ மதத்தைப் பரப்ப வந்த பாதிரிமார்கள். ஹெர்மன், ஜி.யு. போப், கால்டுவெல் முதலிய மொழியறிஞர்களும் மாக்ஸ் முல்லர், க்ளேசன்ஏப் முதலிய தத்துவ அறிஞர்களும் மொனியர் விலியம்ஸ், மர்டிமர் வீலர் முதலிய வரலாற்றாய்வாளர்களும் சேர்ந்து உருவாக்கிய பண்டைய இந்தியாவின் சரித்திரம் தாம் நாம் இன்று அறிவது என்றால் தவறல்ல. இந்து ஞான மரபு இப்பாதிரிமார்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் கடன் பட்டுள்ளது.
தங்களால் மதமாற்றம் செய்யப்படவிருக்கும் இந்தியர்களைப் பற்றி மேற்கத்திய இறையியலாலர்கள் முதலில் தெரிந்து கொள்வதற்காகப் பாதிரிமார்களால் இந்தியவியல் உருவாக்கபட்டது. பிற்பாடு ஜெர்மனியில் ஆரிய இனவாதம் தலைதூக்கியபோது ஆரியர்களின் பூர்வ சரித்திரத்தை அறிந்து கொள்ளும் ஆவல் உருவாயிற்று. இதன் விளைவாக ஜெர்மனிய அறிஞர்கள் இந்தியவியலுக்குள் நுழைந்தார்கள். இந்தியவியலுக்கு ஜெர்மானியர்களின் கொடை அளப்பரியது.
அதே சமயம் இந்திய மெய் ஞானமரபின் உயித்துடிப்பான பகுதியை, இன்றும் வாழும் மைய ஒட்டத்தை இந்தியவியல் கண்டுகொள்ளவில்லை. இந்திய ஞான மரபைப் பண்டைய வரலாற்றின் அடிப்படையில் தொகுப்பதில்தான் அது ஆர்வம் காட்டியது. இந்திய மெய்ஞான மரபினைத் தத்துவ அடிப்படையில்தான் பெரும்பாலும் அணுகியது. அத்துடன் பல ஐரோப்பிய இந்தியவியலார்கள் இந்திய மெய்ஞான மரபின் முக்கியத்துவத்தைக் முறைத்துக்காட்ட முயன்றனர். சிலர் இந்திய ஞான மரபு என்பது ஆரிய, திராவிட இனப் போராட்டத்தின் தத்துவப் பதிவு மட்டுமே என்று கூறினார்கள். இம்மாதிரி பல திரிபுகள் அரசியல் காரணங்களுக்காகவும், மத மாற்ற நோக்கங்களுக்காகவும், வெள்ளைய இன உயர்வு மனப்பான்மை காரணமாகவும் இந்தியவியல் அறிஞர்களால் செய்யப்பட்டுள்ளன.
இந்திய மறுமலர்ச்சி நாயகர்களான மகாத்மா காந்தி, ஜவர்கர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதலியோர் இந்தியவியல் மூலம் இந்திய ஞானமரபினை அறிந்தவர்கள்தான். அதே சமயம் இந்தியவியலைப் பெரிதும் சார்ந்திருந்த சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், திலகர் முதலியோர் இந்தியவியலாளர் உருவாக்கிய திரிபுகளை கண்டறிந்து கண்டித்தும் உள்ளனர். இந்தியவியலின் பல பிழைகள் இன்று திருத்தப்பட்டுள்ளன. எனினும் இந்து மெய் ஞான மரபினை நாம் இன்று அறிவற்குக் காரணம் இந்தியவியல்தான். அதற்கு அப்பேரறிஞர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இங்கு ஒரு சிறு பிரச்சினை உள்ளது. இந்தியவியல் சார்ந்து இந்து ஞான மரபினை அறியும்போது இந்து மெய்ஞான மரபின் தனித்தன்மை சற்று சிதைவு படுகிறது. இந்தியவியல் என்பது இந்தியாவைபற்றிய அறிவுத்துறை ஆயினும் அது ஒரு மேற்கத்திய அறிவுத்துறையே. மேற்கத்திய அறிதல் முறையின் (Epistemology) அடிப்படைகளையே அது தன் ஆதார விதிகளாகக் கொண்டுள்ளது. அதாவது அது ஐரோப்பியனின் கண்களால் இந்தியாவைப் பார்க்க முயல்கிறது.
இப்படிப் பார்க்கும்போது இந்தியவியல் இந்து மெய்ஞான மரபில் உள்ள தத்துவ அம்சத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறது. உள்ளுணர்வு சார்ந்த அம்சங்களைப் பெருட்படுத்துவது இல்லை. பலவற்றை வெறும் சடங்குகளாகவே அது காண்கிறது. இந்தக் கோணத்தில் இந்தியராகிய நாமும் இந்து மெய்ஞான மரபினைப் பார்ப்போமாகில் பல சூட்சுமமான விஷயங்களை இழந்துவிட நேரும். நமது மரபினை நாம் நமது பாரம்பரிய மனநிலைகள், உணர்வுகள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தித்தான் படித்தறிய வேண்டும். தகவல்களை முழுமையாக பெறுவதற்கு மட்டும்தான் நாம் இந்தியவியலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்து ஞான மரபின் மறுமலர்ச்சியிலிருந்துதான் இந்திய தேசிய எழுச்சி உருவாயிற்று. காந்தி, நேரு முதலிய எத்தனையோ தலைவர்கள் உருவாகி வந்தனர். பாரதியார், தாகூர் பிரேம்சந்த் போன்ற இலக்கியவாதிகள் உருவாகி வந்தனர். சி.வி.ராமன், ஜெகதிஷ் சந்திரபோஸ் முதலிய விஞ்ஞானிகளும் டாக்டர். ராதாகிருஷ்ணன் போன்ற தத்துவ மேதைகளும் உருவாகி வந்தனர். இந்தியா சுதந்திர நாடாக மாறியதும் அந்த அலையின் விளைவினால்தான்..
அடுத்து வருவது…
இந்து நவீனப் போக்குகளின் காலகட்டம்.