எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள்
தரிசனங்களைப் பற்றி ஆராயப் புகுவதற்கு முன்பு சில அடிப்படைத் தெளிவுகளை நாம் அடைந்தாக வேண்டும். இந்திய ஞானமரபு குறித்து நம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான புரிதல், இது ஒர் ஆன்மிக மரபு என்பதாகும். இந்த எண்ணத்தை நவீன இந்திய சிந்தனையில் ஆழமாக நிறுவியவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன். இந்தியாவின் அடிப்படையான சிந்தனைகள் எல்லாமே ஆன்மிகமானவை என்றும் இந்த ஆன்மிக அடிப்படையே இந்தியாவின் உள்ளார்ந்த வலிமைக்குக் காரணம் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தன் இந்திய தத்துவ ஞானம் என்ற நூலில் ( Vol. pp 24-25) கூறுகிறார்.
ஆன்மிகம், பெளதிகம் என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்வோம். புலன்களால் அறியப்படக் கூடிய பொருட்களினால் ஆனதுதான் இந்த பிரபஞ்சமும் இங்குள்ள வாழ்கையும் என்று நம்புவது பெளதிக வாதம். வாழ்வின் சாராம்சத்தை அறியவும் இந்தப் பொருள்களையே ஆராய வேண்டுமென அது கூறுகிறது. மாறாக இந்தப் பொருள்மய உலகம் அதற்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு சக்தியின் வெளிப்பாடு மட்டுமே என்று நம்புவது ஆன்மிகவாதம்.ஆன்மா என்றால் சாரம். ஆன்மிகம் என்றால் சாராம்சத்தை அடிப்படையாகக் காணும் பார்வை. மனிதனின் சாரம் ஆத்மா. பிரபஞ்சத்தின் சாரம் பரமாத்மா. வெளியே தெரிவது பொய் அல்லது மனமயக்கம் என நம்புகிறவர்கள் ஆன்மிகவாதிகள்.
இந்திய ஞான மரபில் எந்தக் காலத்திலும் ஆன்மிகவாதம் தனித்த பெரும் சக்தியாக நின்றது இல்லை என்பதை நாம் திட்ட வட்டமாக புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மிகவாதம் மேலோங்கிய காலகட்டங்கள்தான் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேபோல பல பெளதிகவாத மரபுகளும் மெல்ல மெல்ல ஆன்மிகவாதமாக மாறின என்பதும் உண்மையே. எனினும் பெளதிகவாதச் சிந்தனை ஒருபோதும் இல்லாமலிருந்ததில்லை.
ஆகவே டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுவது சரியல்ல என்று கூற வேண்டியுள்ளது. இந்திய ஞானமரபில் உள்ள பெளதிகவாதப் போக்குகளைத் தெளிவாக அடையாளம் கண்டு ஆதாரத்துடன் தொகுத்தளித்த பிற்காலத்திய தத்துவ ஆய்வாளர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் கூற்றை பொய்யாக்கி விட்டனர். எம்.என்.ராய் (பொருள் முதல் வாதம்), தேவி பிரசாத் சட்டோபாத்யாய (இந்திய சிந்தனையில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்) கே. தாமோதரன் (இந்தியச் சிந்தனை) முதலிய தத்துவ அறிஞர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்.
இந்திய மெய்ஞான மரபில் எப்போதுமே உயிர்துடிப்பான இயக்கம் இருந்து வந்ததற்கு காரணம் ஆன்மிகவாதமும் பெளதிகவாதமும் எப்போதும் இருந்து வந்ததுதான். இடைக்காலத்தில் பெளதிகவாத மரபு சற்று மங்கலடைந்தபோது சிந்தனையில் பெரும் தேக்கம் ஏற்பட்டு ஆன்மிக மரபு வெற்றுச் சடங்குகளாக மாறிச் சீரழிந்தது என்பது ஒர் வரலாற்று உண்மை.
