பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 3

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 3

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

சூத்திரம் ஆறு

ப்ரமாண விபர்யாய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய:

[ அவையாவன, யதார்த்தம், பொய்யறிவு, திரிபு , துயில்நிலை , நினைவுகூர்தல் ]

மனச்செயல்பாடுகளை ஆறுவகையாக பிரித்துப் பார்க்கின்றது யோகம். இங்கே பிரமாணம் என்ற சொல் வகுத்து அறியப்பட்டது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. புலன்களாலும் தர்க்கத்தாலும் நாம் அறியக்கூடிய அனைத்துமே பிரமாணம் என்பதில் அடங்கும். யதார்த்த அறிவு என்று இதை சொல்லலாம்.

இது சிறகுகள்கொண்டிருக்கிறது வானில் பறக்கிறது ஆகவே இது பறவை . இது சிறியதாக உள்ளது, சிறகுகள் நீலச்சாம்பல் நிறம். நீலச்சாம்பல் நிறமுள்ள சிறகுகள் கொண்ட சிறிய பறவை மைனா எனப்படும். ஆகவே இது மைனா. இவ்வாறு நாம் கண்டு கேட்டு யோசித்து அறிகிற செயல்பாடுதான் பிரமாணம். இது நம்மில் இடையறாது நடந்து கொண்டிருக்கிற மனச்செயல்பாடு .

அறிதல் நிகழும்போதே கூடவே அறிதல்பிழைகளும் நிகழ்கின்றன. அப்பறவை இரைதேடுவதாக நாம் நினைப்போம், அது கூடுகட்ட சுள்ளிதேடிக் கொண்டிருக்கலாம். இதை பொய்யறிவு என்று யோகம் வகுக்கிறது. யோகத்தின் நிர்ணயப்படி அறிதலுடன் சேர்ந்தே பொய்யறிதலும் நிகழ்கிறது. அறிவின் அடியிலேயே பொய்யறிவும் குடிகொள்கிறது. விளக்குடன் நிழலும் வருவதுபோல எந்த அறிவும் அதனுடன் தொடர்புள்ள ஓர் அறியமையையும் நமக்கு அளிக்கிறது.

சட்டென்று கேட்டால் இது வியப்பு தரலாம், யோசித்துப் பார்த்தால் எத்தனை பெரிய உண்மை இது என நமக்கு தெரியும் . ஓர் அறிதல் இன்னொரு முக்கியமான அறிதலை மறைத்துவிடலாம். அறிவியல் ஞானம் கவித்துவ நுண்ணுணர்வை அழுத்திவிடக்கூடும் அல்லவா? ஓர் உண்மை அதன் தீவிரம் மற்றும் நுட்பம் காரணமாகவே அதன் மறுபக்கத்தை நமக்குத்தெரியாமல் செய்துவிடக்கூடும் . ஒருமகத்தான விஷயத்தை நாம் அறிந்ததுமே நம் மனம் அடையும்பரவசம் இன்னொரு விஷயத்தைக் காணமுடியாதவர்களாக ஆக்கிவிடலாம்.ஆகவேதான் அறிதல்கள் அனைத்தையும் ஐயப்படவேண்டும் , அவை முழுமையானவை என்று நம்பிவிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

அறிதல் அறியாமை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஓர் அறிதல் நமக்கு அறியாமையை அளிக்கக் கூடும். அது நம் அறியாமையை நமக்கு காட்டலாம். அதேபோல அறியாமை என்பது ஒருஅறிதலே . எனக்கு மேற்கத்திய இசை தெரியாது என நான் தெரிந்துகொள்ளுவதையே நான் அறியாமை என்கிறேன் இல்லையா? பூமிக்கு அப்பால் இப்பிரபஞ்ச வெளியில் நாம் அறியாத , அதாவது நாம் அறியவில்லை என்று கூட அறியாத , பலகோடி விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் நம் அறியாமையில் சேர்ப்பதில்லையே. நாராயணகுருவின் ‘அறிவு’ என்ற சிறு தத்துவ நூல் இதை விளக்குகிறது. யோகமரபின்படி அறிவு அறியாமை இரண்டுமே இருவகை அறிதல்கள்தான். அவை பிரிக்கமுடியாதவை

