முடிவின்மையின் தொடர்பு : கார்ல் சகன், ‘தொடர்பு’

முடிவின்மையின் தொடர்பு

[ஜெயமொகன்.இன் இல் இருந்து தொகுத்தது]

[கார்ல் சகன்]

‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ அவள் ஆளாகவில்லை. அவளது தேடல் அவளை வானவியல் ஆய்வாளராக ஆக்கியது.

அமெரிக்காவில் உள்ள ப்ரொஜெக்ட் அர்கஸ் வானவியல் ஆய்வு நிறுவனத்தில் எல்லி ஆய்வாளராக ஆகிறாள். பிரமாண்டமான தொலைஆடிகள் மூலம் வானத்தை இடைவிடாது கவனித்துக் கொண்டிருக்கிறது ப்ரொஜெக்ட் அர்கஸ் ஆய்வு நிலையம். வானத்தை நோக்கி பலவிதமான நுண்கதிர்கள் மூலம் செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. அச்செய்தி மன எல்லைக்கெட்டா தொலைவுவரை, காலமுடிவுவரை, சென்றபடியே இருக்கும். அங்கே நம்மால் அறியமுடியாத பெருவெளியில் வாழும் நம்மைவிட மேலான உயிர்கள் அத்தகைய செய்திக்காக அங்கிருந்து வானத்தை துழாவிக் கொண்டிருக்கக்கூடும், அல்லது அவர்களுடைய செய்தி வலையில் அச்செய்தி தற்செயலாகக் சென்று விழக்கூடும் என்பது எதிர்பார்ப்பு.

அது மிக எளிய செய்தி, சீரான அதிர்வொழுங்கு மட்டும்தான் அது. அது எவராலோ செயற்கையாக உண்டுபண்ணப்பட்டது என அதைப் பெறுபவர்கள் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டது. அவை அவர்கள் பெற்று திருப்பி தொடர்பு கொள்வார்கள் என்று நம்பப்பட்டது. எங்கோ இருக்கும் எவருக்காகவோ அந்தச்செய்தி சென்றுகொண்டே இருந்தது. ஒவ்வொரு கணமும்.

ஆனால் பல வருடங்களாகியும் அதற்குப் பதில் வரவில்லை. ஒருவேளை அங்கு யாருமே இல்லாமல் இருக்கலாம். பிரபஞ்சத்தில் நாம் உண்மையிலேயே தன்னந்தனியர்களாக இருக்கலாம். பருப்பொருளில் நிகழ்ந்த ஒரு தற்செயலால் உருவான மீண்டும் நிகழவே நிகழாதுபோன, அபூர்வமான ஒன்றுதான் பூமியில் உள்ள உயிர் என்பது உண்மையாக இருக்கலாம் அல்லது நமக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே உடைக்க முடியாத ஒரு இடைவெளி இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மற்ற மாபெரும் சிருஷ்டிகள் நம்மை இம்மியும் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

மெல்ல ஆரம்பகால ஆர்வங்கள் இல்லாமலாகி, மற்றவர்களுக்கு வானத்துக்குச் செய்தி அனுப்புவது ஒரு வெற்றுச் சடங்காக மாறிவிட்டது. அதை அனேகமாக எவருமே கவனிப்பதில்லை. வீணாகிப்போன ஒரு பிரார்த்தனை மாதிரி அந்த செய்தி வானில் மறைந்துகொண்டே இருந்தது. ஆனால் எல்லி அரோவேயைப் பொறுத்தவரை அப்படியல்ல. அவளுக்கு நம்பிக்கை இருந்தது, வானம் என்றாவது பதில் சொல்லும் என. இல்லையேல் அந்த ஆதாரமான கற்பனையே மனித மனத்தில் வந்திருக்காதே.

வானம் பதில் அனுப்பியது. ஒருநாள் இரவில் அதிர்வைப் பெறும் கருவிகள் அதிர்ந்தன. கதிர்ப் பதிவிகளை வந்தடைந்தது சீரான மறுக்க முடியாத ஓர் அதிர்வு. செய்தி கிடைத்த தகவல் உலகமெங்கும் பரவியது. உலகில் அது பலவிதமான பதற்றமான விவாதங்களைக் கிளப்பியது. பிரபஞ்சமே சட்டென்று இன்னொன்றாக மாறிவிட்டது. வானத்தின் பொருள் சட்டென்று பலமடங்கு அழுத்தம் கொண்டு விட்டது. பிரபஞ்சத்தில் நாம் தனியல்ல என்னும்போது இயற்கை, மனிதமனம், வரலாறு எல்லாமே புதிய ஒளியில் தெரிய ஆரம்பித்தன

