எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும் – தொடர்ச்சி
[மேகமலை பயணத்தின் போது]
சாங்கிய தரிசனத்தை புரிந்துகொள்வதில் இடறல் ஏற்படக்கூடிய இடம் இது. அது குணபேதங்கள் இல்லாத பருப்பொருளையே முதலில் ஆதி இயற்கை என்கிறது. முக்குணங்களின் சமன் குலைந்ததும் உருவாகும்’மகத்’ என்பது ஒரு கருத்து நிலை அல்லது ஓர் இயல்பு! அதாவது , பருப்பொருள் திடீரென்று கருத்து வடிவமாக, பிரக்ஞை வடிவமாக மாறுகிறது.
தத்துவ விவாதத்தில் எப்போதுமுள்ள பிரச்சினை உயிரற்ற ஜடப்பொருட்களில் இருந்து தான் உயிரும் பிரக்ஞையும் எப்படி உருவாயின என்பதுதான். இதை மேற்குறிப்பிட்ட விதத்தில் சாங்கியம் எதிர் கொண்டது. இந்தப் புள்ளிக்குப் பிறகு சாங்கியத்தின் தருக்கம் கருத்து முதல்வாதத்தை நோக்கி (அதாவது தலைகீழாகத்) திரும்பியிருப்பதைக் காணலாம். மகத் என்ற பிரக்ஞை விதையில் இருந்து தன்னுணர்வு உருவாகிறது. இதுவும் ஒரு கருத்து வடிவமே. அதிலிருந்து அனுபவங்கள். அனுபவத்திலிருந்து புலன்கள். புலங்களிலிருந்து உருப்புகள். இவற்றின் விளைவாக ஐந்து பரு வடிவங்கள் உருவாயினவாம். அதாவது பஞ்ச பூதங்கள் என்பவை நம் ஐந்து புலன்களின் விளைவாக வெளியே தெரிபவை மட்டுமே!
சாங்கியத்தில் உள்ள இந்த இடறலை அதன் எதிர் தரப்பினர் விரிவாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.1. இதைத்தான் ‘விஷ்ணுபுரம்’ என்ற நாவலில் மிகுந்த ஜடத்தில் அந்த இச்சை (Will) எப்படி குடியேறிற்று, அது எங்கிருந்து வந்தது, அதன் இலக்கு (motive) என்ன என்று வேதாந்த மரபு கேட்டது. இதன் விடையாகவே சாங்கியம் ‘புருஷன்’ என்ற 25 –வது தத்துவத்தை உருவாக்கிக்கொண்டது.
சாங்கியம் குறிப்பிடும் இவ்விஷயம் குத்துமதிப்பாக யோசிக்கிறவர்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். ஒலித்தல் என்ற குணத்திலிருந்து ஒலி உண்டாகிறது. ஒலியில் இருந்து காது உண்டாகிறது. காதும் மனமும் இணைந்து சொல் பிறந்தது. மொழி வளர்ந்தது என்கிறது சாங்கியம். இக்குழப்பம், நிதரிசனத்தை ஒரே அடிப்படையாகக் கொள்வதன் மூலம் உருவானதேயாகும். தத்துவார்த்தமாகப் பார்த்தால் ஞானம் தொடங்கிய காலம் முதலே இந்தத் தரப்பு இருந்து வந்துள்ளதைக் காணமுடியும்.
இதற்கு பெளதிககதியான (விஞ்ஞான) விளக்கம் தேவை என்பவர்கள் இப்படி யோசித்து பார்க்கலாம். காட்சி என்பது என்ன? வடிவங்களும் வண்ணங்களும் கூடி உருவாவது. வண்ணங்களைப் பற்றியே பேசுவோம். வண்ணங்கள் என்றால் என்ன? ஒளியின் அலைவு விகிதத்தில் ஏற்படும் நுண்மையான மாற்றங்களையே நாம் நிறம் என்று காண்கிறோம்.