அறிந்தவை நம் மனதில் கொள்ளும் மாறுதல்கள், அதாவது திரிபுகள் அடுத்த மனசெயல்பாடு. நாம் அறிபவை எல்லாமே நமக்குள் வந்த உடனேயே ஒரு மாறுதலை அடைந்துவிடுபதை நாம் அவதானித்திருப்போம். ஒரே விஷயத்தை ஒன்பது பேர் பார்த்து தங்கள் மனப்பதிவை எழுதினால் ஒன்பதுவகை சித்திரம் நமக்கு கிடைப்பது இதனால்தான். நாம் அறிந்த அறிவு உடனடியாக ‘நம்முடைய’ அறிவாக ஆகிவிடுகிறது. பாத்திரத்துக்கு ஏற்ப மாறும் நீர்போல.

மைனாவைப் பார்த்ததுமே ஒருவர் ‘மைனாவை சாப்பிட முடியாது, காடையை சாப்பிடலாம்’ என்று அந்த புரிதலை உருமாற்றிக் கொள்ளலாம். இன்னொருவருக்கு எப்படியோ அது ‘பேனா ‘வுடன் தொடர்பு கொண்டு விடலாம் . இன்னொருவர் ‘மை’ [My] என்ற சொல்லுடன் அப்பறவையை தொடர்புபடுத்தி வைத்திருக்கலாம் . இன்னொருவருக்கு ஒரு சிறுவயது நினைவு வரலாம். நாம் அறிபவை எல்லாமே நமக்குமட்டுமே உரிய சொந்த அறிதல்களாக உடனடியாக மாறிவிடுகின்றன. மூவர் சேர்ந்து பார்த்த ஒரு மைனாவை பற்றி பேசினால் அவர்கள் ஒருவரோடொருவர் விவாதிக்கவே முடியும் ! நம் மன இயக்கத்தில் மிக முக்கியமான ஒன்று இந்த திரிபுநிலை.

மேற்குறிப்பிட்ட மூன்றுவகையான மன இயக்கங்களும் அடங்கி நாம் அடையும் ஆழ்ந்த நிலைதான் துயில்நிலை. இங்கே நித்ர என்ற வடமொழிச்சொல்லை தோராயமாகவே துயில் என்று மொழியாக்கம் செய்திருக்கிறேன். அது யோக மரபில் மிக ஆழமான பொருள் கொண்ட கலைச்சொல் . புத்தரின் யோக நித்திரை பற்றி நாம் கேட்டிருப்போம். விஷ்ணுவின் நித்திரைநிலை மகாயோகம் எனப்படுகிறது. யோக மரபுகளில் துயில் என்றால் ஓர் உடல் சார்ந்த நிலை அல்ல.

இப்படி விளக்குகிறேன். மரம் விதை நிலையில் உள்ளது. உலர்ந்த விதைமீது நீர் படாமலிருந்தால் அதற்குள் உள்ள மாபெரும் மரம் பலநூறு ஆண்டுகள் தூங்கக்கூடும். விதைக்குள் மரம் ஒரு நுண்வடிவில் , கரு வடிவில் உள்ளது. அதேபோல மனம் என்று நாம் சொல்லும் அத்தனை பேரியக்கங்களும் நமக்குள் கரு வடிவில் இருந்து பிறகு முளைத்து வளர்ந்து காடாக மாறி நிறைந்தவைதாம். துயில்நிலையின்போது அவை திரும்ப கருவடிவுக்கு சென்றுவிடுகின்றன . இதுதான் யோக மரபின் துயில் என்னும் உருவகம்.

ஆகவேதான் தூங்கும் புத்தர், தூங்கும் விஷ்ணு போன்ற சிலைகளுக்கு முக்கியமான குறியீட்டுப் பொருள் உள்ளது. விஷ்ணு பிரபஞ்சமே தன் உடலாக கொண்டவர். விஷ்ணுவின் மகாயோக நிலையில் காலம் கருவடிவில் உள்ளது . பிரபஞ்சங்களும் கருவடிவில்தான் உள்ளன. அதாவது சிருஷ்டிக்கு முந்தைய நிலை அது. புத்தரின் உடலை பிரபஞ்ச நியதியின் , மகாதர்மத்தின் வடிவமாக கொள்வது பௌத்த மெய்யியல் மரபு. அதை அவர்கள் தர்மகாயம் என்கிறார்கள் .யோகாசார பௌத்த மரபின்படி யோகநித்திரையில் உள்ள புத்தர் மகாதர்மம் தன் முடிவற்ற இயக்கத்தை கருவடிவில் மட்டுமே நிகழ்த்தும் நிலையை குறிக்கிறார்.

