குருகுலமும் கல்வியும் – 1
ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது
[கவிஞர் தேவதேவன் கவியரங்கு. திப்பரப்பு. குமரி மாவட்டம்]
ஒன்று
உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெயவ்ங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். நாமறிந்த பெரும்பாலான ஜென் கதைகள் குருசீட உறவு குறித்தவை.
இன்றைய பள்ளி என்ற அமைப்பின் ஆரம்பநிலைகளை புராதன வேதபாடசாலைகளில் காண்பது பொது வழக்கம். ஆனால் தொல்தமிழ் நாகரீகத்தின் முதல் தெய்வமே குருதான் — தட்சிணாமூர்த்தி என்னும் தென்றிசைமுதல்வன். மரத்தடியில் அமர்ந்து கல்வியளிக்கும் ஆசிரியனே ஆலமர்ச்செல்வனாக இறைவனானான்.
குருகுலம், பாடசாலை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. அப்பெயர்களே குறிப்பதுபோல ஒன்று குலம், அதாவது வீடு. இன்னொன்று சாலை அல்லது பொதுஇடம். ஒரு குருவுடன் சேர்ந்து வாழ்ந்து மெல்லமெல்ல அவர் அடைந்த மெய்ஞானத்தை அவரது ஆளுமையுடன் சேர்த்து பெற்றுகொள்வதே குருகுலக்கல்வி.
பாடசாலையில் கூட்டமாக சேர்ந்து ஏதேனும் ஒருவிஷயத்தை ஒரேதரமான முறையில் பாடம்செய்கிறோம். கல்வி, பாடம் செய்தல் இரண்டும் வேறுவேறு. வேதபாடசாலைகளில் சிந்திப்பதற்கோ ஆராய்வதற்கோ இடமில்லை.வேதங்களை கற்பதில் தனிமனித சிந்தனைக்கோ தனிமனித கற்பனைக்கோ இடமில்லை. வேதங்களின் உச்சரிப்பு சைகைகள் அமர்தல் சேர்த்துச் செய்யும் சடங்குகள் எல்லாமே முற்றாக வகுக்கப்பட்டவை. மாற்றமுடியாதவை. அனைவருக்கும் அவை ஒன்றுதான். பிற்காலத்தில் பௌத்த விகாரங்களில் மூலநூல்கள் சார்ந்து இப்படிப்பட்ட அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வியை மக்களிடம் பரவலாக்கிய சமணமுனிவர்கள் இன்றைய பள்ளிகூடங்கள் போன்ற அமைப்பை உருவாக்கினர். சமணப்பள்ளி என்ற சொல்லில் இருந்தே நமது பள்ளிகூடம் என்ற சொல் வந்திருக்கிறது.
இன்றைய பள்ளியின் சிறப்பம்சம் அது தரப்படுத்தப்பட்ட சீரான கல்வியை அனைவருக்கும் அளிக்கிறது என்பதே. ஒரு சமூகத்தை முழுக்க ஒரேவிதமான கல்வியை அளித்து தரப்படுத்துவதற்கு இதுவே சிறந்தவழி என்பதை மறுக்க முடியாது. இன்றைய கல்வியின் முதல்நோக்கம் சமூக உருவாக்கமே. சீரான மதிப்பிடுகளும் சமூகப் பழக்கவழக்கங்களும் அடிப்படை நம்பிக்கைகளும் கொண்ட சமூகமொன்றை பயிற்றுவித்து எடுப்பதே இன்று கல்வி மூலம் இலக்காக்கப் படுகிறது. கல்வி என்பது ஒரு சமூகத்திற்கு ஒட்டுமொத்தமாக அளிக்கப்படும் பயிற்சி என்று பொருள்கொள்ளப்பட்டால் இன்றைய கல்விமுறையே அதற்கு பெரிதும் உகந்தது என்பதில் ஐயமில்லை.
