எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தூய்மையான அறிதல் முறை: யோகம்
[ டோரொண்டோ, கனடா பயணத்தின் போது. ஆயிரம் தீவுகள் ]
சாங்கியத்தின் கிளையாகவே யோகம் வளர்ந்து வந்தது. யோகம் சாங்கியத்தின் மூன்று அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. ஒன்று: பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது. பிரபஞ்சத்தின் மூலகாரணமும் பருப்பொருளேயாகும். இரண்டு: முக்குணங்களின் சமநிலை உடைய ஆதி இயற்கை, அந்த சமநிலை குலைந்ததனால் உருமாறி நாம் காணும் பிரபஞ்சமாக ஆயிற்று. மூன்று: இயற்கையிலிருந்து மகத்தும், தன் மாத்திரைகளும் அவற்றிலிருந்து புலனறிவும் பிறந்தன.
யோகம் உருவாக என்ன முகாந்திரம்? சாங்கிய மரபில் உருவான புருஷ தத்துவமே அதற்கு வழி வகுத்தது என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். ‘புருஷன்’ தன் தூய நிலையில் இருக்கும்போது இயற்கையும் தன் ஆதி தூய நிலையில் இருக்கிறது இல்லையா? பிரபஞ்சம் முக்குணங்களின் ஆலடரங்காக மாறிப் பரவியப் பிரம்மாண்டமான சிக்கலான தோற்றம் கொண்டுவிட்ட பிறகு புருஷனும் அதற்கேற்ப மாறுவது இயல்பே. புருஷனின் சகஜநிலை சிதறுண்ட நிலைதான். இயற்கையின் சகஜ நிலை என்பது முக்குணங்களின் சமநிலை இல்லாத நிலைதான்.
நாம் புருஷனின் பிரதிநிதிகள் அல்லது சிறுதுளிகள். நாம் காணும் இயற்கை முக்குணங்களால் பிளவுண்டது. பிளவுபடாத ஆதி இயற்கையை எப்படி நாம் அறிய முடியும்? இந்த வினாவுக்கு முயன்றபோதுதான் யோகம் பிறந்தது. நமது மனமும் பலவாறாக சிதறுண்டு உள்ளது. அதுவும் காமகுரோதமோகம் என்ற தீமையினால் மூடப்பட்டுள்ளது. நம்மை நாம் தூய நிலைக்குக் கொண்டு சென்றால், தூய புருஷனாக ஆனால், நம்மால் ஆதி இயற்கையை தரிசிக்க முடியும். எளிமையாகக் கூறப்போனால் யோகம் இந்த அணுகுமுறையிலிருந்து பிறந்ததுதான்.
யோகம் என்றால் தூய அறிதல் என்று பொருள். தூய அறிதலை எப்படி அடைவது, அதன் படிநிலைகள் என்னென்ன என்று வகுத்துக் கூறியது யோகம். பிறகு அதன் அடிப்படையில் சாங்கியத்தின் சில விஷயங்களை மேலும் விரிவாக விளக்கியது. அதாவது, மகத்தும், தன்மாத்திரைகளும், புலன்களும் உருவாகும் விதம் குறித்து விளக்கமாக பேசமுற்பட்டது யோகம்.
இந்தத் தேடலில் யோகம் சாங்கியத்திலிருந்து மெதுவாகப் பிரிந்து ஒரு தனித்த தரிசனமாக வளரத் தலைப்பட்டது. அதாவது, பிரபஞ்ச இயல்பு குறித்த விஷயத்தில் சாங்கியமும் யோகமும் ஒன்றே. அதை எப்படி அறிவது என்ற இடத்தில் இரண்டும் வேறு வேறு தரிசனங்களாக மாறிவிடுகின்றன.
யோகமும் இந்திய மரபும்
‘யோகம்’ என்ற விஷயத்துக்கு இந்திய மரபில் உள்ள இடம் மிக வியப்புக்குறியது. மொகஞ்சதாரோவில் கிடைத்த ‘யோகத்தில் அமர்ந்த ஞானி’யின் களிமண் சிற்பம் உலகப்புகழ் பெற்றது. அது தட்சிணாமூர்த்தியான சிவன் என்று கூறுபவர்கள் உண்டு. உபநிஷதங்களில் யோகம் குறித்து மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. கண்களையும் பிற புலன்களையும் அணைத்துவிட்டு ஆழ் மனதை மட்டும் பயன்படுத்தி அறியமுயல்வது என்று ஆரம்பகாலத்து நூல்கள் யோகத்தைப் பற்றி கூறுகின்றன.
இந்து ஞான மரபின் எல்லாத் தரப்பிலும் யோகத்திற்கு இடமுண்டு. இன்னும் கூறப்போனால் யோகத்திற்கு மட்டும்தான் இந்து ஞானமரபுகள் அனைத்திலும் பொதுவான இடம் காணப்படுகிறது. வேள்விகளை முன்னிறுத்தும் மீமாம்சமும் சரி, தருக்கத்தை அடைப்படையாகக் கொண்ட அத்வைதமும் சரி, பக்தியை அடிப்படையாகக் கொண்ட பிற்கால சைவ, வைணவ மதங்களும் சரி, முக்கியமான ஒர் இடத்தில் யோகத்தை வைத்துள்ளன.
