முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.1
[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]
பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற ஒரு புராதன நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது. யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது. யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.
நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன. ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை. நம்முடைய லௌகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது. ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம். நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும், ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம், தத்துவம், மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை .
அதைவிட அபாயகரமானது, அரைகுறையான புரிதல்கள் கொண்டவர்கள் அல்லது முற்றாக ஏதுமறியாதவர்கள் அவர்களுடைய கருத்தியல் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் பெரும்பாலான விஷயங்களை தவறாகச் சொல்லிப் பரப்பி வருவது. நம் சூழலில் நாம் மேலோட்டமாக அறிந்து , பரிசீலனை இல்லாமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் பல விஷயங்கள் அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பபட்ட பொய்கள் என்பதை சற்று முயற்சி செய்தால் நம்மால் அறியமுடியும் . தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நம் மரபு சார்ந்த பல விஷயங்கள் அவற்றை பற்றி எள்முனைகூட அறியாத அரசியல்வாதிகளால் திரிக்கப்பட்டு பரப்பப் பட்டுள்ளன. அவற்றை களைவது நாம் உண்மையான அறிவை அடைவதற்கு அவசியமாக ஆகியுள்ளது . இதற்கு முக்கியமான வழிமுறை மூலநூல்களை பயில்வதுதான். குறைந்தது ஐம்பது நூல்களையாவது இந்திய சிந்தனையின் மூலநூல்களாக கொள்ளமுடியும், பதஞ்சலி யோக சூத்திரம் அவற்றில் முக்கியமானது . மிதமிஞ்சி விளக்கி விரிவாக்கம் செய்து அவற்றை அணுகமுடியாமல் செய்வதை தவிர்த்து நவீனகாலத்துக்கு உரிய சிந்தனைகளுடன் பொருத்தி மூலநூல்களை புரிந்துகொள்வது அவசியம். இது அதற்கானமுயற்சி.
ஆன்மீகம் ,தத்துவம், மதம்
முதலில் ஆன்மீகம் தத்துவம் மதம் ஆகிய மூன்றும் வேறு வேறானவை என நாம் திட்டவட்டமாக புரிந்துகொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படையான கேள்விகளுக்கு உள்ளுணர்வின் மூலம் விடைதேடும் முயற்சி ஆகும். ”நான் யார்? எனக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவென்ன? இங்குள்ள ஒவ்வொன்றும் எதனால் எப்படி ஏன் உருவம் கொண்டுள்ளன ? எப்படிச் செயல்படுகின்றன ?” என்றெல்லாம் தொடங்கும் முடிவற்ற அடிப்படைக் கேள்விகள் சிந்திக்க ஆரம்பித்த காலம் முதல் மனித மனத்தில் எழுந்து கொண்டிருப்பவை. மனிதனின் அறிவெல்லாமே இவ்வினாக்களுக்கு பதில் தேடி அவன் மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளே . அறிவியல் அக்கேள்விகளுக்கு புறவயமான தளத்தில் விடை தேடுகிறது . நேர் எதிர் திசையில் ஆன்மீகம் பயணம் செய்கிறது .அது அக்கேள்விகளுக்கு அகவயமான தளத்தில் விடைதேட முயல்கிறது .நுண்ணுணர்வுள்ள எவருமே இவ்விரு வழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஏற்று பிறிதை நிராகரிக்க மாட்டார்கள். ராமகிருஷ்ண பரம ஹம்சர் அறிவியலை நிராகரிக்கவில்லை ,ஐன்ஸ்டீன் ஆன்மீகத்தையும் நிராகரிக்கவில்லை .