இப்பிரபஞ்சத்தின் ஒளி முதலில் உருவாயிற்று. அதில் பல அலைவு வரிசைகள் இருந்தன. இவ்வியல்பினை நிறம் என்ற குணம் எனலாம். இதிலிருந்து நிறம் என்ற அமைப்பு உருவாயிற்று. அதற்கு எத்தனையோ காலம் கழித்து பூமியில் உயிர்கள் உருவானபோது அவற்றுக்குக் கண்கள் உருவாயின. ஆதி உயிரினங்களுக்கு ஒளியின் அழுத்தங்களை மட்டுமே அறிய முடியும். பிறகு ஒளியில் பல்வேறு இயல்புகளுக்கு ஏற்பக் கண்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தன. படிப்படியாகவே ஒளியின் அலைவு விகிதங்களை பார்க்கும் திறன் உடைய மனிதக் கண்கள் பரிணமித்து வந்தன. அக்கண்கள் மூலம் நாம் பார்பதே நிறம் என்று நாம் குறிப்பிடுவது.
உண்மையில் நாம் நிறத்தை அறிந்த பிறகுதான் அதற்கு நிறம் என்று பெயரிட்டு அறிந்தோம். நாம் காண்பவற்றை நிறம் மூலம் அடையாளப்படுத்திக் கொண்டோம். நிறங்களைக் கொண்டு கற்பனை மூலம் புதிய புதிய உலகங்களை உருவாக்கிப் பார்த்தோம். இன்று நாமறியும் உலகமே நிறங்களால் அடையாளப்படுத்தபட்டது. நிறங்களாலானது நமது கற்பனை. ஒளியே நிறங்களை உருவாக்குகிறது. கண்களை நிறங்கள் உருவாக்குகின்றனன். நிறம் என்ற கருத்தைக் கண் உருவாக்கியது. ஆகவே நிறம் என்ற கருத்துதான் நிறம் என்ற விஷயமாயிற்று; ஒளியே கண்களை உருவாக்கியது என்றும் கூறலாம்.
சாங்கியத்தரிசனம் கூறுவது சரி என்று நிறுவும் பொருட்டு இது கூறப்படவில்லை. அதற்கு இந்நூல் முயலப்போவதில்லை. தரப்புகளை முன் வைப்பதே இதன் இலக்கு. இங்கு கவனிக்கப் படவேண்டிய ஒரு விஷயம் குறித்து அழுத்திக் கூறும் பொருட்டு தான் இதை விளக்க நேர்ந்தது. அதாவது , தத்துவ ரீதியான சிந்தனை என்பது நாம் அன்றாடம் கண்டு கேட்டு அறிந்து யோசிக்கும் கோணத்தில் செய்யப்படும் ஒன்று அல்ல. தத்துவச்சிந்தனை என்பது தர்க்கம் சார்ந்தது. தர்க்கம் எல்லாக் கோணத்திலும் விரிய வேண்டியுள்ளது.
தத்துவச் சிந்தனையில் ஈடுபடும்போது தர்க்கத்தின் எல்லச் சாத்தியக் கூறுகளையும் நாம் பரிசீலித்தாக வேண்டும். அதில் நிதரிசனம் ஒரு தரப்பு மட்டும்தான். நிதரிசனமல்லாத தரப்புகளும் பல அதில் உண்டு. ஆகவே ஒரு தத்துவச் சிந்தனைத் தரப்பினைக் கேட்ட உடனே அது அபத்தம் என்று தள்ளிவிடக் கூடாது. அது ஒருபோதும் தத்துவ மாணவனின் வேலை அல்ல.
அடுத்து வருவது..
முக்குணங்களின் அலகிலா விளையாட்டு
சிறந்த எளிமையான விளக்கங்கள், பொருள் முதல்வாதம் பேசும் சாங்கிய தரிசனம், கருத்து முதல் வாதத்தையும் தொட்டுச் செல்வதை அழகாக விவரித்துள்ளீர்கள்.
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலை பகுதி பகுதியாக வெளியிடுவதற்கு நன்றி,