எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
அணுக்கொள்கை: வைசேஷிகம்
[ஊட்டி இலக்கிய முகாம். நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]
அணுக்களின் கூட்டு மூலமே இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் உருவாகியுள்ளன என்ற கொள்கை புதியது என்று நாம் கருதுகிறோம். இது தவறு. அணுக்களின் கூட்டாகப் பொருட்களைப் பார்க்கும் பார்வை மிகப் பழங்காலம் முதலே கீழைச் சிந்தனையிலும் கிரேக்க சிந்தனையிலும் இருந்து வந்துள்ளது. உண்மையில் நவீன அணுக்கொள்கையானது இந்தப் புராதன சிந்தனைகளின் ஒரு திருத்தப்பட்ட வடிவமேயாகும்.
கிரேக்க மரபில் லூசிபஸ்(Leucippus) அணுக்கொள்கையை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. இவர் பிரபஞ்சத்தில் அணுக்களும் வெற்றிடமும் மட்டுமே உள்ளன என்றார். இவற்றின் கூட்டின் மூலமே எல்லாப் பொருட்களும் உருவாகின்றன என வாதிட்டார். பிற்பாடு எபிகுரஸ்(Epicurus) இதை மேலும் விரிவாக வளர்த்தார்.
எபிகுரஸ் (கி.மு. 341-271) தன் சக தத்துவ அறிஞர்களான ஹெர்மார்க்ஸ் (Hermarchus), பாலியேனஸ் (Polyanenus) ஆகியோரின் உதவியுடன் நிறுவிய தத்துவச் சிந்தனை மரபு எபிகுரேனிஸம் என்று கூறப்படுகிறது. இது பிரபஞ்சத்தை அணுக்களிலான அமைப்பாக உருவகிக்கும் முக்கியமான சிந்தனை மரபாகும்.
எபிகுரேனிசச் சிந்தனையின்படி இந்தப் பிரபஞ்சம் பருப்பொருள் – வெற்றிடம் என்று இரண்டு பெரும் பிரிவுகளிலாலானது. இரண்டுமே முடிவற்றவை. வெளி என்பது வெற்றிடம். பரு என்பது எல்லாப் பிரபஞ்சப் பொருட்களும். பொருட்கள் எல்லாமே தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும்போது மேலும் பகுக்கமுடியாத ஒரு நுண்துகளாக மாறுகின்றன. இவையே அணுக்கள். அணுக்களால் ஆனவையே எல்லாப் பொருட்களும் என்றார் எபிகுரஸ். இவற்றை ஆட்டம் (Atom).
அணுக்கள் கூடியிணைந்து பொருள்துளியாக மாறுகின்றன என்றார் எபிகுரஸ். இதை அவர் மினிமா (Minima) என்றார். அணுக்களுக்கு எடை, வடிவம் முதலிய அடிப்படை குணங்கள் மட்டுமே உள்ளன. நிறம், ருசி போன்ற இரண்டாம் தளக்குணங்கள் முழுக்க அணுக்கள் கூடியிணைந்து அணுத்தொகைகளாக உருமாறும்போது ஏற்படுபவை என்றார் எபிகுரஸ்.
அணுக்கள் எல்லாமே தொடர்ந்து துரிதமான சலன் நிலையில் உள்ளன. அணுக்களின் தொகைகளின் இயல்புகள் மூலமே நிலைத்த தன்மை உருவாகிறது. நீருக்கு நிலைத்த தன்மை இல்லை; கல்லுக்கு உண்டு. எடை, இணைவு, வேகம் என்ற மூன்று பொருண்மை இயல்புகளின் அடிப்படையில் இந்த அணுத் தொகுப்புகள் உருவாகிப் பொருட்கள் பிறக்கின்றன. இதற்கு பின்னணியாக எந்த தெய்விக வல்லமையும் இல்லை. இதுவே எபிகுரேனிசச் சித்தாந்த சாரம்.