இன்றைய கல்விமுறை ஜனநாயகத்தன்மை கொண்டது, ஆகவே தரப்படுத்தப்பட்ட கல்வியையும் ஜனநாயகத்தையும் பிரிக்க முடியாது. நாம் நன்றாக அறியும் ஒரு விஷயம் உண்டு, இந்திய சமூகத்தில் அனைவரும் சமம் என்ற நிலையை நாம் முதலில் உணர்வது பள்ளியில்தான். ஒரு இந்திய கிராமத்தில் சமத்துவம் இருக்கும் ஒரே இடம் வகுப்பறையே. வகுப்பறைதான் தீண்டாமை சாதிப்பாகுபாடு பொருளியல் ஏற்றதாழ்வு ஆகியவற்றுக்கு எதிரான முதல் அமைப்பாக நம்மிடம் இன்று உள்ளது. சமத்துவத்துக்கான முதல்குரல் எழுவதும் முதல்போராட்டம் எழுவதும் அங்கிருந்துதான். இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் அடிப்படைக்கல்வி பரவலாக்கப்பட்டதோ அங்கேதான் மானுட உரிமைக்கான குரல்கள் முதலில் எழுந்தன. அங்கேதான் சமமான சமூக வளர்ச்சியும் அனுபவப்பட்டது.
ஆயினும் இந்தல் கல்விமுறையில் சில அடிப்படைப்பிரச்சினைகளும் உள்ளன. இது பொதுத்திறனை குறிவைத்து இயங்குவதனால் தனித்திறனை பொருட்படுத்துவதில்லை. சராசரிகளையே இது கணக்கில் கொள்கிறது தனித்துவங்களை அந்த சராசரி மூலம் நசுக்குகிறது. அனைவருக்குமாக வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் தனித்த தேடலும் ஐயங்களும் கொண்ட மாணவனின் ஆத்மா அவநம்பிக்கை கொள்கிறது. கல்வியை தனிமனிதனுக்கான அறிவுத்தேடலை நிறைவுசெய்யும் வழிமுறை என எடுத்துக் கொண்டால் இன்றைய கல்விமுறை அவனுக்கு பெரிதாக எதையும் அளிப்பதில்லை.
இதை நான் என் அனுபவம் மூலமே சொல்கிறேன். என் வாழ்வில் ஏறத்தாழ பதினாறு வருடங்களை முறைப்படுத்தப்பட்ட கல்வியில் வீணடித்தேன் என்றே எனக்குப்படுகிறது. பள்ளியில் கற்ற எதுவுமே என்னிடமில்லை இன்று.நான் கற்றுக்கொண்டவை எல்லாமே என் சொந்த தேடல் மூலம் கல்விக்கூடத்துக்கு வெளியே கற்றுக்கொண்டவையே. மிகுந்த தாராள நோக்குடன் பார்த்தால்கூட பள்ளி எனக்களித்தவை என்று ஒரு சில விஷயங்களையே சொல்ல முடியும். ஆரம்ப மொழிப்பயிற்சி, பலவகை மனிதர்களிடையே பழகுவதற்கான பயிற்சி , இவ்வளவுதான். அதாவது என்னை பள்ளி சமூகப்படுத்தியிருக்கிறது. அதற்குத்தேவையான குறைந்தபட்ச பயிற்சியை எனக்களித்திருக்கிறது. எனது தனித்தன்மை நானே பள்ளிக்கு வெளியே உருவாக்கிக் கொண்டது.
சிறுவயதில் நான் பள்ளியை வெறுத்தேன். சமூகப்படுத்துதல் என்பதை என் ஆளுமை உருவாக்கத்துக்கு நேர் எதிரான ஒன்றாகவே கண்டேன். அதற்கு முடிந்தவரை எதிர்ப்பை அளித்தேன். அப்போது பள்ளி என்ற அமைப்பு என்னை திருப்பித்தாக்கியது. அதனால் நான் வதைக்கப்பட்டேன்.என்னை வெறுக்காத ஆசிரியர்கள் குறைவு. நான் அடிவாங்காத வகுப்புகள் மிகமிகக் குறைவு. என் நூலகப்புத்தகங்களை பிடுங்கி கிழித்து வீசிய ஆசிரியர்கள் உண்டு. என் அப்பா என்னை நூலகம் முதல் வீடுவரை துரத்தித் துரத்தி அடித்திருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கையில் ‘ரத்னபாலா’ இதழில் என் முதல் கதை வெளிவந்தபோது என் ஆசிரியர் ஒருவர் என்னை அடித்து சட்டையைக் கழற்றி பெஞ்சுமீது நிற்கவைத்தார். இன்று என் மகனும் அதேபோல அன்னியனாக இருப்பதைக் காண்கிறேன். ‘நீ இதன்வழியாகக் கடந்துபோயாகவேண்டும், வேறு வழியில்லை’ என்று சொல்லிக் கொள்கிறேன்.
