எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
சாங்கியமும் லோகாயதமும்
[ஊட்டி இலக்கிய முகாம். ஒரு மாலை நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]
சாங்கியம் வேதகாலம் முதல் இருந்து வந்த லோகாயத மரபின் தர்க்கப்பூர்வமான மேலடுத்த நீட்சி என்று குறிப்பிடப்படுகிறது. இதைப்பற்றி இன்று அதிகாரப்பூர்வமாக விவாதிப்பது சாத்தியமில்லை. காரணம், லோகாயத நூல்களில் பெரும்பாலானவை அக்காலத்திலேயே அழிந்துவிட்டன. பிற பிற்காலத்தில் அழிந்தன. லோகாயதத் தரிசனம் இன்று பற்பல நூல்களாகச் சிதறிக் கிடக்கும் மேற்கோள்களில் இருந்தும், அதன் எதிரிகள் கூறும் மறுப்புகளில் இருந்தும் ஊகித்தறியப்படுகிறது. லோகாயத் தரிசனத்தை மீட்டதில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவிற்குப் பெரும்பங்கு உண்டு.
பிரஹஸ்பதி சூத்திரங்கள் என்ற பெயரில் லோகாயதத் தரிசனங்களும், அவற்றுக்கு ஃபாகுரி முதலிய அறிஞர்கள் எழுதிய உரைகளும் பழங்காலத்தில் இருந்துள்ளன என்பதற்குப் பிரம்ம சூத்திர உரைகள், பதஞ்சலியின் சூத்திரங்கள் முதலியவை ஆதாரமாக அமைகின்றன.
இங்கு ஒரு விஷயம் விளக்கப்படவேண்டும். இராகுல சாங்கிருத்யாயன் போன்ற அறிஞர்கள் லோகாயத மரபினை வைதிக (ஆன்மிக) மரபு திட்டமிட்டு அழித்தது என்றும் ஒரு நூல்கூடக் கிடைக்காமல் செய்து விட்டது என்றும் கூறுகிறார்கள். தேவி பிரசாத் சட்டோபாத்யாய முதலிய அறிஞர்களும் இதை ஏறக்குறைய ஒப்புக்கொள்கிறார்கள். பொதுவாகச் சொல்லப்போனால் மார்க்ஸிய மரபு சார்ந்த எல்லாச் சிந்தனையாளர்களும் இதே தரப்பினையே கொண்டிருக்கிறார்கள். இது சரியா?
இந்திய மெய்ஞானிகளில் சங்கரர் முதலிய அத்தனை பேருமே சார்வாகத் தரிசனம் முதலிய ஞானமார்க்கங்களை குறிப்பிட்டுத் தங்கள் எதிப்புகளைப் பதிவு செய்து வைத்துள்ளனர். மகா பாரதம் முதல் ஸ்ரீ நாராயண குருவின் நூல்கள் வரை எல்லா அசலான தத்துவ விவாதங்களிலும் லோகாயதம் ஒரு முக்கியமான தரப்பாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. மூலநூல்களை அழித்த வைதீகர்கள் தங்கள் நூல்களில் உள்ள மேற்கோள்களை அழிக்க ஏன் மறந்து விட்டார்கள்? அத்தனை மூடர்களா அவர்கள்?
லோகாயதத் தரிசன நூல்கள் அழிந்தன எனினும் சாங்கியம் முதலான பிற பெளதிகவாதத் தரிசன நூல்கள் அழியாமல் காக்கப்பட்டது எவ்வாறு? அவற்றையும் பரிபூரணமாக அழித்திருக்க முடியாதா?
இந்திய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தாந்த்ரீக மரபுக்கு எதிராகத்தான் வைதிகம் மிகத் தீவிரமான போராட்டத்தை நடத்தியுள்ளது என்று தெரியவரும். ஆனால் எந்தக் காலத்திலும் தாந்த்ரீகம் முழுமையாக அழிக்கப்படவில்லை. இறுதியில் மறைமலை அடிகள் காலம் வரை கூட பெரு மதங்கள் தாந்த்ரீக மதங்களுக்கு எதிரான கடும் போராட்டத்தில் இருந்தன என்பதை அவரது எழுத்துக்களில் இருந்தே அறியலாம். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் முதலியோர் தாந்த்ரீக வழிபாடு இருந்த கேரளப்பகுதிகள் மீது கடும்போர் நடத்தியதும், ஆகம நிகம முறைகளை அரச அதிகாரம் மூலம் அங்கு நிலைநாட்டியதும் நாமறிந்ததே.
