முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.3

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.3

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

யோகத்தின் வரலாற்றுப் பின்னணி

யோகத்தின் வரலாற்றுப்பின்னணி என்ன என்று புரிந்துகொள்வது யோகத்தை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல யோகத்தை புரிவதற்கும் அவசியமானது. தற்காலத்தில் யோக சாதனைகளில் பலவகைகளிலும் ஈடுபடுபவர்களிடம் அப்படிப்பட்ட புரிதல் ஏதும் இல்லை என்பது நாமறிந்ததே. யோகத்தை ஒருவிதமான பக்தியாக ‘ காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலையாக இவர்களில் சில விளக்கும் அபத்தமும் நமது சூழலில் நடந்துகொண்டுதான் உள்ளது. யோகம் எவ்விதமான மன எழுச்சிக்கும் எதிரான ஒன்று என்பதை அவர்கள் உணராமைக்கு காரணம் அதன் வரலாற்று இடத்தைப்பற்றிய அறிதல் இல்லாமையே.

பாரத தத்துவ மரபின் தொடக்கப்புள்ளி என்று வேதங்களை சொல்வது வழக்கம். குறிப்பாக ரிக் வேதம் .அதிலும் குறிப்பாக ரிக்வேதத்தில் உள்ள பத்தாம் மண்டிலம். அதில்தான் ஆன்மீக சிந்தனைக்கு அடிப்படையாக அமையக்கூடிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன . ஆதி தரிசனங்கள் பேசப்பட்டுள்ளன. வேதங்களில் பெரும்பகுதி தோத்திரப்பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் அடங்கியதே. அவற்றில் தத்துவத்துக்கு மிக குறைவாகவே பங்கு உள்ளது .அனுஷ்டானங்கள் , அதாவது வேள்வி மற்றும் வழிபாட்டுச் சடங்குகளுக்கு பாடப்படவேண்டிய மந்திரங்களாகவே அவை உள்ளன. அச்சடங்குகளின் நோக்கம் திட்டவட்டமான சில நன்மைகளே. அதிகாரம் ,செல்வம், வெற்றி, புகழ் முதலியவையே வேதங்களில் வேண்டப்படுகின்றன ஆகவேதான் கீதை முதலிய பிற்கால தத்துவ நூல்கள் வேதங்கள் உலகியல் நோக்கங்களை [சம்சாரத்தை] முன்வைப்பவை என்று சொல்லி நிராகரிப்பின் தொனியில் பேசுகின்றன. வேதங்கள் தத்துவ விவாதங்களுக்கு அடிப்படைகளாக அமைவதைப்பார்க்கிலும் வேள்வி மந்திரங்களாகவே பெரிதும் கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

வேதங்கள் ஒற்றைப்படையான கருத்துத் தரப்பினை முன்வைப்பவை அல்ல. அப்படி ஒரு மாயத்தோற்றம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது . வேதகால ஞானிகளில் ஒருமைத்தரிசனம் அடைந்தவர்கள் உள்ளனர் .இருமை தரிசனத்தின் பால் நின்று தன்னை வழிபாட்டாளனாக வைத்துக் கொண்டவர்கள் உள்ளனர். நாத்திகர்களும் உள்ளனர் .குறிப்பாக வேதரிஷியாகிய பிரகஸ்பதியே பாரத லௌகீகவாத மதங்களின் முதல்குரு ஆவார் .வேதங்களின் அடிப்படைக் கருத்துக்கள் ஒன்றோடொன்று மோதி விவாதித்து உருவானதே உபநிடத காலகட்டம் . உபநிடதங்கள் ஏராளமாக உருவாகியிருந்துள்ளன. ஏறத்தாழ ஒத்த கருத்துள்ள உபநிடதங்களே தற்போது தொகுக்கப்பட்டு கிடைத்துள்ளன. அவற்றிலும் பலவகையான அடிப்படை கருத்துமாறுபாடுகள் உள்ளன. உபநிடத காலம் மாபெரும் தத்துவ விவாதங்களின் காலம் என்பதை அவை வலியுறுத்துகின்றன.

அந்த தத்துவ விவாதங்களின் விளைவாக பலவகைப்பட்ட பிரபஞ்சப் பார்வைகள் தத்துவத் தரப்புகளாக வலுப்பெற்று வளர்ந்தன .அவற்றையே தரிசனங்கள் என்கிறோம் . ஆறுதரிசனங்கள் முக்கியமானவை. அவற்றில் ஒன்றுதான் யோகம். அதன் வரலாற்று நிலை அதுவே .

