எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் – 2
[இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தின் போது]
அதே சமயம் பிற்பாடு சாங்கியத் தரிசனம் புருஷன் என்ற கருத்துருவத்தை உருவகம் செய்து கொண்டது. அவனுடைய பார்வையினாலேயே இயற்கையின் குணமாறுதல்கள் அறியப்படுகின்றன என்றது. சித்த விருத்தியை நிறுத்தி அதிதூய நிலையில் நம் பிரக்ஞையை வைத்திருந்தால் மட்டுமே நம்மால் பிரபஞ்ச உண்மையை அறிய முடியும் என்றது யோகம். நுண்ணணுக்களின் தனித்தன்மைகள் தன்மாத்திரைகள் என்றும் அவற்றை உணர்பவனே அவற்றின் இயல்பினைத் தீர்மானிகின்றான் என்றும் கூறியது வைசேஷிகம். நாம் அறிய விரும்பும் பொருளைத் தருக்கப்பூர்வமாக வகுத்து அறிவதன் மூலமே அப்பொருளுக்கு அர்த்தம் உண்டாகிறது என்கிறது நியாயம். யோகாசார பெளத்த மரபு நாம் அறிவது எல்லாம் நம்முடைய மனத் தோற்றங்களையே என்றும் நாம் அறியும் விதத்தில் ஒரு போதும் இயற்கை இருப்பதில்லை என்றும் கூறியது. நம் அறிதலுக்கு அப்பாற்பட்டவற்றை சூனியம் என்றது. சமணத் தத்துவம் பிரபஞ்சம் எப்படி நிரந்தரமாக இருந்துகொண்டே இருக்கிறதோ அப்படித்தான் ஆத்மாவும் இருந்துகொண்டே இருக்கிறது என்றது.!
ஆக இவை பெளதீக வாத அடிப்படையில் தொடங்கி மெல்ல ஆன்மிகவாத்தையும் இணைத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். இதைப்போலவே ஆன்மிகவாதச் சிந்தனைகளையும் அராய்ந்து பார்க்கலாம். பிரபஞ்சம் என்பது மந்திரவடிவமானது. பருமையான பிரபஞ்சம் மந்திரத்தின் வெளிப்பாடு மட்டும்தான் என்று நம்பியது பூர்வமீமாம்சம். உரிய முறையில் மந்திரங்களை ஒதுவதன் மூலம் பிரபஞ்சத்தை மாற்றிவிடலாம் என்றது அது. காணும் பிரபஞ்சம் பொய்யானது, பிரம்மமே மெய்யானது என்று கூறியது வேதாந்தம்.
ஆனால் பருப்பிரபஞ்சத்துக்கு அப்பால் அதை மீறிய ஒரு பெரும் சக்தி இருப்பதைப் பூர்வமீமாம்சம் ஏற்கவில்லை. இன்ன மந்திரம் செய்யதால் இன்ன விளைவு என்ற காரியகாரண வாதத்தை அது உருவாக்கியது. மிகவும் உலகியல் தன்மை உடையதாக அது இருந்தது. நியாம மரபின் தருக்கங்களையும் யோக முறைகளையும் கடைப்பிடித்து பிரம்மத்தை நாம் அறிய முடியும் என்று வேதாந்த மரபு கூறியது. இவ்வாறு பெளதிக மரபுகளை ஆன்மிக மரபு ஏற்றுக்கொண்டது.
இந்தக் குழப்பம் நமது ஞானமரபில் எப்போதும் உண்டு. டாக்டர் ராதாகிருஷ்ணன், ஹிரியண்ணா, தாஸ்குப்தா முதலிய தத்துவ அறிஞர்கள் சார்வாகம் தவிர மீதி அனைத்துச் சிந்தனைகளையுமே ஆன்மிக மரபில் அடக்குகிறார்கள். இதை நடராஜ குரு முதலிய ஆன்மிகவாதிகள் கூட ஏற்பதில்லை. நம் ஞானமரபுகள் உறைந்து நிற்பவை அல்ல. அவை சலன வடிவம் உடையவை. அவற்றை உறைய வைத்துப் புரிந்துகொள்ள முடியாது. எனவே இயந்திரத்தனமாக ஆன்மிகவாதம், பெளதிக வாதம் என்ற பிரிவினையை நாம் செய்யக் கூடாது என்பது மட்டுமே நமக்கு தெளிவாகத் தெரிய வேண்டும்.