இப்படிச் சொல்லலாம் . இந்திய மரபில் ‘இதம்’ என்ற சொல் ஆன்மீகத்தேடலின் முதல் கண்ணி ஆகும் . ‘இது ‘ என்று அதற்கு பொருள். ‘இது என்ன ?’ என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது ஆன்மீக தேடல் . இதற்கு அறிவியலாளன் அப்பொருளை எடுத்து புறவயமாக ஆராய்ந்து விடைகாண முயல்வான் .அப்பொருளை அவன் பல கூறுகளாக பகுத்து அறியலாம் . அப்பொருள் சிலிகன் இரும்பு போன்ற தாதுக்களினாலானது என்று அவன் சொல்லலாம். அத்தாதுக்கள் எந்தெந்த மூலக்கூறுகளினாலானது என அவன் விளக்கலாம் .அணுக்களாக அம்மூலக்கூறுகளை பிரிக்கலாம் . அணுவை துகள்களாகப் பிளக்கலாம். இது பகுத்தல்முறை . நேர்எதிர் திசையில் சென்று அப்பொருளை அவன் பிரபஞ்சத்தின் பிற பொருட்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை மலையுடனும் நிலத்துடனும் சம்பந்தப்படுத்தி அதன் இயல்புகளை அறியலாம். இது தொகுத்தல் முறை .இவ்விரு முறைகளையும் சேர்த்தேகூட அவன் செய்யலாம் .
ஆனால் ஆன்மீகவாதி அப்பொருளை நோக்கி தன் கவனத்தை குவிப்பதில்லை . அப்பொருள் ஏன் அப்படி தனக்கு தெரிகிறது என அவன் யோசிப்பான். தன் புலன்கள் அப்படி அதை காட்டுகின்றன. புலன்கள் மூலம் அப்பொருளை அறிவது எது ? அப்பொருளை அது ஏன் கடினமானது என்கிறது — காரணம் மேலும் மென்மையான ஒன்றை அது அறிந்திருக்கிறது . அப்பொருளை அது ஏன் வடிவமற்றது என்கிறது — காரணம் அது வடிவம் என்றால் என்ன என்று அறிந்திருக்கிறது . ஆகவே அறிதல் என்ற செயலே அறிபடும்பொருளை தீர்மானிக்கிறது .அந்த அறிதலின் இயல்புகள் என்ன? இவ்வாறெல்லாம் ஆன்மீகம் தனக்குள்ளே ஆழ்ந்து தன்னை ஆராய்ந்து உள்ளே செல்லும் . ஆன்மீக அம்சமில்லாத அடிப்படைச் சிந்தனை இருக்க முடியாது .
ஆன்மீகம் தன் உள்ளுணர்வால் அறிந்ததை தனக்குத்தானே சொல்லும்போதே அது தத்துவமாக ஆகிவிடுகிறது .காரணம் அறிதலானது அந்த அறிதல் நிகழக்கூடிய அக்கணத்தில் கட்டற்றதாக வடிவமற்றதாக இருக்கிறது .அறிவாக அது மாற்றப்படும்போது அதற்கு எல்லையும் வடிவமும் உருவாகிவிடுகிறது .பேசப்பட்ட ,கேட்கப்பட்ட விவாதிக்கப்பட்ட ஆன்மீகம் உடனேயே தத்துவமாகிவிடுகிறது .அனுபவ நிலையில் அகவயமாக நிற்கும் ஆன்மீகமே தூயது . ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆழ்ந்த மனநிலை ஆன்மீகம் . அதை பிறருக்கு விளக்க அவர் சொல்லும் கதைகள் தத்துவம் ஆகிவிடுகின்றன .
தத்துவம் மூலம் சொல்லப்பட்டதை வாழ்க்கைமுறையாக மாற்றும் பொருட்டு நெறிகளும் ஒழுக்கங்களும் மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிலைநிறுத்தவே கோவில் , மடம் , புனிதநூல் போன்ற பல அமைப்புகள் உருவாகின்றன. இந்த நெறிகளும் மரபுகளும் அமைப்புகளும் சேர்ந்ததே மதம் ஆகும் . மதம் எப்போதுமே சில விடைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம் .அவ்விடைகள் காலவதியாகும் போது மதமும் பழையதாகலாம். தேங்கிய மதம் பொருந்தாத பிடிவாதங்களும் மரபுகளும் நம்பிக்கைகளும் கொண்ட தீய சக்திகூட ஆகலாம்.