ஏன் மாறுபட்ட தரப்புகள்?

ஏன் அத்தனை மாறுபட்ட தரப்புகள் காணப்படுகின்றன ? அப்படியென்றால் பாரத மெய்ஞானிகள் முழுமுற்றான உண்மையை அடையவில்லையா? பிற்காலத்தில் தனிமனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களுடன் ஒப்பிட்டால் நம் மரபின் கருத்து முரண்பாடுகள் நம்மை குழப்பக் கூடும். உபநிடதகாலத்தில் பல ஏசுக்கள் பல முகம்மதுக்கள் பல புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஏனெனில் உபநிடத காலம் என நாம் சொல்வது ஏறத்தாழ ஐநூறு வருட காலகட்டத்தையாகும். அக்கால முக்கிய நூல்கள் பிறகுதான் தொகுக்கப்பட்டன. அவர்களுக்குள் தரிசன வேறுபாடுகளும் காணப்பட்டுள்ளது சாதாரணமே. பிற்கால மெய்ஞானிகளுக்குள்தான் எத்தனை வேறுபாடுகள் உள்ளன அல்லவா?. அப்பட்டமான மதவெறியர்களன்றி வேறு எவருமே அவர்களில் ஒருவர் மட்டுமே ஞானி அவர் சொன்னது மட்டுமே உண்மை என்று சொல்லமாட்டார்கள்.

உண்மை ஒன்றே. அதை விளக்கும் விதமே மாறுபடுகிறது .விளக்கப்படும் போது பேருண்மை ஓர் அனுபவமாக அல்லாமல் ஓர் கருத்தாகவே நம்மை அடைகிறது .பிறவிக் குருடனுக்கு நிறத்தை விளக்கமுயல்வதுபோலத்தான் அதுவும்.அனுபவத்தை பற்றிய எந்த விளக்கமும் அனுபவத்துக்கு பதிலாகாது.அனுபவித்தறிந்த மெய்ஞானிகளின் அனுபவத்தை அவர்களுடைய சொற்கள் வழியாக சென்று துளியேனும் அடைய முயல்வதே அவசியமானது.அவர்கள் விளக்கங்களை ஒப்பிட்டு குழப்பம் அடையும்போது நாம் நம்முடைய அறியாமையையே வெளிப்படுத்துகிறோம். ‘பிரக்ஞையே பிரம்மம்’, ‘இங்குள்ள எல்லாவற்றிலும் இறை உறைகிறது’, ‘ அளவில்லா கருணையும் நிகரில்லா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்’, ‘ ஆதியில் வார்த்தை இருந்தது’ போன்ற வரிகளுக்கிடையே ஆழமான அனுபவத்தின் அடிப்படையில் பெரிய வேறுபாடுகளில்லை. வேறுபாடுகள் புரிதலில் , தர்க்கத்தில், சூழலில்தான் உள்ளன

தரிசனங்களின் அடிப்படைகள்

உபநிடத காலத்த்திலேயே உருவாகி பிறகு வலுப்பெற்ற காலத்தை தரிசனங்களின் காலகட்டம் என்கிறார்கள் . தரிசனங்கள் ஆறு. சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் பூர்வ மீமாம்சம் உத்தர மீமாம்சம் [அல்லது வேதாந்தம்] . தரிசனங்கள் என்பவை அடிப்படையில் வேதங்களை விடவும் காலத்தால் முந்தியவை .அதிபுராதன காலத்தில் பழங்குடிகளாக வாழ்ந்த மனித மனத்தில் எப்படியோ உருக்கொண்டவை. பிறகு அவை மெல்ல மெல்ல தத்துவங்களாக வளர்ந்தன. உபநிடதங்களுடன் விவாதித்தே அவை வளர்ச்சி அடைந்தன என்று சொல்லலாம். அதேபோல உபநிடதங்களும் தரிசனங்களின் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டன என்று படுகிறது. பிறகு சில முதல் குருநாதர்கள் தரிசனங்களை தொகுத்து சூத்திர நூல்களை ஆக்கி தத்துவத் தரப்புகளாக , மதங்களைப்போல ஆக்கினார்கள் . அவ்வாறு தரிசனங்கள் நமது சிந்தனையின் முக்கிய அடித்தளங்கள் ஆயின.