அரசியல் சமூகவியல், ஆன்மீக தளங்களில் சிக்கலான கேள்விகள் எழுந்தன. அறியாத சக்திகளுக்கு அப்படி பூமியை அடையாளம் காட்ட அமெரிக்க அரசுக்கு உரிமை உண்டா? பூமியில் மனிதனை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறைகளில் அச்செய்தி மூலம் உருவாகும் மாறுதல்கள் எப்படிப்பட்டவை. பூமி இனிமேல் பிரபஞ்சத்தின் வேறு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்குமென்றால் இங்குள்ள மதங்களுக்கு என்ன பொருள்? கடைசியாக, தொடர்பு கொள்வது கடவுளா, சாத்தானா?

இந்நாவல் சாரம் நுட்பமான கவித்துவத்துடன் வெளிவரும் பகுதி இதன் துவக்கத்திலேயே வருகிறது. எல்லி அரேவே தன் காரில் அடர்ந்த காட்டுவழியாகச் செல்லும்போது ஒரு முயல் கூட்டம் எதிர்ப்படுகிறது. ஒளிரும் கண்களுடன் துடிதுடிக்கும் வால்களுடன் அந்தக் கூட்டம் அப்படியே பிரமித்து நிற்கிறது. அவை அதற்கு முன்பு காரையோ அத்தனை பெரிய ஒளியையோ கண்டிருக்க வாய்ப்பில்லை. அது அவ்வுயிரினங்களுக்கு ஒரு மாபெரும் ஆன்மீக அனுபவமாக இருக்கலாம் என எல்லி எண்ணிக் கொள்கிறாள்.

மனிதன் என்ற சின்னஞ்சிறு உயிரினம் இந்தப் பிரபஞ்ச வெளியில் அதைவிட பிரமாண்டமான சக்திகளால் எதிர்கொள்ளப்படுவதும் இதேபோன்ற ஓர் அனுபவம்தான். மனிதன் தனக்குத் தெரியாத விஷயங்கள் மீதான பெருவியப்பை கற்பனையால் மனதை விரித்து அள்ள முயலும்போது அவனுக்கு வேறு ஒரு பிரபஞ்சம் உருவாகிறது. ஆன்மீகம் என்பது அதுதானா?

செய்தி தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அறிவியல் நிபுணர்களின் குழு அந்தச் செய்தியை பிரித்தறிய முயன்றது. பலநாள் ஆய்வுக்குப் பிறகு அந்த சமிக்ஞைகளைப் புரிந்துகொண்டு பதில் அனுப்பினார்கள். அதன்பிறகு செய்தி விரிவடைய ஆரம்பித்தது. அது பிரமாண்டமான ஒரு இயந்திரத்தின் வரைபடம். அந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டல்கள் அதைத் தொடர்ந்து வந்தன. பூமிக்கு வெகுவாக விலகி நமது பால்வழிக்கு வெளியிலுள்ள வேகா (Vega) என்ற நட்சத்திரத்தில் இருந்து அந்த சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன என்று தெரியவந்தது.

அது ஒரு பொறியா? அல்லது வரமா? அதை அனுப்புகிறவர்கள் யார், அவர்கள் நோக்கம் என்ன என்ற சந்தேகங்களால் பூமி அதிர்கிறது. அத்தனை தூரத்தில் இருந்து அதைப்பெற்று நமக்குப் பதில் அனுப்புபவர்கள் நம்மைவிட பலமடங்கு மேலானவர்கள். ஒருவேளை அவர்கள்தான் கடவுள். அதையொட்டி மிக விரிவான தத்துவப் பிரச்சினைகள் முளைக்கின்றன. மதங்களின்அடிப்படைகள் உலுக்கப்படுகின்றன.

பல்வேறு மதங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அறிவின்மூலம் இந்த நிகழ்ச்சியைப் புரிந்து வகுத்துக் கொள்ள முயல்வதன் விரிவான சித்திரத்தை அளிக்கிறது நாவல். அன்பு, பாசம் என்ற எளிய எல்லைகளிலிருந்து விரிய முடியாமல்  சிறிய பிரபஞ்ச தரிசனத்துடன் கிறித்துவம் தடுமாறுகிறது. ஆனால் பாமர் ஜோஸ் எனும் ஒரேயொரு கிறித்துவ மத போதகர் மட்டும் தன் சுயமான ஆன்மீக வல்லமையால் அந்தச் சவாலைத் தாண்டிச் சென்று தன் பிரபஞ்ச தரிசனத்தின் அடிப்படையாக கிறித்துவம் கொண்டுள்ள பிரபஞ்சம் தழுவிய பேரன்பை அறிந்து கொள்கிறார். பௌத்தமும் இந்துமரபும் தன் முரணியக்க தத்துவக்கோட்பாடுகளினாலும், எல்லைகள் இல்லாமல் விரிவடையச் சாத்தியமானதுமான தரிசன அடிப்படையாலும் இச்சவாலை சந்திக்கின்றன.