ஆகவே நம் மன இயக்கமானது அதன் அலைகளை. கிளைபரப்பலை நிறுத்தி உள்ளே சென்று கருவடிவில் இயங்கும் நிலையே துயில்நிலை. துயில்நிலையிலும் மனம் செயல்பட்டபடியேதான் உள்ளது. நம் மன இயக்கத்தின் முக்கியமான ஒரு சரடுதான் அது. விழிப்பின் நாம் பார்த்த மைனா அதன் பல்வேறு சாத்தியங்களுடன் நம் மனதில் உள்ளது. இடைவிடாது வளர்ந்து மாறியபடியே இருக்கும் ஒன்றாகவே நாம் நம் விழிப்பில் மைனாவை உணர்ந்திருப்போம். மைனா ஒரு தகவலாக, ஒரு படமாக, ஒரு குறியீடாக, ஒரு ஒலியாக நம் மனதில் மாறி மாறி தெரியும். மைனா நம் ஆழ்மனதில் அதன் கருவடிவில் இறங்குவது துயிலில் தான். மைனா ஒரு கருத்தாக சுருக்கப்பட்டுவிடுகிறது. அதாவது சாராம்சப்படுத்தப்பட்டுவிடுகிறது. நம் விழிப்புநிலையில் எந்த மையப்புள்ளியில் இருந்து மைனாவைப்பற்றிய பலவகையான மனச்சித்திரங்களும் எண்ணங்களும் பிறந்து விரிகின்றனவோ அந்த மையப்புள்ளி மட்டுமே எஞ்சும் நிலை அது.

அதற்கடுத்த நிலை என்று நினைவுகூர்தல் நிலை சொல்லப்படுகிறது . நாம் அறிந்தவற்றை நினைவுகூர்வது இல்லை. மாறாக நம் மனதில் சாராம்சப்படுத்தி வைத்துள்ளவற்றையே நினைவுகூர்கிறோம் என்று நமக்குத்தெரியும். மைனாவை நினைவுகூரும்போது உடனே நாம் அப்போது அருகே இருந்த குளத்தில் விழுந்த தன் நிழலையும் சேர்த்தே நினைவுகூரலாம். மைனாவும் நம் பள்ளிப்பருவமும் சேர்ந்தே நினைவுக்கு வரலாம். அல்லது நம்மால் தர்க்கபூர்வமாக வகுத்துக் கொள்ள முடியாதபடி சம்பந்தமில்லாத பற்பல படங்களை, உணர்வெழுச்சிகளை மைனாவின் நினைவு நம்மில் கிளர்த்தலாம்.உள்ளே போகும்போது புறவுலகு சார்ந்த ஓர் அறிதலாக இருந்த மைனா வெளியேவரும்போது அகம்சார்ந்த ஒரு அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. பறவையாக உள்ளே போய் படிமமாக மீண்டுவருகிறது

ஆக பதஞ்சலி மன இயக்கம் என்று சொல்லும்போது புறவுலகம் நம் மனதுக்குள் சென்று உருமாறி நம்முடைய அகத்தின் ஒரு துளியாக மாறி மீண்டு வருவது வரையிலான ஒரு சுழற்சியையே ஐந்துபடிகளாக சொல்லிவிடுகிறார். இதன் விரிவாக்கத்தை மீண்டும் காணலாம்.

சூத்திரம் ஏழு

ப்ரத்யக்ஷ,அனுமான, ஆகமா ப்ரமாணானி

[நேர்க்காட்சி , ஊகம், முன்னறிவு என பிரமாணங்கள் மூன்று]

பிரமாணம் என பதஞ்சலி சொல்லும் புறவய அறிதல் மூன்றுவகை.

