எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தரிசங்களின் பின்னணி
இந்து நவீனப் போக்குகளின் காலகட்டம்
[ஊட்டி முகாம் 2012, குரு நித்யா ஆய்வரங்கு]
நவீன தகவல் தொடர்பு முறைகள், கல்வி ஆகியவற்றின் மூலம் உலகமே ஒரே அறிவுத்தளமாக மாறிவிட்ட காலகட்டமே நவீன கால கட்டம் ஆகும். விஞ்ஞானம் மனித அறிவின் அடிப்படையாக ஆயிற்று. மனித வாழ்க்கையின் நோக்கம் இன்பமாக இக உலக வாழ்வே என்று கூறப்பட்டது. இந்தக் காலகட்டத்தின் தேவையை ஒட்டி இந்து மெய்ஞான மரபின் பல அம்சங்கள் புது வடிவங் கொண்டு பிறந்து வந்தன. இதை நவீனக் காலகட்டம் என்று கூறலாம்.
உதாரணமாக ஓஷோ (ரஜனீஷ்) உலக ஞான மரபினை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர். சடங்குகளையும் வழிபாடுகளையும் மத நிறுவனங்களையும் நிராகரித்தவர். அவர் நவீன மனிதனின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொருட்டு ஒரு சில வழி முறைகளை உருவாக்கினார். கூர்ந்து பார்த்தோமென்றால் நாம் ஓஷோவை தாந்த்ரீக மரபின் தொடர்ச்சி என்று காணமுடியும். அதேபோல ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறுவது பதஞ்சலி கூறும் யோக மரபின் புதுவடிவையே என்றும் அறியலாம்.
இவ்வாறு பல்வேறு புதிய போக்குகள் உருவாகி வளர்ந்தபடியே உள்ளன. இதற்குக் காரணம் இந்து மெய்ஞானமரபு என்பது ஒரு மத நிறுவனம் அல்ல. திட்ட வட்டமான கொள்கைகள் இதற்கு இல்லை. திட்டவட்டமான தத்துவமும் இல்லை. வாழ்வின் அர்த்தத்தை தேடி ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மனித மனம் செய்த பெரும் பயணங்களின் தொகுப்புதான் இந்து ஞான மரபு. எந்த பயணத்தையும் இன்று நாம் புதிதாக மேலும் தொடர முடியும். எல்லா நதிகளும் கடலையே சென்று சேர்கின்றது என்று இதைப்பற்றி சாந்தோக்ய உபநிஷதம் கூறுகிறது.
அடுத்து வருவது…
தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படை புரிதல்கள்