சாங்கியத்தின் முதல்குரு ‘சாங்கிய காரிகை’ என்ற வகுத்துரை நூலை ஆக்கிய கபில மகரிஷி. யோகத்துக்கு ‘யோக சூத்திரங்களை’ ஆக்கிய பதஞ்சலி மகரிஷி முதல்குரு. ‘வைசேஷிக சூத்திர’ங்களின் ஆசிரியரான கணாத ரிஷி வைசேஷிகத்தின் முதல்குரு. ‘நியாய சூத்திரங்க’ளை ஆக்கிய கோதம ரிஷி நியாயத்தின் முதல்குரு எனப்படுகிறார்.பூர்வ மீமாம்சைக்கு ஜைமினியும் உத்தர மீமாம்சைக்கு பாதராயணரும் குருநாதர்கள் .

சாங்கிய தரிசனம் இப்பிரபஞ்சமானது செயலூக்கம் , செயலின்மை ,சமநிலை [ ரஜஸ், தமஸ், சத்வம்] என்ற முக்குணங்களினால் ஆன ஆதிப்பிரகிருதியால் [அல்லது மூலயியற்கை] ஆனதாக இருந்தது என்கிறது . அக்குணக்கள் அதில் முழுமையான சமநிலையிலிருந்தன. அந்த சமநிலை குலைய நேரிட்டமையால் ஆதியியற்கை செயல்பட ஆரம்பித்து நாம் காணுமிந்த சலனவடிவ பிரபஞ்சம் உருவாயிற்று. மீண்டும் அந்த செயல்வடிவை அடைவதே அவ்வியற்கையின் நோக்கம் என்கிறது சாங்கியம் . ஆகவே சாங்கியத்தின் அடிப்படைக் கருத்து பொருளிலிருந்தே பொருள் உருவாக முடியும் என்பதாகும். கருத்திலிருந்து பொருள் உருவாக முடியாது என அது வாதிட்டது . இதை அவர்கள் சத் காரிய வாதம் என்றார்கள் .

வேதங்கள் உபநிடதங்கள் போன்றவை பெரும்பாலும் முன்வைக்கும் கருத்து பிரக்ஞையே பொருளை நமக்கு கற்பித்துக் காட்டுகிறது என்பதாகும் . நமது பிரபஞ்சக்காட்சி நம் பிரக்ஞையின் விளைவு . ஒட்டுமொத்த பிரபஞ்சம் அதேபோன்ற ஓர் ஒட்டுமொத்த பிரக்ஞையின் விளைவு. பைபிள் கூட கடவுளின் சொல்லிலிருந்து பிரபஞ்சம் உருவானதாக சொல்கிறது . கடவுள் சக்தியால் பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக சொல்லும் குர் ஆன் கூட அதற்கு உரிய மூலப்பொருள் பற்றி சொல்லவில்லை. அறியமுடியாத மூலக்கருத்தையே அது உருவகம்செய்கிறது. அவை எல்லாமே கருத்துமுதல்வாத தரப்புகள் ஆகும். அந்த ஆதிமூலமான ‘கருத்தே’ கடவுள் அல்லது பிரம்மம் அல்லது அல்லா அல்லது யகோவா. ஆனால் சாங்கியம் பொருள்முதல்வாதத் தரப்பு. இந்த வேறுபாட்டை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

வைசேஷிகமும் பொருள்முதல்வாத தரப்புதான். அது ஆதிப் பொருள் அணுக்களே என்கிறது .அடிப்படைப்பொருட்களான நிலம், நீர்,காற்று, நெருப்பு ஆகியவை அவற்றின் ஆகச்சிறிய துகள்களினாலான அணுக்களினாலானவையாகும். அவற்றின் கூட்டு மூலமே பிற பொருட்கள் உருவாகின்றன. வைசேஷிகத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட துணைத்தரிசனமே நியாயம் ஆகும். நியாயம் இவ்வடிப்படைகளை தர்க்கபூர்வமாக எப்படி நிர்ணயிப்பது என்று பேசுகிறது. அதேபோல சாங்கியத்தின் துணைத்தரிசனமே யோகம் . நான்குமே அடிப்படையில் பொருள்முதல்வாதச் சிந்தனைகள். அதாவது அவை உருவகித்துக் காட்டும் பிரபஞ்சத்தில் கடவுளுக்கு ஸ்தானமே இல்லை .