பிரத் + அக்ஷ [ அக்ஷம்-கண்] என்ற சொற்சேர்க்கையின் சரியான பொருள் கண்முன் என்பதே. புலனறிவு என்று இதை வகுக்கலாம். கண்டுகேட்டு உண்டு உயிர்த்து தொட்டு அறியும் அறிவுதான் பிரத்யட்சம் . இது என்ன என்றவினாவுக்கு நம் புலன்கள் அளிக்கும் விடை அது.

ஆனால் நம் புலனறிதல்கள் துண்டுபட்டவை. மைனாவை மென்மை, இனிய ஒலி , அழகிய நிறம் என்ற மூன்று தனி அறிதல்களாக நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். அம்மூன்றையும் ஓர் அறிதலாக மாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது . அதை அனுமானம் அல்லது ஊகம் என்று சொல்கிறார். இடைவெளியில்லாது நம் அகம் நம் புலனறிதல்களைத் தொகுத்து ஊகங்களாக மாற்றியபடியே இருக்கிறது .

இவ்வாறு நாம் ஊகங்களை நிகழ்த்துகையில் அதற்கு அடித்தளமாக இருப்பது நமது முன்னறிவு ஆகும். ஒரு புதிய அறிதலை அதற்கு முன்பே நாம் அறிந்த அனைத்து அறிதல்களையும் பயன்படுத்தித்தான் நாம் அடைகிறோம். அறிதல் என்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. பறவையைப்பற்றி நாம் அறிந்த அனைத்துமே ஒரு மைனாவை நாம் அறிவதற்கு உதவுகின்றன .

முன்னறிவே இல்லாமல் அறிதல் நிகழ முடியுமா என்ற வினா பொதுவாக எல்லா அமர்வுகளிலும் எழுப்பப் படுகிறது. சிறிய குழந்தை முதன்முதலில் அறியக்கூடிய ஒரே ஒரு அறிதலை வேண்டுமானால் அப்படி சொல்லலாம் என்பது நமக்கு உடனே தோன்றுகிறது. முதன் முதலில் மைனாவைப் பார்க்கும் குழந்தை உடனே கையை நீட்டி அதை ‘ க்கா ‘ என்று தானறிந்த முன்னறிவுடன் சம்பந்தப்படுத்திவிடும். முதன்முதலில் காக்காவைப்பார்த்ததும் அதை தன் துணியாக எண்ணி ‘த்து’ என்று சொல்லக் கூடும். முதலில் துணியைப்பார்த்ததும் அம்மாவின் உடையாக எண்ணி ‘ம்மா’ என்று சொல்லலாம். முதலில் அம்மாவைப் பார்த்ததும் அது முலைக்கண்ணை சுவைப்பது பற்றிய முன்னறிவுடன் தொடர்பு படுத்தி சுவைக்கும் ஒலியை ‘ ம்ம்ம் ‘ என எழுப்புகிறது. துள்ளுகிறது. ஆனால் முலைக்கண் ?

யோசியுங்கள். முலைக்கண்ணைபற்றிய அறிதலுடன்தானே அது பிறக்கிறது? பிறந்த மறுகணமே அதனால் முலையை சப்ப முடியும். முன்னறிவு என்பது இங்கே அடையப்பெற்றது அல்ல. அது கொண்டுவரப்படுவது. உயிரியல்பின் ஒரு பகுதி. ஆகவேதான் ஆகமா என்றார் பதஞ்சலி. [கமனம் என்றால் வருதல். ஆகமம் என்றால் வந்தது ] முன்னறிவு ஒருவனில் இயல்பாக உள்ளது.

முக்கியமான ஓர் அறிதல் இது. நமது அறிதல்களின் சாத்தியங்கள் அவற்றின் எல்லைகள் இரண்டையுமே இது காட்டுகிறது. நாம் நமது அடிப்படை உள்ளுணர்வுகள் பலவற்றுடன்தான் பிறந்திருக்கிறோம். அவற்றை அடித்தளமாகக் கொண்டுதான் நமது எல்லா அறிதல்களும் நிகழ்ந்துகொண்டுள்ளன. அவற்றின் எல்லைகளை நாம் மீறிப்போகவே முடியாது.

