முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.4

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.4

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

 

யோகத்தின் இன்றைய முகம்

பதஞ்சலி யோக சூத்திரம் முன்வைக்கும் யோக தரிசனத்தை நாம் சாங்கியதரிசனத்தின் துணைத்தரிசனமாகவே கற்கவேண்டும். இந்து ஞானமரபின் அனைத்து குருகுல அமைப்புகளிலும் கபில முனிவரின் சாங்கிய காரிகையும் பதஞ்சலி யோக சூத்திரங்களும் சேர்த்தே கற்பிக்கப்பட்டன. சொல்லப்போனால் ஆறுதரிசனங்களையும் ஒன்றாகவே கற்பது சிறந்தது. நாராயண குருவின் உவமையை இங்கே நினைவுகூரலாம். ஐந்து தரிசனங்களும் ஐந்து விரல்களைப் போன்றவை. அவை ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும். அந்த ஐந்துவிரல்களில் வேதாந்தம் சுட்டு விரல் என்றும் யோகம் கட்டைவிரல் என்றும் சொல்லப்படுவதுண்டு.அதாவது பிற அனைத்துத் தரிசனங்களுடனும் இணைந்து செயல்படும் தன்மை யோகத்துக்கு உண்டு. யோகம் ஒரு தரிசனத்துடன் இணையும்போது அது செயல்வடிவம்கொள்கிறது.

ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக யோகம் உலகளாவ பெற்ற கவனம் காரணமாக யோகசூத்திரம் மைய இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறது. பல குருகுலங்களில் பதஞ்சலி யோகசூத்திரம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பதஞ்சலி யோகசூத்திரம் பிற தரிசனங்களின் துணை இல்லாமலேயே நிற்கக் கூடிய ஒரு சுதந்திரமான பிரதி என்ற கௌரவம் அதற்கு கைவந்திருக்கிறது. ஆகவே இன்று அதை சாங்கியதரிசனத்தின் ஒரு பகுதியாக கருதவேண்டியதில்லை. எங்காவது சூத்திரங்கள் புரியாமல் ஆகுமென்றால் மட்டும் சாங்கிய தரிசனக் கருத்துக்களை தொட்டுக்கொண்டால்போதும்.

இத்தகைய மாறுதல் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழலாம். இதன் மூலம் நாம் எதையாவது இழக்கிறோமா என்பது இன்னும் பொருத்தமான கேள்வி. காலமாறுதல்கள் பல விஷயங்களை தவிர்க்க முடியாதவையாக ஆக்குகின்றன என்பதே அதற்குப் பதில். நாம் இன்று கல்வி கற்கும் முறையும்சரி, சிந்திக்கும் முறையும் சரி, விவாதிக்கும் முறையும் சரி, நம் மரபு சார்ந்தவை அல்ல. நம்முடைய மரபான அறிவியங்கியல் இப்போது ஒரு பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது.

பண்டைக்காலத்தில் கருத்துக்களை நியாய சாஸ்திர அடிப்படையில் விவாதித்தார்கள். உண்மையை புறவயமாக வகுத்துக்கொள்வதற்கும் விவாதிப்பதற்குமான தர்க்க அடிபப்டைகளை வகுத்துச் சொல்லும் சிந்தனைமுறையே நியாயம். ஆறுதரிசனங்களில் ஒன்றாகவும், வைசேஷிக தரிசனத்தின் கிளையாகவும் விளங்கிய நியாயம் பின்னர் தனித்த வளர்ச்சியை அடைந்தது. அது வைசேஷிகத்தில் இருந்து முழுமையாகவே பிரிக்கப்பட்டது. நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்ற நிலையில் இருந்து எல்லா பிரபஞ்சதரிசனங்களையும் வகுத்துக்கொண்டு விவாதிப்பதற்கான அடிப்படைத் தர்க்கக் கட்டுமானமாக ஆகியது.

இந்த வளர்ச்சிக்கு பௌத்தம் ஆற்றிய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். பௌத்த ஆசிரியர்களில் அஸங்கர், வசுபந்து, நாகார்ஜ்ஜுனர், திக்நாகர், தர்மகீர்த்தி போன்று பெரும்பாலானவர்கள் நியாயத்துக்கு தங்கள் உரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இந்த உரைகள் வழியாக நியாயம் மீண்டும் மீண்டும் பிறவி கொண்டு வளர்ந்தது. சென்ற நூற்றாண்டுவரைக்கும் நியாயமே நம்முடைய விவாத அரங்குகளை தீர்மானித்தது. நியாயம் கற்பதென்பது அறிவுச்செயல்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டது.

இன்றும்கூட நாம் பழைமையான குருகுலங்களில் மரபான தத்துவக் கல்வி கற்றவர்களிடம் நம்முடைய அறிதல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் கல்வி நியாய அடிப்படையில் அமைந்ததாக இருக்கிறது 1988 ல் விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பாலக்காட்டில் ஒரு மீமாம்சை அறிஞரைப் பார்க்கச்சென்றேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. மீமாம்சை குறித்து மேலைநாட்டு அறிஞர்களின் எந்தக் கருத்தும் புரியவில்லை. காரணம் முற்றிலும் வேறான ஒரு அறிவியங்கியல் சார்ந்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவியபோது மேலைநாட்டு அறிவியங்கியல் நம்மிடையே செல்வாக்கு பெற்றது. ஐரோப்பிய சிந்தனைகள் அனைத்துமே கிரேக்க தர்க்கவியலை அடிபடையாகக் கொண்டவை. ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவிய ஆரம்ப நாட்களில் தர்க்கவியல் [லாஜிக்] மிக முக்கியமான ஒரு கல்வியாக இருந்தது. தர்க்கவியலின் ஒரு பகுதியாகவே மேலைத்தத்துவம் கற்பிக்கப்பட்டது. தர்க்கவியலில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் படிப்பதும் ஆதாரமான கல்வியாகக் கருதப்பட்டன.