வேதங்களை முழுமுதல் ஞானமாகவும் வேத அடிப்படையிலான விதிகளையும் சடங்குகளையும் மனிதனை மீறியவையாகவும் குறிப்பிடும் பூர்வ மீமாம்சை புரோகிதர்களின் தரிசனமாகும்.காது இன்று தனியான தரிசனமாக இயங்கவில்லை . ஆனால் இந்துமத்தின் பெரும்பாலும் எல்லா உட்கூறுகளிலும் அது ஊடுருவி உள்ளது.

முழுமுதல் கருத்துவடிவமான பிரம்மமே உண்மை மீதி எல்லாமே அதன் மாயத்தோற்றங்கள் என்று வாதிடுகிறது உத்தரமீமாம்சம். அது பிற்பாடு அத்வைதவேதாந்தமாக வளர்ந்தது .

யோகம் என்ற தரிசனம்

சாங்கியத்தின் பிரபஞ்சக் கொள்கையே யோகத்துக்கும் ஏற்புடையது.ஆகவே யோகம் சாங்கியத்துடன் பிணைக்கப்பட்டு ‘சாங்கியயோகம்’ என்றே முன்பு குறிப்பிடப்பட்டு வந்தது .

யோகம் எப்படி உருவாயிற்று என்றறிய நாம் ‘புருஷன்’ என்ற கருதுகோளை புரிந்துகொள்ளவேண்டும் . உபநிடதங்களுடன் சாங்கியம் விவாதித்தபோது ஒரு முக்கியமான வினா எழுந்தது . மூன்று குணங்கள் எப்படி ,எவரால் அறியப்படுகின்றன? அறியப்படாதபோது அவை இல்லை என்றல்லவா பொருள் ?

அதற்குப் பதிலாக சாங்கியர் உருவாக்கிய கொள்கைதான் ‘புருஷன்’ என்பது. பிரகிருதி என்பதை எப்படி உருவகிக்கிறோம் ? பூமியில் உள்ள அத்தனை பொருட்களையும் ஒட்டு மொத்தமாக தொகுத்து ஒற்றைப் பொருளாக கணித்து பிரகிருதி என்கிறோம் .அதேபோல எல்லா மனிதமனங்களையும் ஒன்றாக சேர்த்து உருவகிக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பே புருஷன் .

ஆதியியற்கை போலவே புருஷனும் ஆதிவடிவம் . முதலிறுதி அற்றவன். அவனே பிரகிருதியை பார்ப்பவன், அதன் குணங்களை அவனே அறிகிறான். அவனது அறிதல் மூலமே அக்குணங்கள் உருவாகின்றன.ஒவ்வொரு மனிதனிலும் உறைவது அந்த புருஷனின் ஒரு துளியே .ஆனால் அவனும் முக்குணங்களின் சமநி£லை சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் காணப்படுகிறான். அவன் தன்னை ஒரு துளியாகவே அறியமுடிகிறது.ஆகவே அவன் காணும் பிரகிருதியும் துளிகளாக உள்ளது . புல்நுனியில் தத்தளிக்கும் பனித்துளிமீது உருமாறியபடியே மிதந்துசெல்லும் மேகத்தை பார்க்க முயல்வதுபோன்ற செயல் இது.

ஆகவே முழுமுதல் அறிதலை சாத்தியப்படுத்தும் பொருட்டு யோகம் பிறந்தது. நவீன மொழியில் அதைஇப்படி சொல்லலாம். நாம் பிரபஞ்சத்தை நமது தேவைகள் ,ஆசைகள், நோக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அறிய முடிகிறது. அதாவது நாம் அறிவது நம்மால் திரிக்கப்பட்ட உண்மையையையே .[Distorted truth] மிகப் புறவயமானதாகக் கருதப்படும் அறிவியல் கருத்துக்களில்கூட அதுவே நிகழ்கிறது என கூறும் நவீன சிந்தனையாளர் உண்டு. அதேபோல நாம் நமது உடலின் அமைப்பு , நமது பிறப்பு வளர்ப்புச் சூழல் ,நமது பொதுவான அறிவுச்சூழல், நமது அறிவுத்துறைசார்ந்த தர்க்கங்கள் ,நமது ஆய்வு உபகரணங்கள் மற்றும் ஆய்வு முறை ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டே நாம் உண்மையை அறிய முடிகிறது .நாம் அறியும் உண்மையானது அவ்வாறு எல்லை வகுக்கப்பட்டதாக உள்ளது. அதைவிட முக்கியமாக நம் அறிதல்களை கட்டுப்படுத்துவது மொழி உருவாக்கும் எல்லையாகும். வழக்கமான மொழி மட்டுமல்ல , அறிவியலிலும் கணிதத்திலும் பயன்படுத்தப்படும் அடையாளமொழி கூட உண்மையைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது நாம் அம்மொழிகள் வழியாக அறிந்து விவாதித்து நிறுவும் எந்த உண்மையும் அம்மொழிகளின் அடிப்படைத் தர்க்கத்துக்கு கட்டுப்பட்டது தான்.