இயந்திரம் எல்லாத் தடைகளையும் மீறிக் கட்டி எழுப்பப்படுகிறது. அது மிகப் பெரிய மிக விசித்திரமான இயந்திரம்தான். ஆனால் அது பல்லாயிரம் ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ள வேகாவுக்கு எப்படி இட்டுச் செல்ல முடியும் என யாருக்கும் புரியவில்லை.  அதற்குத்தேவையான எரிபொருள் என்ன? அங்கு சென்று சேரும் மிகமிக நீண்ட கால அளவுவரை யார் உயிர்வாழ முடியும்? ஆனால் வேறு வழியில்லை. அந்தச் சோதனைக்கு மனிதன் ஆட்பட்டே ஆகவேண்டும். ஒருபோதும் தவறவிடக்குடுஆத ஒரு வாய்ப்பு அது.

குறிப்பிட்ட நாளில் இயந்திரத்திற்குள் புகுந்து மூடிக் கொள்கிறார்கள். வெளியே நிற்பவர்களுக்குத் தெரிவது இயந்திரம் இயங்குவதும் அதிர்வதும் மட்டும்தான். உள்ளே இருப்பவர்கள் ஒரு நிலைகுலைவை உணர்கிறார்கள். மயக்கம்போல இருக்கிறது. இயந்திரத்தின் உள்ளே இருந்த வாகனம் வான்வெளியைத் தாண்டி பிரபஞ்சத்தின் மறுபகுதிக்குச் சென்றுவிட்டது. சற்றும் காலமே தேவைப்படாமல்.

அந்தப் பயணம் குறித்து நாவல் இவ்வாறு விளக்குகிறது. பிரபஞ்சம் ஒரு ஆப்பிள் என்றால் அதில் புழுத்துளைகள்போல சில காலக் கொப்புளங்கள் இருக்கின்றன. அவை பிரபஞ்சத்தில் காலத்திலும் இடத்திலும் உள்ள ஒருவகை சுரங்கப்பாதைகள். அவற்றின் வழியாக காலமே இல்லாமல் பிரபஞ்சத்தின் மறுபக்கத்துக்குச் சென்றுவிடமுடியும். எல்லியும் மற்ற ஆய்வாளர் குழுவும் அவ்வாறுதான் செல்கிறார்கள், பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இன்னும் கிரகங்களாக உருமாறாத விண்கற்களாலான ஒரு புதிய நட்சத்திரக் கூட்டத்திற்கு. அங்கே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த பிரபஞ்ச உயிர்கள் விட்டுச்சென்ற காலியான கிரகங்களைக் காணமுடிகிறது. அவர்கள் மேலும் வளர்ச்சியடைந்து அடுத்த கட்ட வாழ்க்கைக்குச் சென்றுவிட்டிருக்கிறார்கள்.

புதிய பிரபஞ்சத்தின் வியப்பூட்டும் பிரமாண்டமான காட்சிகளுக்குப் பிறகு அவர்களை அங்கு அழைத்த அந்த சக்திகளை அவர்கள் சந்திக்கிறார்கள். எல்லி சென்றிறங்குவது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிலப்பரப்பில். அது அவள் சிறுமியாகத் தன் தந்தையுடன் கோடையில் நீந்தி விளையாடிய அழகிய ஒளிமிக்க கடற்கரை. அது கனவா பிரமையா என அவளால் நிதானிக்க முடியவில்லை. அங்கே அவள் தந்தை அவரது கனிவான பாசம் பொங்கும் சிரிப்புடன் அவளை சந்திக்கிறார். அவளுடன் உரையாடுகிறார். பிறகு அவளுக்குத் தெளிவாகிறது. அந்த நிலம் அவளுடைய அந்தரங்கத்திலிருந்து அவர்களால் அறிந்து கொள்ளப்பட்டு அவளுக்கென உருவாக்கப்பட்டது. அவளை வந்து சந்திப்பது சுயமான உடல்வடிவம் இல்லாத, விரும்பிய உடலை எடுக்கும் வல்லமை கொண்ட, புற யதார்த்ததை விரும்பியபடி உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட மனம் மட்டுமேயான அந்த பிரபஞ்ச மனிதர்களில் ஒருவர்தான்!