தத்துவம் மதத்தைப்போல சில விடைகளுடன் நின்று விடுவதல்ல . தத்துவவாதி கேள்விகளுடன் முன்னகர்கிறவன்தான். ஆனால் அவனுக்கும் ஓர் எல்லை உண்டு . தத்துவம் தன்னுடைய ‘உண்மையை நிர்ணயிக்கும் முறைக்கு’ கட்டுப்பட்டது . அம்முறை மறுக்கப்படுகையில் அதுவும் மறுக்கப்படுகிறது.ஆன்மீகம் எந்த கட்டுப்பாடும் இல்லாதது .காரணம் அது முழுமையாகவே அகவயமானது. அதற்கு எந்த நிரந்தரமான அமைப்பும் இல்லை .அதற்கு வடிவமும் இல்லை . ஆகவேதான் குப்பையில் கிடக்கும் சித்தனும் ஐந்துவேளை குளிக்கும் பக்தனும் ஒரே சமயம் ஆன்மீகவாதிகளாக இருக்க முடிகிறது .
யோகம் , தியானம் ,பிரார்த்தனை
நம்மில் பலர் இம்மூன்று விஷயங்களையும் ஒன்றாகவே இதுவரை எண்ணி வருகிறார்கள் . அதற்கேற்ப இன்று யோகம் மற்றும் தியானம் ஆகியவற்றை எளிமைப்படுத்தி கற்பிக்க முயலும் பல நிறுவனங்கள் இம்மூன்றும் ஒன்றே என்பது போன்ற ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கி வருகின்றன. இவை முற்றிலும் வேறு வேறானவை என்பதை வாசகர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
பிரார்த்தனை என்பது கடவுள் என்ற கருத்தை ஏதேனும் வடிவில் ஏற்றுக் கொண்டவர்கள் அச்சக்தியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாகும் . கடவுளை ஒரு ஆதி சிருஷ்டிகர்த்தர் என்றோ , பிதா என்றோ , ஆக்கி காத்து அழிக்கும் சக்தி என்றோ ,ஒவ்வொன்றிலும் உறையும் அறியமுடியாத மர்மமான வல்லமை என்றோ , பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் பெருநியதி என்றோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் . பிரார்த்தனை என்பது அச்சக்தியிடம் செய்யப்படும் உரையாடல். அதனிடம் செய்யப்படும் வேண்டுகோள்.
தியானம் என்பது பிராத்தனையின் ஒரு நிலையாக கைகூடுவதாயினும் அதற்கு கடவுள் என்ற ஒருவர் இருந்தாக வேண்டிய அவசியமில்லை . நாத்திகர்களும் தியானம் செய்யலாம் .அடிப்படையில் மனதை ஒருமை படுத்துதல்தான் தியானம் என்பது . முதலில் மனதை கூர்ந்து கவனித்தல் . அதன் இயங்கு முறையை அறிந்து மெல்ல அதை கட்டுக்குள் கொண்டுவந்து அதன் சிதறுண்ட இயக்கத்தை சீரான வழியில் ஆற்றுப்படுத்துதல். தியானம் மனவல்லமையை அதிகரிக்கி£றது .
ஆனால் யோகம் என்பது தியானத்தை விட மேலான ஒன்று . யோகத்தின் தொடக்கப்புள்ளி தியானமே. ஆனால் யோகம் மனம் என்ற செயல்பாட்டை அதற்கு நேர் எதிர் திசைக்கு போய் இல்லாமலாக்க முயல்கிறது . தியானம் மனநதிக்கு கரைகட்டி சீராக ஓட செய்கிறது . யோகம் அந்நதியை திரும்ப அதன் உற்பத்தியிடத்துக்கே கொண்டு செல்ல முயல்கிறது . ஆகவே தியானம் எல்லாருக்கும் உரியது ,அவசியமானது . ஆனால் யோகம் அதன் பொருட்டு பிற அனைத்தையுமே விட்டு விட்டவர்களுக்கு மட்டுமே உரியது . வேறு செயல்களில் ஈடுபட்டபடி யோகத்தை செய்ய முடியாது . அறிவுப்பயிற்சிகூட யோகத்துக்கு தடையே .
தொடரும்..