நவீன கால கட்டத்தில் பல்வேறு விதமான வழிபாட்டு மரபுகள் உருவாகும்போது புதிய புதிய யோக முறைகளும் பிறந்து வருகின்றன. ஒஷோ, மகரிஷி மகேஷ்யோகி, வேதாத்ரி மகரிஷி, சத்குரு ஜக்கி வாசுதேவ் முதலியோர் யோகத்தைத் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் இக்காலகட்டத்துக்கு ஏற்ப வடிவமைத்துத் தருகிறார்கள்.
இந்து ஞானமரபின் முக்கியமான தனித்தன்மையும் யோகமே. பிற ஞானமரபுகளில் யோகத்திற்கு இடமில்லை. கிறிஸ்த்து யோகப்பயிற்சி பெற்றவர் என்றும் ( அவர் இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கு வந்து அதைக்கற்றார் என்று கூறப்படுகிறது) அவர் முக்கியமான மெய்த்தரிசனங்களைத் தன் யோக நிலையில் பெற்றார் என்பதற்கு பைபிளில் ஆதாரம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவ மதம் பிற செமிட்டிக் மதங்களைப் போல பிராத்தனையையே முன்வைக்கிறது.
இந்தியாவுக்கு வந்த பிறகு எல்லா மதங்களும் யோகத்தின் பாதிப்பு உருவாவதனைக் காணலாம். இஸ்லாம் மீது யோகத்தின் பாதிப்பே சூஃபி மரபு என்றால் அது மிகக் கச்சிதமான ஒரு கூற்றுதான். சூஃபிகள் அல்லது ஃபக்கிர்கள் இஸ்லாமின் தொழுகை முதலிய சமூகச் சடங்குளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு யோகம் மூலம் மெய்ஞானத்தை அடைந்தவர்களே. யோக மரபின் பல முக்கியமான சூத்திர வாக்கியங்கள் அப்படியே சூஃபி மரபிலும் உள்ளன. உதாரணமாக ‘அனல் ஹக்!’ என்பதும் ’அகம் பிரம்மாஸ்மி’ என்பதும் ஒன்றுதான். (நானே பிரம்மம் / அல்லா)
கிறிஸ்தவ மதத்திலும் இங்கு சமீபகாலமாக யோகம், தியானம் முதலியவை பெருத்த முக்கியத்துவம் பெற்று வருவதைக் காணலாம். சில கிறிஸ்தவ மடாலயங்கள் மத அடையாளமில்லாத முறையில் யோக முறைகளை சிறப்பாக வளர்த்து எடுத்துள்ளன.
இந்து மதப் பிரிவுகள் எல்லாவற்றிலுமே யோகப்பயிற்சி உண்டு. யோகத்தில் அமராத இந்துக்கடவுள்களே இல்லை. எனினும் சைவத்துக்கும் யோகத்துக்கும்தான் நேரடியான உறவு உள்ளது. அடுத்தபடியாக பெளத்தத்திற்கும் யோகத்திற்கும் ஆழமான உறவு உண்டு. சிவனுக்கு யோகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. யோகாரூடன் என்றால் புத்தரை குறிக்கும். (யோகேஸ்வரன் என்ற பெயர் கிருஷ்ணனுக்கும் உண்டு).
எனினும் யோகம் ஒரு மதவழிபாட்டு முறை அல்ல. இறைவனுக்கும் பிரம்மத்துக்கும் யோகத்தில் இடமில்லை. யோகம் ஒரு மனப்பயிற்சி மட்டுமே. மிகக் கறாரான ஒரு விஞ்ஞானமாகவே அதைப் புராதன யோக நூல்கள் குறிப்பிடுகின்றன. யோகத்திற்கும் ஆன்மிக மரபுகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. யோகம் அடிப்படையில் ஒரு பெளதிக வாத அணுகுமுறையாகும். யோகத்தை தங்கள் தேவைக்கு ஏற்பப் பிற்பாடு ஆன்மிகவாத மரபுகள் பயன்படுத்திக்கொண்டன.
இன்று யோகத்தை மத வழிபாடுகளில் இருந்து பிரித்து தூய நிலையில் மீண்டும் நிலை நாட்ட முயற்சிகள் நடைபெறுகின்றன. ஒரு வகையில் ஜே. கிரிஷ்ணமூர்த்தி, ஓஷோ முதலியோர் செய்து வருவது இதைத்தான்.
இந்து மரபிலிருந்து சென்றுதான் யோகம் ஜென் மரபில் வேரூன்றியது. தாவோயிஸ்டுகளின் அருவமான தருக்க முறையும் (abstract logic) யோகமும் கலந்து உருவானதே ஜென். பல்வேறு வழிமுறைகளின் வழியாக இன்று யோகம் உலகளாவிப் பரந்து கொண்டிருக்கிறது.
அடுத்து வருவது …
யோகத்தின் பரிணாமம்