ஆனால் எனக்கு பள்ளியில் நல்ல சில ஆசிரியர்கள் அமைந்தனர். என் நினைவில் நிற்கும் முதல் ஆசிரியர் திரு சத்தியநேசன் அவர்கள். எனக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஊட்டி செய்யுள் எழுத கற்றுத்தந்தவர். அதன் பின் நான் சந்தித்த முக்கியமான ஆசிரியர் சுந்தர ராமசாமிதான். சுந்தர ராமசாமி வழியாக ஆற்றுர் ரவிவர்மா. கடைசியாக நித்ய சைதன்ய யதி. இவர்களிடமிருந்தே நான் கற்றுக்கொண்டேன். நான் கல்விகற்ற குருகுலங்கள் இவர்களின் இல்லங்களே.
பள்ளி என்ற அமைப்புக்கும் இத்தகைய குருகுலங்களுக்கும் என்ன வேறுபாடு? முக்கியமான வேறுபாடு ஒன்றுதான் பள்ளியில் பாடம் உள்ளது ஆசிரியர் இல்லை. ஆசிரியர் அங்கு அப்பாடத்தை ஒலிக்கும் குரல்மட்டுமே. பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே தனிப்பட்ட உறவே இல்லை. ஆசிரியர் மாணவனுக்கு ஒரு குரல். மாணவன் ஆசிரியருக்கு ஒரு முகம் அல்லது எண். ஆகவேதான் பெரும்பாலும் மாணவர்களை ஆசிரியர்கள் நினைவுவைத்துக் கொள்வதேயில்லை. ஆசிரியர்களை மாணவர்கள் நக்கலாகவே எண்ணிக் கொள்கிறார்கள். ஒருவரோடொருவர் கொள்ளும் இந்த உதாசீனத்தின் வடிவமாக அங்கே கல்வி உள்ளது. கல்வி அங்கே அவர்களை விலக்கும் , ஒருவரிடமிருந்து ஒருவரை மறைக்கும் ஊடுதிரையாக உள்ளது. நமது கணித ஆசிரியரை நம்மிடமிருந்து மறைப்பது அவர் நமக்குக் கற்பிக்கும் கணிதமே.
ஒரு குருகுல அமைப்பில் ஆசிரியனும் மாணவனும் தனிப்பட்ட உறவுடன் உள்ளனர். மண்ணில் இரு உயிர்களிடையே உருவாகும் உறவுகளில் மிகமிக நெருக்கமான, மிக உணர்ச்சிகரமான உறவுகளில் தலையாயது அதுவே. அங்கு அவர்களை இணைக்கும் ஊடகமாக உள்ளது அவர்கள் கற்கும் கல்வி. ஆசிரியன் மீது மாணவனுக்கு ஏற்படும் மீளாக்காதலுக்கு நிகராக ஒருபோதும் சாதாரணக் காதலைச் சொல்லிவிடமுடியாது. நான் வருடக்கணக்காக என் ஆசிரியர்களை அல்லும்பகலும் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன். இன்றும் ஒருநாளாவது அவர்களை எண்ணாமல் என் நாட்கள் மறைவதில்லை. அந்தக்காதல் அக்கல்வியிலிருந்து உருவாவதா இல்லை அக்காதலில் இருந்து கல்வி அத்தனை நெருக்கமாக ஆகிறதா என்று சொல்லிவிடமுடியாது.
ஆசிரியர் ஓர் ஆளுமையாக முன்னுதாரணமாக மாணவன் முன் நிற்கிறார். தன்னையே அவர் அவனுக்கு அளிக்கிறார். அவன் ஆக விரும்பும் பிம்பம். அவனுடைய எதிர்காலமே அவன் முன் மானுட வடிவமாக நிற்கிறது. அந்த இளம்பருவத்தில் எப்படிப்பட்ட மனஎழுச்சியை அது அளிக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள். எதிர்காலம். விதி! அது கடவுளன்றி வேறென்ன? அதன் மறுபக்கம்தான் ஆசிரியர். அவரைப்பொறுத்த்வரை மாணவன் அவரது எதிர்காலமேதான். அவன் வழியாக அவர் காலத்தை தாண்டிச்செல்ல முடியும். அவரது மரணமின்மையின் தடையம் அவன். அந்த பரஸ்பர பிரியத்திலிருந்தே உண்மையான கல்வி உருவாக முடியும். ஞானத்தை தொடர்புபடுத்தும் ஊடகமாக இருப்பதற்கு தகுதிபடைத்தது அன்பே.
