முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.2

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.2

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

யோகம் மத வழிபாடா ?

தியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே . யோகம் இந்தியமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று . அடிப்படையில் இது நாத்திக தரிசனமாகும் . வெகுகாலம் யோகம் லௌகீக தரிசனமாகவே கருதப்பட்டது .பிற்காலத்தில் , குறிப்பாக சொல்லப்போனால் பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன. அதை விரிவாக பிறகு காணலாம் .யோகத்தின் மூல நூல்கள் எதிலுமே கடவுளுக்கு இடமில்லை . பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூட யோகப் பயிற்சியாளன் தன்னை தயாரித்துக்கொள்ள மேற்கொள்ளும் மனப்பயிற்சிகளில் ஒன்றாக மட்டுமே இறைவணக்கம் சொல்லப்பட்டுள்ளது . மேலும் யோகம் தத்துவ அடிப்படையிலே கூட கடவுள் என்ற கருதுகோளுக்கு எதிரானதாகவே இருக்கிறது . அது ஆதி இயற்கை என்ற கருதுகோளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாக வைத்த சாங்கிய மெய்ஞான மரபின் ஒரு பகுதி.

பழமையில் என்ன இருக்கிறது ?

தமிழ் சூழலில் இத்தகைய பழைய நூல் ஒன்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்போது எழக்கூடிய முக்கியமான கேள்வி எதற்காக பழைய விஷயங்களை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்பதுதான். இது ஒருவகையில் சரிதான். ஒரு சாதாரண வாசகனுக்கு பழைய விஷயங்கள் தேவை இல்லைதான். எளிய முறையில் தியானம் செய்யவோ, யோகம் பயிலவோ முயலும் ஒருவருக்கு கூட அவர் சார்ந்துள்ள அமைப்பு அளிக்கும் அறிமுகமே போதுமானது .

ஆனால் சுயமாக சிந்திக்க முயலக்கூடிய எவரும் பழைமையில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏனெனில் எந்த சிந்தனையும் ஒரு தொடர்ச்சியின் விளைவாக உருவாவதேயாகும். ஏதாவது ஒரு துறையில் சுயமாக சிந்திக்கும் பயிற்சி கொண்டவர்கள் அத்துறையில் அதுவரை உள்ள மரபை உதாசீனம் செய்துவிட முடியாது என்பதை அறிவார்கள். . நமது மரபை கற்று விமரிசித்து மீறிவளர்ந்து முன்னெழவேண்டும். சாக்ரடீஸையும் ஸ்பினோசாவையும் ஹெகலையும் நீட்சேயையும் கற்று முன்னகர்ந்தவர்கள்தான் மேலை சிந்தனையை உருவாக்கியவர்கள் . நமது சுயமான சிந்தனையை நாம் அடையவேண்டும் , வெறும் மொழிபெயர்ப்புப்பணியே சிந்தனை என்று அமைந்துவிடக்கூடாது என்று இப்போதுபரவலாகசொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் நம் மரபுடன் ஆக்கபூர்வமான உறவைமேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயம் இங்கே பேசப்படுவதே இல்லை. சிந்தனைகளை எவரும் அந்தரத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியாது.

பழைமை என்றால் காலாவதியானது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் நாம் இந்திய பழைமையை ,தமிழ் பழைமையைமட்டுமே அப்படி சொல்வோம். மேலைபழமையை அப்படிச் சொல்லும் துணிச்சல் நமக்கு வராது, காரணம் மேலைப்பழமை மேலைநாட்டு புதுமையை தொடர்ந்து உருவாக்கியபடி இருப்பதை நாம் காண்கிறோம். இம்மானுவேல் காண்ட் பழையவர் என்று இன்று சொல்ல முடியாது, பின்நவீனத்துவக் கருதுகோள்கள் பல அவரிலிருந்து உருவாகி வருகின்றன. நீட்சே, ஹெகல் முதலியோரும் இன்றைய பின் நவீனசிந்தனைகளுக்கு உடனடி முன்னோடிகளாக இருக்கிறாகள். அந்தகோட்டை பின்னகர்த்தினால் ஸ்பினோஸாவின் வினாக்கள், சீனோவின் புதிர்கள், ஐயவாதிகளின் தர்க்க ஒழுங்குமுறை வரை செல்லும். நமது பழைமை ஏன் நமக்கு காலவதியானது என்று படுகிறது என்றால் ஒன்று நாம் அதனை கற்றதேயில்லை என்பதனால்தான். அவற்றை நவீனச்சூழலில் வளர்த்தெடுக்கவும் இல்லை .

