எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
வைசேஷிகத்தின் தத்துவம் – தொடர்ச்சி
[இந்திய நெடும்பயணத்தில் டோலாவீரா, குஜராத். செல்லும் வழியில் ஒரு உப்பு ஏரி]
பிற திரவியங்களின் சிறப்பியல்புகளைக் கணாதர் கூறுகிறார். காலமும் இடமும் பருப்பொருட்களைப் போலவே புறவயமானவை என்பது வைசேஷிகத்தின் நம்பிக்கை. ஆனால் அவை பிற பருப்பொருட்களை நம்பி மட்டுமே இருக்க முடியும்.
ஒரு திரவியத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட குணங்கள் இருக்கலாம். கணாதரே கூறுகிறார்: “மண்ணுக்குச் சுவை, மணம், வடிவம், தொடுகை ஆகிய குணங்கள் உள்ளன. அக்னிக்கு வடிவம், தொடுகை ஆகியவை உள்ளன. வாயுவுக்கு தொடுகை மட்டுமே”
குணங்களில் சில பெளதிகமானவை. சில பெளதிக இயல்பு அற்றவை. வடிவம், சுவை, தொடுகை முதலியவை பெளதிகமானவை. புத்தி, சுகம், துக்கம் முதலியவை பெளதிக இயல்பு இல்லாத குணங்கள்.
செய்தல்/நிகழ்தல் என்ற அர்த்தமுள்ள ‘கர்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்தே கர்மம் என்ற சொல் பிறந்தது.( க்ரியா, கர்த்தா, கிரமம் முதலிய சொற்களும்) கணாதரை பொருத்தவரை பிரபஞ்சத்தில் உள்ள எல்லா நிகழ்வுகளும் கர்மங்களே. “ஏதாவது ஒரு பதார்த்தத்தில் அடங்கியுள்ளதும், சுயமான குணங்கள் இல்லாததும், இணைவு, பிரிவு ஆகியவற்றுக்கு காரணமாக அமைவதும் எதுவோ அதுவே கர்மம் (வைசேஷிக சூத்திரம் 1-1-17)
கர்மங்கள் ஐந்து: (1) உல்க்ஷேபணம் (மேலே எழுதல்), (2) அபேக்ஷேபணம் (விழுதல்), (3) அகுஞ்சனம் (சுருங்குதல்), (4) பிரசாரணம் (விரிதல்), (5) கமனம் (நகர்தல்). இவையே பிரபஞ்ச இயக்க நிலைகள்.
சாமான்யம், விசேஷம், சமவாயம் என வைசேஷிகம் கூறும் மூன்று பதார்த்தங்கள் உண்மையில் பொருள்களில் இயல்புகள் மட்டுமே. ஆனால் அவற்றை தனியான உருவகங்களாக பொருள் போலவே அடிப்படையானவையாகக் கணாதர் காண்கிறார்.
விதவிதமான திரவியங்களுக்கு இடையே உள்ள பொது இயல்பே சாமான்யம். ஒவ்வொரு பசுவும் தனி. ஆனால் பசுத்துவம் என்ற இயல்பு அவற்றுக்கு பொது. அதுவே சாமான்யம்.
ஒவ்வொரு திரவியங்களுக்கும் உள்ள தனித்தன்மையே விசேஷகுணம். தீ சுடும். சுடுதலே அதன் விசேஷ குணம். பசு பால்தரும். குறிப்பிட்ட பசு சிவப்பு நிறமானது. அவை அதன் சிறப்புகள் அல்லது விசேஷ குணங்கள்.
ஒவ்வொரு உயிரும் இவ்விரு குணக்களும் உண்டு. உதாரணமாக நான், மனிதன் என்ற பொதுகுணமும், என் சுய அடையாளம் என்ற சிறப்புக் குணமும் உடையவன். விசேஷங்களில் சாமான்யம் அடங்கியுள்ளது.
சமவாயம் என்பது திரவியங்களின் கலப்பு மூலம் உருவாகும் பொதுக்குணமாகும். இங்கு ஒரு வித்தியாசம் உணரப்பட வேண்டும். திரவியங்கள் ‘ஸம்யோகம்’ என்ற முறையில் இணையலாம். அது ஒரு குணம் மட்டுமே. அது தற்காலிகமானது. நீரும் மண்ணும் இணைந்து தாவரம் உருவாவது போல. சமவாயம் என்பது ஒரு தனிந்த பொருண்மை இயல்பு என்கிறது வைசேஷிகம். அது நிரந்தரமான இணைப்பு.
சமபாயம் என்பது ஒரு குறிப்பிட்ட இணைவு சாத்தியமாவதற்கு உரிய காரிய காரண உறவு ஆகும் என்று கணாதர் கூறுகிறார் (வைசேஷிகச் சூத்திரம் 7-2-26). இதை இப்படி விளக்கலாம். இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயல்பானகவே இன்னொரு பொருளுடன்/பொருட்களுடன் உறவு கொள்ளும்படி அமைக்கப்படுள்ளது. அந்த அமைப்பு வழியாகவே பிரபஞ்சம் இயங்குகிறது. மண்ணும், நீரும், காற்றும், ஆகாயமும் கொள்ளும் உறவு ஒர் உதாரணம். இப்படி எண்ணற்ற உறவுகள். இவ்வுறவு அடிப்படையானது. மாற்ற முடியாதது. இவ்வுறவு உருவாக்கும் விதியையே வைசேஷிக மரபு சமவாயம் என்கிறது.