இதைத் தொடர்ந்து இன்று உருவாக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான குழப்பத்தையும் தெளிவுவடுத்தியாக வேண்டும். இந்து ஞானமரபு குறித்து ஆராய்ந்த இடதுசாரி ஆய்வாளர்கள் மிக இயந்திரத்தனமாக ஆன்மிகவாதம், பெளதிக வாதம் என்று ஞானமரபுகளைப் பிரித்து வகுத்தனர். (இதை இவர்கள் கருத்து முதல்வாதம் பொருள் முதல்வாதம் என்கின்றனர்). கருத்து முதல்வாத மரபு இந்திய தேசத்தின் வளர்ச்சிக்குத் தடையாகவும் பிற்போக்காளர்களுக்கு ஆயுதமாகவும் விளங்கியது என்கிறார்கள். கருத்து முதல்வாத மரபு மூடனம்பிக்கைகளை வளர்த்தது என்கிறார்கள். பெளதிக வாத மரபு அல்லது பொருள் முதல் வாத மரபுதான் சிந்தனித்துறையின் எழை மக்களின் குரலை ஒலிக்க வைத்தது என்று வாதிடுகிறார்கள். ஆகவே அது முற்போக்கானது, மூடனம்பிக்கைக்கு எதிரானது என்று கூறிவருகிறார்கள். இதை பெரும்பாலோர் நம்பியும் வருகிறார்கள்.
இது உண்மை அல்ல. இந்தியா நீண்டகாலம் உறைந்த நிலையில் இருந்தபிறகு பதினெட்டாம் நூற்றாண்டில் விழித்தெழுந்த கால கட்டத்தை மட்டும் பார்ப்போம். இக்கால கட்டத்தில் எண்ணற்ற ஞானிகளும் அறிஞர்களும் இந்தியா முழுக்க பிறந்தார்கள். மூடநம்பிக்கைக்கு எதிராகவும், வெறும் சடங்குகளுக்கு எதிராகவும் போராடினார்கள். புதிய யுகத்தினை நோக்கி இளைஞர்களை அறைகூவி அழைத்தார்கள். புதுயுகத்தின் விடிவெள்ளியான இந்த ஞானிகளில் மிகப் பெரும்பாலானவர்கள் அத்வைத மரபினை எற்றுக் கொண்டவர்கள் என்பதைக் காணலாம். ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், பாரதி என்று உதாரணங்கள் பல காட்டலாம்.
அதேபோன்று உயர்சாதியினர் தாழ்ந்த சாதியினரை சுரண்டும் பொருட்டு அத்வைத வேதாந்தத்தைப் பரப்பினர் என்று கூறப்படுகிறது. இது உண்மையா? மறுமலர்ச்சிக் காலகட்டத்து ஞானிகளான ஸ்ரீநாராயணகுரு, சுவாமி சகஜானந்தர், அய்யா வைகுண்டர் ஆகியோர் தாழ்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களும் அத்வைதிகளேயாவர்.
அத்வைதமரபு தூய அறிவையே பிரம்மம் என்று முன் வைத்தது. உலகியல் சார்ந்த எல்லாவற்றையும் அது மாயையாகவே கண்டது. எல்லா சாஸ்திரங்களும் மரபுகளும் மனிதனின் அகங்காரத்தின் விளைவுகளே என்றது. ஆகவேதான் நாராயணகுருவினைப் போன்றவர்களின் கையில் அது வலுவான ஆயுதமாக விளங்கியது. நேர்மாறாக பெளதிகவாத மரபு உலகியல் இன்பங்களை முன்னிறுத்தியது. சுயநலத்தை போதித்தது. ஆகவேதான் இந்த ஞானியரில் பெரும்பாலானவர்கள் பெளதிகவாத மரபினை ஏற்கவில்லை. விதிவிலக்கானவர் ஜோதிராவ் பூலே மட்டும்தான்.
அத்வைதம் உள்ளிட்ட ஆன்மிக மரபு மூட நம்பிக்கைகளாகவும், வெற்று சடங்குகளாகவும் சீரழிந்திருந்ததும் உண்மையே. ஆனால் பெளதிகவாத மரபும் அதைப்போலவே சீரழிந்து மூட நம்பிக்கைகளின் களமாகவே இருந்தது. ரசவாதம், ஹடயோகம், தொடர்பான பலவித மூடநம்பிக்கைகள் அதில் இருந்ததன. ஆகவே இன்கும் நாம் ஒரு சமநிலையான பார்வையையே மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெளதிகவாதமும் ஆன்மிகவாதமும் அவை எப்படி பயன்படுத்தபடுகின்றன என்பதன் மூலமே சமூகத்திற்குப் பங்காற்றுகின்றன. இரு மரபுகளிலுமே மேலான மானுட வாழ்வுக்கு அவசியமான பார்வைகள் பெருமளவில் உள்ளன. மனிதவாழ்வை இருளிலும் பழைமையிலும் கட்டிப்போடும் தர்க்கங்களாக அவற்றைச் சிலர் மாற்றுவதும் சாத்தியம்தான்.
