குருகுலமும் கல்வியும் – 2
ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது
[குரு நித்யா காவிய முகாமின் போது வாசக நண்பர்களுடன்.
நாராயணகுருகுலம், பெர்ன் ஹில், ஊட்டி ]
இரண்டு
நம் சமகால இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது தலைமுறையை எட்டியிருக்கும் ஒரு தத்துவ சிந்தனை மரபு என்று நாராயணகுருவின் சீடபாம்பரையைச் சொல்லலாம். தமிழ் சித்தர் மரபு இந்திய நவீனமயமாதலுக்கு அளித்த பங்களிப்புகள் என்று நாராயணகுரு , ராமலிங்க வள்ளலார் இருவரையும் கூற இயலும். கேரளத்தில் 1854 ல் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் கள் இறக்கும் ஈழவர் என்னும் சாதியில் பிறந்தவர் நாராயணகுரு. தந்தை மாடன் ஆசான். தாய் குட்டியம்மா. அச்சாதி அன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டது. சிறுவயதிலேயே தமிழ் கற்று நூல்களை வாசிக்க ஆரம்பித்த நாராயணகுரு அன்று திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த தைக்காடு அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். பின்னர் இருபத்து மூன்றாம் வயதில் ஊரைவிட்டு கிளம்பி துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்தார். இக்காலகட்டத்தில் பல சித்தர்களை இவர் கண்டதாக ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் கேரள அறிவுத்துறையின் தலைமைப்பேரறிஞராக நாராயணகுருவை நிலைநாட்டிய சாஸ்திரக்கல்வி இக்கலத்தில் அவர் பெற்றதேயாகும். வேதங்கள் , உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மதங்கள், பௌத்த சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள் ஆகியவற்றில் நிகரற்ற கல்வி அவருக்கு இருந்தது. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை பெற்றார்.
[நாராயணகுரு]
பின்னர் நாராயணகுரு வெளிப்பட்டது 1888 ல் அவரது சொந்த ஊரின் அருகே உள்ள அருவிக்கரை என்ற சிற்றூரில். அங்கே ஒரு குருகுலத்தை நிறுவி ”ஜாதிபேதம் மத வெறுப்பு இன்றி அனைவரும் சமமாக வாழும் உதாரணமான இடம் இது”என்று அவர் பொறித்துவைத்தார். அன்று சமூகவிடுதலைக்கு போராடிக்கொண்டிருந்த ஈழவர்களை அவர் பால் ஈர்த்தது. அவரை மையமாக்கி 1903ல் ‘ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா” [எஸ்.என்.டி.பி ] என்ற அமைப்பு உருவாயிற்று. அது சமூக சீர்திருத்தத்துக்காகவும் மத மறுமலர்ச்சிக்காகவும் கல்விவளர்ச்சிக்காகவும் போராடிய பெரும் அமைப்பாக வளர்ந்தது. ஆகவே நாராயணகுரு கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1928ல் நாராயணகுரு தம் சீடர்களை திரட்டி ‘தர்ம சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் தலைமையகம் கேரளத்தில் வற்கலா என்ற ஊரில் சிவகிரி என்னும் குன்று மீது உள்ளது.
நாராயணகுரு இரு வகை நூல்களை இயற்றியுள்ளார். சுப்ரமணிய சதகம். காளீநாடகம், சாரதா தேவி ஸ்துதி, முதலியவை கவித்துவமான தோத்திரப்பாடல்கள். ஆத்மோபதேச சதகம், தரிசன மாலா, அறிவு முதலியவை ஆழமான வேதாந்த தரிசனம் கொண்ட தத்துவ நூல்கள். அடிப்படையில் நாராயண குரு வேதாந்தி. சங்கரரின் அத்வைத நோக்கை விரிவுபடுத்தியவர். அனைத்து தரிசனங்களையும் தன் தனித்துவம் கொண்ட நோக்கின் அடிப்படையில் ஒன்றிணைத்து ஒரு இணைவை [சமன்வயம்] கொண்டுவந்தார் என்பதே தத்துவ ரீதியாக அவரது சாதனையாகும்.
