எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
யோகத்தின் பரிணாமம்
[ஊட்டி இலக்கிய முகாம். நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]
யோக முறைகளுக்கு எத்தனை கால வரலாறு இருக்கும் என்று எவரும் கூறிவிட முடியாது. மிகத் தொடக்க கால ஆதிமனிதர்கள் கூட யோகப் பயிற்சிகளை செய்திருக்கலாம். காரணம், தன்னைக் கூர்ந்து கவனிக்கும் வல்லமை உடைய ஒரு மனம், இயல்பாகவே கண்டடையக் கூடிய வழிமுறை இதுவாகும்.
கடோபநிஷத் இவ்வாறு கூறுகிறது: ‘ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க, அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம்’ (11-3). அறிவின் சிக்கல்களையும் மனத்தின் சஞ்சலங்களையும் கடந்து சென்று மெய்ஞானத்தை அறிவதற்கான ஒரு வழிமுறையே யோகம்’ என்று ஸ்வேதாஸ்வேதா உபநிஷத் கூறுகிறது.
அதாவது, எப்போது நமக்கு வரலாற்றின் முதல் சிற்பம் கிடைக்கிறதோ அப்போதே யோகத்தின் சிற்ப வடிவ ஆதாரம் கிடைத்து விடுகிறது. சிந்து சமவெளியில் கிடைத்த யோகரூபனின் சிலை, இலக்கண சுத்தமான யோகனிலையில் அமர்ந்திருப்பது தொடர்ந்து சுட்டிக்காட்டபடுகிறது. அதேபோல எப்போது எழுதப்பட்ட பதிவுகள் கிடைக்கத் தொடங்குகின்றனவோ அப்போதே யோகத்தைப் பற்றிய முழுமையான சொற்சித்திரமும் கிடைத்து விடுகிறது. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே யோகத்தின் வழிமுறைகள் பூரண வளர்ச்சி அடைந்து விட்டன என்பதே இதன் பொருள்.
ஆனால் யோகத்தை தர்க்கப் பூர்வமாக வகுத்துக் கூறவும் விவாதிக்கவும் முயல்பவர்கள் பிற்காலத்தில் வந்த பதஞ்சலி ரிஷி போன்றவர்கள்தான். இவர்களே யோகம் என்ற தரிசனத்தை ஒழுங்கு பண்ணியவர்கள். அதாவது, யோக வழிமுறை மிகப் புராதனமானது. அதிலிருந்து உருவான யோகத்தரிசனம் பதஞ்சலி முதலியோர் வடிவமைத்தது.
பதஞ்சலி கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம். பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூல் பதஞ்சலியின் சிருஷ்டி. இவர் சமாதி, சாதனா, விபூதி, கைவல்யம் என்ற நான்கு பகுதிகளில் (பாதங்கள்) 195 சூத்திரங்களில் யோகவழிமுறைகளைக் கச்சிதமான சூத்திரங்களாகத் தொகுத்து வைத்தார்.
எஸ்.என்.தாஸ்குப்தா தன் ‘ இந்தியத் தத்துவத்தின் வரலாறு’ என்ற நூலில் (Vol.1) பதஞ்சலி ஒரு மூல ஆசிரியனல்ல, தொகுப்பாளர் தான் என்று விரிவாக விவாதித்து நிறுவுகிறார். பல்வேறு வகையான யோக முறைகள் அன்று வழங்கி வந்திருக்கலாம் என்றும் அவற்றை பதஞ்சலி தொகுத்து, சாங்கியத்தரிசனத்தின் பிரபஞ்சப்பார்வையின் அடிபடையில் வகுத்து, நூலாக ஆக்கினார் என்றும் தாஸ்குப்தா கூறுகிறார்.