ஆன்மிகவாதமும் பெளதிகவாதமும் தொடர்ந்து விவாதித்துத் தங்கள் தரப்பை முழுமைபடுத்திக் கொண்டே இருந்தன. பெளதிகவாத மரபின் பல சிறந்த அம்சங்களை ஆன்மிக மரபு தனக்குரியதாக ஆக்கிகொண்டது. இதற்குச் சிறந்த உதாரணம் பகவத்கீதை. ‘முனிவரில் நான் கபிலன்’ என்று கிருஷ்ணன் கூறுகிறான். பெளதிகவாத மரபின் முதல் மெய்ஞானிகளில் ஒருவர் தான் கபிலர். சாங்கியம்,யோகம் முதலிய மரபுகளைக் கீதை தனக்குரிய முறையில் பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காணாலாம்.
அதேபோல பெளதிகவாதமும் ஆன்மிகவாதத்தின் சிறந்த பகுதிகளை உள்வாங்கிக்கொண்டது. உதாரணமாக ஆரம்பகால பெளத்த மரபு எளிமையான பெளதிகவாத அடிப்படையைத்தான் முன் வைத்தது. முக்கியமான வினாக்களில் மெளனம் சாதித்தது. (இதை புத்தரின் பொன்னான மெளனம் என்பதுண்டு) பிற்காலந்த்தில் மகாயான பெளத்த மரபு வேதாந்த மரபுடன் விரிவாக விவாதித்தது. வேதாந்த மரபின் மாயாவாதத்ததை உள்வாங்கியபடிதான் பெளத்த ஞானமரபின் மிகச் சிறந்த தத்துவநிலையான சூனியவாதத்தையும் அதன் நீட்சியான விஞ்ஞான வாதத்தையும் அது உருவாக்கியது.
பெளதிகவாத மரபும் ஆன்மிகவாத மரபும் சிவசக்தி போல. முரண்பட்டும் தழுவியும் அவர்கள் ஆடும் நடனமே சிந்தனை எனப்படும். இந்திய ஞான மரபு சிந்தனைக்குப் பதிலாக நம்பிக்கையினையும் விசுவாசத்தையும் ஒருபோதும் முன் வைத்தது இல்லை. நம் மரபு ஒருபோதும் ஒற்றைப்படையான ஒட்டமாக இருந்தது இல்லை. எப்போதும் இது பன்முகத்தன்மை உடையதேயாகும். நம் மரபின் பலமே இதுதான்.
புராதனமான தரிசங்கள் என்னென்ன? சார்வாகம், சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம் அல்லது ‘வேதாந்தம்’, பெளத்தம், சமணம் என்று அறிஞர்கள் கூறுவார்கள். சார்வாக தரிசனம் முழுமையானதல்ல. அது வளரவுமில்லை. பெளத்தமும் சமணமும் தனி மதங்களாக வளர்ந்தன. ஆகவே எஞ்சுவது ஆறு தரிசனங்கள் தான். மேற்குறிப்பிட்ட தரிசனங்களில் பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம் தவிற பிற அனைத்துமே பெளதிகவாத அடிப்படை உடையவை என்பதைக் கூர்ந்து பார்க்க வேண்டும். அதே சமயம் இந்திய மெய்ஞான மரபில் ஒருசிலவற்றை தவிர பிறவற்றை பெளதிகவாதம் என்றோ ஆன்மிகவாதம் என்றோ முழுமையாக வகுத்துவிட முடியாது என்பதையும் கணக்கில் கொண்டாக வேண்டும்.
உதாணமாக சார்வாகத் தரிசனம் பிரபஞ்சம் நான்கு அடிப்படைப் பொருட்களான நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டதே என்றது. முக்குணங்களும் சம நிலையில் இருந்த பருப்பொருளான மூலப்பிரகிருதியிலிருந்தே பிரபஞ்சம் பிறந்தது என்கிறது சாங்கியம். சாங்கியத்தரிசனத்தை அடிப்படையில் ஏற்றது யோகம். பிரபஞ்சம் என்பது பல்வேறு நுண் அணுக்களின் கூட்டு முலம் பிறந்தது என்கிறது வைசேஷிகம். அதை ஏற்றது நியாயம். பிரபஞ்சம் பருப்பொருட்களினாலானது, அவை தொடர்ந்து மாறியபடியே உள்ளன. அதில் கடவுளுக்கோ ஆத்மாவுக்கோ இடமில்லை என்றது பெளத்தம். பிரபஞ்சம் காலத்திற்கு அப்பால் நிரந்தரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு பருமை வடிவம் என்றது சமணம். இவை பெளதிகவாத அடிப்படை உடைய சிந்தனைகள்.
தொடரும்…