இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி
[சொல்புதிது குழுமவிவாதத்தில் இருந்து ஜெயமோகன்.இன் ல் வெளியானது]
அன்புள்ள ஜெ,
நீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென் வில்பரும் இது பற்றி எழுதியதைப் படித்திருக்கிறேன்.ஆனாலும் இதை நேர்வாழ்வில் பாவிப்பதன் சாத்தியங்கள் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டேதான் உள்ளது.
இலக்கியமும்,தத்துவமும் இரண்டு எதிர்நிலைகள் அல்லவா..ஒன்று எல்லாவற்றையும் தொலைவிலிருந்து பார்க்கும் பருந்துப் பார்வை எனில் இன்னொன்று எல்லாவற்றையும் மிக நெருங்கி உருப்பெருக்கி மூலம் கூர்ந்து பார்ப்பது அல்லவா.ஒன்று எல்லாவற்றையும் மிகு உணர்ச்சியுடன் அணுகுவது.ஒன்று மிகு தர்க்கத்துடன் அணுகுவது.ஒருவரால் எப்படி இரண்டு பார்வைகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளமுடியும்..நான் படித்த வரையில் இலக்கியவாதிகளின் தத்துவமோ தத்துவவாதிகளின் இலக்கியமோ அத்துணை பூரணமாய் இல்லை.[அரவிந்தரின் சாவித்திரி போல.].
என்னால்இந்த இருமைகளைத் தாண்டிப் போக முடிந்ததே இல்லை.ஒன்றை நோக்கி நான் இழுக்கப் படும்போது மற்றது சுமையாக என்னைப் பின்னோக்கி இழுப்பதை உணர்ந்திருக்கிறேன்.நீங்கள் கூட உங்கள் திரிதல் பருவத்தில் ஒரு மடத்தில் ‘எழுதுவதே உன் அறம்”என்று ஒருவர் மடை மாற்றியதைப் பற்றி சொல்லி இருந்தீர்கள்.இப்போது இந்தப் பிளவு உங்களைத் தொந்தரவு செய்வதில்லையா?இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் என நீங்கள் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.எதிரெதிர்த் திசைகளில் செல்லும் இரண்டு பாதைகள் எங்கே எவ்விதம் சேர்கின்றன?
போகன்
***
போகன்:
விஷ்ணுபுரத்திலேயே இந்த விவாதம் ஆரம்பம் முதல் இருந்தது. மானுட அறிதல்,மானுட அனுபவம் ஒன்றே. புலன்களும் அறிதல்முறையுமே அதைப் பலவாக்குகின்றன.
நடராஜகுரு ‘அறிவியலைப் பாடலாமா?’ என ஒரு நல்ல கட்டுரை எழுதியிருகிறார்.Can a science be sung? அவரது விஸ்டம் என்ற தொகைநூலில் உள்ள இக்கட்டுரை சொல்புதிதில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.
[நடராஜகுரு]
நடராஜ குரு இவ்விஷயத்தில் ஹென்றி பெர்க்ஸன், ஏ என் வைட்ஹெட், ரஸல் , விட்கென்ஸ்டைன்ஆகியோரை எடுத்துக்கொண்டு மேலே சிந்தித்துச்செல்கிறார்.
மானுட சிந்தனைகளைத் தொகுத்து மையம் காண்பதற்கான முயற்சிகள் எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மானுட அறிதல்கள் பலவகை. ஆனால் அறிபடுபொருள்,அறிபவன் இரு முனைகளும் ஒன்றே. பொதுமையைக் காண்பதற்கான முயற்சிகள் இந்த மையங்கள் சார்ந்தவை. வைட்ஹெட் , பெர்க்ஸன் போன்றோர் விழுமியங்களை மையமாகக் காண்கிறார்கள். ரஸ்ஸலும் விட்கென்ஸ்டைனும் அறிதல்முறையைப் பொதுமையமாக காண்கிறார்கள் என சுருக்கமாகச் சொல்லலாம்
சமீபத்தைய மொழியியல்சார் முயற்சிகள் [பார்த் முதல் தெரிதா வரை] இன்றைய நரம்பியல் முயற்சிகள் [ ஆலிவர் சாக்ஸ் முதல் வி.ராமச்சந்திரன் வரை] உதாரணமாகச் சுட்டப்படக்கூடியவையே. இவை அறிபவனை மையமாக்குகின்றன. அறிவுக்குரிய ஊடகமான மொழியை, அறியும் மூளையை.