பதஞ்சலி யோக சூத்திரத்தின் முதல் உரை வியாச பாஷ்யம். இதற்கு வாசஸ்பதி, விஞ்ஞான பிக்ஷூ ஆகியோர் விளக்கம் எழுதியுள்ளார்கள். இருவருமே பதஞ்சலியை ஒரு தொகுப்பாசிரியராகவே காண்கிறார்கள் என்பதனை தாஸ்குப்தா சுட்டிக் காட்டுகிறார். பதஞ்சலிக்குப் பிறகு அவரை அடியொற்றி பற்பல யோக நூல்கள் உருவாயின. ஒவ்வொரு மரபும் பதஞ்சலியின் மூல நூலுக்குத் தங்கள் பார்வையில், தங்கள் தேவைக்கு ஏற்ப விரிவாக விளக்கம் அளித்துள்ளன.
யோகத்தின் தத்துவநிலை
கிட்டத்தட்ட சாங்கியம் யோகம் என்று கூறினோம். சாங்கியம் கூறும் 24 தத்துவங்களை யோகம் ஏற்கிறது. ஐந்து பருப்பொருட்கள், அவற்றின் நுண்ணியல்புகளான ஐந்து தன் மாத்திரைகள், அவற்றை அறியத் தேவையான ஐந்து ஞானப்புலன்கள், ஐந்து செயற்புலன்கள் மற்றும் மனம், அறிவு, அகங்காரம் என்று இருபத்து மூன்று பரிணாம நிலைகளும் அவற்றிற்கு ஆளாகும் இயற்கை என்ற ஆதிமூலமும் என்று 24 தத்துவங்கள் யோகத்திற்கும் ஏற்புடையதே.
யோகம் இருபத்தி ஐந்தாவது தத்துவமாக புருஷ தத்துவத்தை ஏற்கிறது. புருஷன் இயற்கையில் பங்கு பெறாத சாட்சி என்று கூறுகிறது.
இத்தத்துவங்களைப் பதஞ்சலி விசேஷம், அவிசேஷம், லிங்கமாத்ரம், லிங்கம் என்று நான்காகப் பிரிக்கிறார் (யோக சூத்திரம் II – 19)
ஐம்பருக்கள், ஐந்து அறிவுப்பலன்கள், ஐந்து செயற்புலன்கள், மனம் ஆகியவற்றின் மூலமே சத்துவம், ரஜஸ், தமஸ் எனும் மூன்று குணங்களின் சிறப்பியல்புகள் அறியப்படுகின்றன (அல்லது அறியப் படாமையிலிருந்து அறிவாக ஆகின்றன. அதாவது, அவியக்த நிலையில் இருந்து வியக்த நிலையை அடைகின்றன). ஆகவே இவை சிறப்புத் தத்துவங்கள் அல்லது விசேஷ தத்துவங்கள்.
புலன்களுக்கு சிக்காத ஐந்து தன்மாத்திரைகளும், அகங்காரமும் அப்படிச் சிறப்பு அடையாளம் கூறப்பட முடியாதவை. இவை அவிசேஷ தத்துவங்கள். அதாவது பொதுத்தத்துவங்கள்.
பிற தத்துவங்களைப் பிறப்பிக்கும் மகத் என்பது லிங்கம் என்று கூறப்பட்டது. மகத்தை பிறப்பிக்கும் பிரகிருதி அல்லது இயற்கை அறியப்படாதது, மறைந்திருப்பது. அதுவே அலிங்கம்.