அதாவது, சமவாயமே பிரபஞ்ச பொருட்களை இயங்கவைக்கும் கருத்தியல். ஒரு அரசாங்க அலிவலகத்தில் பல்வேறு அலுவலர்கள் உள்ளனர்.அவர்களுக்கு இடையேயான உறவினை அவ்வலுவலகத்தின் நிர்வாகச் சட்டம் வகுத்து வைத்திருக்கிறது. இன்னார் இன்னாருடன் சேர்ந்து வேலையைச் செய்யவேண்டும். இன்னாரின் வேலையை இனார் மேற்பார்வை இட வேண்டும் என்றெல்லாம் அது கூறுகிறது. அது மாற்றமுடியாத விதி. அதனடிப்படையிலேயே அவ்வலுவலகம் இயங்குகிறது. சமவாயம் என்பது என்பது பிரபஞ்சத்தின் நிர்வாக விதிமுறை.
இவையே வைசேஷிகம் கூறும் பதார்த்தங்களின் இயல்புகளாகும். பதார்த்தங்களை நாடக நடிகர்கள் மற்றும் நாடகக் கதை ஆகியவற்றின் தொகுப்பு என்று கூறலாம். நாடக நிகழ்வே இப்பிரபஞ்சம்.
வைசேஷிகம் கூறும் பிரபஞ்ச நாடகம்
சத்காரியவாதம் சாங்கியத்தின் அடிப்படை. வைசேஷிகம் அதை மறுக்கிறது. தன் கொள்கையை இது அசத்காரியவாதம் என்று கூறுகிறது. சாங்கியம் கூறும் காரியகாரணத்திற்குள் காரியம் உறைந்துள்ளது என்று கூற்றை இவர்கள் ஏற்கவில்லை. இது ஒரு தனியான பொருள். இரண்டுக்கும் அடிப்படைகளே வேறு. காரணத்திலிருந்து பிறந்த புதிய பொருள்தான் காரியம். இதுவே வைசேஷிகர் கூறும் பிரபஞ்ச உருவாக்கக் கொள்கையாகும்
ஒவ்வொரு பொருளும் பற்பல உறுப்புகளின் சேர்க்கை ஆகும் என வகுத்தது வைசேஷிகம். உறுப்புகள்தான் ‘அவயவம்’. உறுப்புகளைக் கொண்டிருப்பது ‘அவயவி’. இரண்டையும் பிரித்துவிட முடியும். இவ்வாறு உறுப்புறுப்பாக ஒரு பொருளைப் பிரிக்கும் போது இறுதியில் பிரிக்க முடியாத பகுதிகளாக எஞ்சுவதுதான் அணு. அணுக்களினாலானதே ஒவ்வொரு பொருளும்.
ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும் இயல்புடையது அணு. ஒரு அணு இன்னொன்றுடன் இணைந்து இரட்டை அணுவாகிறது. அது இன்னொன்றுடம் இணைந்து மூண்றாகிறது. இப்படியே நிலமும் நீரும் வானமும் உருவாகின்றன. நிலம் நுண்ணணுக்களினால் ஆனது. நிலம், நீரின் நுண்ணணுகளினாலானது. நீர் அணு மிகச் சிறியது. காண முடியாதது. அணுக்கள் ஒன்றாகும் கூட்டணுக்களை நாம் காணமுடியும்.
ஆகவேதான் காரணம் வேறு, காரியம் வேறு என்று கணாதர் கூற நேர்ந்தது. நீர் எதன் காரியமாக இருந்தாலும் அதன் மூல அணு நீருக்கே உரிய தனித்தன்மைகள் உடையது. ஆகவே நீர் தன்னளவில் சுதந்திரமான ஒரு பொருள்தான். அதன் காரணத்தின் இயல்புகளை நம்பி அது இல்லை என்றது வைசேஷிகம்.
இங்கு வைசேஷிகம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி உண்டு. அணுக்கள் ஏன் ஒன்றாக இணையவேண்டும்? சமவாயம் என்ற குணாதிசயம் உருவாக வேண்டிய முகாந்திரம் என்ன? அதாவது, அணுக்கள் கூடி பிரபஞ்சமான ஆவதற்கான அடிப்படையான உந்து சக்தி என்ன?
இதைக் கணாதர் மிகத்தெளிவற்ற முறையில் விளக்குகிறார் என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கணாதரின் பார்வையில் அந்த உந்து சக்தி அறிய முடியாதது, கண்ணுக்குத் தெரியாதது, அணுக்கள் மற்றும் வெட்டவெளியின் அடிப்படை அமைப்பிலேயே உட்பொதிந்து இருப்பது. இதை அவர் ‘தெரியாதது’ என்று பொருள்வரும் ‘அதிர்ஷ்டம்’ (அ- திருஷ்டம். திருஷ்டி என்றால் கண். திருஷ்டம் என்றால் தெரிவது) என்று குறிப்பிட்டார்.
பிற்பாடு பிரசஸ்த்பாதர் அதிஷ்ட சக்தியை விளக்கி அதுவே இறைசக்தி என்று வரையறுத்துவிட்டார். அந்த அதிர்ஷ்டசக்தியே சிருஷ்டிக்கு மூலகாரணம். இங்கு ஒரு விஷயம் கவனிக்கப் படவேண்டும். வைசேஷிக மரபின் இறைசக்தி தன்மை பிரபஞ்சமாகத் தன்னை மாற்றிக்கொள்வதில்லை. தன்னிலிருந்து அது பிரபஞ்சத்தை உருவக்கவுமில்லை. பிரபஞ்சத்தின் மூலப்பொருட்கள் கூடி இயங்கிப் பிரபஞ்சமாக மாறுவதற்கான உந்து விசையாக மட்டுமே அது உள்ளது..
அடுத்து வருவது..
வேதாந்தமும் வைசேஷிகமும்..