எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
வைசேஷிகத்தின் தத்துவம்
[2011 கோவை புத்தகக் கண்காட்ச்சியில் வாசகர்களுடன்]
’இனி நாம் தர்மத்தை விலக்க முயல்வோம்’ என்று கூறியபடி வைசேஷிகச் சூத்திரங்கள் ஆரம்பிக்கின்றன. தர்மம் என்றால் என்ன? எதிலிருந்து எல்லா விஷயங்களும் உருவாகி வருகின்றனவோ அதுவே தர்மம்; எது எல்லாவற்றுக்கும்அடிப்படையாக அமைகிறதோ அதுவே தட்மம். இப்பார்வை பிறகு பெளத்த ஞானமரபில் பெரிதாக வளர்ந்தது.
மனிதனைச் சாராமல் தன் சொந்தத் தனித்தன்மையால் நிலையாகவும் நிரந்தரமாகவும் இருந்துகொண்டிருக்கும் பிரபஞ்சம் உண்டு என்று கணாதர் நம்பினார். அது எந்த விதிகளின்படி இயங்கிக்கொண்டிருக்கிறது எனப் பாரபட்சமற்ற ஆய்வின் மூலம் மனிதன் அறிய முடியும். அவ்விதியே தர்மம். அதை அறிவது மனிதனைத் தன் அறியாமையின் துயர்களிலிருந்து விடுதலை செய்யும்.
வைசேஷிகம் ‘பதார்த்தம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. தமிழில் இன்றைய அன்றாட வழக்கில் இது உணவுப்பொருள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. விரிவான வடமொழி அர்த்தத்தில் இச்சொல்லை ‘பொருள்’ (வஸ்து) என்று வகுக்கலாம். தத்துவத்தில் இந்த இரு அர்த்தங்களும் கிடையாது.. பதம் + அர்த்தம் என்று பிரித்தால் ‘வார்தையின் பொருள்’ என்று வரும். அதாவது இங்கு சரியான பொருள் ‘கருதுகோள்’ (Phinominon) என்பதாகும்.
பிரபஞ்சத்தில் பல்லாயிரம் கோடி கருதுகோள்கள் உள்ளன. இவற்றை அறிவது சிரமம். எனவே வைசேஷிகம் ஆறு பொதுவான கருதுகோள்களை உருவகிக்கிறது. சாங்கியம் 24 தத்துவங்களை உருவகிப்பது போலத்தான் இதுவும். (தத்துவம், பதார்த்தம் இரண்டுமே ஏறத்தாழ சமம்தான் இங்கு.)
திரவியம் (பொருள்), குணம் (இயல்பு), கர்மம் (செயல்), சாமான்யம் (பொதுத்தன்மை), விசேஷம் (சிறப்புத்தன்மை), சமவாயம் (இணைவுத்தன்மை) என்று பதார்த்தங்கள் ஆறு வகைப்படும். பிற்காலத்தைய வைசேஷிக உரையாசிரியர்களான ஸ்ரீதரர், உதயணர் போன்றவர்கள் அபாவம் (இன்மை) என்ற ஏழாவது பதார்த்தத்தையும் சேர்த்துக்கொண்டனர். அதாவது, இன்மையானது இருப்பு போலவே ஒரு முக்கியமான பெளதிகத் தன்மையாகும்.
பதார்த்தங்களின் தனித்தன்மைகள்
முதல்நிலைப் பதார்த்தம் ’திரவியம்’ அதாவது, இந்தப் பொருள்வயப் பிரபஞ்சத்திற்கு அடிப்படையாக உள்ள பருப்பொருள் – பிண்டம் – எதுவோ அதுவே திரவியம் ஆகும். “எது குணங்களும் கர்மங்களும் கொண்டிருக்கிறதோ, ஏதாவது ஒரு விளைவின் காரணமாக அமைந்துள்ளதோ அதுவே திரவியம் ஆகும்.” என்கிறார் கணாதர் (வைசேஷிகச் சூத்திரங்கள் 1-1-15). அதாவது, குணங்களும் செயல்களும் வெட்டவெளியில் நடக்க முடியாதே. எதாவது பொருளின் மீதுதானே அவை நடந்தாக வேண்டும்? அப்பொருளே திரவியம் ஆகும்.
இதைத் திருப்பியும் போடலாம். குணங்களோ கர்மங்களோ இல்லாமல் எவரும் திரவியங்களை அளந்து அறிந்து விட முடியாது. அதாவது, பொருள் எப்படிப்பட்டது என்பதை குணங்கள், கர்மங்கள் மூலமே நாம் அறிய முடியும். இன்னும் கூறப்போனால் பொருள் என நாம் அறிவதெல்லாம் குணங்களையும் கர்மங்களையும்தான். நீர் என்றால் திரவநிலை, குளுமை, தாகம் தீர்க்கும் தன்மை, நீலம், நிறமின்மை எனக் குணங்கள் மற்றும் கர்மங்கள் ( இயல்புகள், செயல்கள்) ஆகத்தானே நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்.