மூன்று குணங்களின் முடிவிலா ஆட்டம் மூலமே இயற்கை நிகழ்கிறது என்று யோகமும் கூறுகிறது. ஒளி, செயல், இருப்பு (பிரகாசம், கிரியை, ஸ்திதி) என்ற மூன்று தன்மைகள் உடையதும், புலன்களுக்குச் சிக்குவதும் ஆக உள்ளதே நாம் காணும் இயற்கை. இது அதைப் பார்க்கும் புருஷனுக்கு இன்பத்தையும் விடுதலையையும் அளிக்கும் பொருட்டு தானும் நிலைகொள்வதாகும்( யோகசூத்திரம் II – 18 )
இயற்கை சுதந்திரமானது. பிறவற்றைச் சாராதது, நிரந்தரமானது, முடிவற்றது, அழிவற்றது. இது புருஷனுக்காகவே நிலைநிற்கிறது. அது இருப்பதானால் தான் புருஷன் இல்லை. புருஷன் ஒன்றல்ல பல. ஆகவே ஒரு புருஷன் இல்லாமலானாலும், முக்தி அடைந்தாலும் இயற்கை தொடர்ந்து இருக்கும் (யோக சூத்திரம் II-21, 22)
இயற்கைக்கும் புருஷனுக்கும் இடையே உண்மையில் உறவே இல்லை. ஆனால் உறவு இருப்பதாக ஒரு மாயத்தோற்றம் புருஷனுக்கு ஏற்படுகிறது. இதற்கு ‘ அவித்யை’ ( அறியாமை ) என்று பெயர். இந்த மாயை அகன்றால் புருஷனுக்கு இயற்கையுடன் உள்ள உறவு இல்லாமலாகி அவன் தன் தூய நிலையில் தன்னை உணர்வான். அந்நிலையில் இயற்கையும் புருஷனும் திரிபுகள் இல்லாத நிலையில் ஒருவரை ஒருவர் காண்கிறார்கள். தன் தூயநிலைக்குப் புருஷன் திரும்புவதே கைவல்யம் என்பது. இதுவே இறுதி விடுதலையாகும்.
கைவல்யமே புருஷனின் (அல்லது மனிதர்களின்) வாழ்வின் இலக்கு ஆகும். புருஷனுக்குக் கைவல்யம் தருவதே இயற்கையை இயங்கும் நோக்கமும் கூட. சாங்கியம் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு மெய்ஞானத்தைப் பற்றி கூறுகிறது. ஆனால் யோகம் அந்த ஞானத்தை அடையும் முறை, அதைப் பயன்படுத்தும் விதம் ஆகிய வழிமுறைகளைப் பற்றியும் கூறுகிறது.
கைவல்யம் என்ற கருத்து குறித்து இங்கு விளக்க வேண்டும். கேவலம் என்றால் சமஸ்கிருதத்தில் ஒற்றைத்தன்மை அல்லது தனித்திருத்தல் என்று பொருள். அதிலிருந்து வந்த சொல்லே கைவல்யம். இயற்கையுடன் பின்னிப் பிணைந்து, அதில் உள்ள முக்குணங்களின் விளைவாகக் காமம் குரோதம் மோகம் போன்ற தீமைகளை அடைந்து, உழலும் மனிதன், அவற்றை உதறித் தான் மட்டுமேயாக (இயற்கையுடன் உறவே இல்லாமல்) எஞ்சும் நிலையே கைவல்யம் என்பது.
கைவல்யம் சாதாரண அர்த்தத்தில் சாங்கியம், யோகம் முதலிய பெளதிகவாதத் தரிசனங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய முக்தி நிலையாகும். ஆன்மிகவாத தரிசனங்களில் தூய அத்வைதம் தவிர பிறவற்றில் கைவல்யம் என்பதற்குப் பொருள் கிடையாது. அத்வைதத்தில் ஜீவாத்மா தன் அவித்யையைக் களையும்போது பரமாத்மா மட்டும் எஞ்சும் கைவல்யநிலை உருவாகிறது. பிற தரிசனக்களில் தனித்த நிலை ஏற்படுவதில்லை. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் எப்போதும் எஞ்சுன்றன. எனினும் கைவல்யம் என்ற சொல் யோகம் மூலம் எல்லா வழிபாட்டு முறைகளிலும் புகுந்துவிட்டிருக்கிறது.
சாங்கிய யோக மரபுக்கும் அத்வைததுக்கும் நேர் எதிர்த் திசையிலான நகர்வு இருப்பதை இங்கு கவனிக்கலாம். சாங்கியமும் யோகமும் புருஷன் தன் அவித்யையைக் களையும்போது இயற்கையும் புருஷனும் மட்டுமே எஞ்சுகின்றன. மாறாக அத்வைதம் அவித்யை களையப்படுகையில் பிரம்மம் மட்டுமே எஞ்சுகிறது என்கிறது.
அடுத்து வருவது….
யோகத்தின் வழிமுறை