அறிதல் அதன் புற விவரங்களில் முழுமையான தனித்தன்மையுடன் உள்ளது. அங்கே ஒன்றை ஒன்று கலப்பது சாத்தியமல்ல. கலக்கப்போனால் அந்தந்த அறிதல்முறைகளின் வடிவங்கள் அழியும். அவற்றின் குறியீடுகள் மழுங்கும்.
ஆனால் அறிதலின் சாரம் அல்லது உச்சம் எல்லா முனைகளிலும் ஒன்றாகவே அறியப்படுகிறது. முழு உண்மை பலமுனை கொண்டதாக இருக்கலாம். பலவாக இருக்கமுடியாது. இருந்தால் அதனால் பயனில்லை. ஏனென்றால் அவை ஒன்று இன்னொன்றை மறுத்து இன்மையையே உருவாக்கும் என்பது நடராஜகுருவின் எண்ணம். அவர் தன்னை முதல்முழுமைவாதி என அழைத்துக்கொண்டவர். அவரது சுயசரிதையின் பெயரே The Autobiography of an Absolutist”, என்பதுதான்.
நீண்ட நெடுங்காலமாகவே அத்வைதம் அறிபடுபொருள் அறிபவன் அறிவு [ஞேயம், ஞாதா, ஞானம்] மூன்றும் ஒன்றே என்று சொல்லிவந்துள்ளது. நடராஜகுரு அதை சமகால அறிவுத்துறைகளில் இணைக்க முயல்கிறார். இந்தப்பார்வை இன்று அறிவுத்துறைகளை உசுப்பிக்கொண்டிருக்கும் அடிப்படைக்கேள்வியான ‘மானுட ஞானத்தை எல்லாம் ஒரே அமைப்புக்குள் கொண்டுவரமுடியுமா?’ என்ற வினாவுக்கான பதிலை அடைய சிறந்த வழியாக அமையக்கூடும்
என் நிலைப்பாடென்னவென்றால் நான் எழுத்தாளன். இலக்கியம் என் கலை. ஆகவே என் கலையிலேயே நான் ஈடுபடமுடியும். இதைப் பிறகலைகளுடன், தத்துவத்துடன் நான் இணைக்க முடியாது. அது என் கலையை அழிக்கக்கூடும். ஆனால் இலக்கியம் அறிவார்ந்த கலை. ஆகவே அது ஒருபோதும் தத்துவத்தைத் தவிர்க்கமுடியாது. தத்துவத்தை இலக்கியமாக ஆக்குவதெப்படி என்பதே அதன் சவால்.
அது என்றுமே இலக்கியத்தில் சவாலாக இருந்துள்ளது. இலக்கியம் உருவான உடனேயே. உபநிடதங்களின் எல்லாத் தத்துவங்களையும் மகாபாரதத்தில் காணலாம், இலக்கியவடிவில். இலக்கியம் தத்துவத்தைப் படிமங்களாக, தொன்மங்களாக, நாடகச்சந்தர்ப்பங்களாக உருமாற்றிக்கொள்கிறது. விஷ்ணுபுரம் தத்துவத்தை இலக்கியத்தைக்கொண்டு சந்திப்பதற்கான முயற்சி என நினைக்கிறேன்
இவ்வறிதல்களை எல்லாம் ஒன்றாக ஆக்குவதெப்படி என்பது ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றின் சவால். அதை அவர்கள் சந்திக்கட்டும். எல்லாவற்றையும் அறிந்து தன் கலைக்குள் உள்ளிழுக்க முனைபவனே கலைஞன் என்பதனால் நான் அந்த அளவு ஆர்வத்துடன் நின்றுகொள்கிறேன்.
ஜெ
The lucid style is appreciated. However certain words like “Vizhumiam” may better be explained with an equivalent English wird. The beauty of Thathvas lie in their uniqueness and varieties. The unification process, it is afrrid, may distort the fabrics
Banu