அவருடனான உரையாடலில் எல்லிக்குக் கிடைக்கும் பிரபஞ்சச் சித்திரம் அவளை கற்பனையின் அதிகபட்ச எல்லைக்கு அப்பால் தூக்கி வீசுகிறது. அந்த இடம் பூமி இருக்கும் நட்சத்திர மண்டலத்திற்குரிய பால்வழிக்கு வெகுதூரத்தில், 600 மில்லியன் ஒளி வருடங்களுக்கு அப்பால் சிக்னஸ்ஏ (Cygntus A) என்ற, சூரியனைவிட பல லட்சம் மடங்கு சக்தியை உருவாக்கும் நட்சத்திரத்தின் அருகே இருப்பது. கருந்துளைக்குள் பருப்பொருளைக் கொட்டி அவற்றை சிக்னஸ் ஏ எனப்படும் நட்சத்திரமாக ‘கட்டிக்’ கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அவர்கள் பிரபஞ்சத்தின் பொறியாளர்கள், கட்டுமான நிபுணர்கள். அது ஒரு நட்சத்திர மண்டலவாசிகளின் கூட்டு முயற்சி என்கிறார் அவர்.

‘கேலக்ஸிகளுக்கிடையே கூட்டுத் திட்டமா?’ அவள் கேட்டாள். ‘எத்தனையோ கேலக்ஸிகள். ஒவ்வொரு கேலக்ஸியிலும் பல லட்சம் நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றுக்கு பொதுவான மையத்தலைமை அமைப்புகள் உள்ளனவா? அந்த மையத் தலைமைகள் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றனவா? பல லட்சம் சூரியன்களைப் பெய்து இந்த சென்டாரஸை. . . இல்லை-சிக்னஸ் ஏ ஐ உருவாக்குவதற்காகவா? மன்னிக்கவேண்டும். . . இந்த பிரமாண்டமான அளவுகளால் நான் பதறிப்போய்விட்டேன். எதற்காக இதைச் செய்கிறீர்கள்? ஏன்?’

‘பிரபஞ்சம் பண்படுத்தப்படாத ஒன்றென்று நீ எண்ணக் கூடாது. குறைந்தபட்சம் பலகோடி வருடங்களாக அது அப்படி இல்லை. அதை இப்படி யோசித்துப்பார்-இது விளைவிக்கப்பட்டு உருவான ஒன்றுதான்.’

பிரபஞ்சத்தின் விரிவுக்கேற்ப பருப்பொருள் போதுமானதாக இல்லை என்பதால் அதை சிருஷ்டித்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் அந்த மாபெரும் பிரபஞ்ச ஆளுமைகள். யார் அவர்கள்? பால்வழியில் உள்ள எண்ணற்ற உலகங்களில் இருந்து வளர்ந்து வந்தவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் வரும்போதே பிரபஞ்சம் கட்டப்பட்டிருந்தது. பிரபஞ்ச ஊடுபாதைகளுக்கான காலச் சுரங்கங்கள், தங்குமிடங்கள் எல்லாம் சிறிய பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு பயன்படுத்தப்படத்தக்க விதத்தில் கட்டி உபயோகிக்கப்பட்ட பின்பு கைவிடப்பட்டிருந்தன. அவற்றைக் கட்டியவர்கள் மேலும் வளர்ச்சி பெற்று மேலும் தாண்டிச் சென்று விட்டிருந்தார்கள். ”இல்லை. நாங்கள் வெறும் பொறுப்பாளர்கள் மட்டுமே’ அவர் சொன்னார். ‘ஒருவேளை அவர்கள் திரும்பி வரக்கூடும்’

அவர்களிடமிருந்து அவள் பிரபஞ்சத்தின் அமைப்பில் எங்குமே மாறாமலிருக்கும் எண்ணான பையின் ரகசியத்தை அறிகிறாள். அதன் வழியாக கணித மொழியில் பிரபஞ்சம் நம்முடன் உரையாடுகிறது என்று அவளுக்குத் தெளிவாகிறது.  அந்த பயணம் முடிந்து அவர்கள் திரும்பி வருகிறார்கள். ஆனால் பூமியில் அவர்களை வழியனுப்பியவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். காரணம் அவர்கள் சிலமணி நேரத்திலேயே திரும்பிவிட்டார்கள். அந்த இயந்திரமோ அங்கிருந்து கிளம்பவேயில்லை. அவர்கள் சொன்ன எதையும் எவருமே நம்பவில்லை. நம்ப வாய்ப்பும் இல்லை என அவள் அறிகிறாள்.