அணுக்கொள்கையை முன்வைத்த இன்னொரு முக்கியமான கிரேக்கச் சிந்தனையாளர் டெமாகிரிட்டஸ் (கி.மு. 460-380). சாக்ரடீஸுக்கு முன்பு வாழ்ந்தவர். லூசிபஸின் அணுக்கொள்கையை விரிவுபடுத்திச் சுயமான அணுச் சித்தாந்தம் ஒன்றை உருவாக்கினார். அணுக்கள் பிறப்பதோ அழிவதோ இல்லை என்றும், வெட்டவெளியில் தொடர்ந்து இயங்கியபடியே இருக்கும் ஆதிப்பருப்பொருட்கள் அவை என்றும் அவர் கூறினார்.
எபிகுரோஸுக்கும் டெமாகிரிட்டஸுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளில் முக்கியமானது, எபிகுரஸ் நம் புலனறிதல்கள் உண்மையானவை, நம்பத்தக்கவை என்றார். டெமாகிரிட்டஸ் அதை எற்கவில்லை. பொருண்மைக் குணங்கள் எல்லாமே அணுக்களைச் சார்ந்தவை. நாம் அணுக்களை நேரடியாகக் கண்டும் தொட்டும் அறிய முடியாது. நாம் அறிவதெல்லாம் அணுக்களின் பலவிதமான தொகுப்புகளான உலகப்பொருட்களை மட்டுமே. ஆகவே புலன்கள் நமக்கு திரிபுபட்ட, பிழையான, இரண்டாம் தர அறிவையே தரமுடியும் என்றார் டெமாகிரிட்டஸ்.
இந்திய மெய்ஞான மரபிலும் வெகுகாலம் முன்பே அணுக்கொள்கை இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து கிடைத்த தருக்கப்பூர்வமான தரிசனம்தான் வைசேஷிகம். வைசேஷிகம் என்ற சொல் விசேஷம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. விசேஷம் என்றால் ‘சிறப்பு’,’தனித்தன்மை’ என்று பொருள்.
ஒவ்வொரு பொருண்மைக்குணமும் அணுக்களின் தனித்த குணாதிசியங்களின் மூலம் உருவாக்கக் கூடியது என்று வைசேஷிகம் நம்பியது. ஆகவே இத்தரிசனமே இப்பெயர் பெற்றது.
சாங்கியத்துக்கும் வைசேஷிகத்திற்கும் இடையேயுள்ள வேற்றுமையை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளுவதில் இரு முறைகள் உண்டு. தொகுத்தல், பகுத்தல். இவையிரண்டும் உலகளாவிய முறைகள். மானுட மனமே இவ்விரு வகைகளில் செயல்படுவதுதான்.
கைக்குக் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கூட்டி, தொகுத்து ஒட்டுமொத்தமாக இது என்ன என்று யோசிப்பது தொகுத்தல் முறை. கைக்கு கிடைப்பவற்றைப் பகுத்துப் பகுத்து இறுதியில் இது என்ன என்று பார்ப்பது பகுத்தல் முறை. இயற்கை என்ற பெரும் பொதுவடிவத்தைச் சாங்கியம் கற்பிதம் செய்தது. இயற்கைப் பொருட்களைப் பகுத்துப் பகுத்து இறுதியில் எஞ்சும் பொதுமையாகிய அணுவை கற்பிதம் செய்தது வைசேஷிகம். ஆதி இயற்கை என்பதன் நேர் எதிர் எல்லையில் உள்ளது அணு என்ற உருவகம்.
வைசேஷிகத்தின் மூலகுரு கணாத ரிஷி. கி.மு.ஆறாம் நூற்றாண்டிலோ பத்தாம் நூற்றாண்டிலோ இவர் வாழ்ந்திருக்கலாம். வைசேஷிகத்தின் முக்கியமான நூல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பிரசஸ்தபாதர் எழுதிய பதார்த்த தர்ம சங்கிரகம் என்பதாகும். கி.பி. எட்டாம் நுற்றாண்டில் ஸ்ரீதரர், உதயணர் போன்றொரும் வைசேஷிகத்துக்கு உரை எழுதியுள்ளனர். ஆனால் வைசேஷிகத்தில் மூல நூலாகக் கருதப்படுவது கணாதரின் ‘வைசேஷிக சூத்திரங்கள்’ என்ற சிறிய நூல்தான்.
அடுத்து வருவது..
வைசேஷிகத்தின் தத்துவம்