நாராயணகுருவிற்கு கேரள மரபின் பல தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய மாணவர்கள் பலர் உண்டு. பிற்காலத்தில் கேரள வரலாற்றின் சிற்பிகளாக அறியப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஆதர்சமாகக் கொண்டு இயங்கியவர்களே. ஆயினும் அவரது முதல் சீடர் என்றும் அவரது தரிசனத்தை முன்னெடுத்தவர் என்றும் சொல்லத்தக்கவர் நடராஜ குருவே. எஸ்.என்.டி.பி அமைப்பை உண்டுபண்ணியவரான டாக்டர் பல்புவின் மகனாக 1895ல் பிறந்தார். நிலவியலில் பட்டமேற்படிப்பை முடித்தபின் உலகப்புகழ்பெற்ற சார்போன் பல்கலை [·ப்ரான்ஸ்] கழகத்தில் தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவத்தில் முனைவர் ஆய்வை நிகழ்த்தி பட்டம் பெற்றார். கல்வியியல் குறித்த அவரது முனைவர் பட்ட ஆய்வேடு யுனெஸ்கோ முன்வரைவுக்காக ஏற்கப்பட்டது 1930ல் ஜெனிவா தேசியக்கல்லூரியில் உயர் பௌதிக ஆசிரியராக பணியாற்றினார். [ இண்டர்நேஷனல் ·பெல்லொஷிப் ஸ்கூல். ஜெனிவா ]
[நடராஜகுரு]
நாடுதிரும்பி நாராயணகுருவுடன் குருகுலத்தில் தங்கி கீழைதத்துவங்களைக் கற்றார். நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பல நடராஜகுருவின் கோரிக்கைக்கு இணங்க உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது.மூன்றுவருடன் சென்னையில் அத்வைத ஆசிரமம் என்ற அமைப்பின் சார்பில் தலித்துக்கள் மத்தியில் பணியாற்றினார். ஆறுவருடம் இந்தியாவெங்கும் பிச்சையேற்று அலைந்து திரிந்தார். 1923ல் ஊட்டி ·பெர்ன்ஹில் பகுதியில் அன்பளிப்பாக கிடைத்த நிலத்தில் தன்கையாலேயே குடிசை கட்டி தங்கி நாராயணகுருகுலம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
நடராஜகுரு அதிகமும் ஆங்கிலம் ·பிரெஞ்சு மொழிகளில்தான் எழுதியிருக்கிறார். மலையாளத்தில் அவருக்கு பயிற்சி குறைவு. The word of Guru, One hundred verses of self instruction, Wisdom, Man woman dialectics , The auto biography of an absolutist ஆகியவை அவரது முக்கிய நூல்கள். நடராஜ குரு நாராயணகுருவின் சிந்தனைகளை ஆங்கிலத்தில் விரிவாக அறிமுகம் செய்தார். கீதைக்கு நடராஜ குரு எழுதிய உரை ஒரு கிளாசிக் என்று சொல்லப்படுகிறது. நாராயண குருவின் அத்வைத சமன்வய நோக்கை மேலை தத்துவங்களுடன் இணைத்து வளர்த்தெடுத்தார். இதன் பொருட்டு நடராஜ குரு ஐரோப்பா முழுக்க விரிவாகப்பயணம்செய்துள்ளார். அவருக்கு பிற்காலத்தில் பெரும்புகழ்பெற்ற பல மாணவர்கள் அமைந்தனர்.