ஆனால் வாழ்க்கையின் சாரமான ஒன்றை அவள் கண்டடைந்தாள். இந்த எல்லையற்ற பிரபஞ்சப் பெருவெளியில் மனிதனின் இடமென்ன, அவனுடைய கடமை என்ன என்று.

வாழ்நாள் முழுக்க அவள் பிரபஞ்சத்தை ஆராய்ந்தாள். ஆனால் அதன் தெள்ளத் தெளிவான செய்தியை அவள் கவனிக்கத் தவறிவிட்டிருந்தாள். சின்னஞ்சிறு உயிர்களான நம்மைப் பொறுத்தவரை இப்பிரமாண்டம் ஒரே ஒரு வகையில் மட்டுமே தாங்கிக் கொள்ளக்கூடியது. அன்பின்மூலம்.

”. . .அது ஏற்கனவே இங்கிருக்கிறது. அது அனைத்திலும் உள்ளடங்கியுள்ளது. அதைக் காண நாம் இந்த பூமியை விட்டு வெளியே போகவேண்டுமென்ற அவசியமில்லை. பெருவெளியின் பின்னால். பருப்பொருளின் இயல்பினுள், மாபெரும் கலைப்படைப்பின் மூலையில் இருப்பதைப் போல மிகச் சிறியதாக பொறிக்கப்பட்ட கலைஞனின் கையெழுத்து உள்ளது. மனிதர்களுக்கும் கடவுள்களுக்கும் அதீதமாக, பிரபஞ்சத்தைவிட  காலத்தால் முந்தைய ஓர் ஞானம் உள்ளது.

வட்டம் முடிவுற்றது.

அவள் தான் தேடியதைக் கண்டடைந்தாள்.”

என்று முடிகிறது கார்ல் சமனின் புக்ழ்பெற்ற நாவலான தொடர்பு

*

வானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட அனைத்தையும், வாழ்க்கைக்கு அதீதமான அனைத்தையும் வானத்துடன் தொடர்புபடுத்தி வந்திருக்கிறான் மனிதன். ஐம்பெரும் பூதங்களும் வானத்தில் அடக்கம் என்று வகுத்தது புராதன இந்திய உருவக மரபு. கடவுளர்கள் அனைவருமே வானில்தான் வாழ்கிறார்கள், அனைத்து மதங்களிலும்.

வானவியல் மனிதனுக்கு வானைப்பற்றி இருந்த பிரமிப்பை மேலும் மேலும் வளர்க்கவே செய்தது. கோளங்களும் விண்மீன் கூட்டங்களும், கற்பனைகூடச் சென்று தொட்டுவிட முடியாத எல்லைவரை விரிந்து சென்றபடியே இருக்கும் அண்டவெளி பற்றிய ஒரு சித்திரத்தை மெல்ல மெல்ல வானவியல் சாதாரண மனிதனின் மனத்திலும் எழுப்புகிறது. அவனது வாழ்க்கை பற்றிய உருவகங்களில் எல்லாம் அது இடம் பெற்று தீர்மானிக்கும் சக்தியாக ஆயிற்று. இந்த ஐம்பது வருடத்தில் எழுதப்பட்ட கவிதைகளை மட்டும் எடுத்து பார்த்தால் இதை வியப்புடன் காணலாம். இருத்தலுடன் இணைந்த பெருவெளியின் சித்திரமும் நவீனக் கவிஞன் மனதில் எப்போதும் எழுகிறது.

வானவெளியில் பூமியின் தனிமை மனிதனை எப்போதுமே வாட்டியிருந்தது போலும். முப்பத்து முக்கோடி தேவர்கள் சேர்ந்தாலும் அந்தத் தனிமையுணர்வைத் தீர்க்க முடிந்திருக்காது. வானவியல் ஐதீகக் கற்பனைகளை உடைத்தபோது வானம் காலியாகவில்லை, அங்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்தார்கள். வேறு கிரகங்களில் இருந்து மனிதனை கண்காணிக்கக்கூடிய, பேணிக்காக்கக்கூடிய சக பிரபஞ்சவாசிகள் கற்பனை செய்யப்பட்டனர். கூடவே படையெடுத்துவந்து அழிக்கும், நோயையும் தீமையையும் பரப்பும் வேற்று உயிரினங்களும் கற்பனையில் பிறந்து வந்தன. ஆம், மீண்டும் தேவர்களும் அசுரர்களும் நிரம்பியதாக ஆயிற்று வானம்.