அதாவது நாம் தற்பொழுது பல்வேறு அறிதல்முறைகள் வழியாக அடையும் உண்மையானது துண்டாடப்பட்ட உண்மையாகும் [Fragmented truth ] நவீன அறிவியலில் முக்கியமான குறைபாடாக பலகோணங்களில் பலரால் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம் .ஒரு துறையின் உண்மை பிற துறைகளால் நிராகரிக்கப்படுகிறது .மாசானபு ·புகுவேகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ‘ என்ற மகத்தான நூலில் அவர் அத்தகைய ‘துண்டு உண்மை’கள் வேளாண்மையில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் எப்படி உலகம் பேரழிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது என நிறுவுவதை காணலாம். ஒரு சிறு துண்டு தான் உண்மை என்றால் மீதியெல்லாமே பொய் என்றுதானே பொருள்? ·புகுவேகா அவ்வடிப்படையில் ஐன்ஸ்டீனை முற்றாக நிராகரிக்கிறார் .அவர் அது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை விளக்கும் அரை உண்மைதான் ,அதனால் எந்த பயனும் இல்லை என்கிறார் . ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’யில் ஒரு மகத்தான முழு உண்மையின் தரிசனத்தை ·புகுவேகா கண்டடைந்ததை அறியலாம்.

ஆகவேதான் மெய்ஞனிகள் ‘எல்லா கருத்துநிலை உண்மைகளும் அரை உண்மைகளே என்றார்கள்’ [All phenomenal truths are half truths – நடராஜ குரு Wisdom – The absolute is adorable என்ற நூலில்]பார்க்கும் தரப்பை முழுமைப்படுத்திக் கொள்ளுவதன் வழியாக பார்க்கப்படும் உண்மையை முழுமைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அறிதலே யோகத்தின் ஆதாரம். அது மனதின் சலனங்களை முழுமையாக அழித்து குணங்களில்லாத ,சலனமற்ற ஒரு மனதை அடைய முயல்கிறது . அம்மனம் அறியும் பிரபஞ்சமும் குணங்களில்லாத ,சலனமற்ற ஒன்றாக விளங்கும் .அதுவே முழுமனம் Absolute mind] அது அறியும் உண்மையே முழு உண்மை [Absolute truth ]

மேற்கத்திய அறிவியங்கியல் [Epistemology] மீது மிதமிஞ்சிய நம்பிக்கையையும் மோகத்தையும் நமது கல்விமுறையிலிருந்து பெற்றுக் கொண்ட சிலர் உடனடியாக இந்தக் கருத்தை தூக்கி வீச முயலலாம். அவர்கள் மேற்கத்திய மொழியியல் [Linguistics] உளவியல் [psychology] போன்ற பல அறிவுத்துறைகளில் அதற்கான தேடல் உள்ளதைக் கவனிக்கவேண்டும். யோகம் ஒரு மாயத்தையோ மந்திரத்தையோ அல்லது அற்புதத்தையோ முன்வைக்கவில்லை . அது நம்பிக்கையையும் வலியுறுத்தவில்லை . அது வகுத்துரைப்பது பயிற்சிகளையே.

முழுமையான அறிதல் என்பது சாத்தியமா என்ற வினாவை , அறிவுத்துறைகளில் ஈடுபடும் நவீனமனதுக்கே உரிய [ஓர் எல்லைவரை அவசியமான ] ஐயநிலையுடன் [Skepticism ] அணுகலாம். ஆனால் யோகத்தின் பயன்கள் அதன் பல்வேறு திரிபு நிலைகளிலும் ,எளிமைப்படுத்தப்பட்ட நிலைகளிலும்கூட உலகங்கும் நிரூபிக்கப்பட்டவை என்பது நம் முன் உள்ள உண்மை. மிக ஆரம்பநிலையிலேயே கூட நம் மனதின் முழு சக்தியை பயன்படுத்த அவை உதவுகின்றன , நமது அறிதல்களில் மிக ஆழமான மாற்றங்களை உருவாக்குகின்றன .

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s