இறுதியாக இன்னொரு தெளிவினையும் நாம் அடைந்தாக வேண்டியுள்ளது. இந்தி தரிசன மரபு குறித்துப் பேசும் சில அறிஞர்கள் , குறிப்பாக தேவி பிரசாத் சட்டோபாத்யாய முதலியோர் சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், சார்வாகம் முதலிய ஆதி பெளதிகவாத் தரிசனங்கள் இந்தியாவின் புராதனமன பழங்குடி வாழ்விலிருந்து முளைத்தவை என்ரூ கூறுகிறார்கள். அதே சமயம் ஆன்மிகவாத தரிசனங்களில் பூர்வமீமாம்சையும், வேதாந்ததமும் வேதமடபிலிருந்து முளைத்தவை என்கிறார்கள்
இந்த திட்டம் எங்கே போகிறத்து என்பது தெளிவு. படிப்படியாக இந்தியாவின் ஆன்மிகவாதம் முழுக்க வைதிக மரபிலும், ஆரியர்கம் மீதும் சுமத்தப்படும். பெளதிகவாதம் முழுக்க அரியரல்லாத ( அல்லது திராவிட ) பழங்குடி மக்களுக்கு உரியனவாக மாற்றிக் காட்டப்படும். இந்து ஞானமரபில் ஆன்மிகவாதம் பெளதிகவாதத்தைத் தோற்கடித்து ஒடுக்கியது என்பதே தேவி பிரசாத் சட்டோபாத்யாய முதலியோர் விடாது கூறிவரும் கருத்து. இது மிக அபாயகரமான திரிபு ஆகும். இக்கருத்தினை மார்க்ஸிய அறிஞரான கே.தாமோதரன் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ( ‘இந்தியச் சிந்தனை’ அத்தியாயம் 6 ) என்பதைக் காணலாம்.
புராதனமான் இயற்கை வழிபாடு மற்றும் நில வழிபாடுகளுடன் சாங்கிய ஞானமரபுக்கு உறவு உண்டு என்பது உண்மையே. இந்நூலில் ஏற்கனவே கூறப்பட்டது போல எல்லாத்தரிசனங்களும் இங்கனம் மிகத் தொன்மைக்காலம் முதல் ஒரு தொடர்ச்சி கண்டிப்பாக இருக்கும் அதே போன்ற தொடர்பு ஆன்மிகவாதத் தரிசனங்களுக்கும் உண்டு. யாகம் பலி முதலிய சடங்குகளுக்கு நம்முடைய பழங்குடி மரபில் மிக வெளிப்படையான முன்னுதாரணம் உள்ளது நாமறிந்ததே. இன்றும் கூடபழங்குடியினர் ஏதோ ஒருவகையில் ஆகுதி செய்யும் சடங்குகளை செய்துதான் வருகிறார்கள்.
இதை நிறுவ இன்னுமொரு வழி உண்டு. இன்றும் இந்திய நிலப்பரப்பில் எஞ்சும் பழங்குடி மரபுகளைக் கூர்ந்து பாத்தால் ஒன்று தெரியும். அவற்றில் பெளதிகவாத அடிப்படையுள்ள வழிபாட்டு மரபுகள் மிகமிகக் குறைவேயாகும். பெரும்பாலான வழிபாட்டு மரபுகள் ஆன்மிகவாத அடிப்படை உடையவையே. அதர்வண வேதத்துக்குப் பழங்குடி மரபில் உள்ள தொடர்பு வேறு எந்த வழிபாட்டு முறைக்கும், தரிசன முறைக்கும் இல்லை என்பதே உண்மை.
தரிசனங்களின் பெரும்பகுதி விரிவான தருக்க முறைகள் உருவான பிறகு வளர்ந்து வந்ததேயாகும். இவற்றின் முதல் குருநாதர்கள் அனைவருமே பேரறிஞர்கள். அதாவது, இயல்பாகப் பழங்குடி மரபிலிருந்து ஆன்மிகவாதமே உருவாகி வரும். கல்வி மூலம் உருவாகும் தருக்க ஞானமே பெளதிகவாதத்தை உருவாக்குகிறது.
இங்கு இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். ஐதீகங்களின்படி தரிசனங்களின் மூலகுருக்களாகக் கூறப்படுபவர்கள் அனைவருமே பிராமணர்கள்தான். சார்வாக ரிஷியான பிருஹஸ்பதி தவிர, சார்வாகத் தரிசனம் தவிர பிற அனைத்துக்கும் வேதங்கள் ஏதோ ஒருவகையில் பிரமாண நூல்கள்தான் (ஆதார நூல்கள்). சார்வாக மரபின் தத்துவங்களின் மூலவிதைகள் கூட வேதங்களில் உள்ளன.
ஆகவே இப்படித் தொகுத்துக் கூறலாம். பல்வேறு வழிபாட்டு முறைகளும், ஆதி அகத்தரிசனங்களும் ஒன்றோடொன்று கலந்து உரையாடி வளர்ந்தவையே தரிசனங்கள். அவை இந்திய ஞான மரபு எனும் மரத்தின் கனிகள். வேரிலிருந்து வரும் சாரமே பழங்களின் சாறு ஆகிறது. அனால் எந்த வேரின் சாரம் எந்தப் பழத்தின் சாறாக மாறியது என்று ஆராய்வது பயனற்ற வேலை மட்டுமேயாகும்.
@@@
பகுதி 1 நிறைவு பெறுகிறது.
அடுத்து வருவது…. பகுதி – 2 : ஆறு தரிசனங்கள்