எப்படியெல்லாம் மேகங்களில் மிதந்தும் காற்றுகளில் அலைந்தும் சிந்தித்தாலும் நமது சிந்தனை என்ற பட்டத்தின் நூல் கீழே முன்னறிவு என்ற நூல்பிடியில்தான் உள்ளது. அந்நூல்கண்டு நமது அடிப்படையான மிருக நினைவுகளாக இருக்கலாம். அல்லது நமது இன ,கலாச்சார நினைவுகளாக இருக்கலாம்.

இங்கே தத்துவ மாணவர்களுக்குச் சொல்ல ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. பதஞ்சலி ஆகம என்று சொல்லும் சொல் நம் மரபிலே பலவாக விளக்கப்பட்டுள்ளது. அதை ‘முன்னோரிடமிருந்து வந்த அறிவு’ என்று கொள்வது வழக்கமான மத உரைகளில் காணப்படுகிறது. வழிபாட்டுமுறைகளை வழிவழியாகப் பெற்று செய்துகொண்டிருக்கும் முறையை பதிவுசெய்த நூல்கள் அகமங்கள் எனப்பட்டன. ஆகவே ஆகமங்கள் என்னும்போது வழிவழியாக வந்த நூல்கள் என்ற பொருளில் நம் மரபில் பயன்படுத்தப்படுகிறது.

வேறுசில நூல்களில் மூன்று பிரமாணங்களில் மூன்றாவது வருவது ‘சுருதி’ [ பிரத்யட்சம், அனுமானம், சுருதி] என்று சொல்லப்படுகிறது. வேதங்களை ஞானத்தின் அடிப்படைகளாக கருதும் மீமாம்சகர்கள் சுருதி என்றால் வேதமே என்று வகுத்து எல்லா அறிதல்களுக்கும் வேதங்களே அடிப்படை என்று விளக்க முற்படுகிறார்கள். சாதாரணமாக இன்றைய இந்துமதச் சொற்பொழிவுகளை கேட்பவர்கள் இவ்விளக்கத்தையே கேட்டிருப்பார்கள்.

அதேபோல வைதிகர்கள் வேதங்களை சொல்லும்போது மற்றவர்கள் தங்கள் மூலநூல்களை அவ்விடத்தில் வைப்பார்கள். அறிதல் எப்போதுமே முன்னோர்வகுத்த சாத்திரங்களை மீறக் கூடாது, மீற முடியாது என இவர்கள் சொல்வார்கள். பதஞ்சலி யோகசூத்திரம் என்ற மூலநூலில் இத்தகைய வரையறை இல்லை என்பதை வாசகர் காணலாம்.

நாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்ய யதி என மூன்று ஆசிரியர்களுமே மாஅகம என்பதை முன்னோர் அறிவு என்ற விளக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. மதம்சார்ந்து அளிக்கப்பட்ட வாசிப்புகளாக மட்டுமே அவற்றை அவர்கள் காண்கிறார்கள். அவற்றை ‘முன்னறிவு’ என்றே அவர்கள் கொள்கிறார்கள். அதாவது கருவிலேயே மனிதனுக்குள் உருவாகிவிடும் அறிவு. எல்லா உயிரினங்களிடமும் பிறப்பிலேயே வந்துவிடும் அடிப்படை அறிவு.

மூலநூல்[Canon] என்று எதுவும் பொதுவாக இந்துமெய்ஞான மரபில் இல்லை. மீமாம்சகர்கள் வேதங்களை மாற்றமில்லா மூலநூல்களாக கொள்வார்கள். அது மட்டுமே இந்து ஞானமரபில் உள்ள மூலநூல்வாதம். மற்ற தரிசனங்களைப் பொறுத்தவரை மூலநூல்கள் என்பவை தத்துவ நூல்களே. அதாவது ஏற்று ஒழுகவேண்டியவை அல்ல, கற்று ,பயின்றுவிவாதித்து தெளியவேண்டியவை .ஆகவே முன்னறிவை மூலநூல் என்றோ மூத்தோர் சொல் என்றோ விளக்க இந்துமெய்ஞான மரபில் இடமில்லை என்பதே உண்மையாகும். பிற்கால பக்திமரபுதான் அப்படிப்பட்ட் விளக்கத்தை அடைந்திருக்கிறது. யோகமாணவன் அதை தவிர்த்து முன்னகர்வதே முறை.

[தொடரும்]

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s