கடந்த ஐம்பது வருடங்களாகவே பிரபலப் புனைவுகளில் பறக்கும் தட்டுகளும், வேற்று உயிரினங்களும்தான் அதிக இடத்தைப் பிடித்து வருகின்றன. வெலிகோவ்ஸ்கி போன்ற அறிஞர்கள் மனிதனின் கலாச்சாரமே வேற்றுகிரக வாசிகளின் தலையீடு மூலம் உருவானது என்ற கொள்கையைக்கூட முன்வைத்துள்ளார்கள். தன் தேடலின் பல்வேறு மன இயக்கங்களை அறிவியல் பூர்வமாகத் தொகுத்துத் தந்துள்ளார். ‘இங்குள்ளதை விட அது மாறுபட்டது’ என்ற அடிப்படையே பெரும்பாலும் வேற்றுகிரகம் குறித்த உருவகங்களுக்கு ஆதாரமானதாக இருந்து வந்துள்ளது. பலவகையான ஆழ்மன ஆசைகள், பலவிதமான அச்சங்கள் இது குறித்த கற்பனைகளில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. உதாரணமாக நம் பிரச்சினைகளைத் தீர்க்க வெளியே இருந்து ஒரு மீட்புசக்தி வரும், நாம் பேணப்படும் இனம் என்ற விருப்பக் கற்பனை; அதேபோல நமது தவறுகளுக்காக நாம் தண்டிக்கப்படவேண்டும் என்ற எதிர்மறை விருப்பம் போன்றவை.

கார்ல் சகனின் ‘தொடர்பு’ அனைத்துவகையிலும் ஓர்அறிவியல் புனைவு. அறிவியல் புனைவு என்பதை நாம் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பொதுவான கதையில் அறிவியல்கூறுகள் சில சேர்க்கப்பட்டால் அது ஒருபோதும் அறிவியல் கதை அல்ல. ஒரு சாகசக் கதையில் சிறிதளவுக்கு சரித்திரம் சேர்க்கப்பட்டால் அது சரித்திரக் கதையல்ல என்று சொல்வதற்கு சமானமான கூற்றுத்தான் இதுவும். அக்கதையின் மையக்கரு அறவியல் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது ஓர்அறிவியல் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக அமைவது அறிவியல் ஊகங்கள் (Hypothesis). அப்படி ஒரு அசலான அறிவியல் ஊகமானது நிரூபணத் தர்க்கத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக புனைவாக்கம் நோக்கி வந்தால் மட்டுமே அது அறிவியல் புனைவாகும் (வரலாறு குறித்த ஒரு அசலான கொள்கை புனைவாக்கம் பெற்றால் மட்டுமே அது வரலாற்றுப் புனைவு).

பிரபஞ்சத்தின் வயதை வைத்துப் பார்க்கும்போது மனிதஇனம் மிக குழந்தை நிலையில் இருக்கும் ஒரு சிருஷ்டி என்றும் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற சிருஷ்டிகள் மனிதனை இன்று கட்டுப்படுத்தும் பல எல்லைகளைத் தாண்டிவிட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கிறது தொடர்பு நாவல். தூரம், காலம், மரணம், உடல் என்ற பரு வடிவம் மற்றும் அதன் தேவைகள், தனிமனமாகவே செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை அவை தாண்டி யிருக்கலாம் என்ற ஊகத்திலிருந்து தொடங்குகிறது நாவலின் தரிசனம்.

*

கார்ல் சகன் என்ற பெயர் எந்த அளவுக்கு உலக அளவில் புகழ்பெற்றதோ அதற்கு நேர் எதிரான அளவுக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் இல்லாதது. (தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது முதல் கட்டுரை 2000த்தில் சொல்புதிது இதழில் வந்ததுதான்) அறிவியல் கண்ணோட்டம் என்று கூறப்படும் புறவயமான அறிதல் முறையை ஊடகங்களின் மூலம் பரப்புவதில் பெரும் பங்கு வகித்தவர் கார்ல் சகன் (Carl Edward Sagan).

வானவியல் பேராசிரியராக கார்னெல் பல்கலையில் பணியாற்றிய சகன் பிரபஞ்ச ஆய்வுக் கலங்களாகிய மரைனர், வைகிங், வாயேஜா ஆகியவற்றின் ஆக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இதற்காக சிறந்த அறிவியல் சேவைக்கான நாசா விருதுகளை இருமுறை பெற்றவர். மரபணுவியல் துறையிலும் ஆர்வம் கொண்ட சகன் நோபல் பரிசு பெற்ற உயிரியலாளரான ஹெச்.ஜெ.முல்லரிடம் ஆய்வுத் துணைவராகப் பணியாற்றியவர். அமெரிக்க விண்ணியல் ஆய்வுக்கழகத்தின் மசூர்ஸ்கி விருது பெற்றார்.