அரசாங்க ஆதரவோ, வன்முறையோ, கருத்து ரீதியான எதிர்ப்புப் போரட்டமோ உண்மையான மக்கள் ஆதரவு உள்ள ஒரு மதத்தை அழித்துவிட முடியாது என்பது வரலாற்றில் மீண்டும் மீண்டும் காணப்படும் விஷயம். ஓர் எளிய கருத்துத் தரப்பு கூட அதற்கு சமூக வளர்ச்சியின் இடம் இருக்கும்வரை அழிவது இல்லை. அதிலும் பிரம்மாண்டமான பன்முகத்தன்மையைத் தன் அடிப்படை இயல்பாகக் உடைய இந்து ஞான மரபில் ஒரு தரப்பு முழுமையாக அழிக்கப்பட்டது என்று கூற மிகவும் துணிவு வேண்டும்.
இந்து ஞானமரபில் வைதிகம் மைய இடத்தில் இருந்தது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மையானது, ஒருபோதும் அது ஒற்றை பெரும் சக்தியாக இருந்தது இல்லை என்பதும். அப்படிப்பட்ட ஒரு சித்திரத்தை இன்று இடதுசாரிப் பார்வை உடைய சில சிந்தனையாளர்கள் தங்கள் அரசியல் நோக்குகளுக்காகக் கற்பிதம் செய்கிறார்கள். இது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எங்கெங்கெல்லாம் வைதிக மரபு மேலோங்கியதோ அங்கெல்லாம் அதற்குச் சமானமான சக்தியாக அதற்கு எதிரான போக்குகளும் மேலோங்கியுள்ளன. அவற்றுக்கும் வைதிக போக்குக்கும் இடையே மோதல் நிகழ்ந்தபோதே உரையாடலும் நிகழ்ந்தது. ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு அவை மேலும் வளர்ந்தன. தென்னாட்டில் வைதிக ஞானம் (வேதாந்த தத்துவம்) வந்து வளர்ச்சி பெற்றபோதுதான் சைவ சித்தாந்தமும் வீறு பெற்றது என்பதைத் திட்டவட்டமான உதாரணமாகக் கூறலாம்.
ஆகவே லோகாயத மரபினை வைதிகம் அழித்திருக்க வாய்ப்பில்லை. அது உள்நோக்கம் கொண்ட அவதூறான குற்றச்சாட்டு. வைதிகம் அதனுடன் உரையாடவே முற்பட்டது. பஞ்சபூதங்கள் குறித்த கொள்கை வைதிக மரபுக்கு லோகாயத மரபிலிருந்தே போயிருக்க வேண்டும். இதை அகேகானந்தபாரதி போன்ற சில ஆய்வாளர்களும் உறுதி செய்கிறார்கள் (ஆகாயம் ஐந்தாவது பூதமாக பிறகு வைதிகர்களால் சேர்க்கப்பட்டது)
அப்படி என்றால் லோகாயத தரப்புகள் எப்படி அழிந்தன? ஒரே காரணம்தான் கூற முடியும். ஒரு வழிபாட்டு முறையாகவும் பிறகு தனி மதமாகவும் மாறக்கூடிய அடிப்படைத் தன்மைகள் லோகாயத்தில் இல்லை. அது ஒரு தருக்கமுறையாகவே இருந்தது, மேலும் அது ஓர் எதிர்மறை அணுகுமுறை. அதாவது வைதிக மரபுக்கு எதிரான எதிர்க்குரல் அது.
பண்டைக்காலம் முதல் இந்தியாவில் பேணப்பட்டுக் கால வெள்ளத்தைக் கடந்து வந்த நூல்களெல்லாம் எதாவது ஒரு வகையில் வழிபாட்டுகுறியவையாகவே இருந்துள்ளன. தொடர்ந்து பயிலப்பட்டு, இடைவிடாது பிரதி எடுக்கப்பட்டால் மட்டுமே நூல்கள் அழியாமல் இருக்கும். இரண்டு தலைமுறைக் காலம் ஒரு நூல் பயிலப்படாவிட்டால் அது அழியநேரும். மத நூல்கள் மட்டுமே அறிந்தும் அறியப்படாமலும் பயிலப்படும். பேணப்படும். அதாவது, தேவை இல்லாவிட்டால் கூட நம்பிக்கையின் அடிப்படையில் நூல்களை மத மரபு பேணிக்காக்கும். அந்த வசதி லோகாயதத்துக்கு கிடைக்கவில்லை. தத்துவரீதியாக அது மதிப்பிழந்தபோது நூல்களும் அழிந்தன. இதுவே உண்மையாகும்.