நடராஜ குருவின் மாணவர்களில் முதன்மையானவர் நித்ய சைதன்ய யதி. 1923ல் பந்தளம் என்னும் ஊரில் புகழ்பெற்ற ஈழவக்குடியில் பிறந்த நித்ய சைதன்ய யதியின் இயற்பெயர் ஜெயச்சந்திரப் பணிக்கர். அவரது தந்தை பந்தளம் ராகவப்பணிக்கர் ஒரு புகழ்பெற்ற கவிஞர். இளம் வயதிலேயே துறவு பூண்ட நித்யா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திலும் ரமணரின் குருகுலத்திலும் இருந்திருக்கிறார். பிச்சையெடுத்து இந்தியாவெங்கும் அலைந்திருக்கிறார். கொல்லம் எஸ்.என் கல்லூரியில் தத்துவத்தில் முதுகலைபடிப்பை முடித்து அங்கேயே ஆசிரியராக வேலைபார்த்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக வேலைபார்த்தபோது நடராஜகுருவின் மாணவராக ஆனார். பம்பாயில் விழியிழந்தோர் உளவியலில் முனைவர் படிப்பை முடித்தார். நடராஜகுருவின் குகுலத்திலும் அவரது ஆணைப்படி வட இந்திய குருகுலங்கள் சிலவற்றிலும் இந்திய தத்துவத்தில் பயிற்சிபெற்றார்
[நித்ய சைதன்ய யதி]
1969ல் ஆஸ்திரேலியா சென்று உலகப்பயணத்தை தொடங்கினார். அமெரிக்கா சென்று போர்ட்லண்ட் சிகாகோ ஹவாய் பல்கலைக்கழகங்களில் கவிதை, உளவியல், இந்திய தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார். 1984ல் இந்தியா திரும்பி ·பெர்ன் ஹில் குருகுலத்தில் தங்கி நடராஜ குரு தொடங்கிய பணிகளை முன்னெடுத்தார். ஆங்கிலத்தில் என்பதும் மலையாலத்தில் நூற்றைம்பதும் நூல்களை எழுதியிருக்கிறார். உயர்பௌதீகம், மேலைதத்துவம் இலக்கியம் நுண்கலை உளவியல் ஆன்மீகம் சார்ந்த நூல்கள் அவை. கீதை, பிரகதாரண்ய உபநிடதம், ஆத்மோபதேச சதகம், தரிசன மாலை ஆகியவற்றுக்கான உரைகள் முக்கியமானவை. குரு நித்ய சைதன்ய யதி 1997ல் மரணமடைந்தார்
[சுவாமி வியாசப்பிரசாத்]
சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்]
நடராஜ குருவின் அடுத்த மாணவரான முனி நாராயண பிரசாத் இன்று நாராயணகுருகுலத்தின் தலைவராக உள்ளார். கீழைமெய்யியல் , கிரேக்க மெய்யியல் ஆகியவற்றில் விரிவான ஆய்வு செய்தவரான முனி நாராயண பிரசாத் ஏறத்தாழ நூறு நூல்களை இவ்வரி¨சையில் எழுதியுள்ளார். கொழும்பு, பாலி பல்கலைகளில் கீழைதத்துவம் கற்பித்திருக்கிறார். தலைமை குருகுலத்தில் [ ஸ்ரீ நாராயணகுரூகுலம், சிவகிரி, வற்கலா] வாழ்கிறார். இன்னொரு மாணவரான வினய சைதன்யா பெங்களூர் சோமனஹள்ளி குகுலத்தில் வாழ்கிறார். ஆங்கில இலக்கியம் கன்னட இலக்கியம் ஆகியவற்றில் விரிவான பயிற்சி உடையவர். நித்ய சைதன்ய யதியின் மாணவர்களில் சுவாமி தன்மயா, சுவாமி வியாசப்பிரசாத் , ராமகிருஷ்ணன் ஆகியோர் ஊட்டி குருகுலத்தில் உள்ளனர். சுவாமி தன்மயா மேலைமருத்துவத்தில் பட்டம்பெற்றவர். இன்று ஆயுர்வேத ஆய்வில் முக்கியமானவராக அறியப்படுகிறார். [ நாராயணகுருகுலம், ·பெர்ன் ஹில், ஊட்டி ] இன்று நான்காவது தலைமுறையாக நாராயண தரிசனம் முன்னெடுத்துச்செல்லப்படுகிறது.
தொடரும்..
நாராயண குருவின் அத்வைத தத்துவ விளக்கங்களை தகுந்த மேற்கோள்களுடன் எடுத்து எழுத வேண்டுகிறேன்.
மற்றும் ஆதி சங்கரரின் அத்வைத தத்துவ விளக்கங்களுக்கும் நாராயண குருவின் விளக்கங்களுக்கும் உள்ள
ஒற்றுமை வேற்றுமைகளையும் எழுத வேண்டுகிறேன்.
சுப்பு ரத்தினம்.