காரணம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் முன்னிறுத்தப்பட்ட சட்டம், அறிவியல் என்ற இரு துறைகளும் கிரேக்க தர்க்கவியலில் வேரூன்றியவை. அவையே நம் இன்றைய நவீன வாழ்க்கையை உருவாக்கின. ஆகவே மெல்லமெல்ல நியாயத்தின் அறிவியங்கியல் காலாவதியானது.

அக்காலத்தில் இந்தியவியல் [இண்டாலஜி] உருவாகியது. இந்திய மூலநூல்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டன. ‘இந்திய ஞானத்தை கிரேக்க தர்க்கவியல் சார்ந்து புரிந்துகொள்ளும் பெருமுயற்சி ‘ என்று நாம் இந்தியவியலை வகுத்துக் கொள்ளலாம்.

இந்தியவியல் வழியாகவே நாம் அனைவரும் இந்திய ஞானமரபை புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஒருவரலாற்று விபத்து. பலநூற்றாண்டுக்கால இடைவெளியால் நம் மரபான கல்வியமைப்புகள் அழிந்தன. நம்முடைய பொதுக்கல்வியும் மரபான முறையை அறவே மறந்து மேலைக்கல்விமுறையை சார்ந்ததாக ஆகியது. எனவே வேறு வழியில்லை

விவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணபரமஹம்ஸருக்கும் இடையேயான உரையாடலில் இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் மேலெழுந்து வந்ததை விவேகானந்தர் பலவாறாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக உருவ வழிபாடு சார்ந்து அவருக்கும் ராமகிருஷ்ணருக்கும் நிகழ்ந்த உரையாடலையும், பின்னர் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்புரிந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லலாம்.

ராமகிருஷ்ணர் வேதாந்தி. ‘பிரம்மமே நான்’ என உணர்ந்து சமாதியோகத்தில் அமர்பவர். ஆனால் கிருஷ்ணபக்தியிலும் காளிபக்தியிலும் ஆடிப்பாடி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு திளைக்கவும் செய்தார். அதை ஏற்க விவேகானந்தரால் முடியவில்லை. ஒன்று இன்னொன்றை மறுப்பது என்று அவர் புரிந்துகொண்டார். நீண்ட ஒரு ஆன்மீகப் பரிணாமத்திற்குப் பின்னரே அதிதூய ஆன்மீக அனுபவமும் உருவவழிபாடு சார்ந்த பக்தியும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்று உணர்ந்தார்.

இதே முரண்பாட்டை நாராயணகுருவுக்கு நடராஜகுருவுக்கும் இடையேயான உரையாடல்களிலும் நாம் காணமுடியும். விவேகானந்தர் பிற்பாடு ஆற்றிய பெரும்பணி என்பது இந்தியவியல் உருவாக்கி அளித்த மேலைத்தர்க்கரீதியான இந்தியசிந்தனைக் கட்டுமானத்த்தில் உள்ள இடைவெளிகளை கீழைத்தர்க்கத்தின் அறிதல்கள் மூலம் நிரப்புவதைத்தான். அதையே நடராஜ குருவும் செய்தார் என்று சொல்லலாம்.

நியாயத்தைப்போலவே யோகமும் அதன் மூலத்தரிசனமாகிய சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனியான வளர்ச்சியை அடைந்தது. அதை நிகழ்த்தியவர்களும் பௌத்தர்களே. பௌத்த யோகாசார மரபுக்குப் பின்னர் யோகம் என்பதே முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டது. பின்னர் அந்த யோகமரபையே அத்வைதம் போன்ற பிற்காலத்தைய வேதாந்த மரபுகள் எடுத்தாண்டன.

இன்று நாம் காணும் யோகம் என்பது உண்மையில் இவ்வாறு பல படிகளிலாக பரிணாமம் கொண்டு வளர்ந்துவந்த ஒன்று. அந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மூலநூலாக நின்றுகொண்டிருக்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். இந்திய மரபில் ஒரு சிறப்பியல்பு உண்டு என்பதை நாம் காணலாம். பெரும்பாலும் மூலநூல்களை மறுவாசிப்பும் மறுவிளக்கமும் கொடுப்பதன் மூலமே சிந்தனை பரிணாமம் கொள்கிறது. பதஞ்சலி யோக சூத்திரமும் அவ்வாறு வளர்ந்ததுதான். இந்த உரை வரை.

ஆக, இந்த நூற்றாண்டில் நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தை அணுகும்போது அணுகும் அறிவுச்சூழலும் மாறிவிட்டிருக்கிறது. அந்நூலைப் பொருள்கொள்ளும் முறையும் மாறியிருக்கிறது. மேலைத்தருக்கப்பின்னணியில் பௌத்தம் வழியாக வளர்ந்து வந்த யோகத்தை நாம் இன்று வாசிக்கிறோம். ஆகவே அதை ஆறுதரிசனங்களில் ஒன்றாக வாசிக்க ஆரம்பிப்போம் என்றால் அது அதைச் சுருக்குவதாகவே அமையும்.

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s