ஆனால் அரச நிர்வாகம், நீதி, பொருளாதாரம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக மன்னர்களும் அதிகாரிகளும் லோகாயதம் பயின்றாக வேண்டும் என்று முன்பு கருதப்பட்டது. அர்த்தசாஸ்திரத்திலே கெளடில்யர் ‘ அன்வீக்ஷி’ யை மன்னனும் அமைச்சர்களும் பயில வேண்டும் என்கிறார். லோகாயதம், சாங்கியம், யோகம் மூன்றுமடங்கிய பொதுத் தத்துவமே ‘அன்வீக்ஷி’ யாகும்.” அது துயரிலும் சுகத்திலும் ஒன்றுபோல மனதை உறுதியாக நிலை நிறுத்துகிறது. அது தொலைநோக்கும், பேச்சு வன்மையும், செயலூக்கமும் அளிக்கிறது” என்று சாணக்கியன் கூறுகிறார். பதினாறாம் நுற்றாண்டில் ‘சர்வதர்சனசங்க்ரகம்’ (அனைத்து தரிசனங்களின் சுருக்கம்) எழுதிய மாதவாச்சாரியார் லோகாயதத் தரிசனத்தை சுருக்கி தருகிறார்.
லோகாயதத் சிந்தனைகளை இவ்வாறு தொகுத்துக் கூறலாம். மண், நீர், தீ, காற்று ஆகிய நான்கு மூலப்பருப்பொருட்களின் தொகுப்பே பிரபஞ்சமாகும். உடல்,புலன்கள், மனம், ஆகிய அனைத்தும் இந்த நான்கு பருப்பொருட்களின் கூட்டாக உருவாகிவந்தவையே. எப்படிச் சில பொருட்களைக் கூட்டினால் ஒரு குணாதிசயமான போதை அவற்றில் புதிதாக உருவாகிறதோ அப்படித்தான் பருப்பொருட்களின் கூட்டில் இருந்து ஒரு குணாதிசய பிரக்ஞை உருவாயிற்று. பிரக்ஞை ஒர் உடலில் குடிகொள்வதே ஆத்மா. உடல் அழியும்போது பிரக்ஞையும் அழியும். மறுபிறப்போ சொர்க்கமோ இல்லை. இகஉலக இன்பமே உண்மையான இன்பம். மரணம் அனைத்திலிருந்தும் முழு விடுதலையாகும்.
வைதிக மரபு உண்மையை அறிவதற்கு ஆதாரங்களைக் (பிரமாணங்கள்) கூறுகிறது. ஒன்று, பிரத்யட்சம் (பிரதி + அட்சம் – கண்ணில் முன்னால் தெரிவது), இரண்டு, அனுமானம் (ஊகம்) மூன்று, சுருதி (மூத்தோர் வாக்கு). மூத்தோர் வாக்கு என்பதை வேதங்கள் என்று பூர்வமீமாம்சகர்கள் விளக்குகிறார்கள். மீமாம்சமரபுக்கு முதல் ஆதாரம் சுருதிதான். வேதாந்த மரபுக்கு முதல் ஆதாரம் அனுமானமாகும்.
ஆனால் லோகாயதர் நேர்காட்சியே முழுமையான முதல் ஆதாரம் என்கிறார்கள். புலன்களுக்குச் சிக்குவதே உண்மை. ஒர் அளவு வரை, புலன்களை அடிபடையாகக் கொண்டு அனுமானங்களை நடத்தலாம். சுருதி ஒருபோதும் ஆதாரமாக ஆகாது. லோகாயதர்கள் வேதங்களை ஆதாரமாக முன்வைப்பதை ஒரு மோசடியாகவே கருதினார்கள்.
சாங்கியம் இந்த அடிப்படைக் கொள்கையில் பெரும்பாலானவற்றை ஏற்கிறது என்பதனைக் காணலாம். பிரபஞ்சம் நான்கு பூதங்களிலாலானது என்றும், அதை இயக்கும் ஆன்மிகமான சாராம்சம் ஏதும் இல்லை என்றும் அது கருதியது. பிரக்ஞை என்பது ஒரு வகையில் பருப்பொருளிலிருந்து உருவானதே என்றுதான் சாங்கியமும் கூறியது.
ஆனால் ஜடப்பொருளில் இருந்து எப்படி உயிரும் பிரக்ஞையும் உருவாயின என்ற கேள்விக்கு விடையாகவே சாங்கியம் மகத், தன் மாத்திரைகள் முதலிய கருதுகோள்களை முதலில் உருவாக்கியது. பிறகு அதிலிருந்து புருஷதத்துவத்தை உருவாக்கிக் கொண்டது.
சார்வாகம் (உலகாயதம்) அழிவதற்குச் சாங்கியமும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சாங்கியம் சார்வாகத்தின் தரப்பை மேலும் நுட்பமாகவும் தீவிரமாகவும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டது.
அடுத்து வருவது
சாங்கியமும் பகவத் கீதையும்