கணாதர் திரவியங்களை இரண்டாகப் பிரிக்கிறார். சம்யுக்த திரவியங்கள். சுத்த திரவியங்கள். சம்யுக்த திரவியங்கள் (கலவைப் பொருட்கள்) ஒன்றுக்கு மேற்பட்ட திரவியங்கள் கலந்து உருவானவை. அவற்றுக்கு நிரந்தரத் தன்மை இல்லை. சுத்த திரவியங்கள் நிரந்தரமானவை. பிறப்பு அற்றவை.
திரவியங்கள் ஒன்பது என்கிறார் கணாதர். நிலம், நீர், தீ, வாயு, வானம், காலம், திசை, ஆத்மா, மனம் ஆகியவை அவை. இப்பட்டியலில் வானம், காலம், திசை, ஆத்மா, மனம் என்ற அருவமான கருத்துருவம் இடம் பெற்றிருப்பதைக் கவனிக்கவும். வைசேஷிகம் பிறகு ஆன்மிகவாதம் நோக்கிய நகர்வினை அடைவதற்குக் காரணமானது இந்த அடிப்படை உருவகம்தான்.
எல்லா உயிரிலும் ஆத்மாக்கள் உள்ளன. பருப்பொருட்களைப் போலவே அவையும் புறவயமானவை; தனித்த சுய இயல்பு உடையவை. உயிர் என்பது ஆத்மாவின் ஓர் இயல்பு. ஞானம், இச்சை ஆகியவை ஆத்மாவின் குணங்கள். ஆத்மா மனம் வழியாகப் பிரபஞ்சத்துடன் உறவை மேற்கொள்கிறது.
அடுத்தபடியாகக் குணங்களையும் கர்மங்களையும் கணாதர் விளக்குகிறார். குணங்களௌம் கர்மங்களும் பொருட்களின் இயல்புகள் மற்றும் செயல்பாடுகள் ஆகும். அவை இல்லையேல் அப்பொருள் இல்லாதத்திற்குச் சமம். வெப்பமும் ஒளியும் தீயின் குணங்கள்; எரித்தல் அதன் செயல். இவையே நாம் தீயாக அறியும் அம்சங்கள்.
மொத்தம் 17 குணங்களை கணாதர் பட்டியலிடுகிறார். (1) ரூபம் (வடிவம்), (2) ரசம் (சுவை), (3) கந்தம் (மணம்), (4) ஸ்பர்சம் (தொடுகை), (5) ஸங்கிய (எண்ணிக்கை), (6) பரிமாணம் (திட இருப்புத்தன்மை), (7) பிருதக்த்வம், (8) ஸம்யோகம் (கலப்பு), (9) விபாகம் (பிரிவு), (10) பரத்வம், (11) அபரத்வம், (12) புத்தி (அறிவு) (13) சுகம் (இன்பம்), (14) துக்கம் (துயரம்), (15) இச்சை (விருப்பம்) (16) த்வேஷம் (வெறுப்பு), (17) பிரயத்னம் (செயலூக்கம்).
முதல் நான்கு பருப்பொருட்களையும் சுத்த திரவியங்கள் என்கிறார் கணாதர். அவை நிரந்தரமானவை. அவை பிரிக்கப்பட முடியாத அணுக்களினால் ஆனவை. இவ்வணுக்கள் பருமை வடிவம் உடையவையே.
பிற ஐந்தும் சம்யுக்த திரவியங்கள். அவை நிரந்தரமற்றவை. பிற திரவியங்களின் கூட்டினால் உருவாகக் கூடியவை. தனித்து நிற்க முடியாதவை.
நிலத்தின் சிறப்புகுணம் மணம். நீருக்கு சுவை. அக்னிக்கு வடிவம் (வெளிச்சமே வடிவங்களை உருவாக்குகிறது இல்லையா?), காற்றுக்குத் தொடுகை. வானத்திற்கு ஒலி.
இந்தச் சிறப்பியல்புகளை ஐந்து புலன்கள் மூலம் நாம் அறிகிறோம் என்கிறார் கணாதர். எந்தப்புலன் எந்தச் சுவையை அறிகிறதோ அப்பொருளால் அது ஆக்கப்பட்டுள்ளது. அதாவது, நாசி மண்ணாலும், நாக்கு நீராலும், கண் அக்னியாலும், சருமம் காற்றினாலும், காது வானத்தாலும் கட்டப்பட்டுள்ளன.
தொடரும்..