தமிழில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் நமக்கு முன்னோடியான சிந்தனையாளர்கள் நம் மரபில் யார்யார்? வைணவ சைவ உரையாசிரியர்கள், திருமூலர், ராமானுஜர், நம்மாழ்வார், திருவள்ளுவர் என அது பின்னோக்கி செல்லும். இவர்களில் பிற்கால சிந்தனையாளர்களான சைவ வைணவ ஆசாரியார்களை புரிந்துகொள்ள சில மூலநூல்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானது பதஞ்சலி யோக சூத்திரம். நியாய சூத்திரங்கள், பிரம்மசூத்திரம் , சாங்கிய காரிகை மற்றும் முக்கியமான ஐந்து உபநிடதங்கள் ஆகியவை மற்ற நூல்கள். குறள், மணிமேகலை போன்ற சமண பௌத்த நூல்களை பயில அம்மதங்களுக்கு உரிய மூலநூல்களுடன் இம்மூல நூல்களும் அவசியமாக கற்கப்படவேண்டும். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் வேதாந்தம் மீமாம்சை ஆகிய ஆறு தரிசனங்களும் இந்தியமரபில் உள்ள எல்லா சிந்தனை ஓட்டங்களிலும் அவற்றை தீர்மானிக்கக் கூடிய அடிப்படைக் கூறுகளாக உள்ளன.

உதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரங்கள் மீது பயிற்சி இல்லாத ஒருவர் திருமந்திரம், சிவஞானபோதம் இரண்டையும் எளியமுறையில்கூட புரிந்துகொள்ள முடியாது . நியாய தர்க்கமுறையில் சில அடிப்படைகளையேனும் அறியாமல் ஒருவர் வைணவ உரைகளுக்குள் நுழையவே இயலாது. அதாவது நாம் நம் மரபில் நமக்கு முன்புவரை இருந்த சிந்தனைகளை புரிந்துகொள்ள அச்சிந்தனைகளின் அடிப்படைத்தர்க்கங்களை அமைத்த சிலமூலநூல்களை முதலில்பயிலவேண்டியுள்ளது.

பழமை வழிபாடு மிக ஆபத்தானது .பலகாலம் நாம் அந்தச்சேற்றில் புதையுண்டு கிடந்தோம். பிறகு அதிலிருந்து மீண்டு பழமையை உதாசீனம் செய்யும் புதிய சேற்றில் சிக்கிக் கிடக்கிறோம். உலக சிந்தனையில் தங்கள் பங்களிப்பினை ஆற்றிய எந்த கலாச்சாரமும் தன்னுடைய பழைமையை போற்றியதும் அல்ல, உதாசீனம் செய்ததுமல்ல, சமகாலத்தேவைக்கு ஏற்ப ஆழ்மாக பயின்று விமரிசன ரீதியாக எதிர்கொண்டதே என்பதை நாம் காணலாம்.