அவரது தொலைக்காட்சித் தொடர்கள் புகழ்பெற்றவை. ஏதனின் டிராகன்கள் (Dragons of Eden) புரோக்காவின் மூளை (Broca’s Brain) பெருவெளி (Cosmos) போன்ற அவரது அறிவியல் விளக்க நூல்கள் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டவை. அவரது முதல் நாவலான தொடர்பு  (Contact) இலக்கிய வாசகர்களாலும், விமரிசகர்களாலும், அங்கீகரிக்கப்பட்டதுடன் பெரு வாசக வரவேற்பையும் அடைந்தது. திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.

கார்ல் சகனின் இந்த நாவலின் முக்கியமான சிறப்பம்சம் என்ன என்பது இக்கதைச் சுருக்கத்தின் மூலமே புரிந்து கொள்ள முடியும். இது ஏதேனும் அறிவியல் விந்தையோ, அறிவியலின் எதிர்கால சாத்தியங்களையோ சித்தரிக்கும் நாவல் அல்ல. எல்லாப் பேரியலக்கியங்களுக்கும் அடிப்படையாக உள்ள ஆதாரமான மானுடத் தேடலையே இதுவும் தன் கருவாகக் கொண்டுள்ளது. அந்தத் தேடலை அது மனித வாழ்க்கையின் பின்னல்களின் வழியாகத் தேடவில்லை. மாறாக அறிவியல் கொள்கைகள் மூலம் தேடுகிறது அவ்வளவுதான்.

கலைரீதியாக இந்நாவலின் வலிமை இது கலைப்படைப்புக்கு எப்போதுமே முதல் அடிப்படையாக இருக்க வேண்டிய புதுமையை தன்னகத்தே கொண்டுள்ளது. என்பதுதான் அறிவியல் ஆய்வுகளில் உள்ள விந்தை அம்சத்தை வாசக அனுபவமாக மாற்ற கார்ல் சகனால் முடிந்துள்ளது. ஆகவே நட்சத்திரங்கள் மண்டிய வானை நிமிர்ந்து பார்த்து நாம் அடையும் ஆழமான மனநகர்வை, கனவை இந்நாவலும் அளிக்கிறது. மனித சிந்தனையின் பல்வேறு அலைகளை விரிவாக அதேசமயம் அலுப்பில்லாதபடி விவாதித்திருப்பது நாவலுக்கு ஆழமான தத்துவார்த்த கனத்தை அளிக்கிறது.

அதேசமயம் ஆங்கில பரபரப்பு நாவல்களின் அழுத்தமான சாயல் இந்நாவலின் முக்கியமான கலைக்குறைபாடு என்று எனக்குப்படுகிறது. ஆங்கில பரபரப்பு நாவல்களில் செயற்கையான உச்சநிலைகள் உருவாக்கப்படுவதற்கு ஒரு முறைமை உள்ளது. அதற்கு ஏற்ப முரண்படும் கதாபாத்திரங்கள், மோதல் சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுவதை இந்நாவலில் காணலாம். வேகாவிலிருந்து செய்தி வருவதை நம்பாமல், பிடிவாதமாக மறுக்கும் ஆர்கஸ் நிலையத் தலைவர் போன்ற கதாபாத்திரத்தை நாம் மேற்கத்தியப் புனைவுகளில் சாதாரணமாக நிறையவே கண்டிருப்போம். செய்திவரும் விதம் பரபரப்பு நாவல்களுக்குரிய விதத்தில் இருப்பதால் பிறகு சிந்தனை உலகத்தின் எதிர்வினைகள் விரிவாகப் பேசப்படும்போது பரபரப்பு கீழேவந்து சற்று அலுப்பேற்படுகிறது.

இந்நாவலை எளிதாக எதுவும் குறையாமல் சுருக்கியிருக்க முடியுமென பல இடங்கள் சொல்கின்றன. நல்ல கதை சொல்லி எல்லியின் இளமைப்பருவத்தை இந்த அளவுக்கு நீட்டாமல் கவித்துவப் படிமங்களும் நினைவோட்டங்களுமாக மேலும் அழகாகச் சொல்லமுடியும். விவாதங்களில் கிறித்தவ மரபுடனான விவாதம் நாவலுக்கு வெளியே போகுமளவுக்கு நீண்டுவிட்டது.