கடமைக்காக கற்பிக்க வரும் ஆசிரியனுக்கும் குருவுக்கும் எவ்வளவு வேறுபாடு? ‘இன்று முழுக்க உன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்’ என்று என் ஆசிரியர்கள் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். ‘இப்போதெல்லாம் உன்னிடம் பேசுவதுபோலவே நான் சிந்திக்கிறேன்’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார். ஒருநாள் பேசவில்லை என்றால் , இரு வருகை தவறிவிட்டதென்றால் என் ஆசிரியர்கள் மனம் வருந்தியிருக்கிறார்கள். சினம் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கல்வி நமக்கென்றே தயாரிக்கபடுவது. நமது ருசிகளுக்காக நமது திறன்களையும் நமது தேடல்களையும் கணக்கில் கொண்டு கனிந்த அன்புடன் உருவாக்கப்பட்டு நமக்கு மிகமிகப்பிரியமான முறையில் பரிமாறப்படுவது. இதற்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை. இதன் ஒவ்வொரு கணமும் நமக்கு பேரின்பம் அளிக்கிறது. இந்தக்கல்வியில் நாம் ஒருதருணத்தில்கூட சிறிதேனும் களைப்¨ப்பம் சலிப்¨ப்பம் உணர்வதில்லை. மானுடனுக்கு மண்ணில் உள்ள பேரின்பங்களில் ஒன்று மெய்யான கல்வி.
எல்லா உறவுகளும் இருகூரானவை. ஆசிரியர்களிடம் கொண்ட உறவில் உக்கிரமான வலிகளையும் நினைவுகூர்கிறேன். அன்பளவே மனத்தாங்கல்களும் தீவிரமானவை. யமுனாச்சாரியார் ஏன் தன் மாணவர் ராமானுஜரைக் கொல்ல முயன்றார்? ஆசிரிய மாணவ உறவின் கதைகளில் பலசமயம் அந்த பெருங்கசப்பு வெளியே வருகிறது. கௌடபாதருக்கும் சங்கரருக்கும் அப்படிப்பட்ட கசப்பு உருவான கதை உள்ளது. தோதாபுரிக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் கூட அந்த கசப்பு உருவாகியிருக்கிறது. குருசீட உறவின் உக்கிரத்துக்கு வெளியே நின்று அதைப் புரிந்துகொள்ள இயலாது. எனக்கு நித்யாவிடமும் மட்டுமே கசப்பில்லாத உறவு சாத்தியமாயிற்று..
நூல்களும் நமக்கு கற்பிக்கும். இறந்த ஆசிரியர்கள் எவருமே மறைவதில்லை. அவர்கள் சொற்கள் அழிவதில்லை. ஆனாலும் நூலுக்கு மனிதருக்கும் இடையே உள்ள வேறுபாடு பிரம்மாண்டமானது. நூல்கள் சிந்தனைகளைக் கற்பிக்கின்றன. ஆசிரியர் சிந்தித்தல் என்னும் செயலைக் கற்பிக்கிறார். ஒருமுறை நித்யாவிடம் கேட்டேன்,”இங்கே உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள்”என்று. ”நான் அவர்களை என்னுடன் வாழ அனுமதிக்கிறேன்”என்றார் நித்யா. அவருடன் நடந்து அவருடன் அமர்ந்து உண்டு அமருடன் வேலைசெய்து அவர்கள் அவரை அறிகிறார்கள். அவர் அடைந்த ஞானமே அவர். ஒருவரின் ஞானம் மெய்யானது என்றால் அது அவரது ஆளுமையிலிருந்து வேறானதாக இருக்காது.
சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, நித்யா ஆகியோரின் நீண்ட உரையாடல்களை நினைவுகூர்கிறேன். அவ்வுரையாடல்கள் மூலம் நான் கற்றுக்கொண்டது கருத்துக்களையும் தகவல்களையும் அல்ல. அவற்றை அவர்கள் நினைவுகூரும் விதத்தை. அவற்றை தொகுத்து முடிவுகளுக்கு வரும் முறைமையை. அம்முடிவுகளை அவர்கள் பரிசீலிக்கும் வழிகளை. எண்ணங்கள் முளைத்து முளைத்து வரும் விதம், தர்க்கம் கருத்துக்களை தொட்டுத்தொட்டு செல்லும் அழகு ஆகியவற்றில் மயங்கி அதை பின்தொடர முயன்றேன். அவர்களின் மொழியும் முகபாவனைகளும் உடலசைவுகளும்கூட என்னில் கூடிய நாட்கள் உண்டு. சுந்தர ராமசாமி சிந்திக்கும்போது விரல்களால் காற்றில் எழுதுவார். அதையே நானும் என்னை அறியாமல் செய்வதை உணர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
நிறுவனங்கள் ஒருபோதும் சிந்தனையைக் கற்றுத்தர இயலாது. மனிதர்களே கற்றுத்தர இயலும். ஆகவேதான் நிறுவனங்களுக்குள் கூட உயர்கல்வித்தளத்தில் தனிப்பட்ட குருசீட உறவுகள் சாத்தியமாகும்படியான அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். ஆய்வுக்கல்வியில் இன்று குருசீட உறவு நிகழும்படியே நம் கல்வி அமைப்பு உள்ளது– நிகழ்கிறதா என்பது வேறுவிஷயம். ஏனெனில் ஏற்கனவே சொன்னதுபோல சிந்திப்பதை ஒரு மனிதன் மட்டுமே இன்னொரு மனிதனுக்கு கற்றுத்தர இயலும். காரணம் சிந்தனைக்கு எந்தவிதமான கட்டுகளும், அமைப்பும் இருக்காது. நேரமும் சூழலும் அதைக் கட்டுப்படுத்தாது. காலையில் பத்திலிருந்து பதினொன்றுவரை ஒருவர் சிந்தனையை கற்றுத்தர இயலாது. நித்ய சைதன்ய யதி பாஸ்டன் மற்றும் ஹவாய் பல்கலைகளில் ஆசிரியராக இருந்தபோது அதிகாலையில்தான் தன் வகுப்புகளை நடத்தியிருக்கிறார். ஒர் ஆசிரியருடன் மாணவன் கூடவே இருப்பது மட்டுமே ஒரே வழி. அவரது கோபம் மகிழ்ச்சி மன எழுச்சி சோர்வு எல்லாவற்றையும் கூடவே அமர்ந்து கவனித்தல். இந்த பொருளில்தான் உபநிடதம் என்ற சொல்லுக்கு ”அருகே அமர்தல்”என்று பொருள்
இன்னுமொன்று உள்ளது. சிந்தனை என்பது பதில். சிந்திப்பது என்பது தேடல், கேள்வி. ஆகவே நூல்களின் வழியாக நாம் அடைவது முடிவுற்ற ஒன்றை. குருவிடமிருந்து நாம் அடைவது ஒரு பயணத்தை. அவர் செல்லும் தூரமெல்லாம் நாமும் சேர்ந்து பயணம் செய்கிறோம். அவரது தத்தளிப்புகலையும் கண்டடைதலின் உவகைகளையும் நாமும் பங்கிடுகிறோம். கடோபநிஷதத்தின் புகழ்பெற்ற தொடக்கப்பாடலே அன்றும் இன்றும் எல்லா குருகுலங்களிலும் தொடக்கப்பாடலாக குருசீடர்களால் இசைக்கபடுகிறது. ”ஓம் சஹனாவவது சஹனௌ புனது: சஹவீர்யம் கரவாவஹை ‘ என்ற அப்பாடல் ”மெய்யான உண்மை என்றால் என்னவென நாமிருவரும் சேர்ந்து தேடுவோமாக” என்று குரு சீடனை அழைப்பதாகும்
குருசீட உறவின் வழியாக சிந்தனைமுறைகள் தொடர்ச்சி பெறுகின்றன. இந்தியாவில் நாம் அறியும் முக்கிய சிந்தனைமுறைகள் அனைத்துமே குருசீடச் சங்கிலி வழியாக பரிணாமம் பெற்று வந்தவை என்பதைக் காணலாம். ஒரு சிந்தனைமுறையின் காலம்தோறுமான பரிணாம வளர்ச்சி குருசீட உறவின் மூலமே நிகழ இயலும். பொதுவான கல்வி ஒரு சிந்தனையை ஓர் அமைப்பாக மாற்றி நிலைநிறுத்தக் கூடும். ஆனால் குருவிடமிருந்து தகுதியுள்ள சீடன் பெற்றுக்கொள்ளும் சிந்தனை அவனில் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைகிறது. அவ்வாறாக அது காலத்தில் வளர்ந்துசெல்கிறது. தத்துவ சிந்தனைக்கு இம்முறை இன்றும் இன்றியமையாததாகவே உள்ளது
தொடரும்..