எல்லாமே நம் மரபில் உள்ளது என்ற மூடநம்பிக்கை கொண்ட பலர் இன்று உண்டு. எல்லா சிந்தனைகளும், அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட

நம் முன்னோருக்கு தெரிந்திருந்தன என்ற பேச்சு அடிக்கடி நம் காதில் விழும். அதுவும் மரபை அறியாமல் வெறுமே வழிபட்டபடி இருப்பதன் விளைவே. இன்றைய தத்துவமும் அறிவியலும் பலமடங்கு வளர்ந்தவை என்பது உண்மையே. அதற்குக் காரணம் இந்நூற்றாண்டு அடைந்துள்ள மாபெரும் தகவல் தொடர்புவசதி. உலகம் முழுக்க உள்ள சிந்தனைகளை நாம் வீட்டில் இருந்தே கற்கமுடியும். கல்வி பரவலாக்கப்பட்டு விட்டிருக்கிறது. உயர்கல்விக்கான அமைப்புகள் பெருகியுள்ளன. ஆகவே நாம் இன்றைய சிந்தனைகளையே முதன்மையாகவும் முக்கியமாகவும் கற்று தெளியவேண்டும். அவற்றில்தான் நம் கால்கள் ஊன்றிருக்கவேண்டும்.அப்படியானால் எதற்காக பழைய சிந்தனைகளை கற்கவேண்டும்?

அறிவியலுக்கு சமகாலத்தன்மை முக்கியமானது. காரணம் அதன் அறிதல்முறைகளில் , அறிவமைப்பில் சீரான வளர்ச்சி உள்ளது. நியூட்டனுக்கு பிறகு ஐன்ஸ்டீன் கண்டிப்பாக ஒரு வளர்ச்சிநிலையே. இன்றைய இளம் அறிவியலாளன் கண்டிப்பாக நியூட்டனை விட பலமடங்கு விஷயம் தெரிந்தவனே. ஆனால் இலக்கியம் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் இது பொருந்தாது.இலக்கியத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சிப்போக்கு என்று ஒன்று இல்லை என்பதே நாம் காண்பது. மாறுபட்ட கோணங்கள் வரலாம், மேலும் நுட்பமான தர்க்கங்கள் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான மூலதத்துவநூலின் பார்வை ஏறக்குறைய நிலையாகவே இருக்கும். அதன்பின்வந்த எல்லா விவாதங்களிலும் அதன் தரப்பு ஒலித்தபடியே இருக்கும். சாக்ரடீசின் ‘குடியரசு’ அதற்குப்பின் வந்த சிந்தனைகளால் வலிமைபெறுமேயல்லாது காலாவதியாகாது. இலக்கியமும் அதைப்போலத்தான்.கம்பனை பாரதி காலவதியாக்குவது இல்லை. இன்றைய புதுக்கவிதைகள் சங்க இலக்கியத்தை தாண்டிச்சென்றிருப்பதாக சொல்ல எவருமே துணியமாட்டார். ஆகவே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பழைமை என்பது எப்போதும் செல்லுபடியாக கூடிய ஒரு அடிப்படைக் கட்டமைப்புதான்.

மேலும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இலக்கியத்திலும்சரி தத்துவத்திலும் சரி முற்றிலும் புத்தம்புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனிதமனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்பநாட்களிலேயெ சிந்தனையின் அடிப்படைக்கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றில் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.உதாரணமாக இன்றைய பின்நவீனசிந்தனைகளில் எந்தச் சரடையும் நாம் பின்னோக்கி நீட்டி கிரேக்க மரபுக்கு கொண்டு சென்று ஒரு துவக்கப்புள்ளியைக் காணமுடியும். மனிதன் சில அடிப்படைக் கோணங்களில்தான் பிரபஞ்சத்தை பார்க்கமுடியும் என்பது அவனது சிந்தனையின் எல்லையாக இருக்கலாம், அல்லது பிரபஞ்சத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.

ஆகவே நாம் பழைய மூலநூல்களைப் பயிலும்போது விதைகள் அடங்கிய ஒரு களஞ்சியம் நமக்கு கிடைக்கிறது. நமக்கு கற்பனை, தர்க்கத்திறன் ஆகியவற்றின் ஈரம் இருந்தால் அவைமுளைத்து நமது சிந்தனைகளை உருவாக்க கூடும்.

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s