நாவலில் உச்சமான பிரபஞ்ச சிருஷ்டிகளுடனான சந்திப்பு, அற்புதமான கவித்துவத்துடன் உள்ளது. அதை அறிவியலில் தேடாமல் மனித மன ஆழத்தில் தேடியிருப்பதனாலேயே சகன் முக்கியமான படைப்பாளியாக ஆகிறார். பிரபஞ்ச விரிவு குறித்த மனிதனின் கனவில் அவனது சுயத்துக்கு அதில் என்ன இடம் என்ற ஆழமான ஏக்கம் எப்போதுமே கலந்துள்ளது. தொடர்பு நாவல் பெருவெளியின் பிரமாண்ட சித்திரத்தை அளித்து விட்டு மனித மனம் அங்கும் ஒரு சுயத்தை உருவாக்கிக் கொள்ளமுடியும் என்கிறது. பிரபஞ்ச சிருஷ்டிகளான அந்த மாபெரும் ஆளுமைகளுக்குக் கூட மனிதமனத்தின் கனவில் ஆர்வமூட்டக்கூடியதான, புதிதான பலவிஷயங்கள் இருக்கின்றன என்று நாவலில் வரும் இடம் உண்மையிலேயே அறிவியலாளன் கலைஞனாக மாறும் மகத்தான பரிணாமப் புள்ளிதான்.

ஆனால் கிறித்தவத்தின் மனிதாபிமான தத்துவ எல்லைக்கு மேல் நகர கார்ல் சகனால் முடியவில்லை என்பது உண்மையில் புரிந்துகொள்ளச் சிரமமான ஒன்று. நாவல் எல்லியில் குவிந்து அவள் கண்டடைந்த இறுதி தரிசனத்தை அடைந்து முழுமை பெறுகிறது. அது கிறிஸ்துவின் மனிதநேயம் மட்டும்தான் – தொடும்போது அது அதுவரை நாவல் உருவாக்கிய அனைத்து மன விரிவுகளையும் எதிர்த் திசைக்கு திருப்பிவிட்டு ஒற்றைப்புள்ளியில் குவிப்பதாக மாறிவிடுகிறது. அதாவது அந்த மாபெரும் பயணமே தேவை இல்லை என்பதுபோல அது அர்த்தப்படுகிறது. அறிவுக்கு எதிரானதாக அன்பை வைத்துப் பேசிய கிறித்தவ மரபின் குரலையே அங்கு நாம் கார்ல் சகனில் காண்கிறோம். இந்நாவலின் மிகப்பெரிய பலவீனம் இந்த திரும்பிச் செல்லல்தான்.

ஆனால் ஏன் நாம் பிரபஞ்ச பிரமாண்டத்தை அதன் உக்கிரத்துடன் உள்வாங்க முடியாது? ஏன் நாம் நமது ‘எளிய’ அன்புக்குத் திரும்பவேண்டும்? எளிய அன்பை சின்னஞ்சிறு உலகியல் விஷயமாக ஆக்கி நம்மை மேலெழச் செய்து பிரபஞம் எந்த முழுமையின் சமநிலையில் அமைந்திருக்கிறதோ அந்த பிரம்மாண்டத்துடன் நமது ஆளுமையை அமைத்துக்கொள்ளக்கூடாது? நமது சித்தர்கள் அமர்ந்திருந்த பீடம் அல்லவா அது?

கீழை மரபுகளில் அறிதல் உள்ள ஒருவர் இங்குள்ள தத்துவ தரிசனங்களில் கார்ல் சகன் அடைந்த அந்த உச்சத்திலிருந்தே இருந்தே மேலே செல்லும் பயணம் சகஜமாக இருப்பதை உணர்ந்திருப்பார். அறிதலின் உச்சம் முரண்பாடுகளற்ற முழுமையை, அதன் விளைவான கனிவை சாத்தியமாக்குமென்றும் அதுவே புத்த நிலை (நிப்பானம்) என்றும் பௌத்த தரிசனங்கள் ஆழ்ந்த கவித்துவத்துடன் பேசுகின்றன.

கார்ல் சகன் திரும்பியது ஏன்? அறிவுக்கு அப்பால் என்ன என்ற பயம் ஏன் அவரை அறிவுக்கு இப்பால் உள்ள உணர்வுகளை நோக்கி இட்டு வந்தது? ஒரு கீழைநாட்டு வாசகனுக்கு ‘தொடர்பு’ எழுப்பும் முக்கியமான வினா இதுதான்.

(CONTACT -Novel by Carl Sagan.]

[சொல்புதிதில் வெளிவந்த கட்டுரை]

தாராசுரம் கோயிலில் கார்ல் சாகன்

கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

அபத்தம் அறியும் நுண்கலை – 1 ( திண்ணை தளம்) : தமிழாக்கம் : புதுவை ஞானம் கார்ல் சாகன் 

கார்ல் சாகன் இந்து மதம் பற்றி

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s